பேசும் கடல்-9
- சகேஷ் சந்தியா

- Jan 15
- 2 min read

"பாட்டி, பாட்டி உனக்கு எங்க மேல ரொம்ப அன்பு, அதான் நாங்க என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் எங்களை எட்டி பார்த்துவிட்டு போறீங்க" அமுதா கடல் பாட்டியிடம் கொஞ்சல் மொழியில் கேட்டாள்
இனியனுக்கும் அமுதாவுக்கும் கடற்கரையும் கடற்கரை மணலும் இன்னொரு தாய்மடி போல் மகிழ்வை தந்தது. மணலில் வீடு கட்டுவார்கள் ஈர மணலில் ஒரு காலை மட்டும் வைத்து பெரிய கோபுரம் கட்டுவார்கள். தங்களுக்கு தெரிந்த வடிவங்களில் பல உருவங்களைச் செய்வார்கள். எத்தனை உருவங்களைச் செய்தாலும் அத்தனையும் சில நிமிடங்களில் அலை வந்து கரைத்துவிடும்.
கடற்கரை மணலில் ஓடும் குட்டி நண்டுகளைப் பிடிப்பது, அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு. மணலைத் தோண்டி குழி பறித்து நண்டுகளைப் பிடிப்பார்கள். பிடித்த நண்டுகளையும் அலை வந்து இழுத்துச் சென்று விடும். முன்பெல்லாம் அலை மீது கோபப்படும் அமுதா இப்போது கடல்பாட்டியின் மீது அன்பை அதிகப்படுத்தி விட்டாள். காரணம் கலந்துரையாடல். அன்பின் ஆணிவேரே மனம் திறந்த உரையாடல் தானே.
" பாட்டி பாட்டி...... எவ்வளவுதான் மன அழுத்தம், சோர்வு, கவலை, தனிமை இருந்தாலும் கடற்கரை மணலில் அமர்ந்து கடல் காற்றை சுவாசித்தால் எல்லாம் போய் விடுகிறது. எப்படி? இனியன் கேள்வியை தொடங்கினான்.
" அண்ணா சூப்பர்....கேள்வி நானும் ஒன்னு கேட்கணும் ......பிறகு கேட்கிறேன் ." என்று குறிக்கிட்டாள் அமுதா.
பயிற்சிகளில் மிகச் சிறந்தது கேள்வி கேட்கத் தூண்டுவது, கேள்விகள் மனதில் தோன்றினால் பகுத்தறிவு வளரும். எல்லாரும் எல்லோரையும் நேசிப்பார்கள்." என்று பாட்டி தன் பஞ்ச் டயலாக்கோடு பேசத் தொடங்கினார்.
" பேரப்பிள்ளைகளா! யாரெல்லாம் புதிதாக உற்பத்தி செய்கிறார்களோ அவர்கள் அனைவருமே நேர்மறையாளர்கள். அல்லது நம்பிக்கையாளர்கள். தாய் குழந்தையை பெற்றெடுக்கும் போது உலகிற்கு புது நம்பிக்கை தருகிறார்."
" பாட்டி இன்னைக்கு ரொம்ப சுத்தி வளைக்கிறீங்க புரியும்படி சொல்லுங்க" அமுதா அவசரப்பட்டாள்.
"அமுதா.... கடல் தான் மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. பூமி பந்தின் காற்றுச் சமநிலையை ஏற்படுத்துவது கடல்தான். பூமி முழுவதும் காற்று நிரம்பி இருக்க வேண்டும் என்றால் கடல் இருந்தால் தான் அது சாத்தியம்."
" உலகம் இயங்க நீங்கதானே காரணம் பாட்டி ?" இனியன் சட்டென கேட்டான்.
" ஆமாம் என்றால் தலைக்கனம், இல்லையென்றால் உண்மைக்கு புறம்பாகிவிடும். நீயே சிந்தனை செய்து கொள் இனியன். "
"சரி சரி ........கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே, ஏன் கடற்கரைக்கு வந்தா கவலையெல்லாம் போகுது .....?" தொடர் கேள்விகளை தொடுத்தாள் அமுதா.
" தூய காற்று, தூய நீர் ,தூய மணல் இந்த மூன்றும் இன்னும் கடலோரத்தில் தான் மிஞ்சி இருக்கிறது. நல்ல காற்றை சுவாசித்தாலே மனிதர்கள் நேர்மறையாக சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் .ஓயாது அடிக்கும் காற்றும், நொடிக்கொரு முறை சுழன்று வரும் அலையும் மனித நம்பிக்கையை கூட்டும்.
