top of page

கிளிக்கூடு


 அப்பொழுதுதான் ஒரு பாட்டம் மழை பெய்து வெறித்திருந்தது. உச்சி மதிய நேரத்தில் ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்தது. ஊருக்கு மேல்புறம் ஓடைக்கரையில் நின்றுகொண்டிருந்த பனைமரக்கூட்டத்தில் உட்கார்ந்துகொண்டு “க்.கிய்..க்.கிய்..கீ..” என கிளிகள் சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. ஓலைகள் காய்ந்து விழுந்து நின்ற ஒரு மொட்டைப்பனையின் பொந்திலிருந்து இரண்டு கிளிக்குஞ்சுகள் தலையை நீட்டி வெளியே எடடிப்பார்த்தன. சிற்றோடையில் மழைநீர் பெருக்கெடுத்து சுழித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. அதில் காய்ந்த மரக்குச்சிகளும் இலைகொடிகளும் சலசலத்தபடி மிதந்துகொண்டு போவதைப் பார்த்து குஞ்சுகள் அதன் பொந்து வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டன. அவற்றின் தாய்க்கிளி எங்கெல்லாமோ தொலைவில் பறந்து திரிந்து தட்டாங்காய், மிளகாய், நாவல்பழம் என உண்பதற்கு கொண்டுவந்து கொடுத்தது. 


குஞ்சுக்கிளிகள் சந்தோசமாக வளர்ந்துவந்தன. அதற்கு இறக்கைகள் முளைத்து பறக்கவேண்டிய நேரமும் நெருங்கி வந்தது. அன்றைக்கு தாய்க்கிளி குஞ்சுகளைப் பார்த்து, “குழந்தைகளே.. உங்களுக்கு நெய்த்தக்காளி பழங்களை கொண்டு வாரேன். ஆசையாய் தின்னலாம். அதுவரை கூட்டுக்குள்ளேயே விளையாடிக்கிட்டு இருங்கள்” என்று தன் இணையோடு வெகுதொலைவிற்கு பறந்து போனது. 


அவை இறக்கை தட்டிப்பறந்து தொடுவானத்திற்கப்பால் மறைவதுவரை பார்த்துக்கொண்டிருந்த குஞ்சுகள் கூட்டிற்குள் போய் இருந்துகொண்டன. எங்கிருந்தோ பறந்தவந்த மின்மினிப்பூச்சி கூட்டிற்குள் எட்டிப்பார்த்தது. கூட்டில் வெளிச்சம் படரவும் குஞ்சுகள் “நீ  யார்” என்று கேட்டது. 


“நான் உன் தாய்க்கிளியின் நண்பன். நான் வசிக்கும் மாமரத்திற்கு பழங்களை உண்ணவரும்போது எங்களுக்குள் நட்பு உண்டானது”


“நீ எங்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து பிரகாசமாய் ஜொலிக்கிறாய். எங்கள் கூடு  இப்பொழுது வெளிச்சத்தில் மிணுங்குகிறது. உன்னை எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இவ்வளவு நாட்களாக எங்கே போயிருந்தாய்”


“நாங்கள் குளிர்நேரத்தில் மண்ணுக்குள்ளே போய் இருந்துகொள்வோம். கோடை நேரத்தில்தான் வெளியே வருவோம்”


“அம்மா நெய்த்தக்காளி கொண்டு வாரேன் என்று போயிருக்கிறது. நீயும் இருந்து சாப்பிட்டுப்போ”


“அதெல்லாம் எனக்கு பிடிக்காது. நத்தை, புழு, பூச்சிகளைத்தான் சாப்பிடுவேன். சரி குழந்தைகளே.. பத்திரமாக இருந்துகொள்ளுங்கள். வேடர்கள் வரும் சத்தம் கேட்டது. அதுதான் உங்களை எச்சரிக்கை செய்ய வந்தேன். கூட்டுக்கு வெளியே எட்டிப்பார்க்காதீர்கள். பிடிச்சிட்டுப்போயிருவான். நான் வாரேன்” என்று மினுக்மினுக்கென பறந்து போனது. கூட்டுக்குள் லேசான இருட்டு படர்ந்தது. 


ஓடைக்கரையில் சிறுவர்களின் பேச்சு சத்தம் கேட்டது. மின்மினியின் எச்சரிக்கையை மறந்து கிளிக்குஞ்சுகள் பொந்துக்கு வெளியே வந்து எட்டிப்பார்த்தன. 


“ஏய்.. அங்கே பாரு. கிளிக்குஞ்சுகள்” மால்ராசுக்கு கையை நீட்டி உணர்த்தி பனைமரத்தின் பொந்தை காட்டினான் மல்லையா. குஞ்சுகளும் பயமறியாமல் குனிந்து கீழே பார்த்தன.

“அ..ய்.ய்.யா…” உற்சாகத்தில் ஆர்ப்பரித்தான் மால்ராசு.


