top of page

பெற்றோர்களும் சிறார் இலக்கிய அமைப்புகளில் செயல்படவேண்டும்!

சந்திப்பு : விழியன்
சந்திப்பு : விழியன்

விஷ்ணுபுரம் சரவணன் - தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கவிதை, சிறார் இலக்கியம், கட்டுரை உள்ளிட்ட வடிவங்களில் 18 நூல்களை எழுதியுள்ளார். 2025- ஆம் ஆண்டு ஒற்றைச்சிறகு ஓவியா நூலுக்காக ஒன்றிய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருதும் பெற்றுள்ளார். ஆனந்தவிகடன், த மு எ க ச, வாசகசாலை, எஸ்.ஆர்.வி.கல்விக்குழுமம் ஆகியவை வழங்கும் விருதுகளைப் பெற்றவர்.


கல்வி நிலையங்களுக்குள் எப்படி சிறார் இலக்கியத்தையும் வாசிப்பையும் அதிகப்படுத்த இயலும். தமிழ்நாட்டின் அரசின் முன்னெடுப்புகள் போதுமானதாக உள்ளதா? வேறு யாருடைய பங்களிப்பெல்லாம் தேவைப்படுகின்றது?


இலக்கியத்தின் வாசத்தை கல்வி நிலையங்களில் தொடங்கி வைத்தால், மாணவர்கள் எளிதாக வாசிப்புக்குள் நுழைந்துவிடுவார்கள். தற்போதைய தமிழ்நாடு அரசு தேன்சிட்டு, புது ஊஞ்சல் எனும் இரண்டு மாதமிரு முறை இதழ்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் வகுப்பு ஓர் இதழ் என்ற அளவில் இவை செல்கின்றன. கதைகளையும் பாடல்களையும் வரலாற்றுச் செய்திகளையும் அறிவியல் செய்திகளையும் தேடிச் செல்லாமல் வகுப்பறைக்குள்ளேயே வரச் செய்யும் பணியை அரசு செய்கிறது. அநேகமாக மாணவர்களுக்கான இதழ்களை அரசே நடத்துவது தமிழ்நாட்டில்தான் என்று நினைக்கிறேன். கூடவே ஆசிரியர் வாசிப்புக்கும் கனவு ஆசிரியர் இதழும் மாதமொருமுறை வெளியாகிறது. இவை தவிர, இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் வழியாக வயது வாரியான நூல்களை அற்புதமான ஓவியங்களோடு உருவாக்குகிறது அரசு. இவையும் பள்ளி நூலகங்களுக்குச் செல்கின்றன. மேலும், வாசிப்பு இயக்கம் வழியாகவும் கதைகள் மாணவர்களுக்குச் செல்கின்றன. இந்தப் பலன் முழுமையாக குழந்தைகளுக்குச் சேர வேண்டும் எனில், பெற்றோர், கலை இலக்கிய அமைப்புகளில் இவற்றில் தன்னை ஈடுபத்திக்கொள்ள வேண்டும். 


ree

பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பாராட்டுவிழாக்களில் பங்குகொண்டீர்கள், அவற்றில் நெகிழ்வான நிறைவான அனுபவங்களைப் பகிருங்கள்.


நான் பிறந்த ஊரான விஷ்ணுபுரத்தில் நடந்த பாராட்டு விழா முற்றிலும் மாறுபட்டது. எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர் ரகுபதி சார் வந்து வாழ்த்தியதை மறக்க முடியாது. நாகப்பட்டினத்தில் பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வனின் முக்கூடல் நிகழ்வில் மூன்று மணிநேரம் என் படைப்புகளைப் பேசினர். பேச்சாளர்களில் ஆறு வயது முதல் அறுபத்தி ஐந்து வயதுள்ளவர்கள் வரை அடக்கம். வித்தியாசமான அனுபவம். இப்படி அனைத்து பற்றியும் சொல்ல உண்டு. மதுரையில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமுஎகசவும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில், ஒற்றைச் சிறகு ஓவியா நாவலில் வரும் ஓவியாவைப் போலவே ஐந்தாறு சிறார் வேடமிட்டு என்னை வரவேற்றனர். நான் எழுதிய ஒரு கதாபாத்திரம் நிஜமாகவே கண்முன் உயிரோடு வந்ததைப் போல ஒருநொடி நம்பினேன். அந்தக் கணம் மறக்க முடியாதது. 


சிறார் இலக்கியம் குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் எழுத்தாளர்களிடையே நிலவுகின்றதா?


