இயலில் தேடலாம்!
Search this site
408 results found with an empty search
- கல்வி என்ன தருகிறது? - எழுத்தாளர் கமலாலயன்
நேர்காணல்: சுகன்யா ராமநாதன் 1. அறிவொளி இயக்கத்தின் அனுபவத்திலிருந்து பார்த்தால், இன்று அப்படி ஓர் இயக்கம் தேவைப்படுமா? சரியாக இரண்டு நாள்களுக்கு முன்னால்தான் ‘உலக எழுத்தறிவு நாள்’ எனும் சிறப்புமிக்க நாளை உலகம் கொண்டாடியது. யுனெஸ்கோ, செப்டம்பர் 8-ஆம் நாளை உலக எழுத்தறிவு நாளாக 1966-ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்கு 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ் இந்து திசை நாளிதழ் ஒரு சிறப்பான கட்டுரையை வெளியிட்டு, யுனெஸ்கோவின் பணிகளில் உலகமே போற்றிய கல்வியாளர், தமிழர் மால்கம் ஆதிசேஷய்யா அவர்களைப் பற்றியும், வயது வந்தோர் கல்வி முதல், இந்திய-உலக அளவில் ஆதிசேஷய்யா அறிவொளி இயக்கத்தின் அடிப்படைத் தூணாக அமைந்த ‘தேசிய எழுத்தறிவு இயக்கம்’ தொடங்கி, பாரத் க்யான் விக்யான் சமிதி, தமிழ்நாடு தொடர்கல்வி வாரியம், மாநில பள்ளி சாராக் கல்விக் கருவூலம்-வரை நமக்கு என்றும் நினைவிலிருக்க வேண்டிய வரலாற்று உண்மைகளை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்ந்த பதிப்பக உதவியாளர் திரு.ஆ.அறிவழகன் எழுதிய கட்டுரையில் இன்றைய தலைமுறைக்கு இவற்றையெல்லாம் நினைவுபடுத்தியுள்ளார். மீண்டும் அந்த அறிவொளி இயக்கம் அதே வடிவில், அதே வேகத்தில் இனி வராது. வாய்ப்பும் இருக்காது; வேறு வடிவில், இன்றைய நவீன வடிவங்களில், காலத்திற்கு ஏற்ற முறையில் திட்டமிடலாம்! அதே சமயம், இன்னொரு கோணத்தில் பார்த்தால், இன்றைக்கும் இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளும், தமிழ்நாட்டிலேயே கூட இன்னமும் அதே போலப் பின்தங்கி இருக்கும் ஊரகப் பகுதிகளும், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளும் எந்த நவீன வசதிகளையும் பெற்று விடவில்லையே என்பதைப் பார்க்கும் போது அதே வடிவில் அறிவொளி வந்தால், இன்றைக்கும் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. 2. கல்வி, குழந்தைத் தொழிலாளர் முறை இதற்கிடையில் இருக்கும் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.. கல்வி-குழந்தைத் தொழிலாளர் முறை இரண்டுக்கும் இடையே இந்திய விடுதலைக்குப் பின் ஏதோ ஓர் இழை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது என்பது என் அனுபவம். ஆய்வுகளும் ஒரு பக்கம் சில உண்மைகளைக் கவனத்திற்குக் கொண்டு வரத்தான் செய்கின்றன. இந்தியா முழுவதிலும் பல்வேறு அடிப்படைத் தொழில்களுக்கான ஒரு வரையறைக்குட்பட்ட அளவு திறன்கள் என்பவை இருந்தால், அந்தந்தத் தொழில்களுக்கான குறுகிய காலப் பயிற்சி போதும் என்பது, அந்த நாள்களிலிருந்தே அரசாங்கத்தின் கொள்கை. ஒரு காலத்தில் அந்தந்தத் தொழில் நிறுவனங்களே அவரவர் தேவைகளுக் கேற்ப மிக வரையறைக்குட்பட்ட எண்ணிக்கையில் தமக்கான ஆண்-பெண் உழைப்பாளிகளை குறைந்தபட்சக் கல்வியோடு எடுத்துப் பணியமர்த்திக் கொண்டார்கள். கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பஞ்சாலை, ஜின்னிங், நூற்பாலைகள் என்று ஆயிரக்கணக்கில் இயங்கியது நானே பார்த்தவையே. ஆனால், இன்றைய மொபைல், எலெக்ட்ரிக்கல்கள், எலெக்ட்ரானிக்ஸ், இன்ன பிற பெருந்தொழில் நிறுவனங்களின் நிலைமைகளே வேறு. ஓர் எடுத்துக்காட்டிற்கு, நான் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் இந்தக் கிருஷ்ண கிரி மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை மின்னல் வேகத்தில் வந்துவிடுகிறது. இரண்டு இலட்சம் பேர், ஓரளவு அடிப்படைப் படிப்போடும், திறன்களோடும் வந்தால் போதும்! அப்படி ஒரு தொழிற்சாலை இங்கு வந்து உருவாகி இயங்கவும் ஆரம்பித்து ஓரிரு வருடங்களோ, கூடுதலாகவோ இருக்கவும் கூடும். இப்போது இதற்குமுன் அந்த வட்டாரமே கண்டிராத, வட இந்தியர்களே பெரும்பாலும் நிரம்பிய, கிராமப் பகுதிகளாக ஒரு வட்டாரமே உருவாகி விட்டது! காலனிகள், ஷெட் குடியிருப்புகள். வாரக்கடைசியானால், ஒசூர் மார்க்கெட் முழுக்க வட இந்திய உழைப்பாளிகளே காய்கறிகள் உள்ளிட்ட ஒரு வார சமையல் தேவைகளோடு வீடுகளுக்கு/குடியிருப்புகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரேயொரு தொழிற்சாலையினால் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே. இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களில் தொழில் வளர்ச்சி மிக்க தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எங்கு திரும்பினாலும் வட இந்திய உழைப்பாளி மக்கள் கூட்டம் கூட்டமாக இப்போது வாழும் நிலை! குழந்தைகளாகப் பெற்றோருடன் இங்கு வந்து வாழும் பிள்ளைகள், செங்கல் சூளைகள், சிறு சிறு தொழிற்பட்டறைகள் எனக் குழந்தைத்தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு புறம் கண்டும் காணாமலும் அதிகரித்துக் கொண்டு போகவும் வாய்ப்பு உண்டு. இல்லையெனினும் இவர்களைப் பள்ளிகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துக் ‘கல்வி’ கொடுப்பதற்கு நிர்வாகங்களோ அல்லது தமிழ்நாடு அரசோ என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 3. ‘கல்வியைத் தேடி...’ பேரா. லெனின் ஜவஹர்நேசன் எழுதிய ஆங்கில ஆய்வு நூலைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்த அனுபவம் பற்றி... ? கல்வி வளாக ஆய்வு –அக்கடமிக் பணி அவருக்கு. உயர்கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் தோற்றம், உலகநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவிலும், இலண்டன், ஜெர்மன் உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஜவஹர் நேசன் பல்லாண்டுகள் அங்கேயே வாழ்ந்து பணிகளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்ந்து நமது நாட்டிற்கென மாற்றுத்திட்டம் ஒன்றை உருவாக்கித் தந்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்- அதிலும் கொரானா ஊரடங்குக் காலம்- பேராசிரியர் என்னுடைய முழு மொழிபெயர்ப்பு வரைவையும் இரண்டு முறை வரிவரியாக வாசித்துத் திருத்தி இறுதிப்படுத்தினோம். கொரானா காலத்திலேயே தமிழில் என் மொழிபெயர்ப்பில் நூல் வந்தது. ‘ஹிந்து’ என்.ராம், ஆன்லைனில் நூலை வெளியிட்டார். ஜவஹர் நேசன் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் ஆன்லைனில் ஆய்வுரைகளை முன் வைத்தனர். எதிர்பாராத அளவு பார்வையாளர்கள், பங்கேற்பாளர்களாக வந்தனர். 2500 பேர் வந்தது, ஓர் ஆச்சரியம். தமிழ்நாட்டில் அவர் முன்வைத்த இந்த முக்கிய ஆய்வு நூல் பற்றிப் பல்கலைக்கழக வட்டாரங்கள், ஆய்வாளர்கள் விவாதித்திருக்க வேண்டும்! அப்படி ஏதும் முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. என் மொழிபெயர்ப்பு அனுபவங்களில், இது எனக்கு மிகவும் முக்கியமானது; எனக்கொரு நல்ல ‘மொழிபெயர்ப்பியல் கல்வி’ப்படிப்பு இது! 4. கல்வி மற்றும் கல்வி சார்ந்த பணிகளில் உங்கள் வாழ்வின் பெரும் பகுதி நேரத்தைச் செலவழித்திருக்கிறீர்கள். அந்தப்பணிகளின் வழியே நீங்கள் கற்றலிலிருந்து ‘கல்வி’ என்றால் என்ன? ஓரிரு சிறிய மாற்றங்களை உங்கள் கேள்வியுடன் நானே சேர்த்துக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். கல்வி சார்ந்த பணிகளில் ஏற்கெனவே தங்களின் வாழ்க்கையைப் பெரும் பகுதி காலங்களைச் செலவு செய்து வந்திருந்த முன்னோடிகளைப் பின்பற்றி நானும் அவர்களோடு இணந்தும், உதவியாகவும், ஆர்வலராகவும் இருந்து வந்தேன் என்றால் சரியாக இருக்கும்! இந்தியா விடுதலை பெற்ற 1947-ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது 2026- ஆம் ஆண்டு வரை எவ்வளவு நீண்ட காலம்! நான் பிறந்ததே 1955-ஆம் ஆண்டில் தான். எனக்கு ஆரம்பக்கல்வி, உயர்நிலைப்பள்ளி- இவை ஐந்து+ஆறு ஆண்டுகள் அப்போதைய (பழைய) பதினோராம் வகுப்பு முடிந்ததும் மூன்றாண்டு காலம் டூல் அண்ட் டை மேக்கிங் என்ற அப்போதைய சான்றிதழ் (இப்போது டிப்ளோமா) பெற்றவன். சுமார் இருபது ஆண்டுகள் நான் தொழிலாளி. அந்தக்காலகட்டம், எனக்குப் பிந்தைய, இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் காலப்பணிகளுக்கான ஒரு தயாரிப்புக் காலம் எனலாம். ஆக, சுமார் 65 ஆண்டு காலம் நேரடியாக என்னளவில் ஒரு சிறு பகுதி அனுபவம், உலகளாவிய கல்வி, கல்வியாளர்களின் அனுபவப் பதிவு நூல்கள், இந்தியக் கல்வி முறை பற்றிய ஏராளமான நூல்கள் ஆங்கிலம்-தமிழ் மூலம் வாசித்துப் பெற்ற விரிவான அனுபவக்களஞ்சியம்- இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் மிகுந்த அடக்கத்துடன் இதைச்சொல்கிறேன்: கல்வி என்றால் என்ன என்ற உங்கள் கேள்விக்கு, உண்மையிலேயே என்ன மறுமொழி சொல்வது என்று மிகப் பெரிய கேள்வி இப்போது என்னுள். முறை சார்ந்த, முறைசாராத இரு வகைகளிலும் உலகம் முழுக்க சாதாரண ஏழை மக்கள் ‘ஏதோ’ படித்து, தொழிற்பயிற்சி அல்லது கல்லூரி-பல்கலைக்கழகக் கல்வி பெற்று வாழ்ந்து வருகிறார்கள். பணக்காரர்கள் மட்டும் ஒரு மிகச்சிறிய பகுதியினர், உலகம் முழுக்கச்சேரத்துப் பார்த்தாலும் கூட, சில இலட்சம் பேர் இருக்கலாம். அவர்களுக்கான ஒரு நிறுவன அமைப்பு உண்டு. அதன் மதிப்பு, அதற்காகச்செலவாகும் தொகைகள் நம்மில் யாரும் செய்திருக்கிறோமா என்பதை விட்டுவிடுவோம். நான் பேசுவது, இந்த ஒட்டு மொத்த சாதாரண, ஏழை-நடுத்தர-ஓரளவுக்கு மேல் நடுத்தரம் வரை மட்டுமே. இவர்களுக்கான ஒரு மிகப்பெரிய நிறுவன அமைப்பு உண்டு. அரசாங்கம் (Government), அரசு(the state), நிர்வாக இயந்திரம், காவல்துறை, நீதித்துறை, இன்ன பிற மிகப்பெரிய பட்டியல் உண்டு. தேர்வுகளை எழுதி விட்டு, ஏதோ தேர்வு முடிவுகளை வாங்கிக்கொண்டு ஏதோ வேலைக்குப் போனால் போதும் என்றுதானே நம்மில் மிகப்பெரும் எண்ணிக்கையினர் இருக்கிறோம்?