top of page

யூனிசெப் பிரகடனம் - சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் - 9

ree

ஒரு குடும்பம். சிறியது; ஆனால் அழகானது. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளம் இணையரின் குடும்பம் அது. இருவருமே படித்தவர்கள். இருவரும் நவீனமான பெரிய தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளில் பணி செய்பவர்கள். கை  நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள்;ஆனால், அதற்குப் பல மடங்கு அதிகமாக ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி  நேரத்திற்கும் மேலாகப் பணிகளில் கடும் உழைப்பைச் செலுத்தியாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள். எப்போதும் மனமும்,உடலும் அழுத்தம் தாங்காமல் துவண்டு போகும் நிலையில் இருப்பவர்கள். 


பணப் பற்றாக்குறை இல்லைதான்; ஆனால், தாங்கமுடியாத வேலைப்பளு, உடல்-மன அழுத்தங்களின் விளைவாக இருவருக்குமிடையே அவ்வப்போது சிறு சிறு பூசல்கள் வரும் தமிழ் இலக்கிய மொழியில் சொன்னால், 'ஊடல்'கள் வரும்! திருமணமாகி இரண்டாவது ஆண்டில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. மிக அழகான பெண் குழந்தை. குறுகுறு நடந்து, சிறு கைகள் நீட்டி மழலை மொழியில் பேசிக் களிப்பூட்டும் சிறுமியாக அக்குழந்தை வளரத் தொடங்கியது. பெண் குழந்தை என்பதால் கணவனுக்குச் சற்றே ஏமாற்றம்;வருத்தம்;ஏக்கம். அந்த உணர்வுகள் அவரின் தாயாரின் தூபம் போடுதலால் கொஞ்சம் கொஞ்ச மாகப் பெருகி வளர்ந்தன. 


அலுவலகம் விட்டு வரும் போதே அலுப்பும் சலிப்புமாக வரும் கணவன்; வீட்டிலோ குழந்தையைப் பார்த்துக்கொண்டு சமையலில் கவனம் செலுத்தியவாறு பரபரவென்று இயங்கும் மனைவி. "இவ்வளவு நேரமாகுது, ஒரு காப்பி குடுக்கக்கூட உன்னால முடியலையா?" என்பான் கணவன். முதலில் கொஞ்ச நாள்கள் வரை ஒரு பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே, " இதோ கொண்டு வர்றேங்க" என்று காப்பியுடன் போய்க் கொண்டிருந்த மனைவிக்கு, ஓரிரு சந்தர்ப்பங்களில் இயலாமை காரணமாகக் கோபம் வந்தது. முதலில் இலேசான முணுமுணுப்புடன் நின்று போன அந்தக் கோபம், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகியது. 


போதாக்குறைக்கு மனைவியின் நிறுவனத்தில் வேலை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. பெண்களை இரவு ஷிப்டுகளிலும் வேலைக்கு வருமாறு செய்யலாம் என ஒரு நீதிமன்றத்தீர்ப்பு வந்தாலும் வந்தது, அந்தப்பெண்ணின் நிறுவனம் அவளது வேலை நேரத்தை மாலை நான்கு  மணியிலிருந்து இரவு மூன்று மணி வரை என மாற்றியது. வீட்டில் பூகம்பம். பெண்ணுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. குழந்தை அம்மாவுக்காகத் தவித்தது. கணவன் வேலை முடிந்து வரவே இரவு ஏழு மணி கூட ஆகி விடும்; ஆனால், மனைவி நான்கு மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தார் கள். கணவனின் மனதில் ஆயிரத்தெட்டுச் சந்தேகங்கள். 


இதற்கு மேல் விவரிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் சண்டைகள். முடிவுறாத வாக்குவாதங்கள். மனைவிக்குத் தெரியாமலேயே கணவன் வெளி நாட்டு வேலைக்கு விண்ணப்பித்து திடுதிப்பென்று கிளம்பிப் போவதற்கும் தயாராகி விட்டான். மனைவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எவ்வளவோ பேசியும் கணவனின் முடிவில் மாற்றமில்லை. அதை விட மோசம், குழந்தையைத் தானே அழைத்துக் கொண்டு போகப்போவதாகச் சொன்னான் அவன். இரகசியமாகத் திட்டம் தீட்டி அவனும்,அவனின் குடும்பத்தினரும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.குழந்தை யைக் குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தன் அம்மா, அப்பா இருவரையும் கூடவே வெளிநாட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டான் கணவன். 


குழந்தை,கணவன் இருவரையும் பிரிந்த பெண், முதலில் நிலைகுலைந்து போய் அலுவலகத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தாள். தன்னை ஒரு வழியாக உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் சொன்னார் : "பெற்றோரில் ஒருவரது சம்மதம் இல்லாமல், அவருக்குத் தகவல் கூட த் தெரிவிக்காமல் ஒரு குழந்தையைக் கணவனோ அல்லது மனைவியோ எவர் ஒருவரும் நாட்டை விட்டு வெளியே கொண்டு போகக்கூடாது, சட்டப்படி அது தவறு. நீங்கள் உங்கள் கணவன் மீதும், மாமனார்-மாமியார் மீதும் வழக்குத் தொடரலாம். யூனிசெப் பிரகடனத்தின்படி, ஒரு குழந்தையை, அந்தக் குடும்பத் திற்குத் தொடர்பேயில்லாத வெளி நபர் ஒருவரோ அல்லது கணவன்- மனைவி இருவரில் எவர் ஒருவரோ மற்றவரின் அனுமதியில்லாமல்,அவருக்குத் தகவல் சொல்லாமல் வெளிநாட்டிற்கு அழைத்துப் போவது முடியாது. அது சட்டப்படி குற்றம்!" என்று விரிவாக விளக்கினார் வழக்கறிஞர். 


இப்போது மனைவியின் நிலைமை பரிதாபமாக இருந்தது.'கணவன் மீதும், மாமனார் மாமியார் மீதும் வழக்குத் தொடுக்கலாமா? உலகம் என்ன சொல்லும்?ஏற்கெனவே நம் மீது கணவனுக்கு நம்பிக்கையில்லை. இப்போது என்ன செய்வது?' என்று குழம்புகிறாள் மனைவி. 


இது கதையல்ல; நிஜம். நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தின் பல குடும்பங்களில் இம்மாதிரிப் பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன. யுனிசெப் நிறுவனம் இது பற்றிய விதி எண் -11 இல் மேற்கண்ட விளக்கத்துடன் இன்னொரு விஷயத்தை யும் சேர்த்தே சொல்கிறது. அதன்படி, "குழந்தைகளை உரியவர்கள் அனுமதியின்றி அல்லது அவர்களுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஒரு நாட்டை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு போக யாருக்கும் உரிமையில்லை. அவ்வாறு யாரேனும் செய்தால் அது சட்டத்திற்கு எதிரானது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி எந்தக் குழந்தையையும் வெளியே கடத்திக் கொண்டு போக முடியாதபடி கவனித்து தடை  செய்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்."

கமலாலயன்
கமலாலயன்

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று

பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page