top of page

தொடங்கிவிட்டது மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வசந்த காலம் ! - கே.பாலமுருகன்

நேர்காணல் : உதயசங்கர்

எழுத்தாளர் கே.பாலமுருகன், 2000க்குப் பிறகு எழுத வந்தவர்களுள் மலேசியாவின் முக்கியமான நவீன படைப்பாளி. 2011 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 14 ஆண்டுகளாக சிறார் இலக்கியமும் படைத்து வருகிறார். இதுவரை ஆறு சிறுவர் நாவல்கள், மூன்று சிறுவர் சிறுகதை நூல்கள், மூன்று சிறுவர் சிறுகதைக்கான வழிகாட்டிக் கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார். மலேசியாவில் நவீன சிறார் இலக்கிய விழாவைத் தொடக்கி வைத்து ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருவதோடு சிறார்களின் எழுத்தாற்றலை வளர்க்கும் பொருட்டு மலேசியத் தமிழ் விடிவெள்ளிக் கற்பனையாற்றல் கழகத்தைத் தொடங்கி வழிநடத்தியும் வருகிறார். இவருடைய சிறுவர் நாவலுக்காக 'தனி நாயகர் தமிழ் நாயகர்' என்கிற விருதை 2018ஆம் ஆண்டு பெற்றார். மலேசியாவைப் பொருத்தவரையில் சிறார் நவீன இலக்கியத்தின் முன்னோடியாக இவரைக் கருதலாம்.
எழுத்தாளர் கே.பாலமுருகன், 2000க்குப் பிறகு எழுத வந்தவர்களுள் மலேசியாவின் முக்கியமான நவீன படைப்பாளி. 2011 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 14 ஆண்டுகளாக சிறார் இலக்கியமும் படைத்து வருகிறார். இதுவரை ஆறு சிறுவர் நாவல்கள், மூன்று சிறுவர் சிறுகதை நூல்கள், மூன்று சிறுவர் சிறுகதைக்கான வழிகாட்டிக் கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார். மலேசியாவில் நவீன சிறார் இலக்கிய விழாவைத் தொடக்கி வைத்து ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருவதோடு சிறார்களின் எழுத்தாற்றலை வளர்க்கும் பொருட்டு மலேசியத் தமிழ் விடிவெள்ளிக் கற்பனையாற்றல் கழகத்தைத் தொடங்கி வழிநடத்தியும் வருகிறார். இவருடைய சிறுவர் நாவலுக்காக 'தனி நாயகர் தமிழ் நாயகர்' என்கிற விருதை 2018ஆம் ஆண்டு பெற்றார். மலேசியாவைப் பொருத்தவரையில் சிறார் நவீன இலக்கியத்தின் முன்னோடியாக இவரைக் கருதலாம்.

1. மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?


மலேசிய சிறார் இலக்கிய வரலாற்றை நான் எப்பொழுதும் இரண்டு பிரிவுகளாகத் தொகுத்துக்கொள்வதுண்டு. மலாயாவிற்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து குடியேறிய காலக்கட்டம் தொடங்கி 2000ஆம் ஆண்டுவரை சிறார் இலக்கியத்தின் முந்தைய காலக்கட்டமாகவும் 2000ஆம் ஆண்டிற்குப்

பின்னர் உருவான மலேசிய நவீன சிறார் இலக்கியக் காலக்கட்டம் தொடங்கி இன்று வரை வளர்ந்துள்ள சிறார் இலக்கியத்தின் பிந்தைய காலக்கட்டமாகவும் பார்க்கிறேன். இவ்விருகாலக்கட்டங்களுக்குள் வைத்துதான் மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பேச வேண்டியுள்ளது.


