பேசும் கடல் - 8
- சகேஷ் சந்தியா

- 7 hours ago
- 2 min read

குழந்தைகளுக்கு இயல்பாகவே கேள்வி கேட்கும் இயல்பு உண்டு. அமுதாவும் இனியனும் இதில் விதிவிலக்கு இல்லை.
கேள்விகள் கேட்பதால் அவர்களுக்கு பலத்தெளிவுகள் கிடைக்கிறது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. பல நேரங்களில் குழந்தைகளின் கேள்வியை அலட்சியப்படுத்தி விடுகிறோம். கேள்வி கேட்கும் போது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி மேம்படுகிறது. சரியான, வியப்பான பதில் கிடைக்கும்போது நம்பிக்கை கூடுகிறது.
கடல் பாட்டியை இனியனும் அமுதாவும் அதிகம் தேடத் தொடங்கிவிட்டார்கள். தினமும் கடற்கரைக்கு வருவது, கடல் பாட்டியோடு உரையாடுவது, கேள்வி கேட்பது அவர்களுக்கு பிடித்தமானதும், நெருக்கமானது என்றாகிவிட்டது.
"இனியன் நம்ப அப்பாவுக்கு 'பாடே' இல்லையாம், அம்மா சொன்னாங்க, அப்போ நமக்கு காசு கிடைக்காதுல்ல......" அமுதா இனியனிடம் கேட்டாள்.
" ஆமாம் அமுதா..... இந்த மாதம் முழுவதும் 'பாடே' இல்ல. கடல்ல மீன்கள் எல்லாம் வெலங்க போயிடும். குளிர், மழை, காற்று இருப்பதால் நம்ம அப்பாவால வெலங்க போக முடியாது அதான் 'பாடு' இல்ல. இனியன் நீண்ட விளக்கம் கொடுத்தான் .
என்ன பேரப்பிள்ளைகளா? இப்பெல்லாம் நீங்க இரண்டு பேருமே கேள்வி பதில முடித்துக் கொள்கிறீர்களா? பெரும் இரைச்சலுடன் அலையடித்து ஓய்ந்தது.
" பாட்டி...... பாட்டி உங்க மேல எங்களுக்கு கோபம்....." அமுதா செல்லமாக கூறினாள். அவள் முகத்தை திருப்பியும் கொண்டாள். காற்றில் முடி பறந்தது.
" ஆஹ.... கோபமா... ஏன் ?"
எங்க அப்பா தொழிலுக்கு வந்த இந்த மாசம் 'பாடே' இல்ல தெரியுமா? டிசம்பர் மாதம் தான் அரையாண்டு விடுமுறை. கிறிஸ்மஸ் புத்தாண்டு புது டிரஸ் எல்லாம் எடுக்கிற மாசம், பாடே இல்ல..... நீங்க எங்களுக்கு நிறைய பாடு தரலாம் தானே". படபடவென வெடித்தாள் அமுதா.
" ஆமாம் பாட்டி...... தினம் தினம் உழைக்கிற அப்பாவுக்கு பாடு இல்லன்னா கஷ்டம் தானே? நிதானமாக கேட்டான் இனியன்.
" அது சரி..... ரெண்டு பேரும் அதான் கோபமா இருக்கீங்களா? நாம கொஞ்சம் பேசுவோமா?
" சரி சரி ....."கோரஸாக கூறினார்கள்.
" நாமெல்லாம் யாரு? கடல் பாட்டி கேள்வியைத் தொடங்கினாள்.
" மீனவர்கள்" அமுதா பட்டென கூறினாள்.
" very good மீனவர்கள் கடல்ல என்ன செய்வாங்க...."
" மீன்பிடிப்பாங்க, என்ன பாட்டி நீ இப்படி கேக்குற இனியன் உரிமையோடு கேட்டான்.
" இல்ல....."
'அய்யோ பாட்டி..... குழப்புறீங்க' இருவரும் மணல்ல அமர்ந்து கொண்டார்கள்.
"நெய்தல் பூர்வகுடி மீனவர்கள் கடலில் மீன்களை தேடிச் சென்று பிடிப்பதில்லை. மலையும் மலை சார்ந்த வாழ்வும் வாழும் காட்டுவாசிகள் மரங்களை வெட்டுவதில்லை. மரங்களிலிருந்து விழும் குச்சிகளை தான் பொறக்குவார்கள். அது போல மீனவர்கள் என்னிடம் (கடல்) மீன்களை பிடிக்க வேண்டும் என்று வருவதில்லை.
" மீன்பிடிக்க வரமாட்டாங்களா? அமுதா குறுக்கிட்டாள்.
" ஆமாம்..... அவர்கள் வலைகளைப் போடுவார்கள் எது 'படுகிறதோ' அதை மட்டும் தமக்கு எடுத்து வருவார்கள். மீனவர்கள் தங்கள் தொழிலில் இலாப நட்டம் பார்க்க மாட்டார்கள். "பாடு உண்டா" என்று தான் பார்ப்பார்கள்". கடல்பாட்டி உணர்வுபூர்வமாக விளக்கினாள்.
" பாடு..... விரிவாக சொல்லுங்க பாட்டி" அமுதா
"எவ்வளவு மீன் பிடிச்சீங்கன்னு யாரும் கேட்க மாட்டோம். 'என்ன பாடு' 'என்ன பட்டிருக்கு என்று தானே கேட்போம்."
" ஆமாமா.. ஆமாம்....
" மீனை நாம் பிடித்தால் இயற்கையை நாம் வெல்வது என்று பொருள். மீன் அதுவாக வலைகளில் பட வேண்டும், அதுதான் நமக்குரியது.
இயற்கையை நம்பி வாழ்பவர்கள் எப்போதும் இயற்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். நமக்கு கிடைப்பது இயற்கையின் கொடை என்று நம்புவார்கள். அதனால் தான் கிடைத்ததை 'பாடு' என்கிறார்கள்.
" பாட்டி சூப்பர்......"
" 'படு... படுவது... பாடு' என்று பொருள். என்ன படுக்கிறதோ அதுதான் பாடு. அதற்குமேல் அவர்கள் சலிப்படைவது இல்லை. மறுநாள் மீண்டும் கடலுக்கு செல்வார்கள்.
" உண்மைதான் பாட்டி, சில நேரம் நிறைய மீன்பட்டால் வலுத்த பாடு என்று அப்பா சொல்வார், மீன் படவில்லை என்றால் சுருக்கப்பாடு என்பார்கள்." இனியன் கூறினான்.
" எனக்கு புரிஞ்சத சொல்லட்டுமா?" அமுதா கேட்டாள்.
" பாடு உண்டா? என்றால் படுதல் உண்டா என்று அர்த்தம். மீன் பிடிக்கிறோம் என்றால் நாம் பிடிக்கிறோம் என்று பொருள். மீன் பட்டிருக்கிறது என்றால் இயற்கையே கொடுக்கிறது என்று பொருள்."
இப்போ புரியுதா கடலை நம்பி வாழ்பவர்கள் தங்கள் சொல்லில் கூட எவ்வளவு நன்றி உணர்வோடு வாழ்கிறார்கள். அதான் என் மக்கள். கடல்ல பாடு இல்லனா சேர்ந்து போவார்கள் ஆனால் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்."
என்று பூரிப்புடன் கடல் பாட்டி பேச ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அமுதாவும், இனியனும்.
– கடல் பேசும்




Meaningful
👏👏👏🏻
❤️👏👏