வண்ணங்களும் வடிவங்களும்
- நாராயணி சுப்பிரமணியன்

- 1 day ago
- 1 min read

பவளத்திட்டுகளில் வாழும் மீன்களின் உடலில் பல்வேறு விதமான வண்ணங்களும் வடிவங்களும் இருப்பதைப் பார்க்கலாம். இயற்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவை உண்டு. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த வண்ணங்களும் வடிவங்களும் மீன்களுக்குப் பல வழிகளில் உதவுகின்றன.
பவளத்திட்டுகளில் இருக்கும் நிறங்களோடு ஒன்றி மறைந்துகொள்ள சில மீன்களின் உடல் நிறங்கள் உதவுகின்றன. "நான் ஆபத்தானவன், விஷம் கொண்டவன், என்னை சாப்பிடாதீர்கள்" என்று வேட்டையாடிகளை எச்சரிக்கவும் பளீர் வண்ணங்கள் உதவுகின்றன.
பல பவளத்திட்டு மீன்களின் உடலில், வட்டமான கறுப்புப் புள்ளிகளைப் பார்க்க முடியும். இவற்றை ஆங்கிலத்தில் "Eyespot" என்று அழைப்பார்கள். இவற்றுக்கு இரண்டு வகையான பயன்கள் உண்டு.

வேட்டையாடிகளையே பயமுறுத்தும் பெரிய விலங்குகளின் கண்களைப் போல இந்த வட்டங்கள் இருப்பதால் வேட்டையாடிகள் பயப்படலாம். இன்னொரு பயன் என்ன தெரியுமா?
இந்த வட்டங்கள் மீன்களின் வால் பகுதியில் இருக்கும். டக்கென்று பார்க்கும் வேட்டையாடி, இரை மீனின் தலை அந்தப் பக்கம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாலுக்கு அருகில் கடிக்க வரும். இதை முன்னாலிருந்து கவனிக்கும் குட்டி மீன், தப்பித்து ஓடிவிடும்!
பல மீன்களின் உடலில் வரிகள் இருக்கும். கூட்டமாக நீந்தும்போதோ அலைகளுக்கு இடையில் போகும்போதோ இந்த வரிகள் அப்படியும் இப்படியும் அசையும். தூரத்திலிருந்து பார்க்கும் வேட்டையாடி மீன், இரை மீனின் உடல் எங்கு தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்று தெரியாமல் குழம்பிவிடும்.
Jack Knifefish என்ற ஒரு மீன் இருக்கிறது.
இது மேற்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் மட்டுமே இருக்கக்கூடிய மீன். இதன் விநோதமான உடல் அமைப்பும் வேட்டையாடிகளைக் குழப்புவதற்கு ஏற்பட்டதுதான்.
பவளத்திட்டுகளில் வாழும் மீன்களின் இந்த அழகான வண்ணங்களும் வடிவங்களுமே அவற்றுக்கு
சில நேரம் ஆபத்தானதாக மாறிவிடுகின்றன.

இந்த அழகான உருவம் காரணமாக இவை மீன்தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. இப்படி வளர்க்கப்படுவதற்காக இவற்றை அதிக அளவில் பிடிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இவற்றைப் பிடித்தால் இந்த மீன்களின் இனம் அழிவின் விளிம்புக்குப் போகலாம்.
தொட்டியிலேயே பிறந்து அங்கேயே வளரும் மீன்கள் என்றால் பரவாயில்லை, அவற்றை நாம் ஆசையாக வளர்க்கலாம்.
இவ்வாறு இயற்கை சூழலில் இருக்கும் மீன்களை அளவுக்கு அதிகமாகப் பிடிக்கக்கூடாது. அரியவகை மீன்கள், exotic pet fish என்பது போன்ற பெயர்களோடு பல காணொளிகளை நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.அவை எங்கிருந்து வந்திருக்கின்றன என்று முழுவதும் தெரிந்துகொண்டபிறகே வளர்க்க ஆரம்பிக்கவேண்டும்.
அழகாக இருக்கிறதே என்று ஆசைப்பட்டு நீங்கள் வாங்கும் ஒரு மீன், அழியும் நிலையில்கூட இருக்கலாம். நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நீங்கள் இதைப் பின்பற்றுவீர்கள்தானே?

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.




Comments