top of page

தத்துவம் அறிவோம் - 10


மனிதன் ஏன் வழிபாடுகளைச் செய்தான்? 


அவனுக்குப் புரியாத, தெரியாத அனைத்தையும் வழிபடுவதின் மூலம் அவற்றைச் சாந்தப்படுத்தலாம். அல்லது பிரதிபலன் பெறலாம் என்று நினைத்தான். 


அதனால் வழிபாடுகள், பூசை, சடங்கு என்று அன்று முதல் இன்றுவரை வேண்டுதல்களைச் செய்து கொண்டிருக்கிறான்.


இப்போது கூட பாருங்கள்! 

பரீட்சையில் பாசாக வேண்டுகிறோம். 

நோய் குணமாக வேண்டுகிறோம். 

ஆசைப்பட்டது கிடைக்க வேண்டுகிறோம். 

இல்லையா? 


பரீட்சையில் பாசாக என்ன செய்யவேண்டும்?

படிக்க வேண்டும்.


நோய் குணமாக மருத்துவரைப் பார்த்து தேவையான மருத்துவச்சிகிச்சை எடுக்க வேண்டும். 

ஆசைப்பட்டது கிடைக்க அதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனாலும் மனிதர்களின் வேண்டுதல்கள் குறையவே இல்லை. கோவில்களும் குறையவில்லை. பூசை, சடங்குகளும் குறையவில்லை. 


ஏன் என்று யோசித்திருக்கிறோமா?


காரணங்கள் தெரிந்தும் ஏன் வேண்ட வேண்டும்?. ஏன் பூசைகளோ, சடங்குகளோ செய்ய வேண்டும்?. 


மனிதனால் தன்னை மீறி நடக்கும் இயற்கையின் செயல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

நமக்குத் தெரியும் இல்லையா? 


நம்முடைய பால்வெளி மண்டலத்தில், கோள்களில், பூமியில் முடிவில்லாமல் பொருள்கள் உயிர்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவை நொடியின் பின்னத்தில் கூட திசைமாறினால் மற்ற பொருள்களுடன், உயிர்களுடன் மோத வேண்டியது தான். 


இதற்கான காரணங்களை இப்போது இயற்பியலும், கணிதவியலும், கண்டுபிடித்து விளக்கிவிட்டன. ஆனால் ஆதியில் மனிதனுக்கு எதுவுமே தெரியவில்லை. 


அப்போது அறிவியலோ, கணிதவியலோ, இயற்பியலோ, உயிரியலோ எதுவும் வளரவில்லை. . அதனால் மாறிக் கொண்டேயிருக்கும் காலநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. இயற்கையின் படைப்புகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் தனித்துவமான இயல்புகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உயிர்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.


ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் இவையெல்லாம் முதன்முதலாக இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஹோமோசேப்பியன்ஸ் காலத்திலிருந்த அறிவின் வளர்ச்சி. 

இப்படியெல்லாம் எந்தக் குழப்பமும் பறவைகளுக்கு இல்லை. விலங்குகளுக்கு இல்லை. பூச்சிகளுக்கு இல்லை. பல்லிகளுக்கு இல்லை. பாம்புகளுக்கு இல்லை. 


அவை பிறந்தன. வளர்ந்தன. இனப்பெருக்கம் செய்தன. இறந்தன. அவ்வளவுதான். 

வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கும்போது செழித்து வளர்ந்தன. அப்படி இல்லாதபோது ஒன்று தன்னை மாற்றிக் கொண்டன அல்லது பூமியிலிருந்தே மறைந்து போய் விட்டன.

அவற்றுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. 


தான் யார் என்று கேட்கவில்லை.


தனக்கும் இந்த இயற்கைக்கும் என்ன உறவு என்று கேட்கவில்லை.

தனக்கும் மற்ற மனிதர்களுக்கும் என்ன உறவு என்று கேட்கவில்லை.

தனக்கும் மற்ற உயிர்களுக்கும் என்ன உறவு என்று கேட்கவில்லை.

தன்னுடைய பிறப்பின் அர்த்தம் என்ன என்று கேட்கவில்லை.

தன்னுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்கவில்லை.

தான் ஏன் ஏழையாக இருக்கிறோம்?

எவ்வளவு உழைத்தாலும் தான் ஏன் வறுமையில் வாடுகிறோம்?

சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளுக்கு என்ன காரணம்? 

தன்னுடைய இறப்புக்குப் பின் என்ன நடக்கும் என்று கேட்கவில்லை. 


இந்தக் கேள்விகளைக் கேட்ட ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே.


இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அல்லது விளக்கங்களை உலக முழுவதுமுள்ள சிந்தனையாளர்கள் ஆராய்ந்து சொன்னார்கள். சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். 

இதையே நாம் தத்துவம் என்று அழைக்கிறோம். 


சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கும் இயற்கைக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவும் முரண்பாடுமே தத்துவம். 

( அறிவோம் தத்துவம் )


உதயசங்கர்
உதயசங்கர்

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.

சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்

பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்

விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Rated 5 out of 5 stars.

தத்துவம் என்பது ஒரு தனிப்பட்ட சிந்தனை அல்ல; அது மனிதனின் வியப்பு, சந்தேகம் மற்றும் துன்பம் ஆகியவற்றின் கூட்டு கலவையின் விளைவாகும். இது மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் மிக மிக ஆழமாக வேரூன்றியுள்ளது

.•உறவுகளில், அது பொறுப்பாகவும் வெளிப்படுகிறது.

•எண்ணங்களில், அது அறிவாகவும் வெளிப்படுகிறது.

•செயல்பாடுகளில், அது கடமையாகவும் வெளிப்படுகிறது.

•தோல்விகளில், அது மீண்டும் அர்த்தம் தேடும் சுதந்திரமாகவும் வெளிப்படுகிறது.

தத்துவம் என்பது மனிதனை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் ஒரு அக வெளிப்பாடு ஆகும். மனிதன் தனது வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்ளும்போதும், தோல்விகளைச் சந்திக்கும்போதும், அவன் இயல்பாகவே தத்துவத்தின் வாசலைத் திறக்கிறான். திறக்கிறான் ...தத்துவ ...வாசலை...

கோவில்பட்டி

கோ.சுரேஷ்குமார்.

Like
bottom of page