ஆனால், தேர்வில் ஏதோ தவறு, கேள்வித்தாள் லீக் ஆகிவிட்டது, இதற்கு நீதி வேண்டும் என்று இவர்களில் கொஞ்சம் பேர் போக முடியாமல் டெல்லி ஜந்தர் மந்தர், சென்னை இன்னும் சில நகரங்களுக்குப் போனவுடன் என்ன நடந்தது, தொடர்ந்து நடக்கிறது என்று செய்தித்தாள்களைப் படித்துப்பாருங்கள். ஒட்டு மொத்த நிர்வாக, காவல், இராணுவம்தான் இந்தக் கல்வி, கேள்வித்தாள் பற்றிய ‘நீதி’களை வழங்குகிறது. பெற்றோர்களுக்கு என்னவாவது புரிகிறதா? இது ஓர் எடுத்துக்காட்டுதான். நமக்கும் என்ன புரிகிறது? ஆசிரியர்களுக்கோ, உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கோ இந்த மாதிரியான பிரச்னைகளில் என்னவாவது ரோல் உண்டா? மாநில, ஒன்றிய கல்வி அமைச்சர்களுக்காவது தெரியுமா? இதுதான் கல்வியின் நிலை, கல்வியாளர்களின் நிலை; இது ஒரு புறம்; பெற்றோர் எந்த விஷயத்திலும் எவ்வளவு சிக்கல்கள் வந்து கொண்டிருந்தாலும் அவர்கள் அன்றாட வாழ்க்கைப்பாட்டுக்காக ஓடிக் கொண்டே இருந்தால்தான் வீட்டில் சோறு, மற்ற எல்லாமே! ஒட்டுமொத்த இந்தியாவின் கல்வி என்னவாக இருக்கிறது என்பதுவும், நமது மக்களுக்கு, பிள்ளைகளுக்கு,பெற்றோருக்கு அந்தக் கல்வி என்ன தருகிறது என்பதுவும் எனக்கே இப்போது ஒரு மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு என்னுடைய பதிலாக வைத்துக் கொள்ளலாம்! 5. தமிழ்நாட்டில் கல்வியை ஒரு வேலை வாங்கும் கருவியாக,வேலைவாய்ப் பகமாகக் கருதுகிறீர்களோ? அதன் விளைவாக வாசிப்பு என்பது ஒரு பண்பாடாக இல்லாமல் இருக்கிறது என்பதாக நீங்கள் கருதுகிறீர்களோ? இல்லை; இந்திய வரலாற்றில், தமிழ்நாட்டில்தான் நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் போன்றவர்கள் தொடங்கி, விடுதலைக்கு முன்பிருந்தே எண்ணற்ற நூலகவியல்,கல்வியியல் அறிஞர்கள் இங்கு பொதுவான வாசிப்பு என்பதை ஒரு பண்பாடாகவே வளர்த்தெடுதிருந்தார்கள்! நானும்,நீங்களும், நாமும் தலை நிமிர்ந்து சொல்லலாம்! சொல்வேன்! இதை முதலில் சொல்லி விட்டுப் பின் உங்கள் கேள்விக்குப் போகிறேன். நடைமுறையில்,இந்தியா உள்ளிட்ட உலகளாவிய,வளர்ந்து வரும் நாடுகளில், தமிழ்நாட்டின் மாநகரங்கள் உள்ளிட்டு,எந்த ஒரு தேர்வு முறையிலும் அதன் முடிவில் ஒரு வேலை கிடைத்தால்தான் நல்லது என்று எண்ணும்,எதிர் பார்க்கும் இயல்பு மிகப் பொதுவானதாகவும், மிக வலுவனதாகவும் உள்ளது. நானும் ஒரு பொது மனிதன், எனக்கு என்று பெரிய கல்வித்தகுதி, வேலை வாய்ப்போ இல்லாத ஒரு சாதாரண மனிதன் எனும் நிலையிலிருந்து இந்த இயல்பு இருக்கிறது; இருக்கும்! மிக நியாயமான எதிர்பார்ப்பு அது! அதைக் குறைவென்று சொல்வது சரியும் அல்ல. தமிழ்நாடு இன்று இந்திய அளவிலேயே, ஒன்றிய அரசின் மதிப்பீடுகள் படியே பல அம்சங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதில் என்ன ஐயம்? அந்தளவில், இது நல்லதுதானே! வாசிப்பு பற்றிப் பார்ப்போம்: இது பண்பாடாக, இன்று இருக்கிறதா? அதற்காக நான் முன்பு சிறப்பித்துத் தலைநிமிர்ந்து வணங்கிக் குறிப்பிட்ட பல முன்னோடிகளின் அந்த ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியின் கண்ணி அதேயளவு வலுவாக இன்று இல்லை,உண்மைதான்! அத்தகைய முன்னோடிகளின் ஆர்வம், வழி காட்டல், தொடர்ச்சி அறுபட்டுப் போய்க்கிடக்கிறது. முழுக்கத் திரைப்படங்கள், யூ-டியூப் சானல்கள், பிக்-பாஸ் போன்ற நட்சத்திர நேர்காணல்கள், ஆடல்-பாடல்கள், சமையல் கோமாளித்தனங்கள்-இத்தகைய ஓட்டுமொத்தப் பண்பாட்டுச் சிக்கல்களுக்குள் 90 சதவிகிதம் பேர் மூழ்கிக் கிடக்கிற நிலை. மாறாக, நான் ஆரம்பத்தில் பெருமிதம் பொங்கச்சொன்னது போல, தமிழ்நாட்டில் ஒரு வலுவான நூலாக-வாசிப்பியக்கப் பயன்பாடு நூற்றாண்டுகள் காலங்களாக இங்கு நிலைத்திருந்தது. பொங்கல், ’தைப்புரட்சி’ என்று ஆய்வாளர் டி. தர்மராஜ் சமீபத்தில் சிறப்புமிக்க தனது ‘ஜல்லிக்கட்டு’ நூலில் கொண்டாடும் தமிழ்ப்பண்பாட்டுப் பேரியக்கங்களில், அதுவும் இந்தத் ‘தைப்புரட்சி’ எனும் முழக்கத்தையும் சேர்த்துக் கொள்கிறார். அதை, உலகளாவிய முழக்கங்களில் சிலவான அரபி வசந்தம், ஷ்பானிஷ் எதிர்ப்புகள், ’வால் ஸ்ட்ரீட்’டைக் கைப்பற்றுதல் போன்ற முழக்கங்களுடன் சேர்க்கிறார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வியாளர் மால்கம் ஆதிசேஷய்யா போன்றவர்களின் எழுத்தறிவு இயக்கம் போன்றவையும், தமிழ்நாட்டு நூலக இயக்கம் உடன் சேர்ந்து வர, ஒரு மறு எழுச்சியும் வளர்ந்தெழுந்தது. உலகளவில் பெரும் புத்தக வாசிப்புப் பண்பாட்டு இயக்கமாகி விட்ட சென்னைப் புத்தகக் கண்காட்சி, அடுத்த சமீப வளர்ச்சியாகத் தொடங்கியுள்ள சர்வதேசப் புத்தகக் கண்காட்சி-சர்வதேச பன்மொழி பெயர்ப்புப் பரிமாற்றங்கள் போன்றவற்றையும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஆதரவோடு அரசாங்கமே ஒரு புதிய விரிவாக்கத்தைத்தொடங்கியது. இன்னொரு புறம், கடந்த ஐம்பதாண்டு காலமாகத் த மு எ க சங்கம், சமீப ஆண்டுகளில் தமிழ் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நீலம் பண்பாட்டுப் பேரியக்கம், கடந்த ஒரு நூற்றாண்டுத் திராவிட-பெரியாரிய அடித்தளமான ஒரு ஆலமரத்தின் நிழலில் வளர்ந்தவை என்பதிலும் ஓர் ஒப்புமை உண்டு. கடந்த 75 ஆண்டுகால என் சி பி ஹெச் பதிப்பகம், கடந்த முப்பதாண்டுகளில் பாரதி புத்தகாலயம், அடுத்த அணியில் இன்னும் பல பதிப்பகங்கள், மகளிரின் பேராற்றலை நிரூபித்து விசுவரூபம் எடுத்துள்ள ஹெர் ஸ்டோரீஸ் போன்ற பெண்கள் பதிப்பகங்கள் – எவ்வளவு நம்பிக்கையளிக்கும் அடையாளங்கள்! இவற்றின் விளைவுகள் வருங்காலங்களில் மிக நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் பணிகளைத் தொடர்வோம்! 6 . நீங்கள் ஒரு நூலகப்பிரியர். கல்விக்கூடங்களில் நூலகங்களின் பணிகள் என்னென்ன? இளமைக்கால வாசிப்பு ஏன் அவசியம்? தற்போது இருக்கும் கல்விச்சுமைக்கிடையில் குழந்தைகள் வாசிக்க முடியுமா? இதற்குத் தீர்வு என்ன? இந்தக்கேள்வியுடன் நாம் தற்காலிகமாக நமது உரையாடலை நிறுத்திக் கொண்டு இங்கு விவாதித்திருக்கும் விஷயங்களை ஆழமாகவும், அகன்று விரிவாகவும் விவாத்தித்து ஆராய்வது மிக முக்கியம். நாம் பொதுவாகக் கல்விக்கூடங்கள் என்பனவற்றைத் தனித்தனியான கட்டடங்களாக, நிறுவமைப்புகளாகவே பார்த்துப் பழகி விட்டோம். அவற்றில், நூலகங்கள் என்பவை இன்று கிட்டத்தட்ட மறக்கப்பட்டு வருகிற,ஒரு வகையில் கை விடப்பட்டு வருகிற கல்விக்கூடப் பழம்பொருள்களாக ஆகிவருகின்றன. ஆனால், இவற்றின் மீது ஒரு மீளக்கவனம் கொள்வோம். மேலே குறிப்பிட்டுள்ள எத்தனை நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் உள்ளன? அவ்வளவு ஏன், தமிழ்நாடு உள்ளிட்ட (கேரளம் தவிர்த்த) தென் மாநிலங்கள் ஒரு சமயத்தில் வட இந்தியாவே திகைக்கும் அளவுக்கு ‘நீட்’ தேர்வு தேவையில்லை என்று நிமிர்ந்து நிற்கவில்லையா, மறந்து விட்டோமா? அரசியல் சூழ்ச்சித் தந்திரங்களில் கை தேர்ந்த ஒன்றிய அரசும், உடன் சேர்ந்த உயர் சாதி அதிகார வர்க்கப் பிரதிநிதிகளும் சேர்ந்து, நீட் தேர்வை நாம் அனைவரின் தலைகளிலும் கட்டி விட்ட பிறகு, ஆரம்ப காலத்தயக்கங்களைப் எல்லாம் உதறியெறிந்து விட்டு இன்று இந்தியா அனைத்துக்கும் சவால் விடும் பகுதியாகத் தமிழ்நாடு ஆகிவிடவில்லையா? இது தமிழகத்தின் இயல்பு! இன்று தமிழ்நாட்டில் அறிவு வளாகங்களாக உள்ளவை நூலகங்களே, ஆனால், புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளன. நமது கவனங்கள் பூரா முன்பு குறிப்பிட்ட ஊடகங்கள் மீதே குவிந்து போய்க் கிடக்கின்றனவே! உண்மையில்,கல்வி நிலையங்கள் நூலக வளாகங்களுக்கு உள்ளேயே ஒரு பிரிவாகத்தான் அமைக்கப்பட வேண்டும்! தமிழ்நாட்டின் அறிவு வளாகங்களாகப் பெரும் எழுச்சி கொண்டு வளர்ந்து வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், எம் ஐ டி எஸ் என்ற சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம், தமிழ்நாடு தொடர்கல்வி வாரியம், தேசிய எழுத்தறிவு இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பி ஜி வி எஸ் –இன்னும் எத்தனை ஆலமரங்கள் எண்ணற்ற வேர்களோடும்,விழுதுகளோடும் பரந்து விரிந்து வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. நினைவுபடுத்திக் கொள்வோம்: மறைந்த தமிழகக் கல்வியாளர் மால்கம் ஆதி சேஷய்யா ஒரு தனிநபராகத் தமிழ்நாட்டின், தமிழர்களின் குரலாகவும், பிரதிநிதியாகவும் மிகத் தொடக்க காலத்திலேயே உயர்ந்தெழுந்து நின்றவர்; யுனெஸ்கோவிலேயே 23 ஆண்டுகள் நேரடியாகப் பணியாற்றியவர்! தமிழ்நாட்டு அறிவொளி,உலக வயது வந்தோர் கல்வி எல்லாவற்றுக்கும் அவரே ஆதி பிதாமகன்! ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்-எட்டு என்ற நாளை எழுத்தறிவு நாளாகக் கொண்டாடுவதன் மூலமே அவரை நினைவில் இருத்தி வணங்கி, உத்வேகமடைந்து வருகிறோம்! சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- குட்டி மணி