முந்தைய காலக்கட்டங்களில் சிறார் இலக்கியம் என்பது

தோட்டத்தில் ஆயக்கொட்டைகையில் இரப்பர் மரத் தொழிலாளிகளின் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் ஆயம்மாவின் தாலாட்டில் சிறார் இலக்கியத்திற்கான தொடக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

அந்தக் குழந்தைகளின் அழுகையை ஆற்றுப்படுத்துவதற்காகப் பாடப்பட்ட அப்பாடல்கள் பற்றி முத்தம்மாள் பழனிசாமி அவர்களின் மலேசிய நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார். எனக்கு அதுவே சிறார் இலக்கியத்தின் தொடக்கம் எனத் தோன்றியது. பின்னர்,

அது வளர்ந்து ‘நிலா நிலா ஓடி வா...’ போன்ற பாடல்கள் வழி உருப்பெற்றிருக்கக்கூடும்.


ஆக, மலேசியாவில் உருவான சிறார் இலக்கியத்தில் தொடக்கம் தாலாட்டுப் பாடல்களாக இருந்து பின்னர் கல்வி உருப்பெற்ற காலத்தில் அவை இயற்கையைக் கண்டு இரசிக்கும் துள்ளல்மனங்கொண்ட சிறுவர் பாடல்களுக்குள் பரிணாமம் அடைந்துள்ளன. பின்னர், தோட்டப்புறங்களில்

பாட்டி சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள் என்கிற வகைமை உருவாகத் தொடங்கின.


நானே என் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் தான். அவை பெரும்பாலும் தோட்டப்புறத்தில் நிலவிய மர்மங்களையும் பேய்களைப் பற்றியதாகவும் இருக்கும். பாட்டி தம் முழுக் கற்பனையையும் பயன்படுத்தி வாய்க்கு வந்த சம்பவங்களையெல்லாம் கோர்த்து எங்களைப்

பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அக்கதைகளைச் சுவைப்பட சொல்வார். அதை முகப்பாவனையால் நடித்துக் காட்டுவார்.


பின்னர், நீதிக்கதைகள் உருவான காலக்கட்டத்தில் சிறார் இலக்கியத்தின் மையம் சிறார் வாழ்வியலை நெறிப்படுத்தும் நோக்கத்திற்குள் மறுவடிவம் எடுத்திருந்தன. பெரும்பாலும், சிறார்களுக்காக எழுதப்பட்ட பாடல்கள், கதைகள் அவர்கள் எதைச் செய்யக்கூடாது எதைச் செய்ய வேண்டும் என்கிற இரு பாகுபாட்டின் நடுவில் வைத்தே புனையப்பட்டிருக்கலாம்.

பள்ளிக்கூடங்களில் ஈசாப் நீதிக்கதைகளும் தெனாலி இராமன் கதைகளும் திருக்குறள் கதைகளும் நிறைந்திருந்தன.


ree

மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றில் பாப்பா பாவலர் திரு.முரசுநெடுமாறன் உருவான காலக்கட்டம் மிக முக்கியமானது.. சிறுவர்களுக்காக பலநூறு பாடல்களை இயற்றிய

முன்னோடியாகவும் கருதப்படுகிறார். 1970களில் சிறார்களுக்காகக் கல்வி அமைச்சின் கீழ் செயல்பட்ட தொழில்நுட்பப் பிரிவினர் அனைத்து மொழிகளிலும் சிறார்களுக்கான நிகழ்ச்சித்தொகுப்பை உருவாக்கி அதனை ‘கல்வி வானொலி’ என அறிமுகப்படுத்தியது. அதனை வாரந்தோறும் வானொலியில் ஒலிப்பரப்பினார்கள். முன்னால் துணையமைச்சர் டத்தோ பத்மநாபன் அவர்களின் சகோதரர் திரு.ஸ்ரீதரன் அவர்கள்தான் அதற்குத் தலைமையேற்றிருந்தார்.


