top of page

அறிவோம் ஆளுமை - 9

 'சே' விடுதலையின் குரல்

ree

ரதி :  அத்தை.. நேற்று ரோஷினி அக்கா போட்டிருந்த டி-ஷர்ட்ல கம்பீரமாக ஒரு இளைஞரின் படம் இருந்துச்சு.. இவர் யாருன்னு கேட்டேன். இவர் பெயர் சேகுவேரா.  இவர் ஒரு போராளின்னு சொன்னாங்க. 


ஜோ : ஆமா, சேகுவேரா ஒரு போராளி. மக்கள் விடுதலைக்காகப் போராடிய 'புரட்சியாளர் .  அர்ஜென்டினாவில் பிறந்த அவரோட முழுப் பேரு எர்னஸ்டோ குவேரா டி லா வெர்னா. உலகம் அவரை 'சே' என்று கொண்டாடியது. 

  

நகுலன் : சேகுவேரா எப்படி போராளியனார் அத்தை?


ஜோ :  அதற்குக் காரணம் இரண்டு பெண்கள். ஒருவர் அவங்க அம்மா.  சேகுவேராவின் அம்மாவோட பேரு ஸெலியா. அவங்களுக்கு கதைகள் பிடிக்கும். கடல் பிடிக்கும். பிடிக்காத ஒரே விஷயம் பயம். படிக்கும்போதே முற்போக்கு இடதுசாரி சிந்தனைகள் கொண்டவங்களா  இருந்தாங்க. அவங்க முற்போக்கு இயக்கங்களோட தொடர்பு கொண்டவர்களா இருந்தாங்க.   திருமணத்திற்கு முன்பு நிறைய போராட்டங்களில்  கலந்துக்கிட்டிருக்காங்க. அதனாலே புரட்சி மற்றும் போராட்டம்  என்பது சே யின் ரத்தத்திலேயே இருந்தது.


ரதி : ரொம்ப இண்டிரெஸ்டிங்கா இருக்கு அத்தை! 


 ஜோ : அர்ஜென்டினாவை உலுக்கிய உள்நாட்டு போர் பற்றி பெரியப்பா மூலம் தெரிந்து கொண்டார் சே. தனது வீட்டு தோட்டத்தில் ஒரு சிறிய போர்க்களத்தை உருவாக்கி பதுங்குகுழிகள் வெட்டினார் மலைகளை உருவாக்கினார். தன் தாயிடம் அரசியல் பேச ஆரம்பித்தார்.  


நகுலன் : இன்னொரு பெண்மணி யார் அத்தை?


ஜோ: மற்றொருவர் ஹில்டா.  ஹில்டாவுடைய நட்புக்கு பிறகுதான் மார்க்ஸ் ஏங்கல்ஸ்  மற்றும் லெனின் போன்றோரின் எழுத்துக்களை சே வாசிக்கத் தொடங்கினார். இதுதான் இவரை ஒரு புரட்சியாளராக மாற்றுவதற்கான முதலடியாக இருந்தது.  காலனியாதிக்கத்தால் மக்கள் படும் துயரை கண்டு அதிலிருந்து அவர்களை விடுவிக்க நினைத்தார். அதுவே அவரைப் போராளியாக்கியது.


ரதி :  சே சிறுவயதில் ரொம்ப துரு துருனு இருந்திருப்பாரு அப்படி தானே அத்தை! 


ஜோ :  அப்படின்னு சொல்ல முடியாது.  சிறுவயதில் ஒரு நோஞ்சான் குழந்தை.  அவருக்கு இரண்டு வயதிலேயே ஆஸ்துமா வந்துவிட்டது. அதிக நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருக்கிறார்.  தொடர்ந்து ஆஸ்துமாவினால் இருமல் வந்து கொண்டே இருக்கும். ஆனால் சேவின் அம்மாவும் அப்பாவும் மற்ற குழந்தைகளை விட சேவின் மீது அதிக அக்கறை எடுத்து பார்த்துக் கொண்டார்கள். அதனால் சே மற்ற மாணவர்களை விட குறைந்த நாள் பள்ளிக்கு சென்றாலும் மிகச்சிறந்த அறிவாளியாக இருந்தார்.