குட்டி மணி நித்தமும் எட்டு மணி ஆனதும் தட்டு நிறைய பாலினை கேட்டு வாங்கி குடித்திடும்... கிட்டு தாத்தா சன்னலை எட்டி எட்டி பார்த்திடும் குட்டி குட்டி வாலினை ஆட்டி ஆட்டி கூப்பிடும்... கிட்ட வரும் தாத்தாவை எட்டிக் குதித்து கொஞ்சிடும் பட்டு போன்ற மேனியை தொட்டு தடவ சொல்லிடும். சு.இளவரசி தமுஎகச அறம் கிளையின் துணைச் செயலாளராகச் செயலாற்றி வருகிறார். தமுஎகச அறம் – முகிழ் வாசிப்பறை எனும் சிறார் இலக்கியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர். மருத்துவர், எழுத்தாளர், கதைசொல்லி எனப் பன்முகத் தளங்களில் இயங்கி வரும் இவர், ‘மூங்கிலில் துளை தேடும் காற்று’ எனும் ஹைக்கூ கவிதை நூல் உள்ளிட்ட மூன்று நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பல்வேறு இணைய மற்றும் அச்சு இதழ்களிலும், தொகுப்பு நூல்களிலும் வெளியாகியுள்ளன.
- தங்கச் சிறகுகள் கொண்ட அன்னப்பறவை
மாலை நேரம். பன்னிரண்டாவது மாடியில் இருந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தாள் மீரா. அப்போது “படபட…” ஏதோ ஒன்று கீழே விழுந்த சத்தம் கேட்டது. மீரா எட்டிப் பார்த்தாள். ஒரு பெரிய அன்னப்பறவை பால்கனியின் ஓரத்தில் விழுந்து கிடந்தது. அவள் பதறிப்போனாள். “அய்யோ! பாவம்… அடிபட்டிருக்கிறதே!” என்று கூறி அதை மெதுவாகத் தூக்கினாள். அந்தப் பறவையின் சிறகுகள் பளபளக்கும் தங்க நிறத்தில் மின்னின. “ஆஹா ! தங்கச் சிறகுகள்!” மீராவுக்கு ஆச்சரியம். அதை வீட்டுக்குள் கொண்டு வந்தாள். மீராவின் அம்மா தண்ணீரும் உணவும் கொடுத்தார்கள். அம்மாவின் உதவியுடன் ஒரு கூண்டையும் ஏற்பாடு செய்தாள். “நன்றாகக் குணமாகும் வரை இங்கேயே இரு” என்று தங்கச்சிறகு அன்னத்திடம் சொன்னாள் மீரா. மீராவின் அன்பான கவனிப்பில் அன்னப்பறவையின் உடல்நலம் தேறியது. ஆனால் ஒரு விசித்திரம் நடந்தது. அது பால்கனியில் விழுந்து கிடந்தபோது இருந்த ஒளிவீசும் தங்கச்சிறகுகளின் நிறம் இப்போது சற்று மங்கி இருந்தன. “என்ன ஆச்சு உனக்கு?” என்று அன்னப்பறவையிடம் மீரா கேட்டாள். அன்னப்பறவை அமைதியாக அவளைப் பார்த்தது. அது பதில் சொல்லவில்லை. அதன் காயம் முழுமையாக ஆறவில்லை. ஆனால், அந்த வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் கவனிக்கத் தொடங்கியது. மீரா தினமும் பள்ளிக்குச் செல்வாள். பள்ளியிலிருந்து வந்ததும் பையைத் தூக்கி சோபாவில் வீசுவாள். “அம்மா, எனக்கு பசிக்குது” என்று கத்துவாள். “சரி, உட்கார். நான் உணவு எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு உணவை எடுத்து வந்து அம்மா ஊட்டுவார். அருகில் இருந்த அன்னப்பறவை அதைப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்னப்பறவையின் சிறகில் இருந்த ஒரு தங்க இறகு கீழே உதிர்ந்தது. அன்று மாலை பாட்டி, “மீரா, இந்தத் துணிகளை மடித்து வைக்க எனக்கு கொஞ்சம் உதவி செய்கிறாயா?” என்று கேட்டார். “பாட்டி, அது எல்லாம் எனக்குத் தெரியாது” என்றாள் மீரா. “கற்றுக்கொண்டால் தெரியும்” என்றார் பாட்டி. “எனக்கு கற்றுக்கொள்ள விருப்பமில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் மீரா. பாட்டி அமைதியாகத் துணிகளை மடிக்கத் தொடங்கினார். அன்னப்பறவையின் இன்னொரு தங்க இறகு உதிர்ந்தது. அன்னப்பறவை தன் சிறகுகளைப் பார்த்தது. தங்க நிறம் … இன்னும் கொஞ்சம் மங்கித் தெரிந்தது. அதன் கண்களில் ஏதோ வருத்தம் தெரிந்தது. “சிறகு உண்டு… பறக்கவில்லை, கால் உண்டு… நடக்கவில்லை, கைகள் உண்டு… செய்யவில்லை, வாழ்க்கை உண்டு… முயலவில்லை… தங்கம் மின்னுமா? சிறகுகள் மின்னுமா?” என்று அந்த இரவு கூண்டுக்குள் அன்னப் பறவை தனக்குத்தானே பாடியது. மீரா அந்தப் பாடலைக் கேட்டாள். “நீ என்ன பாடுற?” என்று கேட்டாள். அன்னப்பறவை அவளைப் பார்த்தது. ஆனால் எதுவும் பேசவில்லை. ஒருநாள் மீராவின் தோழி பிரணிகா வீட்டிற்கு வந்தாள். கூண்டைப் பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தன. “அடடா! இது அன்னப்பறவையா? எவ்வளவு அழகா இருக்கு!” என்று கூறிவிட்டு கூண்டுக்கு அருகில் வந்தாள். “இது என்ன அழகு? நான் முதலில் பார்த்தபோது இதன் சிறகுகள் முழுக்க தங்க நிறமாக இருந்தன” என்றாள் மீரா. “இப்போ ஏன் இப்படி மங்கியிருக்கு? சில இறகுகளைக் காணவில்லை என்று கேட்டாள் பிரணிகா. “தெரியல. கூண்டில் வைத்த பிறகுதான் இப்படியாகிவிட்டது” என்று சோகமாக அந்தக் கூண்டைச் சுற்றி வந்தபடியே கூறினாள் மீரா. அப்போது மீராவின் அம்மா இரண்டு தட்டுகளில் சிற்றுண்டி கொண்டு வந்தார். “மீரா! இந்தா ஒன்று உனக்கு. இன்னொன்று பிரணிகாவிற்கு” என்று கூறிக் கொடுத்தார். “அம்மா, எனக்கு நீங்களே ஊட்டி விட்டுவிடுங்கள்” என்றாள் மீரா. “பாரு, பிரணிகாவுக்கும் உன்னுடைய வயதுதான். அவளே சாப்பிடுகிறாள். நீயும் சாப்பிடு” என்றார் அம்மா. “முடியாது அம்மா. நீங்கள் தான் ஊட்ட வேண்டும்” என்று கூறி அம்மாவின் மடியில் ஏறி அமர்ந்தாள் மீரா. மீராவின் அம்மா மீராவிற்கு ஊட்ட ஆரம்பித்தார். பிரணிகா ஆச்சரியமாகப் பார்த்தாள். சிறிது நேரத்தில், “மீரா, குளிக்க நேரமாச்சு,” என்றார் அம்மா. அவளை அழைத்துச் சென்று குளிக்க வைத்தார். தலை சீவினார். பவுடர் போட்டார். பொட்டு வைத்தார். “இதெல்லாம் அம்மாவே செய்கிறார்களே. இவ்வளவு பெரியவளா வளர்துட்டே நீ செய்ய மாட்டாயா?” என்று பிரணிகா கேட்டாள். மீரா சிரித்தாள். “ஆமாம். அம்மா இருக்கும்போது நான் எதுவுமே செய்ய மாட்டேன்” என்று சொல்லிவிட்டு மீரா தோளைகளைக் குலுக்கிச் சிரித்தாள். பிரணிகா விளையாடி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள். ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் மீராவின் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன. "நம்மால் முடிந்த வேலைகளை நாமே செய்ய வேண்டும் மீரா..முடிந்தால் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்.." அவளுடைய குரல் திரும்பத் திரும்ப மீராவின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அன்றிரவு மீராவுக்குத் தூக்கம் வரவில்லை. மெதுவாக எழுந்து, கூண்டின் அருகில் சென்று நின்றாள். அன்னப்பறவை அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தது. அதன் மங்கிய தங்கச் சிறகுகளைப் பார்த்தபோது மீராவின் மனதிற்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு தோன்றியது. அன்னப்பறவை அவளைப் பார்த்தது.எதுவும் சொல்லவில்லை. ஆனால் அன்று இரவும் அதே பாடலைப் பாடியது. அடுத்த நாள் காலை, மீரா தானாகவே சாப்பிட்டாள். அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன மீரா, இன்னைக்கு நானே ஊட்டணும்னு சொல்லலையே?” மீரா சிரித்தாள். “இல்லம்மா… இனிமேல் நானே சாப்பிடுறேன்” அம்மாவின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது. அன்று மாலை பள்ளியில் இருந்து வந்ததும், புத்தகப் பையை அவளே கொண்டு போய் படிப்பறையில் வைத்தாள். புத்தகங்களை ஒழுங்காக அடுக்கினாள். பள்ளிப் பாடங்களையும் அவளே முடித்தாள். சிறிய வேலைதான். ஆனால் மீராவுக்கு அது ஏதோ ஒரு பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல இருந்தது. “நான் செய்துட்டேன்!” என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டாள். பிறகு உடனே கூண்டின் அருகில் ஓடிச்சென்றாள். அன்னப்பறவையைப் பார்த்தாள். அன்னப்பறவை சிரித்தது. அப்போது தான் கவனித்தாள். ஒரு புத்தம் புதிய தங்க இறகு அதன் சிறகில் முளைத்திருந்தது. அந்தச் சிறிய இறகு மட்டும் கண்ணைப்பறிக்கும் தங்க நிறத்தில் மின்னியது! மீராவின் கண்கள் விரிந்தன. அவளால் நம்பவே முடியவில்லை. “உன் இறகு! தங்கமாயிடுச்சே!" என்று சொல்லியபடியே கூண்டைத் திறந்து, அன்னப்பறவையைத் தடவிக் கொடுத்தாள். அன்னப்பறவை அவளைப் பார்த்துத் தலையை ஆட்டியது. அன்றிலிருந்து அது மீராவுக்கும் அன்னப்பறவைக்கும் இடையிலான ஒரு ரகசிய ஒப்பந்தம் போல மாறியது. அடுத்த நாளும் அவளை தன்னுடைய வேலைகளை செய்தாள். அடுத்த நாள் மாலை வந்து பார்த்தபோது, இன்னொரு இறகும் தங்க நிறமாக மாறியிருந்தது. மீராவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தினமும் அவளால் முடிந்த வேலைகளை அவளே செய்ய ஆரம்பித்தாள். ஒரு மாதம் கழிந்தது. அன்னப்பறவையின் இறகுகள் முழுவதும் மீண்டும் தங்க நிறமாக மாறியிருந்தன. மீரா சில நொடிகள் அதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதிற்குள் ஒரு பெருமிதம். பின்னர் கூண்டின் கதவைத் திறந்தாள். அன்னப்பறவையைத் தூக்கிக் கொண்டு பால்கனிக்கு வந்தாள். 'போய் வா! என் தங்க அன்னமே! உன் உலகத்துக்குப் போய் வா..!' அன்னப்பறவை படபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு உயரப் பறந்தது. உயர உயரப் பறந்துகொண்டே, ஒருமுறை திரும்பி மீராவைப் பார்த்தது. மீரா மகிழ்ச்சியோடு கையசைத்தாள். அப்போது திடீரென்று— அவளுடைய தோள்களில் ஏதோ அழுத்துவது போல உணர்ந்தாள். மீரா திரும்பிப் பார்த்தாள். அவளுடைய முதுகுக்குப் பின்னால் இரண்டு தங்க நிறச் சிறகுகள் முளைத்திருந்தன! மீரா வியப்பில் சில நொடிகள் அசையாமல் நின்றாள். பிறகு அந்தச் சிறகுகளை மெதுவாக விரித்தாள். அன்னப்பறவை வானத்தில் இருந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. மீரா சிரித்தாள். அவளும் வானத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்தாள். சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- அறிவோம் ஆளுமை -18 : தீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - விடுதலைக் கனவு