அந்த வானொலி நிகழ்ச்சியில்தான் பாப்பா பாவலர் முரசு நெடுமாறன் அவர்கள் சிறார்களுக்காக நிறைய பாடல்களை எழுதத் தொடங்கினார். அவை மலேசியா முழுவதும் தாக்கத்தை உருவாக்கியிருந்தன. இப்படியாக சிறார் இலக்கியம் பலரின் முயற்சியால் சிறார்கள் மத்தியில் வளர்ச்சிக் கண்டாலும் தனியொரு இலக்கியப் பிரிவாக ஆழமாக வளரவில்லை. பாடல்கள் மட்டுமே

அப்பொழுது வெளிவந்தன.


ree

அதே போல 2000க்குப் பின்னர் திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் வருகை கல்வித்துறையில் சிறார் படைப்பிலக்கியத்தின் மீதான கவனகுவிப்பை அதிகாரப்பூர்வமாக உண்டாக்கியது. மலேசியத்தமிழ் சிறார் இலக்கியத்தில் அது புரட்சிமிகுந்த காலக்கட்டம் எனலாம். மாணவர்கள் எழுதும் தேர்வில் சிறார் படைப்பிலக்கியத்தை இரண்டு பகுதிகளில் கட்டாயமாக்கினார். அதன்வழி

சிறார்கள் சிறுகதையை வாசிக்கவும் இன்னொரு பகுதியில் படத்தினைக் கொண்டு சிறுகதை எழுதுவும் வழிகள் உண்டாகின. வகுப்பறைகள்தோறும் சிறார் சிறுகதைகளின் தேவைகள் குறித்துப் பேசத் தொடங்கினர்.


ஆசிரியர்களும் சிறுகதைப் போதிப்பதிலுள்ள சவால்களை எதிர்க்கொள்ளத்

தொடங்கினர். இலக்கியத்தின் பக்கம் நாட்டத்தைச் செலுத்தத் தொடங்கினர். நாடெங்கிலும் பட்டறைகள், கருத்தரங்குகள் பரவலாகத் தொடங்கின. 2011ஆம் ஆண்டு தொடங்கி இப்பொழுதுவரை நான் 400க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதை பட்டறைகளை நாடெங்கும் நடத்திவிட்டேன். அதே போல ஆசிரியர்கள் சிலரும் பட்டறைகளை நடத்தினர். 2014ஆம் ஆண்டில் நான் எழுதிய ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற சிறார் நாவல்தான் 7000 பிரதிகள்

விற்பனையாகி புதிய வரலாற்றை உருவாக்கியது. அதன் பின்னர் ஏற்பட்ட சிறார் வாசகர் பரப்பு சிறார் இலக்கியத்தின் மீதான இரசனையைக் கூர்த்தீட்டியது எனலாம்.

எழுத்தாளர் விச்சு மாமா, ம.நவீன், முருகையா முத்துவீரன் என இன்னும் பல சிறார் எழுத்தாளர்கள் தோன்றினார்கள். அவர்களின் வருகையும் ந்வீன சிறார் இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. நான்

2013ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தபோது டிஸ்கவரி வேடியப்பன் அவர்களின் புத்தகக் கடையில் விஷ்ணுபுரம் சரவணன், விழியன் என அப்பொழுது தமிழ்நாட்டில் சிறார் இலக்கியம் படைக்கத் தொடங்கியிருந்த எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டேன். மலேசியாவின் சிறார்

இலக்கியத் தற்கால வளர்ச்சியைப் பற்றி அங்கு உரையாடினேன். இப்பொழுதுவரை நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் பன்முகமாக மலேசியாவில் கற்பனையையும் சிறுவர்களின் உளவியலையும் உட்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..


2. மலேசியாவில் பிறமொழி சிறார் இலக்கியத்தை வாசித்ததுண்டா?


நான் 12 வயதாக இருக்கும் காலக்கட்டத்தில் (1994) அப்போது பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்த மலாய் சிறுவர் நாவல்கள் அதிகம் வாசிப்பேன். எனது இளமை பருவக் காலத்தில் மலாய் சிறுவர் நாவல்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. ‘இரகசிய மாளிகை’, ‘மர்ம உருவம்’, மர்மம் நிறைந்த அரண்மனை’ எனப் பெரும்பாலும் அப்பொழுது மலாய்மொழியில் திகிலூட்டக்கூடிய

கருப்பொருள்களையே நாவல்கள் கையாண்டிருந்தன. அக்காலக்கட்டத்தில் தமிழில் விரிவான அல்லது அதிகமாக தமிழ்ச் சிறார் நாவல்கள் வராதது இதற்குக் காரணமாகும்.


