top of page

இயலில் தேடலாம்!

Search this site

408 results found with an empty search

  • வளரிளம் புதிர்ப்பருவம்-12

    கட்டிலில் ஒரு கரடி பொம்மை. ஜேமியின் வீடு களையிழந்து இருந்தது. சிறிய மகிழ்ச்சிப் பூவாக அவனது அப்பா எட்டி மில்லரின் பிறந்தநாள். ஐம்பதாவது பிறந்தநாள். ஜேமியின் அம்மா காலை உணவைத் தயார் செய்தார். அப்பாவும் மகிழ்ச்சியாக இருந்தார். பல நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி. மில்லர் பரிசுப் பொருட்களைப் பார்த்தார். அவருக்கு ஒரு வாழ்த்து மடல் சிறையிலிருந்து வந்திருந்தது. அவரது முகத்தை வரைந்து ஒரு வாழ்த்து அட்டையை அனுப்பியிருந்தான், ஜேமி. கண்கள் கலங்க அதைப் பார்த்தார் மில்லர். ஜேமி நன்றாக வரைந்துள்ளான் என்று அம்மாவும் நெகிழ்ந்தார். மில்லர் வீட்டுக்கு வெளியே வந்தார். வாசலில் நிறுத்தியிருந்தக் காரில் பெயிண்டால் 'Nonce' என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இங்கிலாந்தில் அது ஒரு வசவுச்சொல்.பாலியல் குற்றவாளி என்று திட்டும் சொல். "யார் இதை எழுதியது?" மில்லர் கோபத்தில் கத்தினார். ஜேமியின் அம்மாவும் அக்காவும் ஓடி வந்தார்கள். அக்கம்பக்கத்தில் விசாரித்தாலும் எழுதியது யாரென்று தெரியவில்லை. மில்லரின் கோபம் அதிகரித்தது. வீட்டுக்குள் சென்று சோப்பைத் தண்ணீரில் கரைத்து எடுத்து வந்தார். எவ்வளவு துடைத்தாலும் பெயிண்ட் போகுமா? அவரது மன அழுத்தம் அதிகமானது. சாலையில் மிதிவண்டியில் இரண்டு பையன்கள் சென்றார்கள். ஒருவன் மில்லரைப் பார்த்து Nonce என்று கத்தினான். மில்லர் , "நீங்கள் தான் எழுதினீர்களா?" என்று கோபமாகக் கத்தினார். சிறுவர்கள் சிரிப்பும் கேலியுமாக விரைந்து சென்றார்கள். மில்லர் தனது மனைவி , மகளை அழைத்துக்கொண்டு காரில் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றார். காரில் பெயிண்டால் எழுதியதை எவ்வாறு அழிக்கலாம் என்று விசாரித்தார். பணியாளர் ஓர் இளைஞர். சற்று நேரத்தில் அவருக்கு மில்லரை அடையாளம் தெரிந்தது. "நீங்க யாரென்று எனக்குத் தெரியும். கவலைப்படாதீங்க. நான் உங்க பக்கம்தான். உங்க பையனின் வழக்கிற்குப் பண உதவி தேவை என்றால் சொல்லுங்க. இணைய வழியாகவே நிறைய நிதி திரட்டலாம்.' என்று அவர் சொன்னார். அதெல்லாம் தேவையில்லை என்று மில்லர் மறுத்தார். துடைப்பதற்கான பொருட்கள், காரின் நிறத்தில் பெயிண்ட் ஆகியவற்றை வாங்கினார். காரில் உள்ள எழுத்துகளை அழிக்க முயன்றார். முடியவில்லை. அப்போது 'Nonce' என்று கத்தும் சத்தம் கேட்டது. மில்லர் கோபத்துடன் திரும்பிப் பார்த்தார். காலையில் வீட்டருகே கத்திய அதே சிறுவன். கோபம் தலைக்கேற அவனை நோக்கி ஓடினார். அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினார். அவன் பயத்தில் நடுங்கினான். அவரிடமிருந்து விடுபட்டு ஓடினான். கீழே கிடந்த அவனது சைக்கிளைத் தூக்கி எறிந்தார். அவரின் மனைவியும் மகளும் ஓடி வந்தனர். "அவன் சின்னப் பையன். இப்படிச் செய்யலாமா?" என்று கத்தினார்கள். மில்லர் நிலைகுலந்திருந்தார். தான் செய்தது தவறு என்று புரிந்தாலும் மனதுள் கோபம் நிறைந்து இருந்தது. கோபத்துடன் காருக்கு அருகே சென்று கீழே வைத்திருந்த பெயிண்டை எடுத்தார். காரில் எழுதியிருந்த எழுத்துக்களின் மீது விசிறியடித்தார். Nonce என்று எழுதியிருந்த பக்கம் முழுவதும் பெயிண்ட் , தரையெங்கும் பெயிண்ட். பல்பொருள் அங்காடிக் காவலர்கள்,"தரையெல்லாம் பாழாகிவிட்டது. நீங்கதான் சுத்தம் செய்ய வேண்டும்." என்று சத்தம் போட்டார்கள். முடியாது என்று அவர்களோடு சண்டையிட்டபடியே மில்லர் காரில் கிளம்பினார். மில்லரின் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்திருந்தார்கள். அவரது பிறந்தநாளை நன்றாகக் கொண்டாட வேண்டும். திரைப்படத்திற்கும் போகலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். எல்லாமே பாழ். பொது இடத்தில் சண்டை, சிறுவர்களிடம் காட்டிய வன்முறை என எல்லாமே தவறு என்று மில்லர் உணர்ந்தார். மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் காருக்குள் ஓர் இறுக்கம் தொடர்ந்தது. அலைபேசியில் ஓர் அழைப்பு. சிறையிலிருந்து அழைப்பு என்றதும் பேசத் தொடங்கினார் மில்லர். அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்னான், ஜேமி. இங்கு சின்னச்சின்ன சிரமங்கள் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். பெரிதாகச் சிரமம் ஏதும் இல்லை. என்று பல விடயங்களைச் சொன்னான் ஜேமி. ஒலிபெருக்கியில் இணைந்ததால் காரில் இருந்த அம்மாவும் அக்காவும் கண்கள் பனிக்க அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில்," அப்பா, நான் எனது வாக்குமூலத்தை மாற்றித் தரப்போகிறேன். என் தவறை ஒத்துக்கொள்ளப் போகிறேன்.என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று ஜேமி சொன்னான். அவன் அப்பாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. "சரி ஜேமி உன் விருப்பம்." என்று சொன்னார். வீட்டுக்கு வந்தபிறகு ஒவ்வொருவரும் நடந்தவற்றை நினைத்து தனித்தனியே அழுகிறார்கள். குடும்பத்தில் ஒரு சிறுவன் செய்த தவறு அனைவரையும் பாதிக்கிறது. சமூகம் தவறு செய்தவர் குடும்பத்திலுள்ள அனைவரையும் குற்றவாளியாகவே பார்க்கிறது. என்ன செய்வது? மில்லர் வருந்துகிறார். நடந்தவை குறித்து மனைவியிடம் பேசுகிறார். கடுமையாக நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்கிறார். "பரவாயில்லை. உங்கள் மனதிற்குள் படும் பாட்டை உணர்கிறேன். நம் வீட்டில் மூவருமே ஜேமியை நினைத்து வருந்துகிறோம். அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது என்று காவல் நிலையத்தில் காட்டிய ஒளிப்பதிவை நீங்கள் மட்டுமே பார்த்தீர்கள்." என்று மில்லரிடம் அவர் மனைவி கூறினார். ஆமாம், அவன் தவறு ஏதும் செய்யவில்லை என்று சொன்னான். ஆனால் ஒளிப்பதிவு வேறு விதமாக இருந்தது. அன்று நீ அவனுடன் விசாரணை அறைக்குள் சென்றிருந்தால் என்னை விட அவனுக்கு உதவியாக இருந்திருப்பாய் என்று மில்லர் கூறினார். நாம் அவனை நன்றாகத்தான் வளர்த்தோம். ஓவியத்தில் ஆர்வமாக இருந்தான். நிறைய வரைந்தான். பிறகு குத்துச்சண்டையில் ஆர்வமாகச் சில நாள் பழகினான். அவனால் சமாளிக்க முடியவில்லை. கால்பந்து விளையாட்டில் ஆர்வமானான். அவனால் அதிலும் பிரகாசிக்க முடியாமல் 'கோல் கீப்பர்' ஆனான். விளையாடும்போது மற்றவர்களின் பெற்றோர் பெருமிதமாக இருக்கும்போது நான் ஓர் ஓரத்திலிருந்து அவனைப் பார்ப்பேன். அவனும் என்னைக் கவனிப்பான். பிறகு அவனுக்காக ஒரு கணிப்பொறியை வாங்கித் தந்ததுதான் தவறு. அதில் அவன் என்ன பார்க்கிறான் என்பது நமக்குத் தெரியவில்லை. பிள்ளையைக் கெடுத்துவிட்டேனோ என்ற கவலை என்னை வாட்டுகிறது என்று மில்லர் கூறினார். இல்லை. நீங்கள் அவனுக்குச் சிறந்த அப்பாவாக இருந்தீர்கள். சில வேளைகளில் நாம் கொடுத்த சுதந்திரம் அவனைச் சீரழித்துவிட்டது. என்று அம்மா கூறினார். இருவரும் பேசிப்பேசித் தங்கள் மனக் கவலைகளைச் சற்றே ஆற்றிக்கொண்டனர். அங்கு அவர்களது மகள் வந்தார். அப்பா, உங்களுக்குப் புதுச்சட்டை நன்றாக இருக்கிறது. நாம் திரைப்படம் பார்க்க வெளியே போக வேண்டாம். யாராவது பார்த்து ஏதாவது கேட்டால் மனம் வருத்தப்படும். வீட்டிலேயே படம் பார்க்கலாம். இங்கேயே சாப்பிடுவோம். நான் கல்லூரிக்குச் செல்லும்போது இதேபோல் இன்னல்களைச் சந்தித்தால் சமாளித்துக் கொள்ளுவேன் என்று அப்பாவிடம் கூறினார். மூவரும் அன்றைய பொழுதை வீட்டிலேயே மகிழ்ச்சியாகக் கழிக்க முடிவு செய்தனர். மில்லர், ஜேமியின் அறைக்குள் சென்றார். அவனது கட்டிலில் ஒரு கரடி பொம்மை படுக்க வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் மில்லர் மனம் உடைந்தார். கட்டிலில் உட்கார்ந்து அழத்தொடங்கினார். தொடர்ந்து பேசுவோம்!

  • எளிமையான மொழிநடையில் எழுதுவது இலக்கியத்தைக் கொன்றுவிடுமா?