ரதி : அப்படின்னா வீட்டில் சே நிறையப் புத்தகங்களை வாசிச்சிருப்பாரில்லையா?


ஜோ : ஆமாண்டா செல்லம். சே வின் பெற்றோர் நிறைய கதைப் புத்தகங்களை வாங்கி சே வை வாசிக்க வைத்தார்கள். தான் படித்த கதைகளைப் பற்றி தன் நண்பர்களுடன் பேசுவதில் சே வுக்கு ஆர்வம் அதிகம்  


நகுலன் : சே என்ன படித்திருக்கிறார் அத்தை? 


ஜோ : ஆரம்பத்தில் சே பொறியாளராக வேண்டும் என்று எண்ணியிருந்தார். அந்த நேரத்தில் சே வின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து போகிறார். சே விற்கு தன்னுடைய பெற்றோருக்கு அடுத்து மிகவும் பிடித்தவர் பாட்டி.

நோயால் இனி யாரும் மரணம் அடையக் கூடாது அதனால் நான் மருத்துவம் படிக்கப் போகிறேன் என்று சே மருத்துவம் படித்தார்.


 ரதி: அவங்க நாட்டுக்காகப் போராடி அவங்க நாட்டை காப்பாத்திட்டாரா?


ஜோ : சே அவங்க நாட்டுக்காக போராடல! 


நகுலன் : அப்புறம்!  வேற எந்த நாட்டுக்காக போராடினார்? 


ஜோ : கியூபாவுக்காக போராடினார். பொலிவியாவுக்காக போராடினார். 


ரதி : உண்மையாலுமே அவர் கிரேட் தான். 


நகுலன் : கியூபாவ எந்த நாடு  ஆட்சி செய்தது?


ஜோ : கியூபாவை ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆட்சி செய்தன. 


ரதி : எதுக்காக கியூபாவை அவங்க கைப்பற்றினார்கள்?


ஜோ :  அங்கிருக்கும் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க. குறிப்பாக அங்கே கரும்பும் புகையிலையும் அதிகமாக விளையும்.


நகுலன் : ஏன்  கியூபா விடுதலைக்காக போராட சே  முடிவு பண்ணாரு?


ஜோ : அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து லத்தின் அமெரிக்கா நாடுகள் விடுதலையடைய வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆனால் அவர் உடனே எந்த போராட்டத்திற்கும் நேரடியாக  இறங்கவில்லை. அவர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார். அவருடைய உற்சாகம் மிகுந்த பேச்சு தன்னம்பிக்கை அவருடைய கனவு காணும் குணம் இதெல்லாம் 'சே'வை ஈர்த்தது. அதன் பிறகு தான் கியூபா விடுதலைக்காக போராட வேண்டும் என்று முடிவு செய்தார்.


நகுலன் : அவருக்குத்தான் ஆஸ்துமா இருந்ததே.  பிறகு எப்படி அவரால் துப்பாக்கி எடுத்து சண்டையிடவெல்லாம் முடியும்? 


ஜோ : 'சே'வுடைய ஆஸ்துமா அவரை ஒவ்வொரு போரின் போதும் அவருக்கு மிகப்பெரிய தொந்தரவுகளை கொடுத்தது. சில நேரம் இறந்துவிட்டார் என்று கூட அவரோடு இருந்த வீரர்கள் நினைத்தார்கள். எல்லாவற்றையும் கடந்து தன்னுடைய உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் படைக்கு தலைமை வகித்துப் போரிட்டார். 


ரதி: பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குறிய மனிதனாக எப்போதுமே சே இருந்திருக்கிறார். அதனால்தான் உலகம் இன்றும் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.  


ரதி: கியூபாவுக்கு விடுதலை கிடைத்ததா? 


ஜோ : ஆமாம் பல போர்களுக்கு பிறகு கியூபா விடுதலை பெற்றது. கியூபாவின் வங்கி தலைவராக மற்றும் பணத்தாளில் சே என்று கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது. கியூபாவின் பொருளாதாரத்தை சீரமைக்கும் பொறுப்பு எல்லாவற்றையும் விட சவாலானது அத்தனை சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்தார் சே.


நகுலன்: அமைச்சர் என்றாலே பந்தா வந்துருமே!


