அறிவோம் ஆளுமை - 7
- சரிதா ஜோ
- 4 days ago
- 3 min read

ஜோ: காலை வணக்கம் குழந்தைகளே!
இன்று நம்முடைய இந்தியவிடுதலைக்குக் காரணமான ஒரு தேசத்தலைவரைப் பற்றிப் பார்க்கலாமா? யார் அவர் என்று சொல்லுங்கள் பார்ப்போம்!
நகுலனும் ரதியும் : நம் தேசத்தந்தை காந்தித்தாத்தா. சரிதானா அத்தை.
ஜோ – சரியாச்சொன்னீங்க.. வாழ்த்துகள். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த தைச் சொல்லுங்கள்.
நகுலன் – வெள்ளைக்கார்களிடம் இருநூற்று ஐம்பது வருடங்களாக அடிமையாக இருந்த நமது நாட்டு விடுதலைக்காகப் போராடியவர். அவர் அகிம்சை வழியில் போராடினார்.
ரதி: புத்தர், இயேசு, காந்தி என்று உலக அளவில் போற்றப்படும் உத்தமர். தீயதைப் பார்க்காதே தீயதைப் பேசாதே தீயதைக் கேட்காதே என்று சொன்னவர்.
ஜோ: அருமை ரதி! வெள்ளையனை விரட்ட அவர் எடுத்த போராட்டங்கள் தான் அவரை உலகத்தலைவராகவும் இந்திய மக்களின் மனங்களில் நீங்காத இடத்தையும் கொடுத்த து. ஒத்துழையாமை, அகிம்சை சத்தியாக்கிரகம் மூன்று வடிவங்களும் அதுவரை அடிமைப்பட்ட எந்த நாடும் செய்யாத போராட்ட முறைகள்.
நகுலன் – உப்புச்சத்தியாக்கிரகம் தானே காந்தியடிகளின் போராட்டத்தில் முக்கியமான ஒரு திருப்பம்.
ரதி – ஏயப்பா.. பெரிய வரலாற்று ஆய்வாளர் போல பேசுறியே..ஆனால் இன்று நாம அவருடைய பாலியகாலத்தைப் பற்றி பேசப் போகிறோம். என்ன அத்தை!
ஜோ – ஆமாம். ஒரு மனிதனின் பாலிய காலம் தான் அவனுடைய ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ரதி: காந்தியடிகள் சிறுவயதில் எப்படி இருந்தாரு? என்னை மாதிரி சுறுசுறுப்பா இருந்தாரா? இல்லை நகுலன் மாதிரி சோம்பேறியாக இருந்தாரா?
நகுலன்: அடேயப்பா.. நீங்க சுறுசுறுப்புத்திலகம்.. காந்தி பொய்யே பேச மாட்டாராமா! அது எப்படி அத்தை?
ஜோ: அவர் சிறுவயதில். மிகவும் அமைதியான அடக்கமான பையன். சிறுவயதிலிருந்தே பொய் பேச மாட்டார். படிப்பில் அவர் சுமாரான மாணாக்கனாகவே அவர் விளங்கினார். அதிக கூச்ச சுபாவம் நிறைந்த மாணவனாக, யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பார். ஒருமுறை அவர் படித்த பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷன் வந்தாங்க.
காந்தி படிக்கும் வகுப்புக்கு இன்ஸ்பெக்டர் வந்தார். கெட்டில் என்ற வார்த்தையை சொல்லி எழுதச் சொன்னார். அதனை காந்தி தவறாக எழுதினார். அப்போது அங்கே வந்த வகுப்பு ஆசிரியர் காந்தி தவறாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து சரியாக எழுதச் சொல்லி காந்தியின் கால்களை அவர் அழுத்தினார். ஆனால் காந்தி எழுதவில்லை. ஒருநாளும் காப்பி அடித்து எழுதுதல் பொய் கூறுதல் போன்றவற்றை அவர் செய்ததே இல்லை.
ரதி: அவர் மாமிசம் கூட சாப்பிட மாட்டார்தானே அத்தை?