3. மலேசியச் சிறார்களின் புத்தகவாசிப்பு பரவலாகியிருக்கிறதா? பள்ளிகளில் அத்தகைய முயற்சிகள் நடக்கிறதா?


ree

கடந்த 2005 தொடக்கம் 2018ஆம் ஆண்டுவரை தமிழில் சிறார் இலக்கிய நூல்களை வாசிப்பது பரவலாகவே இருந்தது. திரு.பி.எம் மூர்த்தியால் தேர்வில் அறிமுகமாகியிருந்த சிறுகதை பகுதியை எழுதுவதற்காகவே சிறார்களும் ஆசிரியர்களும் நிறைய தேடி வாசிக்கத் தொடங்கினர். ஆனால்,

அப்பொழுது நூல்களின் பற்றாக்குறையும் நிலவியிருந்தன. மயில், குயில் போன்ற இதழ்களின் தோற்றம் ஆரம்பம் காலம்தொட்டே பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன.

மாணவர்களுக்கான குயில் இதழ் 1986ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுப் பரவலாக

வாசிக்கப்பட்டது. அதே போல மயில் இதழிலும் சிறார்களுக்கான பிரிவு 1992ஆம் ஆண்டில் அறிமுகமானது. அதே போல எழுத்தாளர் கு.கிருஷ்ணன் அவர்களின் மணிக்கதைகள் என்ற கருப்பொருளில் சிறு புத்தகங்கள் கதை தொகுதிகளாக வெளிவந்தன. அடுத்து, 2012ஆம் ஆண்டு பாரதி பதிப்பகம் மூலம் வெளிவந்த எனது ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ சிறுவர் சிறுகதை நூலும்

2014ஆம் ஆண்டில் வெளிவந்த எனது சிறார் நாவலான ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ அந்த வெற்றிடத்தைப் பெருமளவு நிரப்பத் தொடங்கின. அதிகமான சிறார்கள் அந்தக் கதைப் புத்தகத்திற்கும் சிறார் நாவலுக்கும் வாசகர்களாகியிருந்தனர். இதையடுத்து, மூத்த இலக்கியவாதி

கோ.புண்ணியவான் அவர்களும் சிறார் நாவல்கள் எழுதி இங்குள்ள சிறுவர்களை வாசிக்கத் தூண்டினார் எனச் சொல்லலாம். அதன் பின்னர், 12 சிறார் நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளது

குறிப்பிடத்தக்கதாகும். 2018ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆரம்பப்பள்ளிகளுக்கான தேர்வு அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டது. அதன் பின்னர், சிறுகதையின் மீதான தேடல் குறைந்துவிட்டது எனலாம். ஆயினும், பள்ளி அளவிலான மதிப்பீட்டுத் தேர்வில் ஐந்தாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான பகுதியில் சிறுகதை உள்ளது.


ree

4. வரலாற்றையும், சமூகப்பிரச்னைகளையும் முன்வைத்து இளையோர்களுக்கான சாகச, மர்ம,நாவல்களை நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு மலேசியாவில் எத்தகைய வரவேற்பு

இருக்கிறது?


எனது நோக்கம் சிறார்களை வாசிப்பின் பக்கம் ஈர்க்க வேண்டும். வாசிப்பின் ருசியை அறிய வைக்க வேண்டும். அதற்காகவே காலம்காலமாகப் பிள்ளைகள் ஆர்வத்துடன் செவிமடுக்கும் மர்மக்கதைகளை எனது இலக்காக எடுத்துக் கொண்டேன். அதன்வழி உருவான ‘மர்மக் குகையும் ஓநாய்

மனிதர்களும்’, ‘மோகினி மலையின் இரகசியங்கள்’, ‘பதின்மூன்றாவது மாடியும் இரகசியக்கதவுகளும்’, ‘இருள் சூழ்ந்த இரகசிய பாதை’, ‘உயாங் மலை’, ‘மாயவிடுதி’ என ஆறு சிறார் மர்ம நாவல்கள் வெளிவந்தன. இவையனைத்தும் மலேசியாவில் சிறார்கள் மத்தியில் வாசிப்பு அலையைஉண்டாக்கியது.