    - சிறார், சுற்றுச்சூழல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் 1. நீங்கள் குழந்தையாக இருந்த போது உங்களுக்கு வாசிப்பு எப்படி அறிமுகமானது? என் தாய்மொழி தமிழாக இருந்தபோதும், ஐந்தாம் வகுப்புவரை வெவ்வேறு பள்ளிகளில் படித்ததால் தமிழை சரியாக வாசிக்கவோ, எழுதவோ தெரியாமல் இருந்தேன். அப்போது தமிழை எளிதாகப் பழகிக்கொள்ள சிறார் இதழ்கள் படித்தால் உதவியாக இருக்கும் என எனது அத்தை பரிந்துரை செய்தார். 80களின் பிற்பாதியில் அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், கோகுலம் உள்ளிட்ட இதழ்கள் வெளியாகிவந்தன. இவற்றில் பூந்தளிரே எனக்குப் பிடித்திருந்தது. காரணம், அதில் இருந்த படக்கதைகள். மும்பையில் இருந்து வெளியாகும் அனந்த் பை ஆசிரியராக இருந்த டிங்கிள் இதழில் வெளியான படக்கதைகளை தமிழாக்கி பூந்தளிர் வெளியிட்டது. பூந்தளிரின் ஆசிரியர் வாண்டுமாமா. அறிவியல், வரலாறு, பொது அறிவு எனப் பல்வேறு விஷயங்கள் சார்ந்தும் எளிய மொழிநடையில் சுவாரசியமாக எழுதுவதற்காகப் பெயர் பெற்றவர். என் வாசிப்பு ஆர்வத்தை பூந்தளிர் வளர்த்தது. ஐந்தாம் வகுப்புவரை தமிழை வாசிக்கத் தடுமாறிக்கொண்டிருந்த நான், 8ஆம் வகுப்பு வருவதற்குள்ளாகவே தினமணி, குமுதம் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். எட்டாம் வகுப்புக் கோடை விடுமுறையில் திருச்சி மத்திய நூலகத்தில் தினசரி நூல்களை எடுத்துவந்து படித்தேன். இதற்குக் காரணம் தமிழை வாசிப்பதில் பூந்தளிர் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையும் சிறார் நூல்களில் இருந்த சுவாரசியமும். பிழையில்லாமல் தமிழில் வாசிக்கவும் எழுதவும் சொல்லித் தந்தது பூந்தளிரும் வாண்டுமாமாவும்தான். பிற்காலத்தில் இதழியல் துறையில் நான் கால் பதித்தபோது, இந்த அடித்தளம் எனக்குப் பெரிதும் உதவியது. 2. சுற்றுச்சூழல் பற்றிய ஆர்வம் எப்படி வந்தது? சுற்றுச்சூழல் சார்ந்த ஆர்வம் பிற்காலத்தில்தான் எனக்கு ஏற்பட்டது. காட்டுயிர் ஆவணப்பட ஒளிப்பதிவுக்காக அமெரிக்காவின் எம்மி விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த அல்போன்ஸ் ராயை ஒரு முறை பேட்டி எடுத்தேன். தமிழ்நாட்டின் இயற்கை, காட்டுயிர் சார்ந்து பணிபுரியும் பலரையும் எனக்கு அவர் அறிமுகப்படுத்தி, அவர்களைப் பற்றியும் எழுதத் தூண்டினார். கல்லூரி இளங்கலைப் படிப்பு முடித்த 90களின் கடைசியில், திண்டுக்கல்லில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த இதழான 'சுற்றுச்சூழல் புதிய கல்வி' இதழில் எழுதத் தொடங்கியிருந்தேன். சுற்றுச்சூழல் துறை சார்ந்து எனக்கு அறிமுகப்படுத்திய வேளாண் வல்லுநர் பாமயனும் பின்னர் எழுத்தாளர் அசுரனும் அதற்குப் பொறுப்பாசிரியர்களாக இருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க இதழான துளிரிலும் 2001 முதல் சுற்றுச்சூழல் குறித்து எழுதத் தொடங்கியிருந்தேன். கல்விப்புலம் வழியாக சுற்றுச்சூழலை கற்றிருக்கவில்லை என்கிறபோதும், நூல்கள், துறைசார் நிபுணர்கள் வழியாக சுற்றுச்சூழல் துறையைப் பற்றித் தொடர்ந்து கற்றுவருகிறேன். 3. சுற்றுச்சூழல் குறித்துக் குழந்தைகளுக்கு ஏன் சொல்ல வேண்டும்? நாம் வாழும் புவி மட்டுமே சூரியக் குடும்பத்தில் மட்டுமல்லாமல், இந்தப் பால்வெளி மண்டலத்திலேயே உயிரைக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் தாவரங்கள், உயிரினங்கள் புவியை வளப்படுத்துவதுதான். நாகரிக வளர்ச்சியின் ஒருபகுதியாகப் படிப்படியாக அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்ட மனித இனம், தொழிற்புரட்சிக்குப் பிறகு புவியை கட்டுமீறிச் சுரண்டிவருகிறது. தொழிற்சாலைகள், பெருநிறுவனங்களே இதைச் செய்தாலும், இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை நுகர்வோராக நாம் அனைவரும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்தச் செயல்பாடுகளால் தாவரங்கள், உயிரினங்கள் நேரடியாக அழிகின்றன. மற்றொருபுறம் காலநிலை நெருக்கடி, புவி வெப்பமடைதல், கட்டுப்பாடற்ற பிளாஸ்டிக் பயன்பாடு, ஊரெங்கும் குப்பை, நீர்த் தட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகளுக்குள் நாம் சிக்கித் தவிக்கிறோம். எந்த அறிவியல் அறிவால் நமக்குத் தேவையான வசதிகளை உருவாக்கிக்கொண்டோமோ, அதே அறிவைப் பயன்படுத்தி நம்மை மட்டுமல்லாமல் இந்தப் புவி, இங்கு வாழும் உயிர் அம்சங்களான தாவரங்கள், உயிரினங்கள், தண்ணீர், நிலம், காற்று ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும். இந்த அறிவியலை குழந்தைகளுக்குக் கற்றுத்தரவும் உணர்த்தவும் வேண்டும். 4. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் பற்றி நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள். இதன் முக்கியத்துவம் என்ன? சுற்றுச்சூழல் குறித்த தேசிய அளவிலான, பன்னாட்டு அளவிலான துறைசார் நிபுணர்கள் பலர் தமிழர்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் தங்கள் தாய்மொழியில் எழுதுவது, பேசுவது போன்றவற்றை பரவலாக முன்னெடுக்கவில்லை. இதனால், என்னைப் போன்று ஆர்வம் கொண்டவர்கள் வெளியில் இருந்து இந்தப் பணியை இயன்ற அளவில் முன்னெடுக்கிறோம். சுற்றுச்சூழலையும் குழந்தைகளையும் பாதுகாத்தால்தான் இந்தப் புவிக்கு எதிர்காலம் என்கிற ஒன்று இருக்கும். இந்தப் பின்னணியில் நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் சுற்றுச்சூழல் சார்ந்து எழுதிவருகிறேன். மிக முக்கியமாக, சுற்றுச்சூழல் என்பது ஓர் அறிவியல் துறை. வழக்கமான அறிவியல் துறைகளைவிட இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். 5. தமிழ் சிறார் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்ன மாதிரி படைப்புகள், குழந்தைகளுக்கு தவறான புரிதலை தரக்கூடியவை. இந்தக் கேள்வியை சுற்றுச்சூழல், அறிவியல் படைப்புகள் என்று எடுத்துக்கொள்கிறேன். அறிவியல் சார்ந்து தமிழில் ஓரளவுக்குத்தான் எழுதப்படுகிறது. பெருமளவு அறிவியல் எழுத்து மொழிபெயர்ப்பாக இருக்கிறது. துறைசார்ந்த சொற்கள், அறிவியல் தமிழ் முறையாக வளர்த்தெடுக்கப்படாததால், குழந்தைகளுக்குத் தமிழில் அறிவியலைச் சொல்வதில் சிக்கல் நிலவுகிறது. குழந்தைகளின் நிலைக்கு ஏற்ப அறிவியல் தமிழ் மொழிநடை உருவாக்கப்படவில்லை. மற்றொன்று துறைக்கு வெளியில் இருந்து வரும் பலரும் அறிவியலை சரியாக உள்வாங்கிப் புரிந்துகொள்ளாமல் அறிவியல் நூல்கள், கட்டுரைகளை எழுதுகிறார்கள். இந்த நூல்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் வகையில் இல்லை. கற்பனைத்திறன் என்கிற பெயரில் அறிவியலுக்கு எதிரான தன்மையையே பல நூல்கள் கொண்டுள்ளன. இந்த இடத்தில் கடந்த தலைமுறையில் அறிவியல் சார்ந்து எழுதிய பெ.நா.அப்புசாமி, 'கல்வி' கோபாலகிருஷ்ணன், ரேவதி எஸ். ஹரிஹரன், வாண்டுமாமா போன்றோரின் மொழிநடை, எழுதிய முறையை இந்தத் தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டும். சுற்றுச்சூழல் சார்ந்து எழுதும் ஆர்வம் சிறார் எழுத்தாளர்களிடையே தற்போது அதிகரித்துவருகிறது. அதேநேரம், சுற்றுச்சூழல் உண்மைகளை, பின்னணியைக் கற்காமலேயே நூல்களை எழுதுகிறார்கள். எந்த ஒரு துறை சார்ந்து எழுதுவதற்கு முன்பும், அந்தத் துறையின் அடிப்படைகளை ஆழமாக உள்வாங்கவும் கற்கவும் வேண்டும். மாறாக, நுனிப்புல் மேயும் ஆர்வத்துடன் நூல்கள் எழுதப்படுகின்றன. இதுபோன்ற நூல்களால் நூலாசிரியரின் எழுத்துப் பட்டியல் நீளுமே தவிர, வாசகருக்குப் பெரிய பயன் இல்லை. இந்த அம்சங்களைச் சுட்டிக்காட்டினால் பல எழுத்தாளர்கள் ஏற்பதற்குத் தயாராக இல்லை. கடந்த தலைமுறையில் சுற்றுச்சூழல் சார்ந்து எழுதப்பட்ட சிறார் நூல்களிலுமே இந்தப் பிரச்சினை உள்ளது. காட்டை நேரில் கண்டிராத, அறிவியல்பூர்வமாக காட்டை உள்வாங்கிக்கொள்ளாத பல சுற்றுச்சூழல் படைப்புகள் கடந்த தலைமுறையிலும் வெளியாகி உள்ளன; சிறந்த படைப்புகள் எனச் சிலாகிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இனிமேலும் இது தொடரக் கூடாது. 6. குழந்தைகள் புனைவு, அபுனைவு ஆகியவற்றில் எதை விரும்பி வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? இதில் மாற்றம் தேவையா? எல்லாருக்கும் கதை பிடிக்கும். அது அதிகம் வெளியாவது இயல்புதான். அதேநேரம், கதை என்கிற பெயரில் மேம்போக்கான படைப்புகள் அதிகரித்துவருகின்றன. சிறாருக்கான இந்திய ஆங்கில இலக்கியத்திலோ, உலக ஆங்கில இலக்கியத்திலோ அபுனைவு நூல்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. சிறார் எழுத்தாளர்களிடையே புனைவு-அபுனைவு என்கிற வேறுபாடு அங்கு பெரிதாகப் பார்க்கப்படுவதில்லை. 80களில் வெளியான கோகுலம், பூந்தளிர் இதழ்களில் கதைகளுக்கு இணையாக அபுனைவில் கவனம் செலுத்தப்பட்டது. குழந்தைகளுக்குக் கதைதான் பிடிக்கும். அதேநேரம் அபுனைவு நூல்களையும் படைப்பூக்கத்துடன் கதைபோல எழுத முயலலாம். 7. இன்றைய தமிழ் சிறார் இலக்கியச் சூழலில் குழந்தைகளின் வாசிப்பு அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறதா? எழுத்தாளர்கள் இதை கணக்கில் எடுத்துக்கொண்டு, அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்குகிறார்களா? குழந்தைகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் நேரடித் தொடர்பில்லை. குழந்தைகளின் வாசிப்பு அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். நான் உள்பட பல எழுத்தாளர்கள் இந்த இடைவெளியுடன்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். இதழியலில் பின்பற்றப்படும் சில தரப்படுத்தல் அடிப்படையில் ஓரளவுக்கு மொழிநடை, வாசிப்பு நிலை போன்றவற்றை முடிவுசெய்யலாம். அதேநேரம் இன்றைக்குப் பெரும்பாலான குழந்தைகளில் தாய்மொழியில் வாசிக்கவே தடுமாறுகிறார்கள். அவர்களை நாம் கணக்கில் கொள்வதில்லை. வாசிக்கத் தடுமாறும் தலைமுறையை வளர்த்தெடுப்பதற்கு மாறாக, எளிமையான மொழிநடையில் எழுதுவது இலக்கியத்தைக் கொன்றுவிடும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். இலக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல பரவலான வாசிப்பும் மிக முக்கியம். அதற்கு மொழிநடை எளிமையாக இருக்க வேண்டும். வாசிக்கவே தெரியாத தலைமுறையை வைத்துக்கொண்டு, யாருக்காக நாம் இலக்கியம் படைக்கப் போகிறோம்? இது பெரும்பணி என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் அது சார்ந்து சிறார் எழுத்தாளர்கள் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கவில்லை. (சந்திப்பு : சுகன்யா ராமநாதன்) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.

  • புறா எப்போது? எப்படிப் பறந்தது?

