top of page

வாஸா அருங்காட்சியகம் - ஸ்டாக்ஹோம், சுவீடன்


வாஸா - முதல் பயணத்திலேயே மூழ்கிப்போன கப்பல். முன்னூறு வருடம் மூச்சடக்கிய பின் முழுதாய் மீட்கப்பட்ட கப்பல். ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கடலோரக் குடிலில் கம்பீரமாய்க் குடியிருக்கும் கப்பல்.இந்தக் கப்பல் பிறந்த கதை, கடலில் மூழ்கிய கதை, மீட்கப்பட்ட கதை , தற்போதைய அருங்காட்சியக வாழ்க்கைக் கதை - எல்லாக் கதைகளையும் விரிவாய்ப் பார்க்கலாம்.கி. பி. 1624. ஸ்வீடனின் மன்னராக ஆட்சி செய்து கொண்டிருந்தவர் குஸ்தவ் II அடோல்ப் என்பவர். தனது பதினேழு வயதிலேயே மன்னரானவராம்.


பின்லாந்தும் ஸ்வீடனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மன்னர், நாடு என்றாலே போர்கள் தானே வரலாறு? குஸ்தவ் II-ம் அதற்கு விதிவிலக்கல்ல. அண்டை நாடான டென்மார்க், ரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் போர்களில் ஈடுபட்டார். இத்தனைக்கும் போலந்து நாட்டை ஆட்சி செய்தவர் இவரது உறவினரே. இருந்தாலும் மண்ணாசை யாரை விட்டது? அடிக்கடி போர்கள் புரிந்ததனால் படைகளும் கப்பல்களும் சேதமாயின. இருந்த கப்பல்களும் பழையதாய் இருந்தன. எனவே புதிதாகக் கப்பல் செய்ய மன்னர் உத்தரவிட்டார்.


ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் (Henrik Hybertsson) எனும் டச்சுக்காரர் கப்பல் கட்டுவதில் புகழ்பெற்றவராம். இரண்டு பெரிய கப்பல்களையும் ஏராளமான சிறிய ரகக் கப்பல்களையும் கட்டும்படி தளபதியிடமிருந்து உத்தரவு வரவும் கப்பல்கள் கட்டும் பணியினைத் தொடங்கினார். இரவும் பகலும் வேலைகள் தொடர்ந்தன.கப்பல்கள் செய்வதற்கு ஸ்வீடனின் காடுகளிலிருந்து சுமார் ஆயிரம் ஓக் மரங்கள் வெட்டப்பட்டன. ஓக் மரங்கள் சற்று எடை அதிகமானவை, உறுதியானவை. இரண்டு பெரிய கப்பல்களுள் ஒன்றினுக்கு வாஸா என்றும் மற்றொன்றிற்கு மூன்று கிரீடங்கள் (Tre Kronar) என்றும் பெயர் சூட்டப்பட்டது. வாஸா என்பது மன்னரின் பரம்பரையைக் குறிப்பது (Vasa Dynasty).


சுமார் நான்கு வருடங்களில் கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டன. வாஸா, ஸ்டாக்ஹோம் நகரக் கடற்கரையில் கம்பீரமாய் நின்றது. மரக்கப்பலில் வண்ணம் பூசப்பட்டது. கப்பலின் முகப்பில் மர வேலைப்பாடுகளாலான சிற்பங்கள் செதுக்கப்பட்டன.