ரதி: ஜோ அத்தை, இன்று யாரைப் பற்றி பேசப் போறோம்? ஜோ : உங்களுக்குப் பிடித்த ஒரு வீரத் தலைவரைப் பற்றி. நகுலன்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்! சரியாங்க அத்தை ஜோ : மிகச்சரி! நேதாஜி என்றால் உங்களுக்கு முதலில் என்ன நினைவுக்கு வருகிறது? ரதி: சுதந்திரப் போராட்டம்! நகுலன்: இந்திய தேசிய ராணுவம்! ரதி: “ஜெய் ஹிந்த்!” ஜோ : அருமை! ஆனால் அந்த மூன்று வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய வாழ்க்கை இருக்கிறது. நகுலன்: அவர் எப்போது எங்கு பிறந்தார்? ஜோ: 1897 ஜனவரி 23-ஆம் தேதி, ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் பிறந்தார். அவருடைய பெற்றோர் ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி. ரதி: அவர் சிறுவயதில் எப்படி இருந்தாராம்? ஜோ: படிப்பில் மிகவும் ஆர்வமுள்ள குழந்தையாக இருந்தார். கட்டாக்கில் உள்ள ரேவன்ஷா கல்லூரியேட் பள்ளியில் படித்தார். அவருடைய ஆசிரியர் வேணி மாதவ் தாஸ் அவருடைய சிந்தனை வளர்ச்சியில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தினார். நகுலன்: அப்பவே நாட்டைப் பற்றி சிந்திக்க ஆரம்பிச்சுட்டாரா? ஜோ: சிறுவயதிலேயே ஆன்மிகம், ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னாளில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் அவரை மிகவும் ஈர்த்தன. ரதி: அப்புறம் அவர் நல்லா படிச்சாரா? ஜோ: ஆம். நன்றாகப் படித்து, பின்னர் இங்கிலாந்து சென்று ஐ.சி.எஸ். தேர்விலும் வெற்றி பெற்றார். நகுலன்: அப்படியென்றால் பெரிய அதிகாரியாக இருந்திருக்கலாமே? ஜோ: இருந்திருக்கலாம். ஆனால் அவர் அந்தப் பதவியைத் துறந்துவிட்டு இந்தியா திரும்பினார். ரதி: ஏன் அத்தை? ஜோ : தன்னுடைய நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் கீழ் பணியாற்றுவதைவிட, நாட்டின் விடுதலைக்காகப் பணியாற்றுவதே முக்கியம் என்று அவர் நினைத்தார். நகுலன்: அவர் உடனே சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்தாரா? ஜோ : இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் அவருடைய முக்கிய அரசியல் வழிகாட்டியாக இருந்தார். ரதி: காந்தியடிகளுடன் அவர் இருந்தாரா? ஜோ அத்தை: விடுதலை பெற இரண்டு வழிகளை அரசியல் கட்சிகள் கடைப்பிடித்தன. காந்தியின் அமைதிவழி சத்தியாகிரகம், அகிம்சை மற்றும் ஒத்துழையாமை ஆகியவை என்றால் நேதாஜி யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். நகுலன்: அதனால் அவர்களுக்குள் சண்டையா? ஜோ : இல்லை. கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதிக்க முடியும். இதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ரதி: நேதாஜி காங்கிரஸ் தலைவராக இருந்தாரா? ஜோ : ஆம். 1938-லும் 1939-லும் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய அரசியல் அணுகுமுறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸ் தலைமையிலிருந்து விலகினார். பின்னர் ஃபார்வர்டு பிளாக் அமைப்பைத் தொடங்கினார். ரதி : நேதாஜி விடுதலைப் போராட்டத்தின் போது சிறைவாசம் சென்றாரா? ஜோ : பலமுறை கைது செய்தார்கள். பின்னர் வீட்டுக்காவலிலும் வைத்தார்கள். 1941-ல் வீட்டுக்காவலில் இருந்து தப்பித்து, ஆப்கானிஸ்தான் வழியாக ஐரோப்பாவை அடைந்தார். ரதி: அங்கே எதற்குச் சென்றார்? ஜோ : இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெளிநாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக. அவர் ஜெர்மனியில் பெர்லினிலிருந்து “சுதந்திர இந்திய வானொலி ”மூலம் இந்தியர்களிடம் உரையாற்றினார்.1943-ல் கிழக்கு ஆசியாவுக்குச் சென்றார். அங்கே இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையை ஏற்றார். நகுலன்: இந்திய தேசிய ராணுவத்தை அவர்தான் ஆரம்பித்தாரா? ஜோ : ஆரம்பத்திலேயே அவர்தான் உருவாக்கினார் என்று சொல்ல முடியாது. மோகன் சிங், ராஷ் பிகாரி போஸ் போன்றோர் அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்குவகித்தனர். பின்னர் நேதாஜி அதன் தலைமையை ஏற்று மிகப் பெரிய இயக்கமாக மாற்றினார். ரதி: அந்தப் படையில் பெண்களும் இருந்தார்களா? ஜோ : நிச்சயமாக! நகுலன்: பெண்களுக்கென்று தனிப்படை இருந்ததா? ஜோ : ஆம். ராணி ஜான்சி ரெஜிமென்ட் என்ற பெண்கள் படைப்பிரிவு அமைக்கப்பட்டது. ரதி: அதன் தலைவி யார்? ஜோ : கேப்டன் லட்சுமி சேகல். நகுலன் : அவர் யார்? ஜோ : மருத்துவராக இருந்தவர். பின்னர் நேதாஜியின் அழைப்பை ஏற்று இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து, பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். ரதி : அப்படியென்றால் பெண்களும் நாட்டுக்காகப் போராட முடியும் என்று நேதாஜி நம்பினாரா? ஜோ : நிச்சயமாக. பெண்களும் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை அவரிடம் இருந்தது. நகுலன்: அத்தை, “ஆசாத் ஹிந்த்” என்றால் என்ன? ஜோ : “சுதந்திர இந்தியா” என்று பொருள்.1943-ல் சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை அறிவித்தார். நகுலன்: அவர் இந்தியாவுக்குள் வந்த ஆங்கிலேயர்களுடன் போரிட்டாரா? ஜோ : இரண்டாம் உலக யுத்தத்தில் உலகையே அடிமைப்படுத்த விரும்பிய பாசிச ஹிட்லரின் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தார். அந்தக் கூட்டணியில் இருந்த ஜப்பானுடன் சேர்ந்து இந்திய தேசிய ராணுவப் படைகள் பர்மா வழியாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்குள் முன்னேறி பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போரிட்டன. ரதி: வெற்றி பெற்றார்களா? ஜோ : இல்லை இரண்டாம் உலக யுத்தத்தில் ருஷ்யா, பிரிட்டன், அமெரிக்க நாடுகளின் நேட்டோ படை வெற்றி பெற்றது. INA பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரதி: அவருடைய முயற்சி என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? ஜோ : இந்தியர்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தியும் போராடத் தயாராக இருந்தார்கள் என்பதை உலகுக்குக் காட்டியது. INA இந்தியர்களிடம் பெரும் தாக்கத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. நகுலன்: “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கமும் நேதாஜியுடன் தொடர்புடையதுதானே? ஜோ : ஆம். “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கம் அவரது இயக்கத்துடன் மிகவும் வலுவாக இணைந்தது. அதன் பொருள் இந்தியாவுக்கு வெற்றி! ரதி: தமிழர்களும் நேதாஜியின் படையில் இருந்தார்களா? ஜோ : ஆம். தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் INA-வுக்கு ஆதரவளித்தனர். தமிழர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. நகுலன்: நேதாஜி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாரா? ஜோ : ஆம். அவர் மதுரைக்கும் வந்திருக்கிறார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. ரதி: அத்தை, நேதாஜி எப்படி இறந்தார்? ஜோ : 1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி விமான விபத்தில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணம் குறித்து நீண்டகாலமாக பல சந்தேகங்களும் விசாரணைகளும் நடைபெற்றன. நகுலன்: அதனால்தான் நேதாஜியின் மரணம் இன்னும் மர்மம் என்று சொல்கிறார்களா? ஜோ : ஆம். அந்த விவகாரம் குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் இருந்தன. ரதி: அத்தை, நேதாஜி வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன? ஜோ : தனக்காக மட்டும் வாழாமல், நாட்டு விடுதலைக்காக போரிட்ட தன்னலமற்ற தியாகம்,அர்ப்பணிப்பு, தீரம் இவற்றை எனக்குப் பிடிக்கும். நகுலன்: எனக்கு அவர் பெண்களையும் போராட்டத்தில் இணைத்தது பிடிக்கும். ரதி: எனக்கு அவர் தோல்வியைக் கண்டு பயப்படாமல் முயற்சி செய்தது பிடிக்கும். நகுலன்: எனக்கு “ஜெய் ஹிந்த்!” பிடிக்கும்! ஜோ : சரி. ஆனால் நேதாஜியை நினைவுகூர்வது “ஜெய் ஹிந்த்” என்று சொல்வதோடு முடிந்துவிடக் கூடாது. ரதி: அப்புறம்? ஜோ : துணிச்சலாக சிந்திக்க வேண்டும். நகுலன்: பொறுப்புடன் செயல்பட வேண்டும். ரதி: நம்முடைய நாட்டையும் மக்களையும் மதிக்க வேண்டும். ஜோ : அதுதான். நேதாஜியை ஒரு வரியில் சொல்லணும்னா “சுதந்திரத்தை கனவு கண்டதோடு நிற்காமல், அந்தக் கனவுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தலைவர்” ரதி: ஜெய் ஹிந்த்! நகுலன்: ஜெய் ஹிந்த்! ஜோ : ஜெய் ஹிந்த்! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- தத்துவம் அறிவோம் -18
