top of page

அணில் செய்த உதவி


பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மாமரம் பல உயிர்களின் இல்லமாக இருந்தது.

அதில் ஒரு கிளையில் சின்ன குருவியும் அதன் குஞ்சுகளும் வாழ்ந்து வந்தன. அதே மரத்தில் கொஞ்சம் மேலே, சுறுசுறுப்பான ஒரு அணிலும் தன் வீட்டை கட்டியிருந்தது.

அணிலும் குருவியும் நண்பர்களாக இருந்தனர், குருவி 'கீச்... கீச்...' என்று பாடினால், அணில் வாலை ஆட்டிக் கொண்டு அதனுடன் விளையாடும்'.

ஒரு நாள் மதியம். திடீரென்று வானத்தில் கரு மேகங்கள் சூழந்தன. பலத்த காற்று வீசியது. மாமரத்தின் கிளைகள் எல்லாம் சுழன்று சுழன்று ஆடின.


'குருவியே! கூடு கவனம். காற்று அதிகமாக வீசுது.' என்று அணில் எச்சரித்தது.

குருவியும் தன் கூடு குலுங்குவது கண்டு பயந்தது. குஞ்சுகளும் அஞ்சி ஒடுங்கின.

அடுத்த நிமிடம், ஒரு பலத்த காற்று அடித்ததில் குருவியின் கூடு 'தொப்'யென்று தரையில் விழுந்தது. அதில் இருந்த இரண்டு சிறிய குஞ்சுகளும் பயந்து 'கீச்... கீச்...' என்று சத்தமிட்டன. குருவி பதறிப் போய் கீழே இறங்கி, 'அய்யோ! என் குஞ்சுகள்...' என்று அழுதது.


அந்த நேரம் அணில் விரைவாக கீழே பாய்ந்து வந்தது. 'குருவியே! கவலைப்படாதே... உன் குஞ்சுகளை நான் காப்பாத்துறேன்' என்று தைரியம் சொன்னது.


மழை கொட்டியது. காற்று இன்னும் நிற்கவில்லை. குச்சிகளாலும் பஞ்சாலும் ஆன கூடு நனைந்துக் கிடந்தது.


அணில் தன் கூர்மையான பற்களாலும் வலிமையான முன்னங்கால்களாலும் கூட்டை நன்றாகப் பிடித்து மரத்தில் ஏறத் தொடங்கியது.


குருவி கூடவே பறந்தது. 'மெதுவா... இங்கே வா... இந்த கிளைதான் பாதுகாப்பா இருக்கும்' என்று கூறி வழிகாட்டியது.


பல சிரமங்களுக்குப் பிறகு, அணில் கூட்டையும் குஞ்சுகளையும் பத்திரமாக கிளையில் வைத்தது.

அணிலுக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. குருவி நிம்மதியானது. 'நன்றி நண்பா! நீ செய்த உதவியால் என் குஞ்சுகள் காப்பாற்றப்பட்டன. இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்' என்றது குருவி கண்ணீர் விட்டது. கண்ணீர்த்துளிகள் மழைத்துளிகளோடு கலந்தன.

ஆனால் அணில் உதவி செய்த போது அதற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. கூட்டை தூக்கிச் செல்லும்போது அணிலின் வால் ஒரு கூர்மையான கிளையில் சிக்கி காயம்பட்டது. அணில் வலியால் கத்தியது. மரத்தில் சமநிலை வைத்துக் கொள்வது அதற்குக் கடினமானது.

'அய்யோ!... என் வால்!... வாலை அசைத்தாலே வலிக்கிறது. எப்படி நான் மரத்தில் ஓடப் போகிறேன்? என்று அணில் கவலைப்பட்டது.


அடுத்த நாள் அது வழக்கம் போல் மரக்கிளைகளில் ஓட முடியவில்லை. அப்படி ஓடாமல் இருந்தால் உணவு, தண்ணீர் எங்கே கிடைக்கும்?


அணிலின் நிலையைப் பார்த்து குருவி வருந்தியது. 'அணில் என் குஞ்சுகளைக் காப்பாற்றியது. இப்போ அது சிக்கலில் இருக்கிறது. நான் எப்படி உதவப் போகிறேன்?' என்று யோசித்தது.

அடுத்தநாள் காலை. குருவி அருகிலிருந்த வயலுக்குப் பறந்துச் சென்றது. ஒரு தோட்டத்திற்கும் சென்றது. தானியங்களையும் சிறு பழங்களையும் தன் அலகில் எடுத்துக் கொண்டு வந்தது.

அவற்றை அணிலின் அருகில் வைத்தது. 'நண்பா, நீ ஓட வேண்டாம், இங்கேயே ஓய்வு எடு. உனக்குத் தேவையான உணவுகளை நான் கொண்டு வந்து தருகிறேன்' என்றது குருவி.

அணில் ஆச்சரியப்பட்டது. 'நீ சின்ன பறவை! உனக்கும் உன் குஞ்சுகளுக்கும் உணவு தேவை. எனக்கும் சேர்த்து உழைக்க முடியுமா?' என்று கேட்டது.


குருவி சிரித்தபடி, 'நண்பர்கள் என்றால் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். நீ என் குஞ்சுகளைக் காப்பாற்றினாய். இப்போது நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன்.' என்றது. 

சில நாட்கள் கழிந்தன. குருவியின் உதவியால் அணில் ஓய்வெடுத்தது. அதனால் அணிலின் வால் குணமாகியது. மீண்டும் அது மரக்கிளைகளில் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கியது.


அந்த நாளிலிருந்து அணிலும் குருவியும் நெருக்கமான நண்பர்களானார்கள். எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர்.

சுகுமாரன்
சுகுமாரன்

1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
தேனி சுந்தர்
Jan 15
Rated 5 out of 5 stars.

சிறப்பு தோழர் வாழ்த்துகள்..

Like
bottom of page