நாடெங்கிலும் பெற்றோர்கள் எனக்கு அழைத்து என் நாவல்கள் மீது மிகுந்த

பிரியம் கொண்டிருந்த அவர்களின் பிள்ளைகள் பற்றிப் பேசத் தொடங்கினர். சிறுவர்கள் தங்களின் தலையணைக்கு அருகில் இந்தச் சிறார் நாவல்களை வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கினர்.

இன்னும் சில மாணவர்கள் ஒரே நாவலை பத்துக்கும் மேற்பட்டமுறை வாசிப்பதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர். மின்னஞ்சல் வாயிலாக எனக்குப் பிள்ளைகளின் கடிதங்கள் வரத் தொடங்கின.

இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது 2014 தொடங்கி இப்பொழுதுவரை எனது சிறார் நாவல்கள் சிறார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாக உறுதியாகச் சொல்ல முடியும்.


5. உங்களுடைய ஒருங்கிணைப்பில் சிறார் இலக்கியவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறீர்கள். புதிய சிறார் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்களா?


ree

இதுவரை ஆறு சிறார் இலக்கிய விழாவை நாடு தழுவிய நிலையில் முன்னெடுத்துள்ளேன். இதுவரை சிறுவர்கள் எழுதிய மூன்று சிறுவர் சிறுகதைகளின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன்.

அதன் வழியாக ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறார்களை எழுத்தாளர்களாக அறிமுகப்படுத்தியுள்ளேன். அவற்றுள் சிலர் இப்பொழுது இளம் எழுத்தாளர்களாகத் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறார்கள்.

துளசி தேவி சரவணன், தீர்த்தனா முத்துராமன் தமிழ்ச்செல்வன் கனகநாதன் போன்ற இளையோர்களைக் குறிப்பிடலாம். ஆனால், அவர்கள் தொடர்ந்து சிறார் இலக்கியத் துறையில் பங்களிப்புச் செய்ய இன்னும் சில காலம் ஆகலாம் என்பதே எனது ஊகமாகும்.


6. பெரியவர்களுக்காகவும் எழுதுகிறீர்கள். சிறார் இலக்கியம் எழுதுவதற்கான தொடக்கப்புள்ளி

எது?


தமிழ்ப்பள்ளியில் போதிப்பதால் இயல்பாகவே சிறுவர்களுடந்தான் புழங்கிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் கதைகளைக் கேட்பது, சுட்டித்தனங்களை இரசிப்பது, சிறுவர்களை முன்வைத்துக் குறும்படங்கள் இயக்குவது போன்ற செயல்பாடுகள் தொடக்கத்திலிருந்தே இருந்ததால் 2012ஆம்

ஆண்டில் சிறுவர் சிறுகதை எழுதுவதற்குரிய மனநிலை இலகுவாகவே வாய்த்தது. அப்பொழுது தேர்வுக்காக மாணவர்களைச் சிறார் சிறுகதையொட்டி தயார் செய்ய வேண்டிய தேவை நாடு முழுவதும் இருந்ததால் சிறுவர் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். மேலும், திரு.பி.எம் மூர்த்தி

அவர்கள் மலேசியத் தேர்வு வாரியத்தில் தமிழ்த்துறையில் இருந்ததால் அவருடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் நவீன சிறார் இலக்கியம் படைக்கத் தனித்துவமான பாதையை உருவாக்கிக் கொடுத்தது. 2014இல் நிகழ்ந்த எனது தந்தையாரின் மரணம்தான் எனக்குள் இருந்த சிறுவனை முழுமையாக அடையாளம் காட்டியது. எங்கள் வீட்டில் நடந்த முதல் மரணத்தின் முன்னே

வரம்பற்று உடைந்து கிடந்தேன். அப்பொழுது என்னைத் தூக்கி நிறுத்தியது அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் ஆறே நாளில் எழுதி முடித்த எனது முதல் சிறார் நாவலான ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ தான் எனலாம். அப்பாவை நினைத்துச் சிறுபிள்ளையாய்த் தேம்பிக் கிடந்த

எனக்குள் இருந்த சிறுவனை நான் இலக்கியத்திற்குள் வரவழைத்துக் கொண்டேன். அங்கிருந்துதான் எனது சிறார் இலக்கியப் பயணம் உச்சம் பெறத் தொடங்கியது.