பெண்ணை அடிமைப்படுத்தல் என்னது பெண்களை அடிமைப்படுத்தினார்களா? என்று தோன்றுகிறதா? ஆமாம். விவசாயத்தைக் கண்டுபிடித்து ஒரு இடத்தில் குடியேறியதும் மனிதனின் குணம் மாறிவிட்ட து. தனக்கு என்று நிலம், இடம், சேமிப்பு, செல்வம் வசதி, வாய்ப்பு என்று உருவாக்கத் தொடங்கினான். தன்னுடைய நிலத்தில் வேறு யாரும் சொந்தம் கொண்டாட க் கூடாது. தன்னுடைய வீட்டில் வேறு யாரும் குடி வரக்கூடாது. தன்னுடைய உணவை யாருக்கும் பகிர்ந்து கொடுக்க க் கூடாது. தன்னுடைய பொருட்களை யாரும் எடுக்க க் கூடாது. தன்னுடைய சேமிப்பை யாருக்கும் கொடுக்க க்கூடாது. இப்படியான சுயநலம் என்ன செய்யும்? ஆதிவேட்டை சமூகத்தில் எதையும் எல்லாரும் பகிர்ந்து கொண்ட நிலை மாறியது. தன் கூட்ட த்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு எதையும் பகிர்ந்து கொடுக்க மனம் வரவில்லை. அப்போது தான் திருட்டு என்ற சொல் உருவானது. எது திருட்டு? அடுத்தவன் பொருளை எடுத்துக் கொள்வது திருட்டு. அப்படித்தானே! ஏன் அடுத்தவன் பொருளை எடுக்கிறான்? இல்லாததால்.. ஏன் அவனிடம் இல்லை? உணவோ, பணமோ வைத்திருப்பவர்கள் பகிர்ந்து கொடுக்க மறுப்பதால். அவர்களுடைய பொருளை எப்படிக் கொடுப்பார்கள்? அவர்களுக்கு எப்படி இந்தச் செல்வம் வந்தது? உழைப்பினால். ஒருவர் மட்டும் உழைத்தால் இத்தனை செல்வம் சேருமா? உதாரணத்துக்கு அதானி என்ற பணக்காரர் மட்டும் உழைத்து இத்தனை லட்சம் கோடியைச் சம்பாதிக்க முடியுமா? அவர் லட்சக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கிறார். அவர்கள் எல்லாரும் அவருக்காக வேலைச் செய்கிறார்கள். அவர்களுடைய உழைப்பை குறைந்த கூலி கொடுத்து விலைக்கு வாங்குகிறார். கொடுக்கும் கூலி என்பது… அவர்கள் உழைத்தார்களல்லவா… அந்த உழைப்பினால் பொருள் உற்பத்தியாகுமல்லவா … அந்தப் பொருட்களை விற்றால் லாபம் வருமல்லவா… அந்த லாபத்தில் ஒரு துளியைத் தான் கூலியாகக் கொடுக்கிறார். பெரும்பகுதி அவர் எடுத்துக் கொள்கிறார். அதனால் அவர் மிக விரைவில் பணக்காரர் ஆகிவிடுகிறார். அப்படி என்றால் ஆதியில் ஒரு கூட்டம் அல்லது இனக்குழு இருக்கிறது என்றால் அங்கே எல்லாம் எல்லாருக்கும் சொந்தம். யார் வேண்டுமானாலும் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்போது தேவைக்கு மேல் எடுத்தால் கூட்டமே சேர்ந்து தடுக்கும். திட்டும். தண்டனை கொடுக்கும். ஆனால் இப்போது பசியுடன் இருப்பவன் உணவை எடுத்து விட்டால் அதைத் திருட்டு என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாருக்கும் பொதுவாக இருந்தபோது தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொண்ட செயல் இப்போது திருட்டு என்று பெயர் சூட்டப்பட்டு அதற்குத் தண்டனை வழங்கப்படுகிறது. ஒரே செயல் எப்படி மாறுகிறது? யார் மாற்றினார்கள்? ஏன் மாற்ற வேண்டும்? யோசித்துப் பாருங்கள்! அதேபோல இன்னொன்றையும் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆதிகாலத்தில் இனக்குழுவுக்குத் தலைமை தாங்கி பெண்கள் நடத்தினார்கள். அப்போது எல்லாம் பொதுவாக இருந்தன. ஆனால் எப்போது ஆண்கள் தலைமை தாங்க ஆரம்பித்தார்களோ அப்போது சுயநலம் வரத் தொடங்கிவிட்டது. சுயநலம் வந்ததும் தன்னுடைய சொத்து தன்னுடைய வாரிசுகளுக்குத் தான் சொந்தமாக வேண்டும். என்ற சிந்தனை வந்தது. அந்தச் சிந்தனை வந்ததும் பெண் தானே குழந்தை பெற்றுக் கொடுக்கிறாள், அவளை அடிமைப்படுத்த வேண்டும். அதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் யாரும் யாருடனும் இணை சேரலாம் என்றிருந்த நிலையை மாற்றினார்கள் ஆண்கள். தன்னைப் போலவே அனைத்து உணர்ச்சிகளும் சிந்தனைகளும் கொண்ட சக மனுசியான பெண்ணையும் ஒரு பொருளாக மாற்றத் தொடங்கினார்கள் எனது நிலம், எனது வீடு, எனது தானியம், எனது பொருள், என்று சொல்வதைப் போல எனது பெண், என்று சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். பெண்கள் உடமையாக்கப்பட்டார்கள். பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஆண்கள் சொல்வதைக் கேட்டு குடும்பத்துக்காக தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்கிற சடமாக மாற்றப்பட்டார்கள். ஒரு காலத்தில் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பெண்கள் இப்போது ஆண்களுக்கு அடிமைகளானார்கள். எந்தப் பெண்ணாவது சட்டங்களை மீறினால் கொடிய தண்டனை வழங்கப்பட்டது. ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டும். சட்டங்கள், கதைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், விதிமுறைகளை உருவாக்கி அவற்றைக் காலம் காலமாக. பெண்களுக்குப் போதித்து மூளைச்சலவை செய்தார்கள். பெண் என்பவள் ஆணுக்காகவே படைக்கப்பட்டாள் என்று கடவுள் பெயரால் கட்டுக்கதைகளை உருவாக்கிப் பரப்பினார்கள். இந்த விதிமுறைகளை சமூகம் முழுவதும் நடைமுறைப்படுத்தினார்கள். அதனால் அடிமைகளாக வேலை செய்த ஆண்களும் பெண்களை அடிமைகளைப் போல நடத்தினார்கள். விநோதமாக இருக்கிறதல்லவா? ( அறிவோம் தெளிவோம் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- மாற்றம் ஒன்றே மாறாதது
அது ஒரு அழகிய காடு. காலை நேரம். வானத்தில் மஞ்சள் விளிம்புகளுடன் மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. சூரியனின் பொன்னிற ஒளிக்கதிர்கள் மேகங்களின் இடைவெளியில் இருந்து காடு முழுவதும் விழுந்தன. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று மரங்களும் செடிகளும் காட்சி அளித்தன. குளிர்ந்த காற்று வீச, மரங்கள் சிலுசிலுவென்று ஆடிக்கொண்டிருந்தன. அந்தக் காட்டில் ஒரு பெரிய ஆண் யானை நின்று கொண்டிருந்தது. அது தன் தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியது. “பிரீரீஈஈ…!” ஆண் யானை தன் நீண்ட தந்தங்களை முன்னும் பின்னும் ஆட்டியது. அடடா! என்னஅழகு! நீளமும் பசுமையும் மஞ்சளும் கலந்து ஆயிரம் கண்கள் பார்ப்பதைப் போல அதைச் சுற்றிலும் காடு மின்னியது. காற்றில் மரங்கள் சிலுசிலுவென்று ஆடின. ஆண் யானையும் தன் தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு முன்னும் பின்னும் கால்களை எடுத்து வைத்து ஆடத் தொடங்கியது. மை தீட்டியதைப் போல கருமையான தும்பிக்கை. வெண் சங்கு போல நீண்ட வெண்மையான தந்தங்கள். நீண்ட நெடிய உருவம். அழகான பெரிய காதுகள். அந்த ஆண் யானை தன் தலையை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடிக் கொண்டிருந்தது. பெண் யானை தன் குட்டிகளுடன் சற்றுத் தொலைவில் நின்று புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. குட்டி யானைகளும் கருநிறத்தில் அழகாக இருந்தன. அவற்றில் ஒரு குட்டி, ஆண் யானையின் ஆட்டத்தை கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு அந்த யானையைப் பார்த்துப் பார்த்து ஒரு சந்தேகம் வந்தது. தைரியமான அந்தக் குட்டி யானை மெதுவாக ஆண் யானையிடம் சென்றது. “அப்பா…” “என்ன கண்ணே?” “உங்களைப் போல எனக்கும் அழகான தந்தங்கள் வருமா?” ஆண் யானை புன்னகைத்தது. “நிச்சயமாக வரும் கண்ணே!” “உங்களைப் போல கருப்பு நிறமாக நான் மாறுவேனா?” “நிச்சயமாக மாறுவாய்.” “உங்களுடைய அழகான கண்களைப் போல என்னுடைய கண்களும் அழகாகுமா?” “அழகாகும் கண்ணே.” குட்டி யானையின் கண்கள் இன்னும் பெரிதாகின. “உங்கள் முகத்தில் இருப்பதைப் போல எனக்கும் நீண்ட தந்தங்கள் வளருமா?” “நிச்சயமாக வளரும்.” “எப்போது வளரும்?” ஆண் யானை சிறிது நேரம் யோசித்தது. “காலம் வரும்போது.” “காலம் எப்போது வரும்?” “அது சீக்கிரமே வந்துவிடும்.” “நான் எப்போது உங்களைப் போல மாறுவேன்?” ஆண் யானை குட்டியைத் தன் தும்பிக்கையால் மெதுவாகத் தடவியது. “நீ நிச்சயம் என்னைப் போல வளர்வாய்.” குட்டி யானை தன் முகத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. “நான் மாறுவேனா?” ஆண் யானை புன்னகையுடன் சொன்னது: “நிச்சயமாக மாறுவாய் கண்ணே. மாற்றம் ஒன்றே மாறாதது.” “மாற்றம் ஒன்றே மாறாதது…” குட்டி யானை அந்த வார்த்தைகளை மெதுவாகச் சொல்லிப் பார்த்தது. அதன் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்தது. “மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் ஒன்றே மாறாதது…” என்று சொல்லிக்கொண்டே தன் அம்மாவிடம் ஓடிச் சென்றது. அந்தக் காலை நேரக் காட்டில் மரங்கள் தொடர்ந்து சிலுசிலுவென்று ஆடிக் கொண்டிருந்தன. அவற்றுடன் சேர்ந்து அந்தக் குட்டி யானையின் கனவும் மெதுவாக வளரத் தொடங்கியது.