சிறுவர்கள்  இருவரும் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். விடுமுறை நாள் என்பதால் காடை கதுவாலி பிடிக்க வந்தவர்கள் கிளிகளை பார்த்துவிட்டார்கள். மல்லையா சரசரவென மொட்டைப்பனையில் ஏறினான். தம் கூட்டைப் பார்க்க ஒருவன் ஏறுவதைப் பார்த்து கிளிகள் பொந்துக்குள் போய் ஒளிந்துகொண்டன. பாதிப்பனை உயரத்தில் இருந்த கிளிக்கூட்டில் கையைவிட்டு அந்தக்கிளிகளை பிடித்து டவுசர்பைக்குள் திணித்து மெதுவாக பனையைவிட்டு இறங்கினான். 

உள்ளங்கைகளில் குஞ்சுகளை எடுத்துவைத்து அதை மால்ராசுக்கு காட்டினான். அதன் இளம்பச்சை இறகுகளை நீவிவிட்டான். வளைந்து சிவந்த அலகை ஆட்காட்டிவிரலால் தடவிப்பார்த்தான். கிளிகள் இறக்கைகளை தட்டி பறக்க எத்தனித்தன. பொத்திப் பிடித்துக்கொண்டான். கிளிகள் ஒன்றும் செய்ய இயலாமல் மிரண்டுபோய் பார்த்தன. 

மல்லையா கிளிகளை வீட்டிற்கு கொண்டுவந்து ஒரு கம்பிவலைக்கூண்டிற்குள் அடைத்து கூரைவிட்டத்தில் தொங்கவிட்டான். பாசிப்பயறும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுபோய் “சாப்பிடு” என்று வைத்தான். கிளிகள் தன் தாய்தந்தையை நினைத்து கலங்கின. அவற்றின் கண்களில் பிரிவின் ஏக்கம் தெரிந்தது. மல்லையா வைத்த பயிரையும் தண்ணீரையும் முகர்ந்துகூட பார்க்கவில்லை. தன் பொந்துக்கூட்டில் இருந்தபோது பனையோலைகள் அசைந்து விசிறிய காற்று வருடிக்கொடுத்து உறங்கச்செய்ததை நினைத்துப் பார்த்தன. இப்போது கூண்டை தொங்கவிட்டிருந்த  வீட்டில் காற்று உள்ளே வராமலும் அடுப்பங்கரைப் புகை வந்து மண்டியும், மனிதர்கள் சப்தமாக பேசும் ஒலிகளும் அதற்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் கூண்டின் வலைக்கம்பிகளில் கொத்திக்கொத்தி சோர்ந்து போய்விட்டன. 


நெய்த்தக்காளிப்பழங்களை தேடிப்போன கிளிகள் தன் கூட்டிற்கு திரும்பி வந்தன. அதன் அலகுகளில் வரிவரியான கோடுகளுடன்  பழுப்பு நிறத்தொலிகள் மூடிய நெய்த்தக்காளிப் பழங்கள் வெளிர் ஆரஞ்சு வண்ணத்தில் பளப்பாய் இருந்தன. ஆவலாய் இரை கொண்டுவந்த கிளிகள் தன் குஞ்சுகளைக் காணாமல் பரிதவித்துப் போய் அந்தப் பனைமரங்களை சுற்றிச்சுற்றிப் பறந்தன. காடெல்லாம் வட்டமடித்துப் போய் தன் குஞ்சுகளை தேடித்தேடிப்பார்த்தன. பொழுது இருட்டும்வரை எங்கு தேடினாலும் கிடைக்காமல் துயரத்தோடு கூட்டிற்குத் திரும்பின. இரவெல்லாம் தூங்காமல் தன் குஞ்சுப்பறவைகளை நினைத்து கத்திக்கொண்டிருந்தன. தோலுரிந்த நெய்த்தெக்காளிப்பழம் கண்களை உருட்டிப்பார்த்து பேசியது. 


“கிளியே… நீ காடு மேடெல்லாம் பறந்து போய் தேடிப்பார்த்தாய். கொஞ்சம் ஊருக்குள்ள போய் பாரு. மனிதர்கள் யாராவது இங்கே வந்து பிடிச்சிட்டுப்போயிருப்பாங்க”


“பழமே… நீ சொல்வதும் சரிதான்” என்று கூட்டிலிருந்து தன் இணையோடு மறுபடியும் குஞ்சுகளைத் தேடிப்பறக்கும்போது பொழுது விடிந்திருந்தது. 

ஊருக்குள் போய் வீட்டுக்கூரைகளிலும் மரக்கிளைகளிலும் போய் உட்கார்ந்துகொண்டு ஜோடிக்கிளிகள் சத்தம் கொடுத்தன. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குஞ்சுகள் இது தன் தாய் கூப்பிடுவது போல் உள்ளதே என பதிலுக்கு “க்.கிய்.கிய்…”யென சத்தம் கொடுத்தன. 


