புத்தகமூட்டையைக் குழந்தைகளின் முதுகில் ஏற்றாதீர்கள் – கார்த்திகா கஜேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரிமித்ரா பள்ளிக்குழுமம் ராஜபாளையம்.
- சரிதா ஜோ

- Dec 15, 2025
- 5 min read

மித்ரா கல்விக் குழுமம் ஆரம்பிக்கும் எண்ணம் எங்கிருந்து தோன்றியது?
விப்ரோவில் ஹெச். ஆராக வேலை செய்து கொண்டிருந்தேன்.
2015ல் என் மகள் சாரு பிறந்தாள்.
மகள் பிறந்த ஒரு ஆறு மாசம் எனக்கு வீட்ல இருக்க வேண்டிய சூழல். என்னோட மகளைக் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அந்த மாதிரி ஒரு வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். எப்படியாவது வேலைக்கு போகணும் என் வாழ்நாள் முழுவதும் நான் சம்பாதிச்சுக்கிட்டே இருக்கணும் என்று நான் நினைத்தேன். அந்த நேரத்தில் தான் ஒரு பள்ளி தொடங்கலாம் என்று எனக்கு ஒரு யோசனை வந்தது.
ஓசூரில் இரண்டு வருடங்கள் ஒரு பள்ளியில ஆசிரியராக வேலை பார்த்த அனுபவம் அதற்குக் கை கொடுத்தது. மித்ரா மாண்டிசோரி பள்ளி தொடங்கினேன். அதன் பிறகு மற்றொரு இடத்தில் அடுத்த மாண்டிசோரி பள்ளி தொடங்கினேன். ஒவ்வொரு பகுதிக்கும் தேவை இருந்தது. அதன் அடிப்படையில் தொடங்கினேன். இது மித்ரா கல்விக் குழுமமாக மாறியது.
வீட்டுப்பாடம் இல்லாத பள்ளி என்ற முறையை தங்கள் பள்ளியில் கொண்டு வர காரணம் என்ன?
அதுக்கு காரணம் என்னுடைய மகள் தான். ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து வந்து ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாள்.
'என்னடா லட்டு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய்?' என்று நான் கேட்டேன். பேக் எடுத்துட்டு போகாம நான் பள்ளிக்கூடம் போன மாதிரி எனக்கு கனவு வந்ததுங்க அம்மா.’ என்று அவள் கூறினாள். அது ஒரு சாதாரண விஷயம் தான் ஆனால் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பெரியவங்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். ஆனால் இவ்வளவு சின்னக் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனையா? என்று நான் நினைத்தேன். பேக் எடுத்துக்கொண்டு செல்வது குழந்தைகளுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போதிருந்தே என் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் ஒரு தொடக்கப்பள்ளியை வாங்கினேன். வீட்டுப்பாடம் இல்லாத ஒரு பள்ளியாக இந்தப் பள்ளியை செயல்படுத்தலாம் என்ற யோசனை தோன்றியது. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது புத்தக மூட்டை.
வீட்டு பாடம் இல்லை என்றால் புத்தகமூட்டைகளைக் குழந்தைகள் சுமந்து திரிய வேண்டியது இல்லை. இது எவ்வளவு பெரிய விடுதலை. அவங்களுக்கு தேவையான மதிய உணவை, தண்ணீர் மற்றும் ஸ்னாக்ஸ் மட்டும் ஒரு சிறு பேகில் எடுத்து வந்தால் போதும். இதற்கு மையப்புள்ளி என்று சொன்னால் ஒரு குழந்தையின் ஏக்கம்தான். என் மகள் கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி தான் இது.
இதுபோன்ற பள்ளி வேறு ஏதாவது செயல்படுகிறதா?
தமிழ்நாட்டுல திருவண்ணாமலை கோயம்புத்தூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதுவரை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு வரவில்லை. ஆனால் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது இதுவரை எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். அதை நாங்கள் எங்கள் பள்ளியில் செயல்படுத்தி வருகிறோம்.

இந்த புதுமையான முறைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு இருக்கிறது?