" அது உண்மைதான் கடலம்மா..... வெளியூருக்கெல்லாம் போனா எங்களால் வாழவே முடியாது. கடல் தான் எங்க நம்பிக்கையைக் கூட்டுகிறது." என்று இனியனின் அப்பா பேசினார். நீண்ட நேரம் குழந்தைகள் கடல் பாட்டியோடு பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் உரையாடலில் இணைந்து கொண்டார்.
" கடலம்மா...... எங்க வாழ்வாதாரம் நீங்க.... மத்தவங்க வந்து கடலை வேடிக்கை பார்க்க நாங்க விடனுமா?" இனியனின் அப்பாவும் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்.
" அவங்க வேடிக்கை மட்டும் பார்க்க வரவில்லை உயிரினங்களின் தோற்றமே கடல்தானே. அதனால் மூதாதையர்கள் தோன்றிய இடத்தைப் பார்த்து புது நம்பிக்கை பெறுகிறார்கள்.
" பாட்டி.... பாட்டி குரங்கிலிருந்துதானே மனிதன் வந்தான் என் டீச்சர் சொல்லித் தந்தாங்க.." அமுதா... "அதுதான் அறிவியல் உண்மை". இது இனியன் .
" குரங்குகள் தோன்றுவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இது நடந்துள்ளது. உயிரினங்களின் தோற்றத்தில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கும். 'நீரின்றி அமையாது உலகு'. உயிரினங்களின் தோற்றம் கடல் தான், ஆகவே மக்கள் தாய்மடி தேடி வருகிறார்கள்"
"Excelent பாட்டி...." அமுதா கூறினாள்.
"Thankyou அமுதா....
உங்க அப்பா தனியா மீன்பிடிக்க போவதில்லை ஏன் என்று கேள்? இப்போது கடல் பாட்டி கேள்வியை தொடர்ந்தாள்.
" அப்பா..... பாட்டிக்கு பதில் சொல்லுங்க"
" நாங்க குடும்பமா தான் தொழில் செய்வோம். அப்பா, அண்ணன் தம்பி, சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளோடுதான் தொழில் செய்வோம். அப்பதான் கடல்ல எதுனாலும் பாதுகாப்பு இருக்கும். சற்று குரலை உயர்த்தியே பேசினார்.
நீங்க முத்துகுளிப்பு செய்வீங்க அதையும் குழந்தைகளுக்கு சொல்லுங்கப்பா...."
முத்துக்குளிப்பா..... அது என்னப்பா..."
முத்து குளிக்க... ஆழ்கடல்ல மூழ்கி செல்ல வேண்டும். அப்போது தன் இடுப்பில் கயிறு கட்டி ஒருவர் கடலுக்குள் குதித்தால், மற்றொருவர் மேலிருந்து கயிறை பிடித்துக் கொள்வார்." அப்பா கூறவும் ...இனியன், அந்த ஒருவர் யார்? மற்றொருவர் யார்? 'மச்சான், மாப்பிள்ளை'
'அப்பா, மகன்'
' அண்ணன், தம்பி' இப்படி ஆழமான உறவுகளை நம்பிதான் முத்து குளிப்பார்கள்.
இதுதான் என் மக்கள். உயிர் தோன்றிய கடலில் உறவோடு தொழில் செய்து கொண்டிருக்கும் கடைசி சமூகம் மீனவ சமூகம், கடலோடிகள் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். கடலம்மா உணர்ச்சி கொந்தளிப்பில் ஓங்கி அலையாக வந்து போனாள்.
" அதான் அப்பாவும், சித்தப்பாவும் சேர்ந்து கடல் தொழிலுக்கு போறாங்களா?" அமுதா.
"சேர்ந்து தொழில் மட்டுமல்ல சேர்ந்தே வாழ்கிறார்கள் அமுதா" என்று இனியன் கூற
கடல் பாட்டி பூரிப்படைந்தாள்.
– கடல் பேசும்




Super story
👏🏻✨