    புறா அழகுதான். அது பறப்பது இன்னும் அழகுதான். ஆனால், ஒரு காலத்திலே புறாக்களால் பறக்க முடியாமல் இருந்தது தெரியுமா? இறக்கையைப் படபடவென்று அடித்துக்கொண்டே கொஞ்சம் உயரமான இடத்துக்குத் தாவும். இறக்கையை மடித்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால் மற்ற பறவைகள் போல உயரத்தில் பறக்க முடியாது, அதைப் பற்றி புறாக்கள் கவலைப்பட்டதும் கிடையாது. அப்படி இருந்தபோது, நம் குறிஞ்சிக் காட்டில் மஞ்சு என்று ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாள். அவள் ஒரு புறாக்குஞ்சை எடுத்து வளர்த்தாள். அதனிடம் மிகவும் பாசமாக இருந்தாள். காட்டுவாசி மக்கள் எல்லாரும் அவள் மீது பாசமாக இருந்தார்கள். அவளுடைய அன்பும் பண்பும் அறிவும் சுறுசுறுப்பும் யாருக்குத்தான் பிடிக்காது! ஒருநாள் காட்டுக்குள் மந்திரவாதி என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான். மந்திரத்துக்கு மாய சக்தி எதுவும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்தானே? ஆனால் அவன் தன்னுடைய மந்திரக் கோலுக்குப் பயங்கரமான சக்தி இருப்பதாகக் கதை கட்டிவிட்டு எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு சுற்றி வந்தான். அவன் புறாக்குஞ்சுவோடு விளையாடிக்கொண்டு இருந்த மஞ்சுவைப் பார்த்தான். அவளை எப்படியாவது கடத்திப் போய் தன்னுடைய அடிமையாக வைத்துக்கொள்ளத் திட்டம் போட்டான். அவள் பக்கத்தில் போய் பேச்சுக் கொடுத்தான். மிகவும் நல்லவன் மாதிரி நலம் விசாரித்தான். அவளும் அன்பாகப் பேசினாள். அவளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது போல் நடித்தான். அவளும் மகிழ்ச்சியாக விளையாடினாள். ஆனால் புறாக்குஞ்சுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவன் மேல் அதற்கு சந்தேகமாகவே இருந்தது. அயர்ந்த நேரமாகப் பார்த்து அவன் மஞ்சுவை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடினான். தன்னை அவன் கடத்துகிறான் என்று புரிந்துகொண்டு அவள் கத்தினாள். அவனோ வேகமாக ஓடினான். சத்தம் கேட்டு காட்டு மக்கள் வருவதற்குள் அவன் அவளைத் தூக்கிக்கொண்டு காட்டை விட்டே வெளியேறிவிட்டான். மஞ்சு கடத்தப்பட்டதைத் தெரிந்துகொண்டு எல்லாரும் பதறினார்கள். அந்த மந்திரவாதியைப் பற்றித் தெரிந்தவர்கள் அவனை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த புறாக்குஞ்சு முதல் முறையாகத் தன்னால் பறக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டது. பறக்க முயற்சி செய்தது. ஆனால் வழக்கம் போலக் கொஞ்சத் தொலைவுதான் பறக்க முடிந்தது. முதல் முயற்சி வெற்றிபெறவில்லை என்பதற்காக அது சோர்ந்துவிடவில்லை. மறுபடியும் மறுபடியும் இறக்கைகளை விரித்து அடித்துக்கொண்டே இருந்தது. முன்னால் பாய்ந்து பாய்ந்து இறக்கையை வீசியது. ஒவ்வொரு தடவையும் கீழே விழுந்தது. ஆனால் விடாமல் இப்படி நூறு தடவையாவது செய்திருக்கும். என்ன அதிசயம்! இப்போது அதனால் முன்பு போனதை விட அதிகமான உயரத்துக்குப் போக முடிந்தது. கீழே விழாமல் கூடுதல் தொலைவு போக முடிந்தது. நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பறந்தது புறாக்குஞ்சு. ஆகாயத்திலே பறந்துகொண்டு இருந்த மற்ற பறவைகளும் அதை அன்போடு வரவேற்றன. "விடாதே! றெக்கையை அடிச்சுக்கிட்டே இரு! பற பற," என்று ஊக்கப்படுத்தின. அவர்களிடம் புறாக்குஞ்சு, நடந்ததையெல்லாம் சொன்னது. "மஞ்சு அக்காவை மந்திரவாதி கடத்திட்டுப் போனதை யாராச்சும் பார்த்தீங்களா," என்று கேட்டது. "நான் பார்த்தேன்," என்று ஒரு குரல் வந்தது. அது ஒரு கொக்கு. "அவன் ஏதோ அந்தப் பொண்ணோட விளையாடுறான்னு நினைச்சிட்டேன்," என்று அந்தக் கொக்கு சொன்னது. "சரி, எல்லாரும் நம்ம கொக்கு சொல்ற திசையில பறந்து தேடுவோம்," என்று ஒரு காடை சொன்னது. அதே போல் எல்லாப் பறவைகளும் புறாக்குஞ்சுக்குத் துணையாக மஞ்சுவைத் தேடிப் புறப்பட்டன. மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகின் கண்களில் ஏதோ மாறுதலாகத் தென்பட்டது. மற்ற பறவைகளைக் கூப்பிட்டு அதைக் காட்டியது. “அங்கதான் மஞ்சு இருக்கா,” என்று உற்சாகமாகச் சொன்னது. உடனே எல்லாப் பறவைகளும் வேகமாகப் பறந்து போய் கழுகு காட்டிய இடத்தில் இறங்கின. அவைகளுடன் நம் புறாக்குஞ்சும் இறங்கியது. ஓர் ஏரிக்கரையில் இருந்த தேக்கு மரத்துக்குக் கீழே ஒரு கூடாரம் இருந்தது. பறவைகள் நினைத்தது போலவே அது மந்திரவாதியின் கூடாரம்தான். உள்ளே நம் மஞ்சு இருந்தாள். ஆனால் அவளை மந்திரவாதி கட்டிப்போட்டுவிட்டு வெளியே போயிருந்தான். அதற்காக அவள் அழுதுகொண்டு இருக்கவில்லை. தப்பிப்பதற்கு வழி இருக்கிறதா என்று தேடிக்கொண்டு இருந்தாள். கூடாரத்துக்கு உள்ளே வந்த புறாக்குஞ்சையும் மற்ற பறவைகளையும் பார்த்ததும் அவளுக்கு ஒரு புதுத் தெம்பு ஏற்பட்டது. எல்லாப் பறவைகளும் சேர்ந்து அவளைக் கட்டிப் போட்டிருந்த கயிறை அவிழ்த்துவிட்டன. அப்போது பார்த்து மந்திரவாதி வந்துவிட்டான். "ஏய் ஏய், என்ன செய்றீங்க," என்று கேட்டுக்கொண்டே மந்திரக்கோலைக் கையில் எடுத்தான். அவ்வளவுதான், எல்லாப் பறவைகளும் சேர்ந்து அவனைக் கொத்தத் தொடங்கின. கொத்து என்றால் கொத்து சரியான கொத்து. தலை, முகம், முதுகு, மார்பு, கை என்று எல்லா இடத்திலும் கொத்தின. அவன் வலி தாங்க முடியாமல் அலறியடித்துக்கொண்டே மந்திரக்கோலைக் கீழே போட்டுவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். ஒரு மயில் தன்னுடைய முதுகில் மஞ்சுவை உட்கார வைத்தது. எல்லாரும் அவளுடைய இடத்துக்குத் திரும்பிப் பறந்தன. காட்டுவாசிகள் அவளைப் பார்த்துப் பேரானந்தம் அடைந்தார்கள். "எல்லாரும் புறாக்குஞ்சுக்குத்தான் நன்றி சொல்லணும். அதனோட முயற்சியாலதான் மஞ்சுவைக் காப்பாத்த முடிஞ்சது," என்று சொன்னது கவுதாரி. மஞ்சுவுக்கும் அப்போதுதான் கவனம் வந்தது. உடனே அவள், "அட உன்னால எப்படி பறக்க முடிஞ்சிச்சு," என்று புறாக்குஞ்சைப் பார்த்துக் கேட்டாள். புறாக்குஞ்சு தன்னால் பறக்க முடியாமல் இருந்ததையும், மஞ்சுவைக் காப்பாற்றுவதற்காக இறக்கைகளை விரித்து விரித்து வீசி வீசி விடாமுயற்சியில் ஈடுபட்டதையும், கடைசியில் பறக்க முடிந்ததையும் கதை போல விவரித்தது. மஞ்சு மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதனை அணைத்துக்கொண்டாள். மற்ற பறவைகளும் அதைப் பெருமையாகப் பார்த்தன. காட்டுவாசிகள் மஞ்சுவையும் புறாக்குஞ்சையும் தோளில் தூக்கிக்கொண்டு ஒரே கொண்டாட்டமாகச் சுற்றி வந்தார்கள். அந்தப் புறாக்குஞ்சு வளர்ந்து பெரிய புறாவான பிறகு நிறைய முட்டைகள் போட்டது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வந்தன. அவைகளுக்கு எல்லாம் நல்ல வலுவான இறக்கைகள் முளைத்திருந்தன. அப்படிப் பிறந்த எல்லாப் புறாக்குஞ்சுகளும் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகப் பறக்கத் தொடங்கின. இன்றைக்கு நாம் பார்க்கும் புறாக்கள் அந்த விடாமுயற்சிப் புறாவின் சந்ததிகள்தான் என்று குறிஞ்சிக் காட்டு மக்கள் பேசிக்கொள்கிறார்கள். யே மாமா பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.