இது ஒரு நான்கடுக்குக் கப்பல். கப்பலின் எடை ஆயிரத்து இருநூறு டன்கள். கப்பல் கடலின் காற்றில் கவிழ்ந்துவிடாமல் பாதுகாக்க (கப்பலைச் சமநிலைப்படுத்தும் எடைக் கற்கள் - Ballast) நூற்று இருபது டன் கற்கள். கப்பலின் இரு தளங்களில் ஆயுதங்களும் பிற போர்க்கருவிகளும் ஏற்றப்பட்டன. எழுபது மீட்டர் நீளம் கொண்டது. கப்பலின் தடித்த நடுப்பகுதி பதினோறு மீட்டர் அகலம் உடையது. நான்கு அடுக்குகளில் கீழ்தட்டில் உணவுப்பொருட்கள் அடுக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கை சுற்றி சிறியரக பீரங்கிகளைத் தாங்கும் மேடைகள் அமைக்கப்பட்டன. போர்வீரர்கள் படுத்து உறங்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இரு தளங்களையும் பயன்படுத்திக் கொண்டனராம்.கப்பலைச் சுற்றிலும் மர வேலைப்பாடுகளைக் கொண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை ஐநூறு இருக்குமாம். இப்படியாய் நான்கு ஆண்டுகளில் முழுமை பெற்ற இக்கப்பலை நீரில் மிதக்கவிட்டனர். அந்த நேரத்தில் மன்னர் போலந்து நாட்டின்மீது போர் புரியச் சென்றிருந்தார். அவருக்கு போரில் உதவி செய்ய ஆயுதங்களும் வீரர்களும் தேவைப் பட்டனர். வாஸா தயாராகி விட்டதா என்று கேட்டு விரைவாகக் கட்டி முடிக்கவும் ஆணையிட்டார். கப்பல் கட்டி முடித்து வெள்ளோட்டம் பார்க்கும் முன்னர் கப்பலை அனுப்ப மன்னர் மீண்டும் அவசரப் படுத்தினார்.


1628-ஆம் வருடம் ஆகஸ்ட் மாத மதிய நேரம் ஒன்றில் வாஸா கடற்பயணம் மேற்கொள்ளத் தயாரானது. இருநூரு படை வீரர்களையும் ஏராளமான ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு குண்டுகள் முழங்க தனது முதற்பயணத்தைத் தொடங்கியது. பயணம் மேற்கொண்ட சில நிமிடங்களில் பலத்த காற்று வீச ஆரம்பிக்க, காற்றில் நிலை கொள்ளாது தள்ளாடி கடலில் கவிழ ஆரம்பித்தது.கப்பலில் இருந்தவர்களுள் பலர் நீந்தித் தப்பித்தனர். சுமார் ஐம்பது பேர் மூழ்கி மாண்டனர். முழுவதுமாய் மூழ்கி சுமார் முப்பது மீட்டர் ஆழத்தில் புதைந்து போனது.


வாஸா மூழ்கியபின் அதனைத் தேடி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவுற்றன. அவ்வளவு எடையுள்ள கப்பலை மீட்பது சவாலான காரியந்தான். வாஸா மூழ்கி சுமார் முன்னூற்று முப்பது ஆண்டுகளுக்குப் பின்பே இம்முயற்சி செயல் வடிவம் பெற்றது. ஆன்டர்ஸ் ஃப்ரென்ஸீன் என்பவர் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவராவார். வாஸா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தபின் அதை எவ்வாறு மீட்பது என்பது குறித்து, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வகையில் திட்டமிட்டார். கடலுள் ஆய்வு செய்யும் இருவர் துணையுடன் வாஸா மூழ்கியிருக்கும் நிலை பற்றி ஆய்வு செய்தார். நல்ல வேளையாக வாஸா தலைகீழாய்க் கவிழாமல் நேராகவே கடலுக்குள் அமர்ந்திருந்தது.


எனவே கப்பலை அப்படியே தூக்குவது என முடிவானது. தூக்குவது என்ன பத்து கிலோவா? டன் கணக்கில் எடை. கப்பலைத் தூக்குகையில் முன்னூறு வருடங்களாய் கடல்நீரில் ஊறிய மரங்கள் உடையவும் வாய்ப்பிருந்தது. சற்றுக் கடினமான செயல்தான். செலவு அதிகம் வைக்கும் திட்டம் இது. அனைத்துச் செலவுகளையும் ஸ்வீடனின் கடற்படையும் ஒரு தனியார் நிறுவனமும் ஏற்றுக்கொண்டன. முதலில் கப்பல் அமர்ந்திருந்த கடல்தரையில் (கடல் மட்டத்திலிருந்து முப்பது மீட்டர் ஆழம்) ஆறு சிறிய சுரங்கங்கள் தோண்டப்பட்டன. அதாவது , தடிமனான வளையும் இரும்பு கம்பிகளை ஒருபுறம் செலுத்தி மறுபுறம் எடுத்து அப்படியே மேலே உயர்த்தும் திட்டத்துடன் இந்தத் துளைகள் இடப்பட்டன. தடிமனான இரும்புக்கம்பிகளை துளைகளில் செலுத்தி இயந்திரங்களின் உதவியுடன் சிறிது சிறிதாக கப்பல் மேலே உயர்த்தப்பட்டது. இந்தப்பணிகளெல்லாம் சுமார் ஐந்து வருடங்கள்( 1956 முதல் 1961 வரை) தொடர்ந்தன.