- அணுவையும் உணரும் கருவிகள் - குவாண்டம் உணரிகள்
நம்மைச் சுற்றியுள்ள உணரிகள் நாம் பயன்படுத்தும் திறன்பேசியில் பலவகையான உணரிகள் உள்ளன. திறன்பேசியைத் திருப்பும்போது திரையும் திரும்புவது, நாம் நடக்கும் அடிகளை அது எண்ணுவது, வெளிச்சத்திற்கு ஏற்ப திரையின் ஒளியளவு மாறுவது போன்றவற்றின் பின்னால் உணரிகள் செயல்படுகின்றன. வெப்பம், அழுத்தம், ஒளி, அசைவு, காந்தப்புலம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அளவிடுவதுதான் இத்தகைய உணரிகளின் அடிப்படைப் பணி. ஆனால் வழக்கமான உணரிகளால் கண்டறிய முடியாத அளவுக்கு மிகமிகச் சிறிய மாற்றங்களையும் அளக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது? அங்குதான் குவாண்டம் உணரிகள் பயன்படுகின்றன. குவாண்டம் என்றால் என்ன? நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. அணுக்களுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற மிக நுண்ணிய துகள்கள் உள்ளன. இந்த மிகச் சிறிய அணு உலகப் பொருட்கள் நாம் அன்றாட வாழ்வில் காணும் பொருட்களைப்போல நடந்துகொள்வதில்லை. அவற்றின் நடத்தையை விளக்கும் இயற்பியல் பிரிவே குவாண்டம் இயற்பியல். அணுக்கள் மற்றும் அணுத்துகள்களின் ஆற்றல், சுழற்சி, நிலை போன்ற சில பண்புகள் மிக நுண்ணிய வெளிப்புற மாற்றங்களுக்குக்கூட பதிலளிக்கின்றன. அந்த மாற்றங்களை அளந்து, நம்மால் நேரடியாக உணர முடியாதவற்றைப் பற்றிய தகவல்களைப் பெறுவதுதான் குவாண்டம் உணரிகளின் அடிப்படைத் தத்துவம். குவாண்டம் உணரி எவ்வாறு செயல்படுகிறது? ஓர் அணுவின் சுற்றுப்புறத்தில் காந்தப்புலம், மின்புலம், வெப்பநிலை அல்லது ஈர்ப்பு விசையில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அதன் குவாண்டம் நிலையில் மாற்றம் ஏற்படலாம். அந்த மாற்றத்தை மிகத் துல்லியமாக அளந்தால், அதை ஏற்படுத்திய வெளிப்புற மாற்றத்தையும் அறிய முடியும். அணுக்கள் மட்டுமல்லாமல் ஒளித்துகள்கள், எலக்ட்ரான்கள் மற்றும் சில சிறப்புப் பொருள்களின் குவாண்டம் நிலைகளும் இத்தகைய அளவீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எளிமையாகச் சொன்னால், மிக நுண்ணிய இயற்பியல் மாற்றத்தை ஒரு குவாண்டம் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் கண்டறியும் கருவியே குவாண்டம் உணரி. சாதாரண உணரிக்கும் குவாண்டம் உணரிக்கும் வேறுபாடு ஒரு பெரிய அறையில் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இரைச்சலுக்கு நடுவே தொலைவில் ஒருவர் மிக மெதுவாகப் பேசுகிறார். அந்தக் குரலைத் தனியாகக் கேட்பது கடினம். குவாண்டம் உணரியின் திறனை இதனுடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம். மற்ற தாக்கங்களுக்கு நடுவிலும் மிக நுண்ணிய மாற்றங்களைப் பிரித்தறியும் அளவுக்கு இவ்வுணரிகளை வடிவமைக்க முடியும். இதனால் மிகச் சிறிய காந்தப்புல மாற்றங்கள், ஈர்ப்பு விசை வேறுபாடுகள், அசைவுகள், நேர வேறுபாடுகள் போன்றவற்றை மிகுந்த துல்லியத்துடன் அளக்க முடிகிறது. வைரத்திற்குள்ளும் ஓர் உணரி! சில குவாண்டம் உணரிகளில் வைரம் பயன்படுத்தப்படுகிறது. வைரத்தின் படிக அமைப்பில் சில கார்பன் அணுக்கள் இருக்க வேண்டிய இடத்தில் நைட்ரஜன் அணு இருந்து, அதற்கு அருகில் ஓர் அணுவிடம் காலியிடம் ஏற்பட்டிருக்கலாம். இதனை Nitrogen-Vacancy Centre (NV Centre) என்கிறார்கள். இத்தகைய நுண்ணிய அமைப்புகளின் குவாண்டம் நிலைகள் சுற்றுப்புறக் காந்தப்புலத்தால் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் மீது குறிப்பிட்ட ஒளியைச் செலுத்தி ஏற்படும் மாற்றங்களை அளப்பதன் மூலம் மிக நுண்ணிய காந்தப்புலங்களைக் கண்டறிய முடியும். இதனால் மிகச் சிறிய அளவிலான பொருள்களையும் உயிரியல் அமைப்புகளையும் ஆராய்வதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. குவாண்டம் உணரிகளின் பயன்பாடுகள் மூளை ஆய்வு: நரம்பணுக்கள் செயல்படும்போது உருவாகும் மிக நுண்ணிய காந்தப்புலங்களை அளப்பதற்கு மிகுந்த உணர்திறன் கொண்ட குவாண்டம் காந்த உணரிகள் உதவக்கூடும். நிலத்தடி ஆய்வு: நிலத்தடியில் உள்ள பாறைகள், வெற்றிடங்கள் அல்லது அடர்த்தி வேறுபாடுகள் பூமியின் ஈர்ப்பு விசையில் மிகச் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். குவாண்டம் ஈர்ப்புமானிகள் இத்தகைய வேறுபாடுகளை அளக்க உதவுகின்றன. வழிகாட்டுதல்: GPS குறிகைகள் கிடைக்காத சூழல்களில் முடுக்கம் மற்றும் சுழற்சியை மிகத் துல்லியமாக அளக்கும் குவாண்டம் கருவிகள் எதிர்கால வழிகாட்டுதலுக்கு உதவக்கூடும். நேர அளவீடு: அணுக் கடிகாரங்கள் அணுக்களின் குறிப்பிட்ட ஆற்றல் நிலைகளுக்கு இடையிலான மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நேரத்தை மிகத் துல்லியமாக அளக்கின்றன. செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மற்றும் தொலைத்தொடர்பிலும் துல்லியமான நேர அளவீடு முக்கியமானது. விண்வெளி ஆய்வு: ஈர்ப்பு விசை, காந்தப்புலம், முடுக்கம் மற்றும் நேரம் ஆகியவற்றில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களை அளப்பதற்கு குவாண்டம் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. உயிரியல் மற்றும் மருத்துவம்: உயிரணுக்கள் மற்றும் உயிர்மூலக்கூறுகளில் நிகழும் மிக நுண்ணிய இயற்பியல் மாற்றங்களை ஆய்வு செய்வதற்கான புதிய வழிகளை குவாண்டம் உணரிகள் திறக்கக்கூடும். இவற்றில் பல பயன்பாடுகள் இன்னும் ஆய்விலும் வளர்ச்சியிலும் உள்ளன. இவை ஏன் இன்னும் நமது வீடுகளுக்கு வரவில்லை? குவாண்டம் உணரிகள் மிகவும் துல்லியமானவை என்றாலும் அவற்றை உருவாக்குவதும் பயன்படுத்துவதும் எளிதானதல்ல. சில வகை உணரிகளுக்கு மிகக் குறைந்த வெப்பநிலை தேவைப்படலாம். சிலவற்றுக்கு லேசர், வெற்றிட அமைப்பு, நுணுக்கமான மின்னணுக் கட்டுப்பாடு போன்றவை தேவைப்படும். சுற்றுப்புற அதிர்வு, வெப்பம், மின்காந்த இரைச்சல் போன்றவை அளவீட்டைப் பாதிக்கக்கூடும். எனவே ஆய்வகத்தில் வெற்றிகரமாகச் செயல்படும் ஒரு குவாண்டம் உணரியைச் சிறிய, மலிவான, உறுதியான அன்றாடக் கருவியாக மாற்றுவது இன்னும் பெரிய பொறியியல் சவாலாக உள்ளது. நாளைய உலகின் நுண்ணிய கண்கள் மனிதனின் அறிவியல் வளர்ச்சி என்பது நாம் எவ்வளவு பெரியவற்றைப் பார்க்க முடிகிறது என்பதில் மட்டும் இல்லை; எவ்வளவு சிறிய மாற்றத்தை உணர முடிகிறது என்பதிலும் இருக்கிறது. ஒரு காலத்தில் வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்த மனிதன் தொலைநோக்கியை உருவாக்கி தொலைவிலுள்ள விண்மீன்களை ஆராயத் தொடங்கினான். நுண்ணோக்கியை உருவாக்கியபின் கண்ணுக்குத் தெரியாத உயிரணுக்களின் உலகத்தைக் கண்டான். அதேபோல் குவாண்டம் உணரிகள் நமது புலன்களாலும் வழக்கமான கருவிகளாலும் கண்டறிய முடியாத மிக நுண்ணிய மாற்றங்களை அளக்க உதவுகின்றன. மூளையில் உருவாகும் மிகச் சிறிய காந்தப்புலத்திலிருந்து நிலத்தடியில் மறைந்திருக்கும் அமைப்புகள் வரை, மிகத் துல்லியமான நேர அளவீட்டிலிருந்து விண்வெளி ஆய்வு வரை அவற்றின் பயன்பாடு விரிவடைந்து வருகிறது. இன்று பெரும்பாலும் ஆய்வகங்களிலும் சிறப்புப் பயன்பாடுகளிலும் இருக்கும் குவாண்டம் உணரிகள், நாளைய உலகில் மனிதனின் புதிய நுண்ணிய புலன்களாக மாறக்கூடும். எழில் சின்னத்தம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி
- வறண்ட நிலமும் வற்றிய கிணறும்