  • அம்மாக்கு என்னைய புடிக்கும்

    ரெண்டு நாளா எல்லாரும் அழுதுகிட்டே இருந்தாங்க... அம்மா பின்னாடியே நடந்து நடந்து போனாங்க.. “எல்லாரும் எங்க போறாங்க..?” நான் கேட்டேன். “அவுங்க அவுங்க வீட்டுக்கு போய்ட்டாங்க,” மது அக்கா சொன்னா.. அவ மெர்மேய்ட் பொம்மைய எப்பவும் ஷேர் பண்ணவே மாட்டா.. ஆனா, இப்போ நான் கேக்காமலேயே எனக்கு ஷேர் பண்ணுனா... ஆனா.. எனக்கு இப்போ அந்த பொம்ம வேணாம்.. அம்மா தான் வேணும்! அம்மாவ ரெண்டு பேர் .. மம்.. இல்ல.. அஞ்சு பேர் தூக்கிட்டு போனாங்க.. ஒரு கார்.. இல்ல வேன் வந்துச்சு.. மாமா கல்யாணத்துல கார்ல பூவெல்லாம் ஒட்டி வச்சு டெக்கரேட் பண்ணி இருந்தாங்க... அதே மாதிரி.. பூவெல்லாம் வச்சு டெக்கரேட் பண்ணி இருந்தாங்க... அம்மா அதுல போயிட்டாங்க .. அதோ.. அப்பாவும் போறாங்க... எனக்கு பயமா இருந்துச்சு..பாட்டி சொன்னாங்க அம்மா சாமிக்கிட்ட போய்ட்டாங்க.. இனிமே வரமாட்டாங்கன்னு … அப்போ அப்பாவும் வர மாட்டாங்களா? யாராச்சும் அப்பாவைக் காப்பாத்துங்கன்னு கத்தனும் போல இருந்திச்சு .. நானும் அப்பாக்கூட போறேன்னு அழுதேன்.. பாட்டி இடுப்புல இருந்து இறங்கி ஓடி வந்தேன்.. யாரோ மாமா என்னைய... ஒரே கையில தூக்கி எடுத்துட்டு வந்து.. ஒரு அத்தை கையில குடுத்துட்டு போயிட்டாங்க.. நான் அழுது அழுது .. பாட்டி மடியில தூங்கிட்டேன்.. கண் முழிக்கும்போது அப்பா மடியில இருந்தேன்.. அப்பா வேற மாதிரி இருந்தாங்க ... அப்பாவைக் கட்டிப்புடிக்க பயமா இருந்துச்சு... அப்பா வந்துட்டாங்க! அப்போ அம்மா எப்போ வருவாங்க..? அப்பா கிட்ட கேட்டேன். “அம்மா இறந்து போயிட்டாங்க.. இனிமே வரமாட்டாங்க ..” “சாமி எங்க இருக்கு.. எப்ப அம்மாவைத் திரும்பி வர விடும்..” அப்பா பதிலே சொல்லல.. அப்புறம்.. தினமும் பாட்டி தான் என்ன குளிப்பாட்டினாங்க.. மது அக்கா, பிரியா, லோகேஷ் எல்லாரோட விளையாடுவேன்.. பாட்டிக்கு அம்மா மாதிரி அனிமல்ஸ் தோசை சுட தெரியாது.. அடம் பிடிச்சா அப்பா என்னிக்காச்சும் சுட்டு தருவாங்க. மது அக்கா ஸ்கூல் டை கட்டிவிடும்.. ஆனா அம்மா மாதிரி கட்ட தெரியாது.. அத்தை ஸ்கூல் கொண்டு போய் விட்டாங்க.. அம்மா பைக்ல.. ஆனா அம்மா மாதிரி.. பஞ்சுமிட்டாய் வந்தா நிறுத்தி வாங்கி தர மாட்டாங்க.. யாருமே அம்மா மாதிரி தூங்க வைக்க மாட்டாங்க.. கதை சொல்ல மாட்டாங்க.. கட்டி புடிக்க மாட்டாங்க.. என் வயித்துல அம்மாவோட பச்சைத் துணிய வச்சு.. நான் தூங்கும் வரைக்கும் தடவி குடுக்க மாட்டாங்க.. அதுனால தான் நைட்ல நான் அழுவேன்.. அம்மா கிட்ட பேசுவேன்.. எப்போ வருவேன்னு கேப்பேன்.. சில நைட்டு கோச்சிக்கிட்டு பேச மாட்டேன்.. அப்போ தானே அம்மா சீக்கிரம் வருவாங்க! மறுபடியும் பேசுவேன் .. இன்னிக்கு பச்சைத் துணியோட அம்மா கிட்ட பேசினேன்.. ஆனா அம்மா சொன்னது தான் எனக்கு கேக்க மாட்டேங்குது.. ரொம்ப தூரத்துல இருக்காங்க.. அவுங்க வானத்துக்கு போய்ட்டாங்க .. ஸ்டார் ஆயிட்டாங்க.. ஒரு நாளு.. கிரிக்கெட் வெளையாடுனேன்.. அடி பட்டுச்சு.. ரத்தம் வந்துச்சு .. கொஞ்சம் தான்.. பாட்டி திட்டினாங்க .. “ஒங்க அப்பா கிட்ட என்ன பதில் சொல்லுறது.. உயிர எடுக்குற..”. மருந்து போட்டாங்க.. அம்மாவும் என்ன அப்படி திட்டி இருக்காங்க. நான் பால் குடுத்தா குடிக்காம வச்சுட்டு விளையாடுவேன். அது அப்போ அப்போ கொட்டிடும். அம்மா திட்டுவாங்க. ஒரு நாள் சோபாலa கொட்டிடுச்சு. அம்மாக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு. அப்புறம் ஒரு நாள் அம்மாவோட ஆபீஸ் நோட்புக்குல நான் வரைஞ்சுட்டேன். “ஏன் இப்படி கிறுக்கி வச்ச? என் உயிர எடுக்குற..” கோவமா அம்மா திட்டினாங்க. அம்மா, நான் சேட்டை பண்ணனாலா தான் போய்ட்டாங்க .. அம்மாக்கு என்ன புடிக்கல.. அதுனால போய்ட்டாங்க... நான் அன்னிக்கு ரொம்ப அழுதேன்.. கொஞ்ச நாள் கழிச்சு.. அம்மா டிரஸ்ஸெல்லாம் ஸ்ருதி சித்திக்கும், திவ்யா அக்காக்கும் குடுத்தாங்க.. அப்போ அம்மாவுக்கு..? ஒரு ஷால மட்டும் நான் எடுத்துக்கிட்டு வந்தேன்.. அம்மா அந்த போட்டோல அந்த டிரெஸ் தான் போட்டுருப்பாங்க.. எனக்கு கிஸ்ஸீ கொடுத்தாங்க.. அதுல.. நான் பேபியா இருந்தேன்.. அன்னிக்கி ஸ்கூல்ல எல்லாரோட அம்மாவும் வந்தாங்க.. எனக்கு மட்டும் அப்பா மட்டும் வந்தாங்க.. அப்பாட்ட டீச்சர் சொன்னாங்க .. “மகி ரொம்ப சமத்து..குட் கேர்ள்..” இன்னும் சொன்னாங்க.. அம்மா பத்தி சொன்னாங்க.. எனக்கு கொஞ்சம் தான் புரிஞ்சுது. அப்பாவும் டீச்சர்ட்ட சொன்னாங்க.. “வீட்டுல அவளே அவ வேலைகள செய்யுறா.. சமத்தா இருக்குறா...“ அப்பா கண்ணுல தண்ணி.. ஆனா அழுவல .. அப்பாக்கு என்ன ரொம்ப புடிக்கும்.. பாட்டிக்கும் தான்.. டீச்சருக்கும் என்ன புடிக்கும்.. அப்போ அம்மாக்கும் என்ன கண்டிப்பா புடிக்கும் ! அம்மா அன்னைக்கு தூங்கும் போது கனவில் வந்தாங்க. முத்தம் குடுத்தாங்க. சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.

  • சுவரில்லாக் கல்வி : 'மரத்தடிப் பள்ளி' காட்டும் மாற்றுப் பாதை

    மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம் – ரகுபாபு தமிழில் – கலை கீர்த்தி 1990களில் தனியார்மயமாக்கலுக்கும் அதற்கு முன்னரும் பல பள்ளிக்கூடங்கள் மரத்தடிகளிலேயே நடந்தன. பின்னரும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அவ்வப்போது பள்ளி வளாகத்தினுள் மரத்தடிகளில் ஓரிரு வகுப்புகள் நடப்பதுண்டு. அந்த வகுப்பினை விரும்பாத குழந்தைகள் இருந்ததில்லை. மணலில் விளையாடிக் கொண்டும், மரத்தினையும், அதில் அமரும் பறவைகளையும், ஆங்காங்கே தென்படும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும், மைதானத்தையும் வேடிக்கைப் பார்ப்பது அதிகமாகவும், பாடத்தை கவனிப்பது குறைவாகவும் இருக்கும். எனினும் மனதில் பதிந்த காட்சியாக மரத்தடி வகுப்பு பலருக்கும் இருக்கும். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் இது போன்ற வகுப்பறை மாற்றம் வழக்கத்திலிருந்து ஆசுவாசப்படுத்துவதாகவும் இருந்தது. இன்றோ மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதென்பது ஒரு அதிசய நிகழ்வு போன்று பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் குளிரூட்டப்பட்ட வகுப்புகள் அளவிற்கு வசதிகள் அதிகரித்துள்ளது. இக்காரணத்தால் அரசு பள்ளிகளில் குறைந்தபட்சம் நல்ல மின்விசிறி கொண்ட அறைகளாவது இருப்பதை பெற்றோர்கள் விரும்புகின்றனர். அகண்ட வெளியிலும், மரத்தடிகளிலும் வகுப்புகள் நடப்பதென்பது வறுமையின் சின்னமாக உள்ளது. இவ்வாறு ஒரு பக்கம் இருக்கையில் மரத்தடிகளில் பாடங்கள் எடுப்பதை “மாற்றுக்கல்வி”யாகவும் “மாற்றுப் பள்ளி”யாகவும் சிலர் அழைக்கின்றனர். இதனிடையில் கொரொனா ஊரடங்கிற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட போது வாய்ப்புள்ளவர்கள் திறந்தவெளிகளில் பாடங்கள் எடுக்க அறிவுறுத்தப்பட்டனர். இயற்கையோடு இருப்பதே இயல்பு என்பதற்கு மாறாக அவ்வாறு இருப்பது ஒரு “தனி கவனம்” பெறும் சம்பவமாக மாறியிருப்பது வருத்தத்திற்குரியது. “மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்” என்ற புத்தகத்தின் தலைப்பே மரத்தடி நினைவுகளை மீட்டெடுத்தது. அட்டைப்படத்தில் தொடங்கி இப்புத்தகத்தில் உள்ள படங்கள் – குழந்தைகள் வரைந்துள்ளவை உட்பட – அனைத்தும் அருமை. அட்டைப்படமே புத்தகத்தின் சுருக்கமாக உள்ளது கூடுதல் அழகு. இப்புத்தகத்தின் தொடக்கப் பகுதியின் ஒரு வரி – “நம்மால் நம்மை இயற்கையில் இருந்து எவ்வாறு பிரித்துக் கொள்ள முடியும்?” “அதெல்லாம் எங்களால் முடியும்” என்பது போன்றே இன்றைய நம் வாழ்வியல் உள்ளது. ஆனால் 1980களில் நல்லூர் அருகே இயங்கிய ஒரு பள்ளி, குழந்தைகளை இயற்கையோடு நெருக்கமாக்கியது மட்டுமல்லாமல் கற்றலும் இயற்கையாக நிகழ்வதற்கான அனைத்து சூழலையும் உருவாக்கி, இன்றும் பலருக்கு அதன் அனுபவங்களை பாடமாக அளித்துள்ளது. அப்பள்ளி பற்றிய குறிப்புகள் தான் இப்புத்தகம் “மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்.” இப்புத்தகத்தை வாசிக்கையில் “டோட்டோ-சான்”, “இதயம் தருவோம் குழந்தைகளுக்கு” போன்ற புத்தகங்களையும், “மரியா மாண்டசரி” மற்றும் “ஜான் ஹோல்ட்” போன்ற ஆளுமைகளையும் நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. குழந்தைகளோடு இணைந்து பணியாற்றிய அனைவரும் இப்புத்தகத்தில் உள்ளவை போன்று பல கற்றல் முயற்சிகளை பரிசோதித்து, தோற்று, வெற்றி கண்டிருப்பர். இன்றைய பெற்றோர்கள் ஆசிரியர்கள் புதிய முயற்சிகளை செய்யாமல் இருந்தாலும் குறைந்தபட்சம் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை அவர்களின் பள்ளிகளிலும் வீடுகளிலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். நம் குழந்தைகள் இப்புத்தகத்தை வாசித்தால் இது போன்ற பள்ளியில் தங்களை சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பர். அவ்வாறு நடப்பதற்கு முன்னர் நாம் இப்புத்தகத்தை வாசித்து நம்மால் முடிந்த மாற்றத்தை பள்ளிகளில் கொண்டுவருவது சிறப்பு. சிறு குழந்தைகள் கவிதைகள், ஓவியம், கதைகள், கற்பனை உரையாடல்கள் எழுதுவதும், வரைவதும் இயற்கையாக நிகழக்கூடியது என்பதற்கு இப்புத்தகம் மேலுமொரு சாட்சி. சின்ன கதைகளைக் கொண்ட புத்தகங்களையே இன்றைய குழந்தைகளிடம் கொண்டு செல்ல நாம் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, ‘அன்னை நிலம்’ போன்ற அருமையான ரஷ்ய நாவலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய இப்பள்ளி ஆசிரியர்களை எப்படி பாராட்டாமலும், வியந்து பார்க்காமலும் இருக்க முடியும்! வகுப்புகளின் பெயர்கள் எண்ணிக்கையில் இல்லாமல் மரங்களின் பெயர்களாக சூட்டியிருப்பது, மாணவர்கள் விரும்பும் பாடங்களை விரும்பிய நேரத்தில் பயில்வது, பாடங்களுடன் சேர்ந்து ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்ய கற்பிக்கப்படுவது என ஒரு குழந்தை விரும்பும் வண்ணமாக இப்பள்ளி இருந்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், நம் பள்ளிகளின் கட்டமைப்பில் இவற்றை செய்து பார்ப்பதில் நடைமுறை சிக்கல்கள் ஏராளம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்புத்தகத்திலும் அன்று அவர்கள் சந்தித்த சிக்கல்களையும் குறிப்பிடுகின்றனர். ஒரு வகுப்பின் கூச்சல் பிற மாணவர்களுக்கு தொந்தரவாக இருப்பது, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உடன்படாத பள்ளி செயல்பாடுகள், குழந்தைகளுக்கே உண்டான இயல்பினை எதிர்கொள்வது, குழந்தைகள் மீதான பெற்றோர்களின் மற்றும் சமூகத்தின் தாக்கம் என எக்காலத்திற்கும் பொருந்தும் சவால்கள் உரையாடப்படுகின்றன. பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான, நாம் உரையாட வேண்டிய சம்பவங்கள் போன்றவற்றை வாசிக்கையில், அப்பள்ளி குழந்தைகளின் பயணத்தில் நாமும் இணைந்து விடுவோம். “புளியமரம்” என்ற தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பொங்கல் திருவிழாவினைக் கொண்டு அனைத்து பாடங்களும் எவ்வாறு கற்கப்பட்டது என்பதை வாசிக்கையில், ஒவ்வொரு பாடத்தினைக் கொண்டும் எவ்வாறு “சமாதானத்தையும், வன்முறையின்மையையும்” கற்றுக் கொடுப்பது என்பதற்கான ஒரு பயிற்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது. எந்த பாடத்தைக் கொண்டும் நாம் சொல்ல விரும்புவதை சற்றே மெனக்கெட்டால் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதற்கு இந்த குறிப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். “தற்கற்றல் தளங்கள்” என்ற பகுதி ருசிகரமானது. அனைத்து பள்ளிகளிலும் சாத்தியமில்லாமல் போனாலும், பொது நூலகங்களில் இது சாத்தியமே! குழந்தைகளுக்கு இது புரியாது என்று ஒதுக்காமல் “பெண்ணியம்” போன்ற தலைப்புகளும் 90களில் உரையாடப்பட்டிருப்பது ஆச்சரியம்! நாம் பலவற்றை உரையாட தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. உரையாடல்கள் பகுத்தறிவுக்கான முதலீடு தானே! ஆறுகளோடும், விவசாயத்தோடும், விவசாயிகளோடும் இவர்களின் கற்றல் பயணம் தொடர்கிறது. வீடுகளிலும், பள்ளிகளிலும் அகராதியினை அறிமுகப்படுத்தவே தவறுகிறோம். ஆனால் இங்கோ குழந்தைகள் ஒரு ‘அகராதி’யினை உருவாக்குகின்றனர். இப்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிய ரகுபாபு எழுதிய இப்புத்தகத்தை தமிழில் கலை கீர்த்தி மொழிபெயர்த்து நேர்த்தியாக தன்னறம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகம் “செயல் வழிக் கற்றலை” விரும்பும் அனைவருக்கும் ஒரு சிறு கையேடு. இயன்றதை முயன்று பார்க்கலாம். ஏனெனில் எந்த ஒரு முயற்சியும் எளிதில் வெற்றியடையாது. ஆனால் தோல்வியில் துவண்டுவிட்டால் மாற்றமே நிகழாது! கல்விக் கற்றலிலும், கற்பித்தலிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டியது கட்டாயம். செ.பிரியதர்ஷினி பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்று அரசு கல்லூரியில் நிதியாளராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளை பொருளாளராகவும் உள்ளார்.