ஜோ: சரியாகச் சொன்னாய் ரதி.
சிறுவயதில் காந்தி மிகவும் ஒல்லியாக இருப்பார். மாமிசம் சாப்பிடாததால் தான் இவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் ஆங்கிலேயர்கள் மாமிசம் சாப்பிடுவதால் தான் அவ்வளவு பலமாக இருக்கிறார்கள் என்று நண்பன் கூறியதற்கு இணங்க ஒரு நாள் மாமிசம் சாப்பிட்டு விடுகிறார். பிறகு அன்று இரவு ஆடு வயிற்றுக்குள் கத்துவது போல கனவு வருகிறது.
அவர் அதற்கு பிறகு ஒருபோதும் மாமிசம் சாப்பிடவில்லை.
நகுலன்: தென்னாப்பிரிக்கா போறதுக்கு முன்னாடி அவருடைய அம்மா அவர்கிட்ட ஏதோ ஒரு சத்தியம் வாங்கினாங்க? ஆனா என்ன சத்தியம் தான் மறந்துடுச்சு.
ஜோ: ஆம் நகுலன். அவர் வெளிநாட்டுக்குப் போகும் முன் அம்மா மூன்று விஷயத்துக்கு சத்தியம் வாங்கினார்:
மாமிசம் சாப்பிடக்கூடாது
மது குடிக்கக்கூடாது
பெண்கள் மீது ஆசைப்படக் கூடாது
அவர் அந்த மூன்று சத்தியங்களையும் கடைசி வரை காப்பாற்றினார்.
ரதி: நகுலன் கேட்டுக்கோ! நீ தினமும் என்கிட்ட ஆயிரம் சத்தியம் செய்கிறாய். ஆனால் அதைக் காப்பாற்றினதே இல்லை. இனியாவது காப்பாற்று.
நகுலன் : ஓ! நீ மட்டும் சத்தியம் பண்ணினா காப்பாத்துகிறாயா?
ரதி: அத்தை அவர் என்ன படித்திருக்கிறார்? அவர் வாசிப்பாளரா?
ஜோ: அவர் லண்டனில் வக்கீல் தொழில் படித்தார்.
அங்கே அவர் சட்டம் கற்றுக்கொண்டார். ஆனால் அதே நேரத்தில் புதிய சிந்தனைகளைக் கொண்ட புத்தகங்கள் அவரை மாற்றின.
அவர் வாசித்த ஒரு புத்தகம் “The Kingdom of God is Within You” லியோ டால்ஸ்டாய் எழுதியது. அந்தப் புத்தகம் தான் அவரை “அகிம்சை வழியைப் பின்பற்றத் தூண்டியது. “எனது வாழ்க்கையை மாற்றிய புத்தகம் இதுதான்.” என்று அவரே கூறியிருக்கிறார்.
நகுலன்: இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கணும் என்கிற எண்ணம் முதன்முதலாக காந்திக்கு எப்போது தோன்றியது?
ஜோ: ஒரு வழக்குக்காக தென்னாப்பிரிக்கா சென்றார்.
அங்கே தான் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடந்தது.
ஒரு நாள் அவர் ரயிலில் பிரித்தானியர் ஒருவரால் “இந்தியர் என்பதற்காக” வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்பட்டார். அங்கே தொடங்கியது அவருடைய போராட்டம்..
ரதி: எப்போது இருந்து அவர் உண்மை பேச ஆரம்பித்தார்?
ஜோ: அவர் சிறுவயதில் ஹரிச்சந்திரா என்ற நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகம் உண்மைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிற ஒரு அரசனின் கதை.அதைப் பார்த்த பிறகு தானும் ஹரிச்சந்திரர் போல உண்மைக்காக வாழ வேண்டும்.” என்று தன்னை மாற்றிக் கொண்டார்.
நகுலன்: தன்னுடைய வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி அவர் எழுதியிருக்கிறார் என்று ஆசிரியர் சொன்னார்.
ரதி – அதுவா.. சத்திய சோதனை. நான் இப்போது வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்..