இந்த முறையை ஆரம்பத்தில் பெற்றோர்களுக்குப் புரிய வைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். ஹோம் ஒர்க் இல்லாமல் பிள்ளைங்க எப்படி நல்லாப் படிப்பாங்க? எப்படி சிலபஸ் முடிப்பீங்க? எப்படி டெஸ்ட் வைப்பீங்க? இப்படி ஆயிரம் கேள்விகள் பெற்றோரிகளிடமிருந்து வந்தன. இது மற்ற பள்ளிகள் போல எட்டு பீரியட்ஸ் இருக்கிற பள்ளி கிடையாது. இது ஒரு மாண்டிசோரி பள்ளி. இதில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும். அதை அவர்களை வாசிக்க வைத்து, அது சார்ந்த செயல்பாடுகளைக் கொடுத்து ஆசிரியர்கள் உடனிருந்து இவற்றைச் செய்ய வைப்பார்கள். இதுபோன்று அவர்களோடு தொடர்ந்து உரையாடினேன். உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும் கூட சில பெற்றோர்கள் வீட்டுப்பாடம் வேண்டும் என்று கேட்பார்கள். அப்படித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்காக ஒன்றோ இரண்டோ கொடுப்போம். அதுவும் கண்டிப்பாக செய்து வர வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதில்லை.
ஆனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வீட்டிற்கு ரிலாக்ஸாகப் போகிறார்கள். பள்ளிக்கூடத்துக்கு ரிலாக்ஸாக வருகிறார்கள். ஒன்று வீட்டு பாடம் செய்ய தேவையில்லை. இரண்டாவது புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இருந்தால் யாருக்குத் தான் மகிழ்ச்சியாக இருக்காது? வீட்டுப்பாடம் செய்யும் அந்த நேரத்தை தங்களுடைய தனி திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். பெற்றோர்களும் அதை மகிழ்வோடு கூறி இருக்கிறார்கள். குழந்தைகளும் கூறி மகிழ்ந்திருக்கிறார்கள்.

தங்களின் சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து கவனித்து வந்த வகையில், விளையாட்டு, நாடகம், மேடைப்பேச்சு, புத்தக வாசிப்பு மற்றும் கதை சொல்லல் உள்ளிட்ட பல கற்றல் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொடுக்கும் புதுமையான கல்வி முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை அறிய முடிந்தது. இவை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை எல்லா குழந்தைகளும் அறிவாளிகள் தான். ஆனால், எந்தக் குழந்தை கேள்வி கேட்கிறதோ அந்தக் குழந்தையை அறிவாளி என்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் கேள்வி கேட்பதில்லை. அப்படிக் கேள்வி கேட்பதற்குத் தடையாக இருப்பது அவர்களிடம் தைரியம் இல்லாததுதான். குழந்தைகளில் இரண்டு வகை ஒன்று தைரியம் இருக்கும் குழந்தை. மற்றொன்று தைரியம் இல்லாத குழந்தை. ஒரு குழந்தைக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்றால் இது எனக்குப் புரியவில்லை சொல்லிக் கொடுங்கள் என்று எழுந்து கேட்பதற்கு தைரியம் வேண்டும். அந்த தைரியம் வந்து விட்டாலே போதும். முதலில் தைரியத்தை வளர்க்க பயத்தை உடைக்க வேண்டும். அதற்கு ஒரு பயிற்சி தேவைப்பட்டது. அந்த பயிற்சிதான் மேடைப்பேச்சு, புத்தக வாசிப்பு, நாடகம் நடிக்க வைத்தல் மற்றும் கதை சொல்லல் உள்ளிட்ட ஏராளமான செயல்பாடுகள். இவை அனைத்துமே குழந்தைகள் பத்து இருபது பேருக்கு முன்னால் நின்று பேசுவதற்கான பயிற்சி. எங்களுடைய பள்ளியில் ஒன்றரை வயதில் இருந்தே இதைத் தொடங்கி விடுவோம். பிரைமரி வரை அது தொடரும்.
ஒரு குழந்தைக்கு ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் தேவை. ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் என்பது கல்வி மற்றும் திறன்களை மட்டும் சார்ந்து இருக்காமல் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சமூகத்தை புரிந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றைச் சேர்ந்ததுதான். இப்படியான குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் மித்ரா கல்விக் குழுமத்தின் நோக்கம்.
கதைகள் குழந்தைகள் உலகில் என்னவாக இருக்கிறது?