  • அறிவோம் ஆளுமை - 15

    தெற்கில் உதித்த பகுத்தறிவுச் சூரியன் ரதி: அத்தை, இதுதான் பெரியார் பிறந்த வீடா? ஜோ: ஆமாம் ரதி. ஈரோட்டில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு மாநிலத்தின் சிந்தனையை மாற்றும் அளவுக்குத் தன்னை வளர்த்துக் கொண்டது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஈரோட்டில் உள்ள அவருடைய வீட்டைப் பார்க்க வேண்டும். ஈ.வே.ராமசாமி என்ற பெரியாரின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். நகுலன்: அத்தை, பெரியாரைப் பற்றி நிறைய பேர் பேசுறாங்க. சிலர் அவரை பெரிய சமூக சீர்திருத்தவாதி என்று சொல்றாங்க... சிலர் சர்ச்சைக்குரியவர் என்று சொல்றாங்க.. உண்மையில் பெரியார் யார்? ஜோ: நல்ல கேள்வி. ஒரு மனிதரைப் பற்றி அறிய வேண்டுமென்றால் அவர் எத்தகைய காலத்தில் வாழ்ந்தார்? எத்தகைய நோக்கங்களைக் கொண்டிருந்தார்? என்ன மாதிரியான செயல்களைச் செய்தார்? யாருக்காகச் செய்தார்? அவர் என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டார்?, அதற்கு என்ன தீர்வு சொல்ல முயன்றார்? அதனால் சமூகத்துக்கு நன்மை நடந்ததா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். ரதி – அத்தை.. நீங்க சொல்றது ரொம்ப இண்டிரஸ்டிங்கா இருக்கு.. அப்படின்னா யாரைப் பற்றியும் ஆராயாமல் எதையும் சொல்லக் கூடாதில்லையா? ஜோ – ஆமாம் ரதி. பெரியார் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை இருந்தது. தீண்டாமை இருந்தது. சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் கல்வி கற்க தடை இருந்தது. ஏன்னா கல்வி சிலரின் கைகளில் மட்டும் இருந்தது. பெண்களுக்கு சம உரிமை இல்லை. குழந்தைத் திருமணம் இருந்தது. விதவைகளின் வாழ்க்கை கொடுமையாக இருந்தது. இந்த அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார். ரதி: அத்தை, அவர் சிறுவயதில் இருந்தே இப்படித்தானா? ஜோ: ஆமாம். சிறுவயதிலேயே அவர் கேள்வி கேட்கும் பழக்கம் கொண்டவர். எல்லாரும் நம்புகிறார்கள் என்பதற்காக அவர் நம்ப மாட்டார். ஏன்? என்று கேட்பார். எப்படி?‌ என்று கேட்பார். அதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்பார். நகுலன்: எந்த மாதிரியான கேள்விகளை கேட்டார்? ரதி : கடவுள் எல்லோரையும் படைத்தார் என்றால் ஏன் சிலர் பணக்காரர்கள், சிலர் ஏழைகள்? ஜோ : அட! சரியாக சொல்லி விட்டாயே? ரதி : அத்தை எங்களுக்கே அந்தக் கேள்விகள் வருதே… எல்லோரும் மனிதர்கள் என்றால் ஏன் சிலரைத் தொட்டால் தீட்டு என்று சொல்கிறார்கள்? இன்னும் நிறைய கேள்விகள் எனக்கு தோன்றும் அத்தை. என் அப்பா எனக்கு பெரியாரைப் போல் இப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கூறுவார். ஜோ : சபாஷ்! அதுமட்டுமல்ல, கடவுள் முன்னால் எல்லோரும் சமம் என்றால் கோயிலுக்குள் எல்லோரையும் ஏன் அனுமதிக்கவில்லை? ஒரே பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகளில் ஒருவரை உயர்ந்தவன், இன்னொருவரை தாழ்ந்தவன் என்று ஏன் சொல்கிறார்கள்? "பெண்கள் ஏன் ஆண்களைப் போல சுதந்திரமாக இருக்க முடியவில்லை? இன்னும் இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். நகுலன்: அதுதான் பகுத்தறிவின் தொடக்கமா? ஜோ: சரியாக சொன்னாய். பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பது அல்ல.. பகுத்தறிவு என்பது சிந்திப்பது. கேள்வி கேட்பது. உண்மையைத் தேடுவது. பெரியார் முதலில் கேள்வி கேட்கக் கற்றுக்கொண்டார். பிறகு மக்களையும் கேள்வி கேட்கச் சொன்னார். ரதி: அத்தை, அவருக்குக் கடவுளை பிடிக்காதா? அவர் எப்போது கடவுள் மறுப்பாளராக மாறினார்? ஜோ: அது ஒரு நாளில் நடந்த மாற்றம் இல்லை. வாழ்க்கை முழுவதும் நடந்த அனுபவங்களின் விளைவு. குறிப்பாக காசிப் பயணம். நகுலன்: காசிப் பயணமா? ஜோ:- அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட காசி மிகவும் புனிதமான இடம் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்தக் காலத்தில் பெரியாரும் சென்றார். ஆனால் அங்கே அவர் கண்டது வேறு. மனிதர்களை சாதியின் அடிப்படையில் பிரித்தார்கள். சிலருக்கு மரியாதை. சிலருக்கு அவமரியாதை. சிலருக்கு உணவு. சிலருக்கு இல்லை. மனிதனைவிட மதம் பெரியதா? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அந்தக் கேள்வி தான் பிறகு சிந்தனைப் புரட்சியாக மாறியது. ரதி: அத்தை, ஒரு முறை யாரோ கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே.. ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதாக ஏதோ புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்... மறந்துவிட்டது. ஜோ: ஆமாம். அப்போது பெரியார் சொன்ன பதில் மிகவும் முக்கியமானது. கடவுள் என் முன்னால் வந்தால் கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக்கொள்வேன் என்றார். இந்த பதிலில் அவருடைய முழுச் சிந்தனையும் இருக்கிறது. உண்மைக்கு எதிராக அவர் இருந்ததில்லை. ஆதாரம் இல்லாததை நம்ப மறுத்தார். நகுலன்: அத்தை, பெரியார் ஏன் சாதியை இவ்வளவு கடுமையாக எதிர்த்தார்? ஜோ: ஏனென்றால் சாதி என்பதே உயர்வு தாழ்வு கற்பிக்கிறது.. அது ஒருவரின் திறமையைப் பார்த்து மனிதர்களைப் பிரிப்பதில்லை. பிறப்பைக் கொண்டு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிக்கிறது. அதைத்தான் பெரியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரதி: அத்தை, சாதியால் உண்மையிலேயே இவ்வளவு பிரச்சினைகள் இருந்ததா? ஜோ: இன்று நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. இப்போதும் இருக்கிறது… பிறப்பினால் தாழ்ந்தவர் தீண்டத்தகாதவர் என்று பிரிக்கப்பட்ட மக்கள் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், எந்த இடத்தில் வாழவேண்டும், என்ன தொழில் செய்யவேண்டும் என்பது உட்பட சட்டமாக இருந்தது.. அவற்றை மீறுபவர்களுக்குத் தண்டனைகளும் இருந்தன. நகுலன் – ஆமாம் அத்தை கிராமங்களில் சில தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் நடக்கக்கூட முடியாது. பல கோயில்களுக்குள் நுழைய முடியாது, என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஜோ – சரியாகச் சொன்னாய் நகுலன்.. அவ்வளவு ஏன்? கோவில்களைச் சுற்றிய சாலைகளில் கூட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் காலடி வைக்கக்கூடாது என்று விதி இருந்தது. ரதி: என்னது? சாலையில் நடக்கக்கூடாதா? இது என்ன நியாயம்? ஜோ: அதைத்தான் பெரியாரும் கேட்டார்.. அந்தக் கேள்விதான் அவரை வைக்கம் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றது. ரதி: வைக்கம் போராட்டமா? கேள்விப்பட்டிருக்கிறேன் அத்தை. அது கேரளாவில் நடந்தது தானே? ஜோ: ஆம், பரவாயில்லை இது பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயே! இன்று நாம் எந்தச் சாலையிலும் நடக்கிறோம். யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் கேரளாவின் வைக்கம் என்ற ஊரில் சாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் நடக்கக்கூடாது. குறிப்பாக மகாதேவர் கோயில் பகுதியை சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் நடப்பதற்கே உரிமை இல்லை. நகுலன்: சாலைகளில் நடக்க கூடாதா? ஜோ: ஆமாம். அதுதான் அந்தக் காலத்தின் கொடுமை. அப்போது மக்கள் போராட ஆரம்பித்தார்கள். பெரியார் அங்கே சென்றார். போராட்டத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டார். சிறை சென்றார். ஆனால் பின்வாங்கவில்லை. அந்தக் கொடிய நடைமுறை மாறியது. அதனால்தான் மக்கள் அவரை வைக்கம் வீரர் என்று அழைத்தார்கள். ரதி : காங்கிரஸ் கட்சியில் தானே அவர் இருந்தார்? ஜோ : ஆமாம், 1925-ல் வ.வே.சு. ஐயர் நடத்திய குருகுலத்தில் பிராமணக் குழந்தைகளுக்குத் தனியான உணவு, பிற குழந்தைகளுக்குத் தனியான உணவு கொடுப்பதை எதிர்த்தார். அந்த பாகுபாட்டை எதிர்த்து காங்கிரஸிலிருந்து வெளியேறினார். இத்தனைக்கும் அந்த குருகுலத்திற்கு தொடர்ந்து நிதி வழங்கி உதவியவர் பெரியார். நகுலன்: அத்தை, அவர் சிறந்த மேடைப் பேச்சாளரா? ஜோ: நிச்சயமாக, இன்று மேடையில் பேசுவது எளிது. ஆனால் அப்போது பேசினால் சிறை. எதிர்ப்பு. தாக்குதல். அவமானம். இவற்றை எல்லாம் சந்தித்தார். ஆனாலும் பேசினார். தன் கடைசிக்காலம் வரை பேசினார். ரதி: அத்தை, இங்கே ஒட்டியிருக்கும் செய்தித்தாள்களில் இருக்கும் செய்திகளைப் படிக்கும் போது பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஜோ: ஆம், அவர் வாழ்ந்த காலத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு பெண் மருத்துவராக இருக்கிறாள். பேராசிரியராக இருக்கிறாள். நீதிபதியாக இருக்கிறாள். எழுத்தாளராக இருக்கிறாள். ஆனால் அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்கூடமே போக முடியாது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்பது தான் நடைமுறையாக இருந்தது. பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. நகுலன்: அப்போது பெரியார் என்ன சொன்னார்? ஜோ: பெண்களின் கைகளில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தைக் கொடுங்கள் என்றார். ரதி: எவ்வளவு வலிமையான வார்த்தைகள்..! . ஜோ: ஏனென்றால் அது வெறும் கல்வியைப் பற்றிய வரி அல்ல. அது பெண்களின் விடுதலையைப் பற்றிய வரி. பெண் சமையலறைக்குள் மட்டுமே அடைக்கப்படக்கூடாது. அறிவுலகத்திற்கும் வர வேண்டும். சமூகத் தலைமைக்கும் வர வேண்டும். முடிவெடுக்கும் இடங்களுக்கும் வர வேண்டும் என்ற சிந்தனை. இன்று ஒரு பெண் மேடையில் நின்று பேச முடிகிறது. கருத்து சொல்ல முடிகிறது. நூல் எழுத முடிகிறது. பொதுவெளியில் தன்னம்பிக்கையுடன் இருக்க முடிகிறது. இந்த உரிமைகளுக்காகப் போராடியவர்களில் பெரியார் முக்கியமானவர். நான் இன்று ஒரு கதைசொல்லியாக எழுத்தாளராக மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்குப் பின்னால் பல தலைமுறைகள் போராடிய வரலாறு இருக்கிறது. நகுலன் : அத்தை! நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு வயதில் கூட விதவை இருந்தார்களாம் எப்படி அத்தை? ஜோ : சரியாகக் கேட்டாய் நகுலா! அப்போதெல்லாம் இப்போது மாதிரி திருமணம் என்பது 18 வயதிற்கு பிறகு என்று கிடையாது. பிறந்த உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் போய் கணவர் வீட்டில் வாழலாம். கணவர், அதாவது திருமணம் செய்து வைத்த ஆண் குழந்தை இறந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தப் பெண் குழந்தை விதவையாகவே வாழவேண்டும்.. அப்படி ஒரு வயதுக்கு கீழான விதவைகள் 1927 இல் மட்டும் 427 பேர் இருந்திருக்கிறார்கள். ரதி : என்ன கொடுமை! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஜோ: ஆமாம், ரதி. அதனால் தான் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். கணவனை இழந்த விதவைகள் மறுமணம் செய்ய வேண்டும் என்றார். விவாகரத்து என்பது பெண்களுக்கான உரிமை என்றும், ஜாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்தும் , பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை ஆசிரியர்களாக பெண்களை நியமிக்க வேண்டும் என்பது போன்ற பல திட்டங்களை பல்வேறு மாநாடுகளில் தொடர்ந்து பேசினார். நகுலன்: அத்தை, அப்போது எல்லாம் பெண்களுக்குச் சொத்தில் உரிமை கிடையாதா? ஜோ: ஆமாம். ஒரு குடும்பத்தில் ஆணுக்கு கிடைக்கும் உரிமை பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்றார். இன்று அது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அப்போது அது புரட்சி. நகுலன்: அத்தை, அவர் பெண்கள் அழகாக இருக்கக்கூடாது என்று சொன்னாரா? ஜோ: இல்லை. ஒரு பெண்ணின் மதிப்பு அழகில் இல்லை திறமையில் இருக்கிறது என்றார். அறிவில் இருக்கிறது என்றார். ஒரு பெண்ணை அவள் எப்படி இருக்கிறாள் என்று அளவிடாதீர்கள். அவள் என்ன சிந்திக்கிறாள், என்ன சாதிக்கிறாள் என்பதைக் கொண்டு அளவிடுங்கள் என்றார். ரதி: அத்தை! இங்கு பாருங்கள்! இந்தச் செய்தித்தாளில் கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டம் போட்டிருக்கிறார்கள். அது பற்றிச் சொல்லுங்கள். ஜோ: மதுவால் குடும்பங்கள் சிதைவதை பெரியார் பார்த்தார். ஏழைகளின் உழைப்புப் பணம் மதுவில் கரைகிறது. பெண்கள் துன்பப்படுகிறார்கள். குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மதுவுக்கு எதிராக போராடினார். அந்தப் போராட்டத்தில் அவரது குடும்பமும் கலந்து கொண்ட து. நகுலன்: அவரது தங்கையும் இருந்தாரா? ஜோ: ஆமாம். அவரது தங்கை கண்ணம்மாள்.அவரது மனைவி நாகம்மாள் சேர்ந்து போராடினார்கள். சமூக மாற்றம் என்பது ஆண்களின் வேலை மட்டும் அல்ல என்பதை அவர்களது வாழ்க்கையே காட்டுகிறது. . ரதி: அத்தை, சுயமரியாதை இயக்கம் ஏன் ஆரம்பித்தார்? ஜோ: ஒரு மனிதன் தன்னைத் தாழ்வாக நினைத்தால் அவனை எளிதாக அடிமையாக்கலாம். அதனால் முதலில் மனிதன் தன்னைத்தானே மதிக்க வேண்டும் என்றார். நீ யாருக்கும் கீழானவன் இல்லை என்று மக்களிடம் சொன்னார். அதுதான் சுயமரியாதை இயக்கத்தின் உயிர் மூச்சு. . நகுலன்: அத்தை, சுயமரியாதை திருமணம் எப்படி நடக்கும்? ஜோ: சுயமரியாதைத் திருமணத்தில் மிக முக்கியமானது மணமக்களின் சம்மதம். சாதி, மதம் முக்கியமல்ல. எந்தச் சடங்குகளும் முக்கியமல்ல. மனித சமத்துவம் முக்கியம். இந்தக் கருத்திலிருந்து தான் சுயமரியாதை திருமணங்கள் வந்தன. சுயமரியாதை திருமணத்தில் யார் வேண்டுமானாலும் எந்தச் சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாமல் நடத்தலாம். அதை அரசு பதிவு செய்ய சட்டம் இயற்ற இவர்தான் காரணம். நகுலன்: அத்தை, கணவன், மனைவி என்பதற்குப் பதிலாக ஏன் துணைவன், துணைவி என்றாராம். அப்பா கூறியிருக்கிறார். அதையெல்லாம் எதற்கு மாற்ற வேண்டும்? ஜோ: கணவன் என்ற சொல்லுக்கு தலைவர், அதிகாரம் செலுத்துபவர் என்ற பொருள் மரபாக இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் துணைவன், துணைவி என்றால் வாழ்க்கைப் பயணத்தில் உடன் வருபவர். அதில் உயர்வு தாழ்வு இல்லை. சமத்துவம் இருக்கிறது. ரதி: வாழ்க்கை ஒப்பந்தம் என்பதும் அதே மாதிரியா? ஜோ: ஆமாம். திருமணம் என்பது ஒருவரை ஒருவர் ஆளும் உறவு அல்ல; இருவரும் சம்மதித்து வாழும் ஒப்பந்தம் என்ற புதிய பார்வையை அவர் முன்வைத்தார். அந்தக் காலத்தில் இது மிகவும் புரட்சிகரமான சிந்தனை. பெரியாரின் மொழிச் சீர்திருத்தத்தை ஒரு வரியில் சொன்னால், சொற்களைக்கூட சமூக நீதிக்கான கருவியாகப் பயன்படுத்தியவர் பெரியார். நகுலன்: அத்தை, பெரியார் எழுத்துக்களில் கூட மாற்றம் செய்தார் என்று சொல்கிறார்களே, அது ஏன்? ஜோ: ஒரு குழந்தை தமிழ் படிக்கும்போது தேவையில்லாமல் நிறைய எழுத்து வடிவங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. அச்சுக்கோர்ப்பவர்களுக்கும் சிரமம். தட்டச்சு செய்வதற்கும் சிரமம். இதைக் குறைக்க வேண்டும் என்று பெரியார் நினைத்தார். நகுலன்: அதாவது அவர் எழுத்துக்களை மாற்றவில்லை; மக்கள் கற்றுக்கொள்ள வசதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் இல்லையா? ஜோ: சரியாகப் புரிந்து கொண்டாய். பெரியாரின் மொழிச் சீர்திருத்தத்தின் அடிப்படை எண்ணம் இதுதான். தமிழை நேசிப்பது என்றால் அதை அருங்காட்சியகத்தில் பூட்டி வைப்பது அல்ல, மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் மொழியாக மாற்றுவதுதான். நகுலன் : ஆனால் அவர் பெரிதாகப் படித்துப் பட்டம் பெற்றவர் இல்லை என்று நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஜோ: சரியாகச் சொன்னாய்! அவர் பள்ளி சென்று படித்தது குறைவு என்றாலும், மிகச் சிறந்த படிப்பாளி. நான்கு வேதங்கள், இதிகாசங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், பதினெட்டு புராணங்கள், அறிவியல், அரசியல், தத்துவம், இப்படி அவர் தன் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருந்தார். படிப்பு என்பது கல்லூரி காலகட்டம் முடிந்தவுடன் நின்று விடுவது அல்ல என்பதை அவர் வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள வேண்டும். ரதி: அத்தை, பெரியார் எப்போதும் மனிதர்களை எதிர்த்துக்கொண்டே இருந்தார் என்று என் மாமா சொன்னார் அப்படியா? ஜோ: அவர் மனிதர்களை எதிர்க்கவில்லை. அநீதியை எதிர்த்தார். ஒரு மருத்துவர் நோயை எதிர்க்கிறார். அதனால் அவர் நோயாளியை வெறுக்கிறார் என்று சொல்ல முடியுமா? அதுபோல பெரியார் சமூக நோய்களை எதிர்த்தார். நகுலன்: அத்தை, இங்க பாருங்க பெரியார் பயன்படுத்திய கண்ணாடி. ஜோ: பெரியார் பயன்படுத்திய கண்ணாடியை பார்க்கும் பொழுது அவர் மக்களுக்கு கொடுத்த பார்வை முக்கியம் என்று தோன்றுகிறது. உன் கண்களால் மட்டும் பார். பிறர் கண்களால் பார்க்காதே. என்று கூறியது நினைவுக்கு வருகிறது. ரதி: இந்த நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கிறாரே... ஜோ: ஆமாம். ஆனால் அவர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தவர் இல்லை. ஊர் ஊராகச் சென்றார். மக்களைச் சந்தித்தார். பேசினார். எழுதினார். போராடினார். நகுலன்: அத்தை, அவர் வயதான பிறகும் நிறுத்தவில்லையா? ஜோ: இல்லை. உடல் பலவீனமானது. வயது தொண்ணூறைத் தாண்டியது. உடல்நலக் குறைபாடுகள் வந்தன. ஆனால் மக்களிடம் பேசுவதை நிறுத்தவில்லை. ரதி: மூத்திரப்பையைச் சுமந்து கொண்டு மேடை மேடையாகச் சென்று பேசினாராமே உண்மையா? ஜோ: ஆமாம். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த காலத்திலும் மூத்திரப்பையுடன் மேடைகளுக்குச் சென்றார். சிந்தனைக்கு ஓய்வு கொடுக்கவில்லை. அது ஒரு மனிதனின் தான் வாழும் சமூகத்தின் மீதான நேசத்தை, அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. ரதி: அத்தை, பெரியார் சொன்ன பொன்மொழிகள் இங்கே இவ்வளவு எழுதி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதில் மிக பிடித்த வாக்கியம் எது? ஜோ: யார் சொன்னாலும் சரி. நானே சொன்னாலும் சரி. உன் அறிவுக்கும் பொது அறிவுக்கும் பொருந்தவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளாதே. என்று அதோ அங்கே எழுதி இருக்கிறார்கள் பாரு அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. நகுலன்: ஒரு தலைவர் இப்படிச் சொல்வது ரொம்பப் பெரிய விஷயம். ஜோ: ஆமாம். அவர் தன்னைப் பின்பற்றச் சொல்லவில்லை. எல்லோரையும் சிந்திக்கச் சொன்னார். ரதி: அத்தை, பெரியார் கருத்துகள் இப்போது தேவையா? ஜோ: சாதி இன்னும் இருக்கிறதா? நகுலன்: இருக்கிறது. ஜோ: பெண்கள் மீதான வன்முறை இன்னும் இருக்கிறதா? நகுலன்: இருக்கிறது. ஜோ: மூடநம்பிக்கைகள் இன்னும் இருக்கிறதா? ரதி: இருக்கிறது. ஜோ: அப்படியானால் பெரியாரின் சிந்தனைகளும் கருத்துகளும் கேள்விகளும் இப்போதும் தேவை தானே! ரதி, நகுலன் – தேவை தான் அத்தை. ஜோ – எங்கெல்லாம் சமத்துவமின்மை, மூடநம்பிக்கை, சமூக அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் இன்னும் அதிகமாகப் பெரியார் தேவைப்படுகிறார். நகுலன்: அத்தை, உண்மையில் பெரியார் ஒரு சிறந்த ஆசிரியர். . ஜோ: அதுதான் பெரியாரின் உண்மையான வெற்றி. அவர் மக்களுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தார். ரதி: அத்தை, இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்த பிறகு எனக்கு ஒரு விஷயம் புரியுது. ஜோ: என்ன ரதி? ரதி: பெரியார் இந்த வீட்டில பிறந்ததால இந்த வீடு முக்கியமானது இல்லை. இந்த வீட்டில பிறந்தவர் உலகத்தையே கேள்வி கேட்க வைத்ததால இந்த வீடு முக்கியமானது. நகுலன்: எனக்கும் ஒரு விஷயம் தோணுது அத்தை. ஜோ: என்ன நகுலன்? நகுலன்: இந்த வீட்டுல கைத்தடி இருக்கு, கண்ணாடி இருக்கு, புத்தகங்கள் இருக்கு, பழைய செய்தித்தாள்கள் இருக்கு. ஆனா இதெல்லாத்தையும் விட பெரியார் விட்டுட்டு போன மிகப் பெரிய பொருள் எது தெரியுமா? ரதி : என்ன? நகுலன்: சிந்திக்கிற பழக்கம். ரதி: சமத்துவம், சுயமரியாதை, பெண்களின் உரிமை, பகுத்தறிவு இதெல்லாம் புத்தகத்தில மட்டும் படிக்கிற வார்த்தைகள் இல்லைன்னு இங்கே வந்த பிறகுதான் புரியுது. நகுலன்: அதுதான் இந்த வீட்டின் பெருமை. ரதி: இல்ல நகுலன் ...அவருடைய சிந்தனைகள் எழுப்பிய கேள்விகள் இன்னும் உயிரோட இருக்கிறது என்பதுதான் சிந்திக்க வேண்டிய விஷயம். ஜோ: சரியாகச் சொன்னாய் ரதி. சில மனிதர்கள் மரணம் அடைந்தாலும் சிந்தனையாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • மோரு மோரு மோரு

