வரலாற்றின் இடைவெளிகளை இலக்கியத்தால் நிரப்பமுடியும். – மருதன்
- கமலாலயன்

- Jan 15
- 3 min read
Updated: Jan 15

நேர்காணல் – கமலாலயன்
வரலாறு என்பது என்ன?
வரலாறு என்பது இறந்த காலத்தை ஆராயும் துறை என்பது மிக அடிப்படையான, மிக எளிமையாக ஒரு விளக்கம். ஆனால் இறந்த காலம் என்றொன்று உண்மையில் இருக்கிறதா? அதை நாம் முழுக்கக் கடந்து வந்துவிட்டோமா? வந்துவிட்டோம் என்றால் எதற்காக நாம் இன்னமும் கீழடி, சிந்து சமவெளி, சோழர்கள், முகலாயர்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? புதிய சுதந்தர இந்தியா பிறந்தபோது, புதிய இந்தியாவுக்கு ஒரு தேசியச் சின்னம் தேவைப்பட்டபோது ஜவாஹர்லால் நேருவுக்கு ஏன் அசோகரின் நினைவு வந்தது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அசோகரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்வவதற்கு இன்னமும் ஏதேனும் இருக்கிறதா என்ன?
ஆம் என்றால் அவர் இறந்த காலத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கிடையாதா? நமக்கு அசோகர் தேவை என்றால் இறந்த காலம் நமக்குத் தேவை என்றுதானே பொருள்? இறந்த காலம் என்பது மண்ணோடு மண்ணாகிப்போன பழங்கதை என்றால் உலகெங்கும் ஏன் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்? எகிப்தையும் கிரேக்கத்தையும் மெசபடோமியாவையும் ஏன் வரலாற்றாசிரியர்கள் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்? சாக்ரடீஸ், பிளேட்டோ, புத்தர், கன்ஃபூஷியஸ் ஆகியோர் குறித்து புதிய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பது ஏன்? வள்ளுவரும் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் டால்ஸ்டாயும் பாரதியும் புதுமைப்பித்தனமும் இறந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களிடமிருந்து நாம் இன்றும் புதிது, புதிதாகக் கற்றுக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?
ஒன்றுதான். காலம் ஒருபோதும் இறப்பதில்லை. நினைவுகள் ஒருபோதும் மறைவதில்லை. நாம் வாழும் காலம் என்பது வானத்திலிருந்து திடீரென்று வந்து விழுந்த ஒரு மாயம் அல்ல. அது கடந்த காலத்தின் தொடர்ச்சி. உண்மையில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்ற பிரிவினைகள்கூட ஒரு வசதிக்காக நாமே உருவாக்கியவைதாம். ஆற்று வெள்ளம்போல் காலம் தொடர்ச்சியாக முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது. அந்த ஓட்டம்தான் காலம். இன்றைய உலகைப் புரிந்துகொள்ள நேற்றைய உலகை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நேற்றைய உலகம் என்பது அதற்கு முந்தைய தினத்தின் தொடர்ச்சி. எப்போதோ வாழ்ந்த மனிதர்களை அல்ல, இப்போதும் வாழும் நம்மைதான் வரலாறு ஆராய்கிறது. வரலாறு என்றால் என்ன எனும் கேள்விக்கு நான் அளிக்க விரும்பும் மூன்று சொல் பதில், 'அது நம் கதை' என்பதுதான்.
வரலாற்றுச் செய்திகளைக்குழந்தை இலக்கியங்களில் எப்படிப் பொருத்தமாக இணைப்பது?
வரலாற்றில் கதைகள் மலை மலையாகக் கொட்டிக்கிடக்கின்றன. கனவை விஞ்சும் பல சாகசங்கள் நிஜத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இலக்கியம் ஒரு வகையில் வரலாற்றைச் சார்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். வரலாறு உண்மை சார்ந்தது. இலக்கியம் கற்பனை சார்ந்தது. என்றாலும் இந்த இரண்டும் தொடர்ந்த உரையாடிக்கொண்டிருக்கின்றன. வரலாற்றிலிருந்து இலக்கியம் நிறைய கற்றுக்கொண்டதுபோல் இலக்கியத் தரவுகளிலிருந்தும் வரலாறு நிறையவே பலனடைந்திருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு, தொன்மக்கதைகளை எடுத்துக்கொள்வோம். எல்லாப் பண்டையச் சமூகங்களிலும் இலியட், ஒடிசி, ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எல்லாம் காலம் காலமாக வாய்மொழி இலக்கியங்களாகக் கடத்தப்பட்டவை. இவற்றில் கற்பனை மிகுதி என்றாலும் வரலாற்று ஆசிரியர்கள் இவற்றை ஆழ்ந்த வாசிக்கிறார்கள். விரிவாக ஆராய்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வரலாறும் கற்பனையும் வாய்வழிக் கதைகளும் அழகாக ஒன்று கலந்திருக்கின்றன. தேவதைக் கதைகளையும் நீதிக்கதைகளையும் அற நூல்களையும் சங்க இலக்கியங்களையும் முழுக்கற்பனை என்று சொல்லிவிடமுடியுமா? காலம் கடந்து இன்றும் இக்கதைகள் நம்மோடு உயிர்த்திருப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? இக்கதைகள் எங்கிருந்து தோன்றின, எப்படிப் பரவின? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும்போது இலக்கியமும் வரலாறும் கைகோர்த்துக்கொள்கின்றன.