7. மலேசியத் தமிழ்ச்சிறார் இலக்கியத்தையும் தமிழ்ச்சிறார் இலக்கியத்தையும் ஒப்பீடு செய்து சொல்லமுடியுமா?

இக்கேள்வி பெரிய பரப்பையொட்டியதாக விரியக்கூடியதாகும். ஆயினும், சுருக்கிச் சொல்ல முயல்கிறேன். நான் முன்பே சொன்னது போல தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சஞ்சிக்கூலிகளாக மலாயா வந்தபோது உடன் பண்பாட்டையும் மொழியையும் இலக்கியத்தையும் கொண்டு

வந்திருந்தார்கள். மலேசியத் தமிழர் வரலாற்றை ஆராயும்போது இவையாவும் விரிவுக் கொள்ளும். அப்படித் தாலாட்டில் தொடங்கியதுதான் சிறார் இலக்கியம். விட்டுவந்த நிலத்தின் மீதான பிரிவேக்க உணர்வை வெளிப்படுத்த தமிழர்கள் பாடிய நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்புகளை

ஆராயும்போது இப்புரிதல் உண்டாகின்றன. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து கிளர்ந்து வெளியேறிய பல கிளைகளில் மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியமும் ஒரு பகுதியாகியுள்ளது. அதே போல 2000க்குப் பிறகு உருவான நவீன சிறார் இலக்கியத்தின் உருவாக்கம் மலேசியாவிலும்

தாக்கத்தை உண்டாக்கியிருந்தன. கல்வியின் வழியாக நவீன சிறார் படைப்பிலக்கியம் உச்சம் கொண்டது. சிறார்களை முன்னிறுத்தும் சிறார் இலக்கியம் வகைமைகள் வெளிவரத் தொடங்கின.

அதுவரை நீதிக்கதைகளை மட்டுமே தக்க வைத்திருந்த மலேசியத் தமிழ்ச்சிறார் இலக்கியம் திரு.பி.எம் மூர்த்தி, கு.கிருஷ்ணன், கே.பாலமுருகன், நவீன், கோ.புண்ணியவான், முருகையா

முத்துவீரன், விச்சு மாமா என இன்னும் சிலரின் மூலம் சிறுவர்களை முதன்மையானவர்களாக முன்னிறுத்தும் இலக்கியப் போக்குகள் கொண்ட படைப்புகள் வெளிவரத் துவங்கின. அதன் பின்னர் மணிராமு, செகு ராமசாமி போன்றவர்களும் சிறார் நாவல்களை எழுதியுள்ளனர்.


8. மலேசியத் தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் முன்னேற்றத்திற்கான உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன?


தொடர்ந்து சிறார் நாவல்கள் மீது கவனம் செலுத்தவுள்ளேன். இன்னும் சிறார் இலக்கிய வாசகர்களைப் பரவலாக்கவும் சிறார் இலக்கியத்தின் மீதான வாசிப்பு இரசனையை தூண்டவும் உதவியாக இருக்கும். அடுத்து, வருடந்தோறும் செய்யப்படும் சிறார் இலக்கிய விழாவினை மேலும்

பன்முகப்படுத்தி நாடு தழுவிய நிலையில் தீவிரப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு. சிறார்களுக்காக நவீனத் தமிழ் சிறார் இலக்கிய இதழ் ஒன்றையும் தொடங்க வேண்டும் என்கிற திட்டம் உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான்.


9. உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்துச் சொல்ல முடியுமா?

எனது அடுத்த சிறார் நாவல் தயாராகிவிட்டது. வரும் செப்டம்பரில் அந்த நாவல் வெளிவருகிறது. பெரிய காது சிறுவன்’ என்கிற தலைப்பில் கனவுருப்புனைவை மையப்படுத்தி அந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.


உதயசங்கர்
உதயசங்கர்

150 க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page