“ஆஹா… தன்னோட குஞ்சுகள் இங்கேதான் இருக்கிறது” என சன்னல் வழியாக சத்தம்வந்த வீட்டிற்குள் எட்டிப்பார்த்தது. உள்ளே போய் கொக்கி போல் வளைந்த கால்நகங்களால் கூண்டின் கம்பிகளில் பிராண்டியது. குஞ்சுகள் பறக்கமுயன்று  முடியாமல் தன் அலகுகளால் தாய்க்கிளியை தொட்டுத்தொட்டுப் பார்த்தது. மனிதர்களின் நடமாட்டம் தெரியவும் பறந்துபோய் அருகிலிருந்த மரத்தில் போய் உட்கார்ந்த ஜோடிக்கிளிகளை குஞ்சுகள் ஏக்கத்தோடு பார்த்தன. அதன்பிறகான நாட்களில் ஆள்அருவமற்ற வேளைகளில் பழம், கொட்டைகள் என கொண்டுவந்து கொடுத்து தன் குஞ்சுகளோடு கொஞ்சநேரம் பேசிவிட்டுப் போனது. 


இப்போதெல்லாம் மல்லையா பெற்றோர் சொல்படி கேட்பதில்லை. அவனுக்கு சேட்டைகள் அதிகமாகிப்போனது என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் அவனை வெளியூரிலுள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து அங்கேயே மாணவர்விடுதியில் தங்கவைத்துவிட்டனர். மல்லையாவுக்கு அந்தப் புதிய இடம் பிடிக்கவேயில்லை. எப்போது பார்த்தாலும் பிரம்பை கையில் வைத்தபடி கண்டிப்பு காட்டும் ஆசிரியர்கள், திருக்கு மீசை உருட்டும் விழிகளுடன் இருக்கும் விடுதி வார்டன்களை பார்த்து தன் சுதந்திரம் பறிபோனதுபோல் உணர்ந்தான். சிநேகிதர்களை சேர்த்துக்கொண்டு சில்லான் பிடிக்கப்போக முடியலை, மரமேறிக்குரங்கு விளையாட முடியவில்லை என்று அந்நியப்பட்டுப்போய் ஒடுங்கிப்போயிருந்தான். வேகாத சாதமும் பிடிக்காத குழம்பும் அடிக்கடி வீட்டை ஞாபகப்படுத்தியது. 


புதிய இடத்தில் உற்சாகமின்றி இறுக்கமாய் நாட்கள் நகர்ந்து போனது. தான் மொட்டைப்பனையில் பிடித்து வந்து கூண்டில் அடைத்து வளர்த்த கிளிகளைப் பற்றி  இப்போது நினைவிற்கு வந்தது. 


பள்ளிக்கு காலாண்டுத் தேர்வுக்குப் பின்  விடுமுறை விட்டிருந்தார்கள். மகிழ்ச்சியாக வீட்டிற்குப் போனதும் நேராக கிளிக்கூண்டிற்கு அருகில்தான் போனான். கிளிகளுக்கு அழகிய பச்சை வண்ணத்துடன்  இறக்கைகள் முளைத்து நன்றாக வளர்ந்திருந்தன. அதன் மூக்கு கோவைப்பழமாய் சிவந்து  வசீகரம் செய்தது. “இன்று உங்களுக்கு விடுதலை” என்று மெல்ல கூண்டின் கதவுகளை திறந்தான். அந்த நேரத்தில் விருட்டென வெளியேறிய கிளிகள் இறக்கைகளை அசைத்துப் பறந்தன. அவை மேகாட்டு ஓடைக்கரை பனங்காட்டைப்பார்த்துதான் சப்தம் கொடுத்தபடியே சென்றன. பனங்காட்டிலிருந்து ஜோடிக்கிளிகள் எழுப்பிய சப்தம் எதிரொலியாய் கேட்டு காற்றோடு கலந்தது. மல்லையா கிளிகள் பறந்துசென்ற திசையை பார்த்து தன் கைகளை மடக்கி இறக்கைகளை அசைப்பதுபோல் தட்டிக்கொண்டிருந்தான்.

ஜெ.பொன்னுராஜ்
ஜெ.பொன்னுராஜ்

 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல்.

பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2


3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jan 17
Rated 5 out of 5 stars.

தனக்கு கஷ்டம் வரும் போது உள்ளுணர்வு சொல்வதை கேட்பவன் இறைவனின் குழந்தைகள்

Like

Guest
Jan 17
Rated 5 out of 5 stars.

நம் எது செய்தாலும் அது நம்முன் நின்று உணர்த்தும் .

Like

Guest
Jan 16
Rated 5 out of 5 stars.

சிறப்பு சார்

Like
bottom of page