வாசகர்கள் குறிப்பிடும் விமர்சனங்களையும் எழுத்தாளர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்.கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட வடிவங்களில் அதன் நுட்பங்கள் குறித்தும் போக்குகள் குறித்து தீவிர விவாதங்கள் நிகழும். பல்வேறு விவாதங்களில் நானும் கலந்துகொண்டிருக்கிறேன். அவ்விவாதங்களே என்னை இன்னும் செழுமையாக எழுத வைத்தவை. ஆனால், கெடுவாய்ப்பாக, சிறார் இலக்கியத்தில் விவாதங்களே நடைபெறுவது இல்லை. இந்தப் போக்கு, சிறார் இலக்கியத்தில் தட்டையான படைப்புகள் அதிகரிக்கவே செய்யும்.


சிறார் புத்தகங்களில் இருக்கும் போதாமைகளாக நாம் நிறைய விவாதித்துள்ளோம். கடந்த  பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பேசியவைகளில் இருந்து இப்போது வெகுதூரம் வந்துள்ளோம். இன்றும் என்னென்ன போதாமைகள் இருப்பதாக நினைக்கின்றீர்கள்?

அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா?


சிறார் இலக்கியப் போதாமை என்பது அவற்றின் பாடுபொருளைப் பற்றியதாக அதிகம் உரையாடப் பட்டிருக்கிறது. அந்தப் போதாமைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி விட்டன. குறிப்பாக, டெம்ப்ளேட்டான கதை பாடுபொருள்களில் இருந்து விலகி, சமகாலத்தை, வரலாற்றை, சிக்கல்களை எழுதுவது என்பதாக முன்னேறி உள்ளோம். இன்னும் பல அடிகள் செல்ல வேண்டும் எனினும், இது நல்ல முன்னேற்றமே. அடுத்த போதாமை என்பது, சிறார் படைப்புகளில் வடிவம் குறித்தும் அதன் இலக்கிய அம்சம் குறித்தும் பேச வேண்டும். இரண்டும் மிகத் தட்டையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது (விதிவிலக்குகள் உண்டு) அவை குறித்து உரையாடல் அதிகரிக்கும் போது அந்தப் போதாமைகளில் இருந்து வெளியேற முடியும்.


சிறார்களுக்கு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிரிகரித்துள்ளது மகிழ்ச்சியானது. நாம் நீண்ட  வருடங்களாக இதுகுறித்து பேசிக்கொண்டு வருகின்றோம். சிறார்களுக்காக  எழுத  வருபவர்களிடம் கூடுதலாக எங்கெல்லாம் உழைப்பு போடவேண்டியுள்ளது?

எங்கெல்லாம் இன்னும் கவனம் செலுத்தவேண்டும்.

எழுதுகின்றேன் என வருபவர்களுக்கு கைக்கொடுக்கும் சூழல் இப்போது நிலவுகின்றதா?


சிறார் இலக்கியத்தின் மீது மெய்யான அக்கறை கொண்டு இப்பக்கம் வருகிறார்கள் மகிழ்ச்சி. அவர்கள் தொடர் வாசிப்பில் தம்மை ஈடுபத்திக்கொள்ள வேண்டும். கதைகள் மட்டுமல்லாது, வரலாறு, அரசியல், தத்துவம் சார்ந்த வாசிப்பிலும் ஈடுபத்திக்கொள்ள வேண்டும். சகத் துறைகளான கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு நூல்களையும் வாசிக்க வேண்டும். சிறார் இலக்கியத்தின் செவ்வியல் நூல்களைத் தேடி வாசித்தல் நல்லது. இப்பழக்கம் இரண்டு பலன்களைத் தரும். ஒன்று, நாம் எழுதும் சிறார் படைப்புகளில் இலக்கிய அம்சம் குன்றாமல் பார்த்துக்கொள்ளும். அடுத்து, தேய்ந்து போன பாடுபொருள்கள், வடிவங்களில் இருந்து விடுபட்டு புதுமையானவற்றில் ஈடுபட வைக்கும்.  இன்னும் சிலர் சிறார் இலக்கிய வகைமைக்கு அளிக்கப்படும் விருதுகளின் வெளிச்சத்திற்காக வருகிறார்கள். அவர்களைப் பற்றி நாம் அதிகம் கவலைக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் தேவை முடிந்ததும் அவர்களே விலகி விடுவார்கள்.


