டி-3
- ஸ்ரீஜோதி விஜேந்திரன்

- Jan 15
- 2 min read
Updated: Jan 15
(ஒரு சை-ஃபை[Sci-Fi] கதை)

சென்னை நகரம் ஒரு நாள் காலையில் கொஞ்சம் வித்தியாசமாக விழித்தது.
சூரியன் உதித்ததும், வானத்தில் பறவைகளுக்கு நடுவில் “வீ…வீ…வீ…” என்ற சத்தம் கேட்டது.
மக்கள் மேலே பார்த்தார்கள்.
அங்கே… ட்ரோன்கள்!
நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், வானத்தில் பறந்து கொண்டிருந்தன.
ஆனால் அவை சாதாரண ட்ரோன்கள் அல்ல. ஒவ்வொரு ட்ரோனும் ஒரு வேலை செய்தது.
“அம்மா! அந்த ட்ரோன் பால் கொண்டு வருது!” என்று பத்து வயது குட்டிக் கண்ணன் கத்தினான்.
“அந்த ட்ரோன் மருந்து!”
“இந்த ட்ரோன் காய்கறி!”
“ஹை! அது ஐஸ்க்ரீம் ட்ரோன்!”
ஆம்! சென்னை நகரத்தில் ‘வான விநியோகத் திட்டம்’ தொடங்கப்பட்டிருந்தது.
மக்கள் கடைக்குப் போக வேண்டியது இல்லை. டிரோன்களே வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்துக் கொடுக்கும்.
மக்களுக்கு அது ஒரு சுவாரசியமான விஞ்ஞான அதிசயம் போல தோன்றியது.
ஒரு நாள், கண்ணன் வீட்டின் பால்கனியில் ஒரு சிறிய ட்ரோன் வந்து இறங்கியது.
“ஹலோ, கண்ணன்!” என்று அது பேசியது.
“அப்பா! அம்மா! இங்க ஒரு டிரோன் வந்திருக்கு, இந்த ட்ரோன் பேசுது!” என்று கண்ணன் குதித்தான்.
அந்த ட்ரோன் சிரித்தது
“என் பெயர் டி-3. (Drone Number 3)
நான் உங்களுக்கு உதவ வந்தேன்,” என்றது.
கண்ணனின் கண்கள் சந்தோஷத்தில் பளபளத்தன.
“உங்களுக்கு பெயர் எல்லாம் இருக்கா? நீ எப்படி பேசுற?” அவனுக்குப் படு ஆச்சரியம்.
“Artificial Intelligence! அதாவது செயற்கை நுண்ணறிவு,” டி-3 விளக்கியது.
“எனக்கு யோசிக்கவும், பேசவும், வழி கண்டுபிடிக்கவும் தெரியும்.”
ஒரு மாலை, நகரம் முழுக்க ஒரே பரபரப்பு.
வானத்தில் பெரிய குழப்பம் நேர்ந்தது. ட்ரோன்கள் எல்லாம் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி பறந்தன.
“பால் வரல!”
“மருந்து வரல!”
“என் ஐஸ்க்ரீம் எங்கே?”
ஒரே தேடல்கள்!!
கண்ணன் உடனே டி-3யை அழைத்தான்.
“என்ன ஆச்சு?”
டி-3 கவலையுடன் சொன்னது:
“ஜிபிஎஸ் செயற்கைக்கோளில் ஏதோ கோளாறு போல. நாங்க வழி தவறிட்டோம், சரியான பாதையைக் கண்டு பிடிக்க முடியல.”
கண்ணன் யோசித்தான்.
“ஜிபிஎஸ் இல்லாமல் நீங்க வழி கண்டுபிடிக்க முடியாதா?”
டி-3 சிரித்தது.
“முடியும்… மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இருந்தால்!”
கண்ணன் ஒரு காகிதத்தில் நகர வரைபடம் வரைந்தான்.
“இது என் பள்ளி.”
“இது மருத்துவமனை.”
“இது மார்க்கெட்.”
“நீங்க இதைப் பார்த்துப் பறக்கலாமே?” என்றான்.
டி-3 மகிழ்ச்சியடைந்தது.
“மிகச் சிறந்த யோசனை, குட்டி விஞ்ஞானியே!!”
அது அந்த வரைபடத்தை ஸ்கேன் செய்தது.
“கவனிக்கவும்! எல்லா டிரோன்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!” என்று டி-3 அறிவித்தது.
“இந்த வரைபடத்தைப் பின்பற்றுங்கள்!” கண்ணன் வரைந்த படத்தைக் காட்டியது.
உடனே எல்லா ட்ரோன்களும் நேராக, சரியாகப் பறக்க ஆரம்பித்தன.
சில நிமிடங்களில்…
பால் வந்தது.
மருந்து வந்தது.
ஐஸ்க்ரீமும் வந்தது! 🍦
மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள்.
நகர மேயர் கண்ணனைப் பாராட்டினார், “நீ பெரிய விஞ்ஞானியாக வருவாய்!”
கண்ணன் சிரித்தான்.
“நான் என் ட்ரோன் நண்பனுக்கு உதவி செய்யவே இதைச் செய்தேன்!”
“தொழில்நுட்பம் சக்திவாய்ந்தது. ஆனால் மனிதர்களின் அறிவும் கருணையும் சேரும்போது தான் அது சிறப்பாக வேலை செய்யும்.” டி-3 கண்ணனுக்கு ஹை-ஃபை காட்டியது.
அந்த நாளுக்குப் பிறகு, சென்னை வானம் இன்னும் வண்ணமயமாக இருந்தது.
பறவைகளும் ட்ரோன்களும் சந்தோஷமாக பறந்தன.
கண்ணன் மேலே பார்த்து உற்சாகமாகச் சொன்னான்:
“ஒரு நாள் நானும் ட்ரோன்கள் போல பறக்கப் போகிறேன்!”

விஜோஸ் புக்ஸ் பார்ன் (ViJos Books Barn) என்ற நூலகத்தின் நிறுவனர்
ஆங்கில மொழிப் பயிற்சியாளர்
மென் திறன் பயிற்சியாளர் (Soft skills trainer)
விருது பெற்ற சிறார் எழுத்தாளர்.




Comments