ஏப்ரல் 24, 1961. மூழ்கிய கப்பல் மீண்டும் மூச்சு வாங்க வெளியுலகம் வரும் நாள். இச்செய்தி உலகெங்கும் பரவிவிட செய்தியாளர்களும் பார்வையாளர்களும் ஸ்டாக்ஹோமை முற்றுகையிட ஆரம்பித்தனர். நாடெங்கும் இதே பேச்சு. ஸ்வீடனின் தொலைக்காட்சியும் இந்நிகழ்ச்சியை நேரடியாய் ஒளிபரப்பு செய்தது. சரியாய் காலை ஒன்பது மணிக்கு வாஸாவின் மேல்தளம் கண்ணுக்குப் புலப்பட ஆரவாரக்கூச்சல்களில் கடலே அதிர்ந்ததாம்.


படம்: 1961-ல் கப்பல் மீட்கப்பட்டு தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தபோது.


பின்னர் கப்பல் மூழ்கிய இடத்தைச்சுற்றிலும் சிதறிக்கிடந்த மரப்பலகைகள், ஆணிகள், இறந்தவர்களின் எலும்புகள் , சிதறிய ஆயுதங்கள் , உடைந்த சிற்பங்கள் முதலியன தேடி எடுக்கப்பட்டன.


கப்பலை மீட்டெடுத்த பின் அதைச் செப்பனிடும் வேலை ஆரம்பமானது. அவ்வேலை, கப்பலைத்தூக்கி எடுக்கும் வேலையை விடச் சிரமமானதாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் இருந்தது. இவ்வளவு ஆண்டுகள் கடல் நீரைக் குடித்த மரப்பலகைகள் , பல ஆண்டுகள் கெட்டுப்போகாதவாறு பதப்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. மரங்கள் கெடாதவாறு பாதுகாக்கும் பாலிஎதிலின் கிளைகால் எனும் வேதிப்பொருள் கப்பல் முழுதும் தடவப்பட்டது. மரங்கள் இற்றுப்போகா வண்ணம் இருக்க போரிக் அமிலம் கலந்த கலவையும் பூசப்பட்டதாம். உடைந்த சிற்பங்கள் மீண்டும் செப்பனிடப்பட்டு கப்பலில் பொருத்தப்பட்டன. தளர்ந்த ஆணிகள் முடுக்கப்பட்டன.செப்பனிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற தற்காலிகமாய் ஒரு இடத்தில் பார்வைக்கென வைக்கப்பட்டது. இப்பணிகள் எல்லாம் நிறைவடைந்தபோது 1990 ஆம் ஆண்டு பிறந்திருந்தது. பின்னர் ஸ்டாக்ஹோமின் யூர்காடன் (Djurgarten) எனும் தீவில் நிரந்தரமாய்க் குடியேறியது வாஸா.


சுவீடனில் நாங்கள் வசித்தபோது, 2004 ஆம் ஆண்டின் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஸ்டாக்ஹோம் பயணித்தோம். நாங்கள் வசித்தது லுண்ட் எனப்படும் தென்பகுதி நகரம். லுண்டிலிருந்து  ஸ்டாக்ஹோம் சுமார் ....வாஸா மியூசியத்தைப் பார்வையிடச் (நானும் எனது மனைவியும்) சென்றோம். ஸ்டாக்ஹோம் சென்றுவரத் திட்டமிட்டால், பயணத்தின் முதல் நிறுத்தம் வாஸா கப்பல் தான்.