முன்னொரு காலத்தில் முத்தூரில் பொன்னன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தார். அவர் அந்த ஊர் தங்கராசு பண்ணையார் தோட்டத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தார். அப்பாவிக்குணம் கொண்டவர். ஆனால் கடுமையான உழைப்பாளி. வாங்கும் சம்பளத்தில் சிறிது சிறிதாகப் பணம் சேமித்து வந்தார். பல வருடங்களாக சேமித்து, அவருக்கு மிகப்பெரும் தொகை சேர்ந்தது. உடனே தன் பண்ணையாரிடம், “ஐயா, நான் சிறுக சிறுக சேமித்து ஒரு பெரும் தொகை என்னிடம் இருக்கிறது. அந்தத் தொகையை வைத்து நான் நிலம் வாங்க விரும்புகிறேன். தங்களிடம் உள்ள ஏதேனும் நிலத்தை, நான் வைத்திருக்கும் தொகைக்கு ஈடாக எனக்குக் கொடுத்து உதவி செய்யுங்கள்” என்று பணிவுடன் கேட்டார். பண்ணையாரும் “எவ்வளவு தொகை வைத்திருக்கிறாய்” என்று கேட்டார். அவர் அந்தப் பெரும் தொகை விவரங்களைச் சொன்னவுடன், பண்ணையாருக்கு திடுக்கிட்டது. ‘நம்மிடத்தில் விவசாயத் தொழில் செய்யும் ஒரு விவசாயிக்கு இவ்வளவு பணம் எப்படி சேர்ந்தது?’ என்று அவரிடத்தில் நேரடியாகவே, “உனக்கு நான் தரும் கூலியை வைத்து எப்படி சேமித்தாய்” என்று கேட்டார். அவரோ, “ஐயா, என் மனைவி காட்டு வேலைக்குச் செல்வார். அவள் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தை செலவு செய்யாமல் சேமித்தேன். பள்ளிக்கூடம் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வரும் என் மகனும் சிறு சிறு வேலைகள் செய்வான். அவன் சம்பாதித்த பணத்தையும் சேமித்து வைத்தேன். இப்படியாக சேமித்து, 20 வருடங்களாக சேர்த்த தொகை தான் இவ்வளவு”. “உன் மகன் என்ன செய்கிறான்” என்றார் பண்ணையார். “என் மகன் படிப்பை முடித்து, இப்போது வெளியூரில் படித்த படிப்பிற்கு ஏற்ப நல்ல வேலையில் இருக்கிறான்.” “பிறகு ஏன் நிலம் வாங்கி விவசாயம் செய்ய நினைக்கிறாய்?, உடலில் வலு இருப்பது வரை என் நிலத்தில் வேலை பார். இல்லையென்றால் வீட்டில் ஓய்வெடு” என்று நிலம் தர விருப்பமில்லாமலே பதில் சொன்னார் பண்ணையார். “இதே போன்று, என் மனைவியும் வீட்டில் ஓய்வெடுக்கும்படி சொன்னாள். எனக்கு ஓய்வெடுக்க விருப்பமில்லை எனவே நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” சற்று யோசித்து, “சரி நாளை வா. உனக்கு நான் நிலம் தருகிறேன்” என்றார் பண்ணையார். “ரொம்ப நன்றி” என வணங்கிவிட்டு புறப்பட்டார் பொன்னன். பண்ணையாரின் மனதிற்குள் வஞ்சம் தோன்றியது. ‘நம்மிடத்தில் கூலி வேலை செய்தவன் இப்போது நிலம் வாங்குகிறானே’ என்று ஒரு பெரும் பொறாமை அவரிடம் இருந்தது. மறுநாள், ஊருக்கு வெளியே ஒரு வறண்ட நிலத்தையும், வற்றிய கிணற்றையும் காட்டி, “நீ தரும் தொகைக்கு இந்த நிலம் சரியாக இருக்கும்” என்று அவனிடம் காட்டினார். பண்ணையாரை எதிர்த்துப் பேசவோ, கேள்வி கேட்கவோ நடுங்கும் பொன்னனோ, வறண்ட நிலத்தையும், வற்றிய கிணற்றையும் வாங்க முடிவு செய்தார். “பண்ணையார் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்” என்று அவரை வணங்கி விட்டு தன் பணத்தை கொடுத்து அந்த நிலத்திற்கு தன் பெயர் போட்டு கிரயம் செய்து வாங்கிக் கொண்டார். தன் மனைவியிடம் இதைக் கூறி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் கற்களும், சிறிய பாறைகளும் இருக்கும். அந்த வறண்ட நிலத்தில் மாடுகளைக் கொண்டு அரும்பாடு பட்டு உழவு செய்ய ஆரம்பித்தார். கடும் வெயிலிலும் பாடுபட்டு உழவு செய்த பலன், இயற்கை நல்ல வழிவிட்டது. அந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. அந்த வற்றிய கிணறிலும் தண்ணீர் ஊற ஆரம்பித்தது. நிலமும் உழவுக்கு தயாரானது. பணிக்கு ஆட்களை கொண்டு பயிர் நட ஆரம்பித்தார். பின் பாசனத்திற்கு கிணற்று நீரை பயன்படுத்தினார். அவர் உழவு செய்வதை கேள்விப்பட்ட பண்ணையாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்படியாவது அவரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த நினைத்தார். ஏதாவது சூழ்ச்சி செய்து மீண்டும் தன்னுடைய அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்தார். எந்த வகையில் சிக்க வைப்பது என யோசித்து, ஒரு வழி கண்டுபிடித்தார். மறுநாள் தன் பண்ணை அடியாட்களை அழைத்துக் கொண்டு பொன்னனின் நிலத்திற்கு வந்தார். கிணற்றிலிருந்து நீர் இறைப்பதைப் பார்த்து, தடுத்து நிறுத்தி, பொன்னனிடம், “நீ என்னிடம் நிலமும், வறண்ட கிணறும் வாங்கினாய். ஆனால் கிணற்றில் இப்போது தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீர் எனக்குத்தான் சொந்தம். அந்த தண்ணீரை சேர்த்து நீ விலைக்கு வாங்கவில்லை. அதனால் அந்த தண்ணீரை நீ பயன்படுத்தினால் எனக்கு பணம் தர வேண்டும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றார். இதைக் கேட்ட பொன்னனுக்கு பயம் ஏற்பட்டது. “இத்தனை நாட்களாக நமக்கு நல்லது செய்வார் என்று நினைத்த பண்ணையார், இப்போது இவ்வாறு சூழ்ச்சி செய்கிறாரே!, பணம் கேட்கிறாரே! இன்னும் பயிரிடவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படி செய்தால் என்ன செய்வது ?” என வருத்தப்பட்டார். இதை தன் மனைவியிடமும் கூறினார். அவருக்கும் ஒன்றும் வழி சொல்லவும் தெரியவில்லை. உடனே தன் மகனுக்கு கடிதம் எழுதி தன் மகனை வரவழைத்தார் பொன்னன். இரண்டு நாட்களில் ஊருக்கு வந்த தன் மகன் வேலனிடம், வறண்ட கிணற்றை தான் மீண்டும் தோண்டி ஆழப்படுத்திய பின் மழை பெய்ததால் கிணற்று தண்ணீர் ஊத்து ஏற்பட்டதையும் பண்ணையார் இப்போது குழப்பம் செய்வதையும் கூறி, அழுதார் பொன்னன். உடனே, அவன் கிரயப் பத்திரத்தை வாங்கிப் படித்தான். பின் “சரி இதற்கு நான் முடிவு கட்டுகிறேன்” என்று அவன் சிந்தித்தான். அவன் பண்ணையாரிடம் தன் அப்பாவை அழைத்துச் சென்றான். படித்து, நல்ல வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியுடன் உயர்வாக வேலன் இருப்பதை பார்த்த பண்ணையாருக்கு கோபமும் பொறாமையும் இருந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “வா வேலா, அப்பா உன்னிடம் எல்லாம் சொன்னாரா?, நான் விற்கும் போது அது வறண்ட கிணறு. ஆனால் இப்போது தண்ணீர் வந்துவிட்டது. அப்போது அந்த தண்ணீர் எனக்குத் தானே சொந்தம். அதைத்தான் உன் அப்பாவிடம் சொன்னேன். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கு எனக்கு பணம் தர வேண்டும்” என்றார் பண்ணையார். உடனே வேலன், ”உண்மைதான் ஐயா, தண்ணீர் உங்களுக்கு சொந்தம் தான். அது இப்பொழுது எங்கள் கிணறில் உள்ளது. அந்த தண்ணீரை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் தண்ணீர் இருப்பதற்கு நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும். அப்படி இல்லையென்றால் கிணற்றில் உள்ள மொத்த தண்ணீரை எடுத்து செல்லுங்கள்” என்றான். இப்படிப்பட்ட பதிலை கேட்ட பண்ணையாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ படிப்பறிவில்லாதவன், பயந்து நடுங்கக் கூடிய பொன்னனை ஏமாற்றி, நிலத்தை பிடுங்கிக் கொள்ளலாம்’ என நினைத்த பண்ணையாருக்கு முகம் வாடியது. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஏதேதோ பேசினார். தர்க்கம் செய்தார். ஆனால் கடைசியாக வேறு வழியில்லாமல், “நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார். “மீண்டும் இது போல் ஏதாவது மோசடி செய்தீர்கள் என்றால் அதற்கும் தக்க பதிலடி தர தயாராகத்தான் இருக்கிறோம். மீண்டும் ஏதேனும் செய்தால் நீதிமன்றம் வரை செல்லவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்றபடி வேலன் பண்ணையாரை எச்சரித்து விட்டு நகர்ந்தான். இதனைச் சுற்றி நின்று வேலை செய்தவர்களும் சில மக்களும் பார்க்க, பண்ணையாருக்கு அவமானமாக இருந்தது. ‘இப்படித்தானே நம்மிடமும் நிலங்களை பிடுங்கி இருப்பார். நாம் வேலனிடம் நம் குறைகளைக் கூறி அவன் மூலம் இழந்த நிலங்களை திரும்ப பெறலாம்’ என சில மக்கள் சிந்தித்து அவன் பின்னால் சென்றார்கள். தன் மகனின் அறிவுக் கூர்மையை எண்ணி பொன்னன் பெருமிதம் கொண்டார். சில நாட்களில் வேலனும் மக்களிடம் பண்ணையார் பிடுங்கிய நிலங்களையும் சட்டவிரோதமாக அபகரித்த நிலங்களையும் நீதிமன்றம் வாயிலாகப் போராடிப் பெற்றுக் கொடுக்கத் தொடங்கினான். ஊர் மக்களும் வேலனுக்கு பக்கபலமாக இருந்தனர். உழவு தொடங்கியது. நன்கு பயிரிட்டு அறுவடை செய்தான் பொன்னன். லாபம் இரட்டிப்பாக கிடைத்தது. வேலை செய்பவர்களுக்கு விளைச்சலில் பங்கு கொடுத்து, தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வாழ வைத்தார் பொன்னன். கார்த்திக் கிருபாகரன் அபுதாபியில் இயந்திரப் பொறியாளராகப் பணிபுரியும் கார்த்திக் கிருபாகரன் (எ) சீனிவாசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். கணையாழி, குமுதம், தீராநதி போன்ற அச்சிதழ்களிலும், சொல்வனம், பதாகை உள்ளிட்ட இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 2019-இல் 'தீதும் நன்றும்' என்ற இவரது நாவலும், 2024-இல் 'ஒரு கோடி' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் புத்தகமாக வெளிவந்துள்ளன.