    மோரு மோரு மோரு தாகம் தீர்க்கும் மோரு மத்தினாலே தயிரைக் கடைந்து பாட்டி தரும் மோரு நீர் நிறையச் சேர்த்தாலும் வெண்ணை மணக்கும் மோரு கல் உப்பும் பெருங்காயமும் கரைத்து விட்ட மோரு கடுகுடனே பச்சை மிளகாயும் தாளித்துப் போட்ட மோரு பானையில் இருக்கும் மோரு மண் மணக்கும் மோரு மோரு மோரு மோரு தாகம் தீர்க்கும் மோரு! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

  • கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?

    ஆறுகள், குளங்கள், ஏரிகளில் உள்ள நீர் எல்லாமே நன்னீராக இருக்கும்போது கடல்நீர் மட்டும் ஏன் உப்புக் கரிக்கிறது? இந்த உப்பு எங்கிருந்து வருகிறது? கடல்நீரில் இருக்கும் உப்பு பல வழிகளிலிருந்து வருகிறது. நிலத்தில் உள்ள பாறைகளின்மீது மழைநீர் விழுகிறது. இது பாறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. இதனால் வேதிப்பொருட்கள் வெளியேறி, ஓடைகள் மற்றும் ஆறுகளின் மூலம் கடலுக்குள் சென்று சேர்கின்றன. இவ்வாறு சேரும் பல வேதிப்பொருட்களைக் கடல்வாழ் உயிரிகள் பயன்படுத்திக்கொள்ளும். பயன்படாத வேதிப்பொருட்கள் தொடர்ந்து கடலில் சேர்ந்தபடியே இருக்கின்றன. இது உப்புத்தன்மையை அதிகரிக்கும். ஆறுகளிலும் ஓடைகளிலும்கூட அதே உப்புக்கள் இருக்கின்றன, ஆனால் அவை உப்புக்கரிக்கவில்லையே, ஏன்? மழைநீர் இந்த நீர்நிலைகளின்மீது விழுந்தபடியே இருக்கிறது, இதனால் உப்புக்களை விட இவற்றில் சேரும் நன்னீரின் அளவு அதிகமாக இருக்கும். ஆகவே இவை உப்புக் கரிப்பதில்லை. ஆறுகளும் ஓடைகளும் ஓடிக்கொண்டே இருப்பதால் அவற்றில் இருக்கும் உப்பு அப்படியே தேங்கி நீரில் கலப்பதற்கும் வாய்ப்பு குறைவு. கடல்நீரின் உப்புத்தன்மைக்கு இன்னொரு காரணமும் உண்டு. கடலின் தரைப்பகுதியில் சின்னச்சின்ன விரிசல்கள் இருக்கும். இதன்மூலம் கடல்நீர் பூமிப்பந்தின் மையப்பகுதிக்குச் செல்லும். பூமிப்பந்தின் மையத்தில் எரிமலைக்குழம்பு இருக்கிறது. அங்கு சென்று சேரும் கடல்நீருக்குள், எரிமலைக்குழம்பில் இருக்கும் பல்வேறு உலோகப் பொருட்கள் கலக்கின்றன. இந்தக் கடல்நீர் மீண்டும் விரிசல் வழியாக மேலே செல்லும்போது உப்புகள் கடலுக்குள் கலக்கின்றன. கடலின் தரையில் ஆங்காங்கே இருக்கும் உப்புக்குன்றுகளிலிருந்தும் (Salt domes) உப்புகள் கரைந்து கடல்நீரில் சேர்கின்றன. இதெல்லாம் சரிதான். ஆனால் இவை இப்போது இருக்கும் கடலுக்குள் எப்படி உப்புகள் சேர்கின்றன என்பதற்கான விளக்கங்கள். முதன்முதலில் பூமியில் கடல் உருவாகும்போதே அது உப்பாகத்தான் இருந்ததா? அந்த உப்பு எங்கிருந்து வந்தது? கடல் என்பது முதன்முதலில் உருவானபோது இந்த உப்புத்தன்மை இருக்கவில்லை. பாறைகளில் இருக்கும் உப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் கரைந்ததாலேயே இந்த உப்புத்தன்மை வந்திருக்கிறது. நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.

  • தத்துவம் அறிவோம் - 15

    மாற்றங்களின் வேகம் வேட்டைச் சமூகமாக இருந்த மனிதர்கள் வேளாண் சமூகமாக, அதாவது விவசாயம் செய்யும் சமூகமாக மாறினார்கள். இது எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. நூற்றாண்டுகளாக மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்தது. மனிதர்களின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய மாற்றம் எப்படி வந்தது தெரியுமா? ஒரு வட்டத்தினால். என்னது வட்டமா? ஆமாம். மலையிலிருந்து ஒரு வட்டக்கல் உருண்டு வந்தது. அந்த வட்டக்கல்தான் சக்கரமாக உருமாறியது. சக்கரம் ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதைச் சுலபமாக்கியது. வட்டமான கற்களை விட வட்டமான மரக்கட்டைகள் இன்னும் சுலபமாக உருள்வதைக் கண்டுபிடித்தான். பிறகு வட்டமான மரக்கட்டைகளை வெட்டிச் செதுக்கி இன்னும் எடை குறைவாக உருள்வதற்கு ஏற்ற வகையில் செய்தான். இதை எல்லாம் இப்போது நாம் நினைப்பது போல உடனே செய்து விடவில்லை. பல பத்தாண்டுகளுக்குப் பிறகே அந்தக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. என்னது வட்டம்தான் மாற்றத்தைக் கொண்டு வந்ததா? எப்படி? என்று யோசிக்கிறீர்களா? சைக்கிள் சக்கரம் வட்டம். காரின் சக்கரம் வட்டம். பஸ்ஸின் சக்கரம் வட்டம். ரயிலின் சக்கரம் வட்டம். அவ்வளவு ஏன்? வானில் பறக்கும் விமானத்தின் சக்கரமும் வட்டம் தானே! வட்டங்கள் தான் மனிதர்களை நவீனமாக்கின.. . உலகையே மாற்றும் ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவானது. அது என்ன தெரியுமா? கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். சக்கரம். சக்கரம் மனிதனுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. ஆமாம். அதுவரை ஒரு இட த்திலிருந்து ஒரு பொருளைக் கொண்டு போக முடியாது. உதாரணத்துக்கு வேட்டையாடிய மிருகத்தைக் குகைக்குக் கொண்டு செல்ல முடியாது. காயம்பட்டவர்களைத் தூக்கிச் செல்ல முடியாது. வயதானவர்களைக் கூட்டிக் கொண்டு போக முடியாது. ஆனால் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய பயணம் எளிதானது. மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு புலம்பெயர்ந்து செல்வது எளிதானதாக மாறியது. பொருட்களைக் கொண்டு செல்வது எளிதானதாக மாறியது. அடுத்ததாக, நெருப்பு. இயற்கையாக அதிக வெப்பத்தினால் உருவாகும் நெருப்பைச் செயற்கையாக உருவாக்கியது அடுத்தகட்டப் புரட்சி எனலாம். ஒருவகையில் ஹோமோசேப்பியன்ஸ் போலச் செய்தல் என்று சொல்லப்படுகிற திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். போலச்செய்தல் என்றால் இயற்கையான ஒன்றைப் பார்த்துச் செயற்கையாகச் செய்தல். உதாரணத்துக்கு, இயற்கையாக கூரான கற்கள் வேட்டை ஆயுதமாகப் பயன்பட்டதைப் பார்த்து செயற்கையாகக் கற்களைக் கூராக்கிப் பயன்படுத்துதல். இயற்கையாக உருண்ட கற்களை வட்டமான கற்களாக மாற்றுதல். இயற்கையாக உருவான நெருப்பைச் செயற்கையாக சிக்கிமுக்கிக் கற்களை உரசி உருவாக்குதல். தற்செயலாக நெருப்பில் வெந்த விலங்குகளின் மாமிசத்தின் ருசி அறிந்ததும், செயற்கையாக நெருப்பை உருவாக்கி அதில் மாமிசத்தை வேகவைத்துச் சாப்பிடுதல். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்றுவரை ஹோமோசேப்பியன்ஸ் போலச் செய்பவர்களாகவே தொடர்கிறார்கள். இப்போது கூடப் பாருங்களேன். நாம் நம்முடைய நண்பரைப் பார்த்து பொருட்களை வாங்குகிறோம். பெண்கள் அடுத்தவீடு பக்கத்துவீட்டில் வசிக்கும் பெண்கள் சொல்வதைக் கேட்டு பொருட்களை வாங்குகிறார்கள். இல்லையென்றால். விளம்பரத்தில் வருகிற மனிதர்கள் சொல்வதைக் கேட்டு பொருட்களை வாங்குகிறோம். இல்லையா? அந்தப் பொருட்களின் உண்மைத்தன்மை பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லோரும் வைத்திருக்கிறார்கள். நாமும் வைத்திருக்க வேண்டும். எல்லோரும் வாங்குகிறார்கள். நாமும் வாங்க வேண்டும். இந்தப் போலச் செய்தல் என்ற குணம் இயற்கையைப் பார்த்து போலச் செய்யும்போது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது. அந்தக் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்குகின்றன. எனவே தான் மனிதர்கள் எப்போதும் புதுமை விரும்பிகளாகவே இருக்கிறார்கள். விவசாயத்தைக் கண்டுபிடித்த பிறகு மனிதர்களின் வாழ்க்கையில் அதுவரை இல்லாத புதிய மாற்றம் உண்டானது. அதுவரை நாடோடிகளாக, வேட்டைச் சமூகமாகத் திரிந்தவர்கள் ஒரே இட த்தில் தங்கினார்கள். அதுவும் குறிப்பாக விவசாயம் செய்வதற்குப் பொருத்தமாக நீர்நிலைகளின் அருகில் தங்கினார்கள். அப்படி அவர்கள் ஒரே இட த்தில் தங்கி விவசாயம் செய்தபோது ஒரு புதிய வாழ்க்கை தொடங்கியது. அது மனிதகுலத்துக்கே புதிய அத்தியாயமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ஆண்டுகளாய் ஒரே மாதிரியாக வாழ்ந்த ஹோமோசேப்பியன்ஸ் சட்டென்று ஒரு புதுயுகத்துக்குள் அடியெடுத்து வைத்தனர். அந்தப் புதுயுகம் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மைகளைக் கொண்டு வந்ததோ அந்த அளவுக்கு தீமைகளையும் கொண்டு வந்தது. நன்மைகளினால் மனிதகுலம் முன்னேறியது. தீமைகளினால் மனிதர்களில் ஒரு பிரிவினர் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். ஏன் அப்படி நடந்தது? அந்தப் புதுயுகத்துக்குப் பெயர் என்ன? நிலவுடைமைச் சமூகம். நிலவுடைமை என்றால் என்ன? ( அறிவோம் தத்துவம் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • அடையாளம்

