கடல் எவ்வளவு ஆழமானது?
- நாராயணி சுப்பிரமணியன்

- Jan 15
- 1 min read
Updated: Jan 15

கடல் ஆழமானது என்று நமக்குத் தெரியும். "ஆழ்கடல்" என்றுகூட ஒரு பதம் உண்டு. ஆனால் கடல் எவ்வளவு ஆழம் இருக்கும்? அதை எப்படி அளக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்.
சராசரியாக கடல் 3700 மீட்டர் ஆழம் இருக்கும். அதாவது 12,000 அடி. இதை எப்படிப் புரிந்துகொள்வது? கோயில் கோபுரம் பார்த்திருக்கிறீர்களா? அது உயரமாக இருக்குமே? அதுபோல 45 கோபுரங்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கினால் என்ன அளவு வருமோ, அந்த அளவுக்குக் கடல் ஆழமாக இருக்கும்.
சரி, இது சராசரி ஆழம்.... கடலின் அதிகபட்ச ஆழம் எவ்வளவு?

பசிபிக் பெருங்கடலில் மரியானா பள்ளம் (Mariana Trench) என்ற பகுதியில் சாலஞ்சர் டீப் என்ற இடம் இருக்கிறது. அங்குதான் கடலின் ஆழம் மிகவும் அதிகமாக இருக்கும். அங்கு கடலின் ஆழம் 11,928 மீட்டர். என்ன? புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறதா? 11 கிலோமீட்டர் ஆழம்! இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்லட்டுமா? எவரெஸ்ட் சிகரம் இருக்கிறதே, அந்த சிகரத்தை அப்படியே சாலஞ்சர் டீப்பில் போட்டால் அது முழுமையாக மூழ்கிவிடும். அதற்கும் மேல் 3 கிலோமீட்டர் அளவுக்கு நீர் இருக்கும்!
இந்த ஆழங்களை எல்லாம் எப்படி அளந்தார்கள்? அந்த காலத்தில் Lead line என்ற ஒருவகை கயிறை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு ஆறு அடிக்கும் அதில் ஒரு முடிச்சு இருக்கும், இந்தக் கயிறின் முனையில் ஒரு காரீய உருளை இருக்கும்.
கப்பல் மேல் நின்றுகொண்டு இந்தக் கயிறை கடலுக்குள் விடுவார்கள். அந்தக் கயிறு அப்படியே கீழே போகும்.
ஒரு கட்டத்தில் காரீய உருளை கடல் தரையில் இடிக்கும்போது எத்தனை முடிச்சு உள்ளே போயிருக்கிறது என்பதைக் கணக்கிட்டால் ஆழம் தெரிந்துவிடும்.
இப்போது தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது என்பதால் ரேடார், சோனார் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
நீங்கள் பார்த்த மிக உயரமான கட்டிடம் எது? அது எவ்வளவு உயரமாக இருந்தது? எங்களுக்கு சொல்லுங்கள்.

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக
பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.




Comments