டால்ஸ்டாயின் பிரமாண்ட படைப்பான போரும் அமைதியும் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல். அதில் கற்பனையும் உண்மையும் பிரிக்கமுடியாத ஒன்று கலந்திருக்கின்றன. வரலாற்றிலிருந்து எதை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்? எது குழந்தைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்? எது பொது வாசகர்களுக்கான கதை? எதைச் சிறுகதையாக மாற்றலாம், எது நாவலுக்கான பொருள் போன்றவற்றை ஓர் இலக்கியவாதிதான் தீர்மானிக்கிறார். ஒரு நல்ல இலக்கியவாதியால் எதையும் நல்ல கதையாக மாற்றமுடியும். கடந்த காலத்திலிருந்து தனது நாடகத்துக்கு ஏற்றதை ஷேக்ஸ்பியரும் தனது நாவலுக்கு ஏற்றதை டால்ஸ்டாயும் சரியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். இன்று ஒருவர் கதையோ நாடகமோ கவிதையோ நாவலோ எழுதும்போது அதேபோல் தனக்கானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும்.
3.வரலாற்றையும் புனைவையும் கலந்து நாம் எழுதுகிறோம் என்றால், பிற்காலத்தில் அவற்றை ஆய்வு செய்பவர்கள் எப்படி அவற்றைப் பிரித்து இனங்காண முடியும்?
நெப்போலியனைக் கற்றவர்கள், ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான போரின் பின்னணியைத் தெரிந்துகொண்டவர்கள் டால்ஸ்டாயை வாசிக்கும்போது அவர் எங்கெல்லாம் கற்பனை செய்திருக்கிறார், எங்கெல்லாம் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஓர் இலக்கியப் படைப்பை வாசிக்கும்போது அதிலுள்ளவை அனைத்தும் உண்மை என்று நாம் எடுத்துக்கொள்வதில்லை.
சாக்ரடீஸ் எப்படி இருப்பார்? அசோகர் எப்படிப் பேசுவார்? புத்தர் இருபத்து நான்கு மணி நேரமும் புன்முறுவல் பூத்த முகத்தோடுதான் காட்சியளிப்பாரா? ஒரு வரலாற்று ஆசிரியரிடம் சென்று கேட்டால், என்னிடம் தரவுகள் இல்லை. எனவே தெரியாது என்றுதான் சொல்வார். அவர் சொல்வதுதான் உண்மை. ஆனால் அதற்காக நாம் புத்தரை, அசோகரை, சாக்ரடீஸை, இன்னபிறரைக் கற்பனை செய்யாமல் இருக்கமுடியுமா? வரலாறு வந்து சொல்லட்டும் என்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு காத்திருக்கமுடியுமா? முடியாது. வரலாறு விட்டுச் செல்லும் இத்தகைய இடைவெளிகளை இலக்கியம் கற்பனையைக் கொண்டு அழகாக இட்டு நிரப்புகிறது.
எழுதியவர் யார், அது எத்தகைய நூல் என்பதைக் கொண்டு எது வரலாறு, எது கற்பனை என்பதைப் பிரித்தறிய முடியும். எனக்குத் தரவுகளோடு கூடிய ஆய்வுகள் மட்டுமே தேவை என்போர் வரலாற்றை நாடலாம். கடந்த காலத்தைக் கண்மூடி கற்பனை செய்து பார்க்க விரும்புகிறவர்கள் இலக்கியத்தை நாடலாம். நான் படித்த கதையில் எது உண்மை, எது கற்பனை என்று மயக்கம் கொள்வோர் மீண்டும் வரலாற்றை நாடி உண்மையைத் தெரிந்துகொள்ளலாம்.
4.தமிழில் சிறார் இலக்கியங்களில் எந்த அளவுக்கு வரலாறு இடம் பெற்றிருக்கிறது? இன்றைய தமிழ் சிறார் இலக்கியங்களின் நிலை
நான் பார்த்தவரை மிக மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளது. கதை எழுதுபவர்கள் கதையல்லாத துறைகளைச் சேர்ந்த நூல்களை நிறைய வாசிக்கும்போது அவற்றிலிருந்து பெற்றதைக் கதைகளில் செலுத்தமுடியும் என்று நம்புகிறேன். படக்கதை, சிறுகதை, நாவல் என்று பல வடிவங்களில் வரலாற்றைக் கற்பனை கலந்து அழகாகக் கொண்டு செல்லமுடியும். அதற்கான சாத்தியங்கள் கடலளவு விரிந்து கிடக்கிறது.
மருதன் - தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். இதழியலாளர்,கல்கி, கோகுலம் ஆனந்தவிகடன், சுட்டி விகடன், அவளவிகடன், ஜூனியர் விகடன் குங்குமம், இந்து தமிழ்திசை போன்ற பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியிருக்கிறார். தற்சமயம் கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். மாயாபஜாரில் இவர் எழுதிய இளம் வாசகர்களுக்கான இடம்,பொருள், மனிதர், விலங்கு, மாய உலகம், தேன் மிட்டாய் போன்ற தொடர்களின் மூலம் குழந்தைகளைக் கவர்ந்தவர். பிற முக்கியமான படைப்புகள் அசோகர், ரோமிலா தாப்பர், இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை.

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று
பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.




அருமை.