ஜோ- நாம் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய புத்தகம். சாதாரண பாரிஸ்டர் என்ற வக்கீல் தொழிலுக்குப் படித்த இளைஞரான மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி உலகம் போற்றும் மகாத்மா வாக மாறினார் என்று தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டும்.
நகுலன் – அப்படியா அத்தை. நானும் வாங்கி வாசிக்கிறேன்..
ரதி – வாசிப்பது மட்டுமல்ல.. அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களைப் பின்பற்றவும் வேண்டும்..
ஜோ – சரியாகச் சொன்னாய் ரதி. காந்தியடிகளின் வாழ்க்கை அனுபவங்களை வாசிக்கும்போதும் நமக்கும் அவருடைய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற உத்வேகம் வரும். ஒரு குழந்தையின் மனதில் எதை விதைக்கிறோம் — அது தான் பின்னாளில் ஒரு பெரிய மனிதனை உருவாக்கும் விதை.
அவர் 15 வயதுக்குள் பெற்ற அனுபவங்களே அவரை உலகம் முழுவதும் அறிந்த உத்தமத் தலைவர் ஆக்கியது.
ரதி: அவருக்குக் கோபமே வராதா அத்தை?
ஜோ: " கோபம் தீ போல. அது உன்னையும், மற்றவரையும் எரிக்கும்.” அதனால் அவர் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டார்.
அவர் தியானம் செய்தார். தன்னைப் பற்றி சிந்தித்தார்.
அதுவே அவரின் பெரிய வலிமை. தான் எடுத்த முடிவை தன் குடும்பத்தினரைப் பின்பற்றச் செய்தார். எளிமையாக இருந்தார். உண்மையாக இருந்தார். தான் தவறு செய்தால் அதை ஏற்றுக் கொண்டுத் தன்னை மாற்றிக் கொண்டார். தன்னைப் போல தன்னைப் பின்பற்றுபவர்களும் இருக்கவேண்டும் என்று நினைத்தார்.
நகுலன் – முதன்முதலில் பெண்கள் அரசியல் போராட்டங்களில் கலந்து கொண்டது, காந்தியடி களால் தானே…அத்தை...
ஜோ – உண்மை தான். பெண்களை விடுதலைப்போராட்ட த்தில் ஈடுபடச் செய்தார். அது மட்டுமல்ல. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடினார். எல்லா மதவெறிகளைகளையும் எதிர்த்தார். நாத்திகம் உட்பட அனைத்து மதங்களுக்கும் இந்தியாவில் இடமுண்டு என்று சொன்னவர் காந்தி.
ரதி: கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட மனிதராக க் காந்தித்தாத்தா இருந்திருக்கிறார்..
நகுலன் காந்தி எப்போ எப்படி இறந்தார் அத்தை?
ஜோ: அவர் 1948 ஜனவரி 30ஆம் தேதி தில்லியில் பிரார்த்தனைக்குப் போகும்போது கோட்சே என்ற ஒரு இந்து மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரதி: இன்றைய காலகட்டத்தில் அவரைப் போல வாழ முடியுமா அத்தை?
ஜோ: ஏன் முடியாது! நிச்சயம் முடியும். அவரைப் போல பொய் சொல்லாமலிருக்கவும் அகிம்சை வழியில் அனைவரும் இணக்கமாக வாழ முடியும்.
ரதி: காந்தியடிகள் இப்போது இருந்தால் அவர் எங்களுக்கு என்ன சொல்லியிருப்பார்?
ஜோ: உண்மையைப் பேசுங்கள். கோபப்படாதீர்கள். அன்பு செலுத்துங்கள். . அகிம்சையைப் பின்பற்றுங்கள். உங்கள் உள்ளத்தில் அமைதியை வளர்த்துக் கொள்ளுங்கள். என்று சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்.
நகுலன், ரதி : ஆமாம் அத்தை. காந்தியைப் பற்றி இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி விட்டீர்கள் நன்றி அத்தை.

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
Comments