- நீல நண்டு
வணக்கம் குழந்தைகளே! என் பெயர் நீல நண்டு. ஆங்கிலத்தில் என்னை Blue Swimmer crab என்று அழைப்பார்கள். Swimmer என்றால் நீச்சலடிப்பவர் என்று பொருள். இதோ என் உடலுக்குக் கீழே உள்ள கால் பகுதியைப் பாருங்களேன். கொடுக்குகள் இல்லாமல் நீந்துவதற்கு உதவக்கூடிய துடுப்புகள் போலவே இருக்கின்றனவா? நான் கடலில் நீந்தக்கூடிய நண்டு இனம், அதற்கு ஏற்றபடி என் கால்களின் இறுதிப்பகுதியில் துடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நான் பெரும்பாலான நேரம் மண்ணுக்குள் புதைந்து இருப்பேன். சிப்பிகள், கிளிஞ்சல்கள், குட்டி மீன்கள் போன்றவற்றை சாப்பிடுவேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள கடற்பகுதிகளில் என்னை நீங்கள் பார்க்கலாம். மீன் சந்தைகளில்கூட என்னை நீங்கள் பார்க்கலாம். என் இனத்தைப் பொறுத்தவரை ஆண் நண்டுகளை விட பெண் நண்டுகளி நிறம் சற்றே குறைவானதாக இருக்கும். ஆண் நண்டுகளின் உடல் நீல நிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் கொண்டதாக இருக்கும். நான் எப்படி நீந்துவேன் என்று யூட்யூப் வீடியோவிலும் பார்க்க முடியும். தேடிப் பாருங்களேன். என் நீச்சல் பாணி அசத்தலாக இருக்கிறது, இல்லையா? நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.
- பரிசு
மூனு வரைக்கும் எண்ணி முடித்தேன் ஓடு தம்பி ஓடு முயலைப் போல வேகமாக ஓடு தம்பி ஓடு தென்னந் தோப்பு வேலி வரைக்கும் ஓடு தம்பி ஓடு திரும்ப வேண்டாம் சிரிக்க வேண்டாம் ஓடு தம்பி ஓடு முடியாத எதுவும் உலகில் இல்லை ஓடு தம்பி ஓடு முயற்சியை மட்டும் விட்டு விடாதே ஓடு தம்பி ஓடு ஓடி முடித்தால் பரிசு கிடைக்கும் ஓடு தம்பி ஓடு ஒன்றுக்குப் பத்தாய் முத்தமும் கிடைக்கும் ஓடு தம்பி ஒடு பாவண்ணன் இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.
- தேடலில் பூத்த புன்னகை
வீரேந்திர துபே தமிழில்: கொ மா கோ இளங்கோ மதிய வெயில் சன்னலைத் தாண்டி தங்கம் போல மின்னியது. அந்த நேரத்தில், வீட்டுத் திண்ணையில் ஒரு விசித்திரமான வேட்டையில் ஈடுப்பட்டிருந்தார் நாஞ்சியின் அத்தை. ஆமாம்! அதுதான் அத்தையின் புகழ்பெற்ற 'பேன் வேட்டை'. அத்தைக்கு உலகிலேயே இரண்டு வேலைகள்தான் ரொம்பப் பிடிக்கும். ஒன்று, அடுத்தவர்களின் தலையில் பேன் தேடுவது. இன்னொன்று, யாரையாவது தன் தலையில் பேன் தேடச் சொல்வது. அத்தையின் கையில் பேன்கள் அகப்படும்போது ‘டக் டக்’ என்று ஒரு சத்தம் வரும் பாருங்கள்! அதுதான் அவருக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்த இசை. அந்தச் சத்தம் கேட்கும் போதெல்லாம், ஏதோ ஒரு போரில் வெற்றி பெற்ற வீராங்கனையைப் போல அத்தையின் முகம் பெருமையில் பிரகாசிக்கும். அத்தை பேன் பார்க்க இறங்கிவிட்டால், வயிற்றுப் பசியோ தாகமோ எடுக்காது. பக்கத்தில் யாராவது வந்து ‘அத்தை.. அத்தை..’ என்று கத்தினாலும் காதில் விழாது. அத்தை அப்போது ஒரு சிலை போல மாறிவிடுவார். அப்பாவின் உடன்பிறந்த தங்கை என்றாலும், நாஞ்சிக்கு அவர் நெருங்கிய தோழி. “அத்தை! இதோ வந்துட்டேன்” என்று நாஞ்சி ஓடிவந்து அவர் மடியில் அமர்ந்தால் போதும், அத்தையின் முகம் அப்படியே மலர்ந்துவிடும். "வாம்மா நாஞ்சி... இந்த அடர்ந்த கூந்தலுக்குள்ள ஒரு ராட்சசப் பேன் ஒளிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன். அதை இன்னைக்குப் பிடிக்காம விடமாட்டேன்" என்று அத்தை கண்சிமிட்டுவார். நாஞ்சிக்கு அத்தையின் கைவிரல்கள் தன் தலைக்குள் மெல்ல ஊர்ந்து செல்வது மிகவும் பிடிக்கும். அது ஒரு சுகமான வருடல். அத்தை வெறும் பேன் மட்டும் பார்ப்பதில்லை. கூடவே நிறையக் கதைகளையும் சொல்வார். "தெரியுமா நாஞ்சி? முன்னொரு காலத்துல ஒரு ராஜா இருந்தாராம். அவரோட முடி ரொம்ப நீளமா இருக்குமாம்..." என்று அத்தை கதை சொல்லத் தொடங்குவார். நாஞ்சி மிகந்த உற்சாகத்துடன், “சரி.... அப்புறம்?” என்று தலையாட்டிப் பேச்சை வளர்ப்பாள். கதை சொல்வதற்கு இடையில் எப்போதாவது ஒரு பேன் கையில் சிக்கினால் அத்தைக்கு அப்படியொரு சந்தோஷம். அதை விரலால் இழுத்து, இடது கைக் கட்டைவிரல் நகத்தின் மேல் வைத்து ‘சட்’ என்று ஒரு சத்தம் வரும்படி நசுக்குவார். அந்தச் சத்தம் கதையில் வரும் ராஜா போரில் வென்றதைப் போன்ற வெற்றிக் கொண்டாட்டமாக இருக்கும். ஒரு நாள் அத்தை கவலையோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள் நாஞ்சி. அப்போது நாஞ்சி ஓடிவந்து, "அத்தை! இன்னைக்கு உங்க கூந்தல்ல நான் ராஜா கதையைத் தேடட்டுமா?" என்று கேட்டு அவருக்குப் பின்னால் சம்மணம் கூட்டி உட்கார்ந்து கொள்வாள். நாஞ்சியின் பிஞ்சு விரல்கள் அத்தையின் கூந்தலில் விளையாடும்போது, அவருடைய கவலைகள் மெல்ல மறையும். நாஞ்சி அதைக் கவனிப்பாள். நாட்கள் நகர்ந்தன. கோடை விடுமுறை முடிந்து நாஞ்சி ஹாஸ்டலுக்குக் கிளம்பினாள். பிரியும் போது அத்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “அத்தை! பத்திரமாக இருங்க. எனக்காக நிறைய பேன்களைச் சேர்த்து வைங்க” என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் சென்றாள். விடுதியில் இருக்கும்போதும் இருவரும் அடிக்கடி கைபேசியில் பேசிக்கொள்வார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக அத்தையின் குரலில் ஒரு தளர்ச்சி இருந்தது. முன்பு போல உற்சாகமாகச் சிரிக்காமல், ஏதோ ஒரு கடினமான பாரத்தைச் சுமப்பது போலவே அவர் பேசினார். போனில் பேசும் நேரமும் குறைந்து கொண்டே வந்தது. ஏதோ ஒரு ரகசியம் தன்னிடம் இருந்து மறைக்கப்படுவதை நாஞ்சி உணர்ந்தாள். தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த நாஞ்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எப்போதும் திண்ணையில் உட்கார்ந்து பேன் பார்த்துக்கொண்டிருக்கும் அத்தையை அங்கே காணவில்லை. அத்தை உள்ளே இருட்டு அறையில் படுத்திருந்தார். புற்றுநோய் காரணமாக கதிரியக்கச் சிகிச்சை அத்தையை அடையாளம் தெரியாமல் மாற்றியது. சிகிச்சையின் வீரியத்தால் அத்தையின் அழகிய கார்மேகக் கூந்தல் முற்றிலும் உதிர்ந்து போயிருந்தது. அத்தையின் தலைக்கு மொட்டை அடித்திருந்தார்கள். நாஞ்சியைப் பார்த்ததும் அத்தை கண்களை மூடிக்கொண்டார். தனது மொட்டைத் தலையைக் கண்டு அவள் பயந்துவிடுவாள் என்று அத்தை நினைத்தார். ஆனால் நாஞ்சி எதையும் யோசிக்கவில்லை. ஓடிச் சென்று அவர் மார்பில் சாய்ந்து அணைத்துக் கொண்டாள். அத்தையின் மெலிந்த கைகள் அவளை இறுகப் பற்றின. அன்று மாலை, அத்தைக்குத் தலையணை வைத்து உட்கார வைத்தார்கள். நாஞ்சி மெதுவாக அவருக்குப் பின்னால் சென்று அமர்ந்தாள். அத்தை சங்கடத்துடன் குனிந்து கொண்டார். நாஞ்சி தன் மென்மையான விரல்களை அத்தையின் மொட்டைத் தலையில் மெல்ல வைத்தாள். அந்தச் சருமத்தின் சூடு அவளுக்கு ஏதோ ஒரு செய்தியைச் சொன்னது. நாஞ்சி குறும்புடன் பேசத் தொடங்கினாள், “அத்தை! நேராக உட்காருங்கள். நான் இல்லாத இந்தச் சில மாதங்களில் எத்தனை பேன்களைத் தலையில் வளர்த்து வைத்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா? என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமாக இல்லையா? இவ்வளவு பேன்களையும் நான் ஒருத்தி மட்டுமா தேடிப் பிடிக்க வேண்டும்? நூற்றுக்கணக்கான பேன்கள் வளர்ந்திருக்கின்றன” என்றாள். அறையில் இருந்த எல்லோரும் சிலையாக நின்றனர். அத்தையின் மொட்டைத் தலையில் பேன் இருக்காது என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாஞ்சி அந்த விளையாட்டை நிறுத்தவில்லை. “இதோ பாருங்களேன்... ஒரு பெரிய ராட்சசப் பேன் இங்கே ஜாலியா விளையாடுது” என்று அத்தையின் வழுவழுப்பான தலையில் ஒரு புள்ளியைத் தொட்டுக் காட்டினாள். நிஜமான பேன் இல்லை என்றாலும், நாஞ்சியின் விரல் பட்ட இடத்தில் அத்தைக்குப் பழைய சுகமான வருடல் தெரிந்தது. அத்தையின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கன்னங்களை நனைத்தது. ஆனால், அவரது உதடுகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் உண்மையான புன்னகை மலர்ந்தது. “தேடு நாஞ்சி... தேடு... எல்லாப் பேன்களையும் பிடிச்சிடு” என்று தழுதழுத்த குரலில் சொன்னார். அன்பு என்பது வெறும் கூந்தலில் இல்லை. வருடிக் கொடுக்கும் விரல் நுனிகளிலும், காயப்பட்ட மனதைத் தேற்றும் சொற்களிலும் இருக்கிறது என்பதை நாஞ்சி அன்று உணர்ந்தாள். புற்றுநோய் அத்தையின் கூந்தலைப் பறித்திருக்கலாம். ஆனால் நாஞ்சியின் அன்பு குறையாமல் இருந்தது. அத்தையின் முகத்தில் தெரிந்த புன்னகை, அவர் பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை அவளுக்கும் குடும்பத்தாருக்கும் தந்தது. . கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.