1950ல் குழந்தைகள் எழுத்தாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இன்று 2025 நடைபெறுகின்றது. இந்த 75 ஆண்டுகளை மூன்று 25 ஆண்டுகளாக பிரித்துக்கொள்ளலாம். இந்த மூன்று 25 ஆண்டுகளில் எழுத்தாளர்கள் - குழந்தைகள் மனநிலை எவ்வாறு இருந்துள்ளது? ஒட்டுமொத்தமாக இந்த மூன்று காலகட்ட எழுத்துக்களை வாசித்தவர் என்ற முறையில் உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்.


ஒரு கேள்விக்கான பதிலில் முழுமையாக இதைச் சொல்லிவிட முடியாது. பெரிய ஆய்வுக்கு உட்படுத்தி எழுத வேண்டிய கேள்வி இது. மேலோட்டமாக சில செய்திகளைப் பகிர்கிறேன்.

 1950 - 75  ஆண்டுக்காலம் என்பது சுதந்திர இந்தியா அனைத்துத் துறைகளில் பாய்ச்சலோடு முன்னேறிய காலக்கட்டம். கல்வி பரவத் தொடங்கிய காலம் என்பதால் அதற்கு உரிய தன்மையோடு படைப்புகள் வந்தன. அதாவது சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தும், சுதந்திர  உணர்வு குறித்துமான கதைகள், பாடல்கள் வெளியாகின. மேலும் இக்காலக்கட்டத்தில் அழ வள்ளிப்பா, ரேவதி, தூரன் உள்ளிட்டவர்கள் மிக செயலூக்கத்துடன் இயங்கிய காலம். படைப்பாளிகளை இணைப்பதும், புதிய வடிவங்களில் முயன்று பார்ப்பதும் என இருந்தது. இதன் இறுதியில் தமிழ்வாணன் போன்றோர் துப்பாக்கிக் கதைகள் எழுதினர். இம்மாதிரியான கதைகள் வேண்டுமா எனும் விவாதம் நிகழ்ந்தது. 


1976-2000 என்பது கல்வி குறித்த கவனம் பெற்றோர்களிடம் அதிகரித்த காலக்கட்டம். ஆங்கில வழிக் கல்விகள் மிகுந்த காலமும் இது. மறுபக்கம், பெரியோர் இலக்கியத்தில் இடைநிலை சாதியினரும் நடுநிலை பொருளாதாரத்தைக் கொண்டோரும் அதிகளவில் எழுத வந்த காலம். எனவே, பாடுபொருள்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. ஆனால், கெடுவாய்ப்பாக சிறார் இலக்கியத்தில் இது நிகழவில்லை. தொலைக்காட்சியின் வருகை வாசிப்பில் குறுக்கீட்டை நிகழ்த்தியது. 89-ல் அழ வள்ளியப்பா மறைவுக்குப் பிறகு தேய்பிறை காலமாகி விட்டது. 

2001 -2025 நவீனத் தொழில்நுட்பங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் வருகை காலம். சிறார் இலக்கியம் மீண்டும் எழுச்சிக்கான காலமும் கூட. 2000களில் இறுதியில் இரா.நடராசன் எழுதிய ஆயிஷா நூல் வெளியானது. ஆசிரியர்களுக்கான நூல் எனினும் சிறாரைப் பற்றியும் கல்வி முறை பற்றியும் உரையாடலைத் தொடங்கி வைத்தது. வேலு சரவணன் போன்றோர் சிறார் நாடக வெளிக்கு உயிர் தந்தனர். இந்த நல்மாற்றங்கள், சிறார் இலக்கியத்தில் புதிய விளைச்சலைத் தந்தன. 2010க்குப் பிறகு பலரின் வருகையும் பாரதி புத்தகாலயம், வானம், என்.சி.பி.ஹெச் போன்ற பதிப்பகங்களின் முன்னெடுப்புகளும் சிறார் இலக்கியத்தின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன. இந்த வேகத்தை ஒருமுகப்படுத்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்  உருவாகியுள்ளது. இவையெல்லாம் நல் அறிகுறிகளே.


விழியன்
விழியன்

சென்னையில் வசிக்கும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை வெளியிட்டிருக்கிறார். சிறார் இலக்கியத்தில் கதைகள், நாவல், கட்டுரை, கணிதக்கட்டுரைகளையும் எழுதி வருகிறார். கல்வி சார்ந்தும் குழந்தைகளின் வாசிப்பு சார்ந்தும் செயல்பட்டு வருகிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page