    ஷிராஸ் ஹுசைன் தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ அந்த ஊர் மக்கள் எல்லோரும் மதித்து நடக்கும் பெரியவர் நானா சாஹிப். மிகவும் நேர்மையானவர். பழங்காலத்து மனிதர். தாத்தா தனக்குக் கற்றுத்தந்த வைத்திய முறையில் ஊருக்கே வைத்தியம் பார்க்கிறார். மூட்டு வலிக்கான 'ஹக்கீமி' கைவைத்திய மருந்தைத் தயாரித்து விற்கிறார். அது பலருக்கும் நல்ல பலனைக் கொடுத்தது. ஊர் மக்கள் அவரைப் புகழ்ந்து பாராட்டினார்கள். தினமும் அவர் தெருவில் நடந்து வரும்போது கம்பீரமாகத் தெரிவார். தெருவில் விளையாடும் சிறுவர்கள் நானா சாஹிபைக் கண்டதும் ஓடி வருவார்கள். "ஸலாம் சாஹிப்!” என்று வணக்கம் சொன்னதும், அவர்களை மதித்து சாஹிப்பும் கணீர்க் குரலில் பதில் ஸலாம் சொல்லுவார். ஊர் மக்களிடம் அவர் ஒரு குடும்பப் பெரியவரைப் போலவே வாழ்ந்து வந்தார். நானா சாஹிப் தங்கியிருந்த வீட்டிற்கு நேர் எதிரே ஒரு கட்டிடம் இருந்தது. அதன் மொட்டை மாடியில் ஒரு வெள்ளை நாய் தங்கியிருப்பதைக் கவனித்தார். நாய் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதனிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. மற்ற நாய்களைப் போல அது எப்போதும் குரைத்துக் கொண்டிருக்காது. ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் விசித்திரமாக நடந்துகொள்ளும். ஒவ்வொரு முறையும் அருகில் உள்ள மசூதியில் தொழுகைக்கான 'அஸான்' சத்தம் கேட்டதும் அங்கு ஓர் அதிசயம் நிகழும். அஸான் ஒலிக்கத் தொடங்கிய அடுத்த நொடியே, நாய் தனது தலையை வானத்தை நோக்கி உயர்த்தி "ஹூஊஊ..." என்று நீளமாக ஊளையிடும். அதிகாலையில் எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கும் 'பஜர்' நேரத்திலும், இரவில் 'இஷா' தொழுகை நேரத்திலும் ஊளையிடத் தவறியதில்லை. மசூதியில் அஸான் சொல்லி முடிக்கும் வரை, அந்த நாயும் ராகத்துடன் கத்திக்கொண்டே இருக்கும். தெருவாசிகளுக்கு நாயின் சத்தத்தைக் கேட்டுப் பழக்கமாகிவிட்டது. அமைதியான நேரங்களில், அஸான் சத்தமும், நாயின் ஊளைச் சத்தமும் சேர்ந்து அந்தப் பகுதியில் விசித்திரமான சூழலை உருவாக்கியிருந்தன. நானா சாஹிப் நாயின் செய்கையைக் கண்டு வியந்து போவார். நாட்கள் செல்லச் செல்ல அந்த நாயின் செய்கை நானா சாஹிப்புக்கு எரிச்சலைத் தந்தது. “இந்த நேரத்தில் ஏன் இப்படிக் கத்துகிறது?" என்று கோபப்படுவார். அதை விரட்டியடிக்க மொட்டை மாடியில் இருந்து கல் எறிவது போலக் கையை உயர்த்துவார். ஆனால் அந்த நாய் மிகவும் புத்திசாலி. அவர் கையில் நிஜமான கல் இல்லை என்பதை இரண்டு மூன்று நாட்களில் புரிந்துகொண்டது. இப்போதெல்லாம் நானா சாஹிப் கையை உயர்த்தினால், அது வாலை ஆட்டிக்கொண்டு விளையாடத் தொடங்கிவிடும். ‘இன்னும் கல் எறியுங்கள்’ என்று கேட்பது போலத் துள்ளிக் குதிக்கும். ஒரு நாள் இரவு, நானா சாஹிப் உடல்நலக் குறைவால் சீக்கிரமே தூங்கிவிட்டார். சற்று நேரத்தில் அஸான் சத்தம் கேட்டது போல உணர்ந்து திடீரென விழித்துக்கொண்டார். சுற்று முற்றும் கவனித்தார். மசூதியில் அஸான் ஒலிப்பதற்கு முன்பே நாய் குரைத்துக் கொண்டிருந்தது. தனது 30 வருடப் பழைய கடிகாரத்தைப் பார்த்தார். அஸான் சொல்ல வேண்டிய நேரம்தான் என்று புரிந்தது. நாயை எண்ணி வியப்பாகவும் இருந்தது. மசூதியில் மின்சாரம் தடைபட்டதால் ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை போலும். ஆனால் அந்த நாயின் குரைப்புச் சத்தம் தொழுகை நேரத்தை ஞாபகப்படுத்தியது. அன்று மதியம், ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அந்த நாய், நானா சாஹிப்பைப் பின்தொடர்ந்து மசூதிக்குள் வந்துவிட்டது. அப்போதுதான் மசூதியின் தரை தளத்தில் புதிதாகச் சிமெண்ட் பூச்சு பூசியிருந்தார்கள். நாய் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் சத்தமிட்டு அதைத் துரத்தினர். நானா சாஹிப்பும் வழக்கம்போலக் கல்லை எறிவது போலக் கையை மடித்துக் காட்டி விரட்ட முயன்றார். அங்கிருந்த ஒரு சிறுவன், கல்லை எடுத்து நாயின் முதுகில் எறிந்தான். நாய் வலியால் அலறிய சத்தம் மசூதி முழுவதும் எதிரொலித்தது. இதைக் கண்ட நானா சாஹிப்புக்கு கோபம் வந்தது. "ஏய் தம்பி! ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கத்தினார். எப்போதும் நாயைத் திட்டிக்கொண்டிருந்தவர், இன்று அது அடிபட்டதும் துடித்துப்போனார். சட்டெனக் கீழே பார்த்தவர், ஈரமான சிமெண்ட் தரையில் பதிந்த நாயின் கால் தடங்களைச் சரிசெய்து மறைக்க முயற்சி செய்தார். அதன் பிறகு, அந்த நாய் எதிர் வீட்டு மொட்டை மாடிக்கு வருவதே இல்லை. நாய் காணாமல் போனது, நானா சாஹிபுக்குக் கவலையைத் தந்தது. வெளியே "நாயின் ஊளைச் சத்தம் கேட்காததால் நிம்மதி" என்று சொன்னாலும், அவரது உள்ளமும், கண்களும் நாயைத் தேடி அலைந்தன. அதன் குறும்புத்தனமும், வாலாட்டும் அழகும் அவருக்குப் பழகிப்போயிருந்தது. மாலையிலும், இரவிலும் நாயின் சத்தம் கேட்கவே இல்லை. மறுநாள் காலையில் மசூதிக்குச் சென்றபோது, புதிய சிமெண்ட் தரை நன்றாகக் காய்ந்திருந்தது. ஆனால் ஒரு மூலையில், நாயின் சிறிய கால் தடம் மட்டும் இன்னும் லேசாகக் கண்ணுக்குத் தெரிந்தது. அதை நாயின் கால் தடம் என்பதை விட, அது விட்டுச் சென்ற அன்பின் அடையாளமாக உணர்ந்தார். மசூதிக்குள் வந்து செல்பவர்கள், நாயின் கால் தடத்தைப் பார்த்தால் கோபப்படுவார்கள் என்று நானா சாஹிப் பயந்தார். அப்போது ஒருவர் அவருக்கு “ஸலாம்” சொன்னபோது, அவசர அவசரமாகத் தனது காலால் அதை மறைத்துக்கொண்டார். நாயின் கால் தடம் உலகிற்குத் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் அது, நானா சாஹிபின் பாதங்களுக்கு அடியில் பத்திரமாக இருந்தது. மனதுக்குள் நாயின் குறும்பை நினைத்து, "நீ, போக்கிரிக் கழுதை" என்று முணுமுணுத்தபடி தண்ணீர்க் குழாயைத் திறந்தார். கைகளை நனைக்கும்போது, அவரது கண்கள் நாயின் நினைவால் சில சொட்டுக் கண்ணீர் சிந்தின. கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

  • வார்த்தை விளையாட்டு

    சக்கரத்திலுள்ள எழுத்துக்களை பயன்படுத்தி வார்த்தைகளை உருவாக்குங்கள். நடுவில் இருக்கும் எழுத்து எல்லா வார்த்தைகளிலும் வர வேண்டும். வாங்க விளையாடலாம்! சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.

  • கல்வி தந்த வெளிச்சம்!

    கால் செருப்பு போடக்கூட கட்டுப்பாடு விதிச்சாங்க! கல்லு முள்ளு குத்துனாலும் நடக்கச் சொல்லிச் சிரிச்சாங்க! தோள் துண்டை இடுப்பில் கட்டி தூரநிக்கச் சொன்னாங்க! ஆளைப்பார்த்துப் பிரித்துப் பேசி அடிமையாக்கி வச்சாங்க! காலம் இன்று மாறிப்போச்சு கல்வி கண்ணைத் திறந்துடுச்சு! தாத்தா காலத் துன்பங்கள் தவிடு பொடி ஆகிப்போச்சு! பழைய சாதிப் பேய்களும் பறந்து போச்சு தூரமே! உலகம் இப்போ நமக்காக உறவாய் நிற்குது அருகிலே! கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

bottom of page