மிக அழகான கேள்வி. நான் பார்த்த வரைக்கும் குழந்தைகள் தினமும் கதை சொல்கிறார்கள். கதை சொல்லாத நாளே கிடையாது. தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பெரியவர்கள்தான் கதை சொல்ல மிகவும் யோசிக்க வேண்டும். ஆனால் ஸ்பான்ட்டனியஸாக குழந்தைகள் கதை சொல்கிறார்கள். குழந்தைகள் கதை கூறும் போது நான் ஒன்றைக் கூர்ந்து கவனித்தேன். அவர்கள் மிகவும் ரிலாக்ஸகிறார்கள். கதை சொல்லச் சொல்ல ஏதோ பாரம் குறைந்தது போல் உணர்கிறார்கள். சில நேரங்கள்ல அந்தக் கதைக்குள் நிறைய இமேஜினேஷன் இருக்கும். நிறைய கிரியேட்டிவிட்டி இருக்கும். சில நேரங்களில் நியூ கிரியேஷன் இருக்கும். இதை நாம் பில்டப் என்று சொல்லுவோம். சாதாரணமான ஒன்றை குழந்தைகள் ரொம்பப் பெரிது பண்ணிச் சொல்லுவாங்க. கேட்கவே ரொம்பக் கியூட்டாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து கதைகளைப் பிரிக்கவே முடியாது. குழந்தைகள் வேறு கதைகள் வேறு கிடையாது. குழந்தைகளும் கதைகளும் ஒன்று தான். ஒரு எக்சைட்மென்ட் அப்படின்னு சொல்லலாம்.
குழந்தைகளுக்கு ஒரு ரொட்டீன் இருக்கு காலைல எழுந்திருக்கணும், குளிக்கணும், பிரஷ் பண்ணனும், ஸ்கூலுக்கு வரணும், சாப்பிடணும் மற்றும் படிக்கணும் இதையெல்லாம் தாண்டி கதைகள் என்று வந்துவிட்டாலே அது அவர்களுக்கு ஒரு ரெப்ரஷ்மெண்ட்போலத்தான். ஏனென்றால் இது அந்த ரொட்டீன்ல் இருந்து வேறுபடுகிறது. கதைகள் மட்டுமே குழந்தைகளை மனிதத்தன்மையோடு இயங்க வைக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் கவனித்த வரையில் பெரும்பான்மையான கதை சொல்லிகள் குழந்தை மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இளமையாகவும் இருக்கிறார்கள். அதற்கு கதைகளும் குழந்தைகளுமே காரணம் என்று நினைக்கிறேன்.
சமூகப் பொறுப்பு மிக்க இந்தப் பணியில் தங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது?
ஒரு பெண் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் வீட்டு வேலைகளை முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும். ஆனால் எங்கள் வீட்டில் நான் ஒன்றைச் செய்கிறேன். நீ ஒன்றைச் செய்துவிடு என்று பங்கிட்டுக் கொள்வோம். என்னுடைய குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். என் கணவர் சில வேலைகளைச் செய்வார். என்னுடைய அம்மா சில வேலைகளைச் செய்வார். என்னுடைய அப்பா சில வேலைகளைச் செய்வார். நாங்கள் எல்லோரும் அதை எங்களுடைய பொறுப்புகளாகப் பார்க்கிறோம். வேலையாகப் பார்க்கவில்லை. அதனால் வீட்டு வேலை எந்த வகையிலும் என்னுடைய பள்ளிக்கூட வேலைகளுக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. காலை 9 மணிக்கு அனைத்து வேலைகளையும் முடித்து விடுவோம். என்னுடைய பள்ளி சார்ந்த அகாடமிக் மேனேஜ்மென்ட் வேலைகள் எல்லாம் நானே பார்த்துக் கொள்வேன். வீட்டில் இவ்வளவு சப்போர்ட் இல்லையென்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. தொடர்ந்து கல்வி சார்ந்து சிந்திக்கவும் முடியாது. புதுமையான ஒன்றை யோசிக்கிறதுக்கு நமக்கு ஒரு ஸ்பேஸ் தேவை. அதை என்னுடைய குடும்பம் கொடுக்கிறது. என்னுடைய குடும்பம் என்றால் என் மகள் உட்பட. என் மகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் அவளுடைய லஞ்ச் பாக்ஸை அவளை கழுவி வைத்து விடுவாள். காலையில் குளிப்பதிலிருந்து அவளுடைய வேலைகளை அவளே பார்த்துக் கொள்வாள். குறிப்பாக அவள் சாப்பிட்ட தட்டை அவளே கழுவி வைத்து விடுவாள். இந்த நேரத்தில் என்னுடைய மகள், கணவர், அப்பா, அம்மா, மட்டுமின்றி மாமனார் மாமியாருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களும் பெரும்பான்மையான நேரத்தில் என்னுடன் கரம் பற்றி நின்று இருக்கிறார்கள்.