 ஜோ: அதுதான் இல்லை. என்னதான் பதவி வந்தாலும் சே மாறவில்லை அலுவலக காரை பணிக்கு மட்டுமே பயன்படுத்தினார். எங்காவது செல்ல வேண்டுமென்றால் நடந்தே சென்றார். அவசரம் என்றால் பேருந்து. தன்னை எந்த இடத்திலும் மாற்றிக் கொள்ளவில்லை. அவர் அமைச்சரா இருந்தாலும் தொழிற்சாலையிலும் வேலை செய்ஞ்சாருன்னா பார்த்துக்கொள்ளுங்களேன்.


நகுலன் :  கிரேட் அத்தை. விடுதலைக்குப் பின் கியூபா எப்படி இருந்தது?  


ஜோ:  கியூபா மிகப்பெரும் மாற்றங்களையடைந்தது. புரட்சிக்கு முன் கியூபாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 23.6% அதன் பிறகு 98.82 சதவீதமாக மாறியது. கல்வி என்பது ஒரு தேசத்தின் உண்மையான சொத்து என்று பிடலுக்கும் 'சே'வுக்கும் தெரிந்திருந்தது. கியூபாவில் கல்வியும் மருத்துவமும் இலவசம். 


ரதி: ஏன் அவரோட தாய்நாட்டிற்காக அவர் போராடல.? 


ஜோ : சரியான கேள்வி அதன் பிறகு தான் அர்ஜென்டினாவை பற்றி மட்டுமல்ல  லத்தின் அமெரிக்கா நாடுகளின் சுதந்திரம் பற்றி யோசித்தார். அதுமட்டுமல்ல. அமெரிக்கா அல்ஜீரியா நாடுகளின் விடுதலை குறித்தும் சிந்தித்தார்.அதன் பிறகு அவரால் கியூபாவில் இருக்க முடியவில்லை. 


நகுலன் : அப்புறம் அர்ஜென்டினா போய்ட்டாரா? 


ஜோ : காங்கோ சென்று விட்டா.ர் அங்கு அவர்களுக்காக போராட முடிவு செய்து போராட்டத்தில் இறங்கினார். மீண்டும் கியூபாவிற்கு வர வேண்டும் என்று  காஸ்ட்ரோ கோரிக்கை வைத்தார். ஆனால் அவர் ஏற்கவில்லை. மாறாக அர்ஜென்டினா செல்வதாக கூறினார். ஆனால் காஸ்ட்ரோ அர்ஜென்டினாவுக்கு பதிலாக பொலிவியா செல்லலாமே என்று கேட்டார். பொலிவியாவில் இருந்தால் அவருக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் என்று கேஸ்ட்ரோ நம்பினார். 


ரதி : அப்படின்னா  பொலிவியா போய்ட்டாரா. 


ஜோ : ஆம் பொலிவியா சென்று கொரில்லா யுத்தம் என்று சொல்லப்படும் மறைந்து தாக்கும் யுத்தம் நடத்தினார்.

ஆனால், அங்கு பொலிவியா ராணுவம் அவரை கைது செய்தது. அமெரிக்காவின் உத்தரவுப்படி  ஒரு பள்ளியில் சிறை வைத்திருந்த அவரை சுட்டுக் கொன்று விட்டார்கள். 


நகுலன், ரதி : என்னது அவரை கொன்னுட்டாங்களா?


ஜோ : ஆமாம்  தன்னுடைய நாட்டுக்காக போராடாமல் இன்னொரு நாட்டுக்காக போராடி வென்று அங்கு அவருக்கு கொடுத்த பதவியை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் போராட சென்ற ஒரு போராளியின் வாழ்க்கை என்னை மிகவும் ஈர்த்தது. அவர் இறந்தாலும் போராளியாக உலகமுழுவதும் எல்லோர் மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


நகுலன் : ஆமாங்க அத்தை எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. இதை கேட்டதுக்கு அப்புறம் எதா இருந்தாலும் தைரியமா இருக்கணும்.  பிரச்சினையை எதிர்த்து போராடனும் அப்படிங்கற எண்ணம் ஏற்பட்டிருக்கு. 


நகுலன்,ரதி : We Love Che 


ஜோ :   yes Children! We love che.


சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page