பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா
- நாராயணி சுப்பிரமணியன்

- Oct 15
- 1 min read

பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாக பவளப்பாறை என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது என்ற கேள்வியைக் கேட்கலாம்.
பவளப்பாறைகள்(Corals) பவள உயிரிகளால் உருவாக்கப்படுகின்றன. பவள உயிரிகள்(Coral polyps) கடல் ஜெல்லிகள்,கடல் சாமந்திகள் ஆகியவை எல்லாம் இருக்கும் நிடாரியா தொகுதியைச் சேர்ந்தவை. இவை ஒருவகை கடல் விலங்குகள்.
இந்த பவள உயிரிகளின் உடலில் பெரும்பாலும் நுண் பாசிகள் வசிக்கும்.இந்த நுண் பாசிகள் ஒளிச்சேர்க்கை மூலம் உருவாக்கித்தரும் உணவை பவள உயிரிகள் சாப்பிடுகின.பவள உயிரிகளின் நைட்ரஜன் கழிவு இந்தப் பாசிகளின் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. சில பவள உயிரிகள் இரை பிடித்தும் சாப்பிடுகின்றன.

இந்த பவள உயிரிகள் தனியாக வாழ்வதில்லை, பெரும்பாலும் கூட்டமாகவே வசிக்கின்றன. பவள உயிரிகள் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டு ஒரு வெளிப்புற ஓட்டை உருவாக்குகின்றன. காலப்போக்கில் இந்த வெளி ஓடு முழுமையாக இறுகும். இதுவே பவளப்பாறை என்று அழைக்கப்படுகிறது. பல பவளப்பாறைகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய அமைப்பாக உருவாகும் போது அது பவளத்திட்டு (Coral reef) என்று அழைக்கப்படுகிறது.

பவளப்பாறைகள் உயிருள்ள அமைப்புகளாகும். உள்ளுக்குள் இருக்கும் பவள உயிரி இறந்து போனாலும் பாறையின்மீது அடுத்தடுத்து புதிய பவள உயிரிகள் வளர்ந்துகொண்டே இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef) உலகிலேயே மிகப்பெரியது. இது மூன்று லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.. இதை விண்வெளியிலிருந்துகூட பார்க்க முடியும்.

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.




Comments