சமகால கல்வி முறை குறித்து தங்களுடைய பார்வை? சமகால கல்வி முறையில் எது மாதிரியான மாற்றம் இருந்தால் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
சமகால கல்வி முறையில நான் பார்க்கின்ற மிக முக்கியமான ஒன்று வீட்டுப் பாடம். பெற்றோர்களில் சிலர் படித்தவர்கள். சிலர் படிக்காதவர்கள். சிலர் வேலைக்குச் செல்பவர்கள். அதனால் அவர்களுக்கு வீட்டில் சொல்லிக் கொடுப்பது என்பது சிரமம். கற்றல் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். ஆனால்,கல்வி என்பது பள்ளியில் தொடங்கி பள்ளியில் முடிய வேண்டும். காலையிலிருந்து எட்டு மணி நேரம் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே வன்முறைதான். அதைத் தாண்டி திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க வைப்பது என்பது அது அதைவிட வன்முறை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் வீட்டுப்பாடம் இல்லாத ஒரு முறையை உருவாக்கி அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா மாதிரியான விழாக்களில் தொடர்ந்து சில குழந்தைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அது முதலில் மாற வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். வாய்ப்புக் கொடுக்க வேண்டும். எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் எல்லா தனியார் பள்ளிகளிலும் இருக்கின்றன. அதில் சிலம்பம், பாட்டு, நடனம் மற்றும் ஓவியம் உள்ளிட்டவை இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையான ஏதோ ஒன்றோ இரண்டோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். குழந்தைகளுக்கு எது வரும், எது வராது என்று அவர்களுக்குத் தெரியாது. அதை செய்து பார்த்த பிறகு தான் அதை அவர்களால் கண்டுபிடிக்க முடியும். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கும் எல்லாப் பயிற்சியையும் கொடுக்கும் போது, அவர்களுக்கு எது வருகிறது என்று அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். எந்தக் குழந்தைக்கு எந்தத் திறமை இருக்கிறது என்பதை ஆசிரியர்களும் சரி பெற்றோர்களும் சரி, சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
ஆண்டுவிழா மாதிரியான விழாக்களில் சுழற்சி முறையிலாவது குழந்தைகளுக்கு வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். எங்களுடைய பள்ளியில் 150 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லோருக்குமே ஆண்டு விழா மாதிரியான விழாக்களில் வாய்ப்பு வழங்கப்படும். அதற்குத் தான் நாங்கள் இங்கே பயிற்சி கொடுக்கிறோம். எல்லாப் பள்ளிகளும் இதைப் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
எனக்குச் சிறுவயதாக இருக்கும் போது வாசிப்பு பயிற்சி அதிகமாக இருந்தது. நான் வாசித்த தில் என்ன புரிந்ததோ அதைத்தான் எழுதுவேன். ஆனால் இப்போது பள்ளிகளில் ஒரே ஒரு முறை பாடத்தை நட த்தி விட்டு நேரடியாக கேள்விகளையும் பதில்களையும் எழுதிப் போட்டு விடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் வாசிக்க வைப்பதில்லை. அப்படியே மீறி வாசிக்க வைத்தாலும் நன்றாக படிக்கும் குழந்தைகளை வாசிக்க வைத்து விட்டு, ஹோம் ஒர்க் கொடுத்து விடுகிறார்கள். 90% குழந்தைகளுக்கு புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று முழுமையாக தெரியாது. மிக முக்கியமாக இதை நான் மாற்ற வேண்டும் என்று நினைப்பது இதைத்தான். எல்லாக் குழந்தைகளுக்கும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று முதலில் தெரிய வேண்டும். அதனால் மட்டுமே குழந்தைகளுக்குப் பரந்துபட்ட பார்வை கிடைக்கும். வெறும் கேள்வி பதிலால் பரந்துபட்ட பார்வை கிடைக்காது. முக்கியமாக இது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் எல்லாக் கலைகளிலும் எல்லா விளையாட்டுகளிலும் குழந்தைகள் பங்கு பெறுவதற்கான சூழலையும் வாய்ப்பையும் ஒவ்வொரு பள்ளியும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
சமீபத்தில் தங்கள் வாசித்த கல்வி சார்ந்த புத்தகங்கள் பற்றி?
ஆயிஷா நடராசன் புத்தகங்கள்
மரியா மாண்டிசோரி
The whole brain child - Daniel j.seigel
உதயசங்கர் ,சரிதா ஜோ கதை புத்தகங்கள்.நீதிமணி குழந்தைப்பாடல்கள்
இதெல்லாம் வாசித்து ரொம்ப ரசிச்சது.

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.




Comments