வாஸா அருங்காட்சியகத்தில் நுழைந்ததும் மெல்லிய வெளிச்சம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. மெல்லிய வெளிச்சத்தைத் தொடர்ந்து செல்ல, பிரம்மாண்டமான கப்பல் எதிர்ப்பட்டது. கப்பலின் முகப்புப் பகுதியை அண்ணாந்து பார்த்ததில் கழுத்து வலித்தது. கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல்தளம் வரை , கப்பலின் ஒவ்வொரு பகுதியாய்ச் சென்று பார்ப்பதற்கு ஏழு தளங்கள். கப்பலின் முன்பகுதியில் மூக்கு போல் நீட்டிக்கொண்டிருந்த அலகு (Beak) அதில் ரோம் மன்னன் நீரோவின் உருவம் பொறித்த சிலை. தண்ணீரில் மூழ்கி இற்றுப் போயிருந்த அச்சிலையை மீண்டும் புதுப்பித்திருந்தார்கள். மன்னர் குஸ்தவ் இள வயதில் முடி சூட்டிக்கொள்வது போல் ஒரு சிலை. மரத்தில் இழைத்துச் செய்யப்பட்டிருந்த அனைத்து சிலைகளும் அதிசயமாய் இருந்தன. கப்பலின் மேலிரு தளங்களில் அமைக்கப்பட்டிருந்த பீரங்கி மேடைகளும் சுற்றிலும் அமைக்கப்பட்ட அறுபத்தி நான்கு துளைகளும் இருந்தன. கப்பல் மூழ்குவதற்கு இந்த ஈரடுக்குப் பீரங்கித் துளைகளும் ஒரு காரணம்.


அருங்காட்சியகத்தின் உள்ளே ஒரு திரையரங்கு. மணிக்கொருதரம் காட்டப்படும் குறும்படத்தில் வாஸாவை மீட்கப்பட்ட காட்சி முதல் அதைச் செப்பனிட்டு எவ்வாறு தற்போதுள்ள அருங்காட்சியகத்தின் வைக்கப்பட்டது என விரியும் காட்சி வரை விளக்கமாய்க் காணலாம். படம் சுவீடிய மொழியில் தான்; நல்லவேளையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு திரைமேல் சிவப்பு எழுத்துக்களில் ஓடுகிறது. மூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் காட்சிகளும் , கப்பல் மூழ்கிய இடத்தைச் சுற்றிலும் இறைந்து கிடந்த மரப் பலகைகளும் ஆணிகளும் பிற பொருட்களும் மீட்கப்பட்டு , எவ்வாறு அதே ஆணிகளைக் கொண்டு அப்பலகைகள் மீண்டும் பொருத்தப்பட்டன என்பதை விளக்கும் காட்சிகளும், கப்பல் மீண்டவுடன் அதனுள் குவிந்து கிடந்த சகதியை வெளியேற்றி, கப்பல் சுத்தப்படுத்தப்பட்டு , வேதிப்பொருட்கள் கொண்டு கப்பல் புதுப்பிக்கப்பட்ட காட்சிகளும் சுவையாய் இருந்தன.


நிஜக் கப்பலின் அருகே அதன் மாதிரி வடிவமொன்று சிறியதாய் வைக்கப்பட்டிருந்தது. கடலினடியில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு வகையான பொருட்களும் பார்வைக்குக்கிடைத்தன. கப்பலில் சென்ற போர் வீரர்கள் பயன்படுத்திய தோலாலான உடைகள் மற்றும் காலணிகள் , பீரங்கிகள் உபயோகப்படுத்திய பாத்திரங்கள் , போர்க்கருவிகள் என எண்ணிலடங்காப் பொருட்கள் அங்கே காட்சிக்குக் கிடைக்கின்றன.


"கப்பல் ஏன் மூழ்கியது?" என்ற கேள்விக்கு மியூசியத்தின் ஒரு சிறிய அறையில் விடை கிடைக்கிறது. அசையாப் படங்களை (Slide Show) ஒரு திரையில் காண்பித்து , அப்படத்திற்கேற்ப விளக்க உரை பின்னணியில் வழங்கப்படுகிறது. அறையிலுள்ள ஒலிபெருக்கிகள் ‘டால்பி’  ஒலிமுறையில் அமைக்கப்பட்டிருந்தன. கப்பல் மூழ்கியபோது ஏற்பட்ட விளைவினை நம் கண்முன் நிறுத்த, கப்பல் மூழ்குவது போன்ற ஒரு ஓவியமும் அதன் பின்னணியில் கப்பல் மூழ்கும்போது எழும் ஓசையை விட அதிக அதிர்வை ஏற்படுத்தும் இசையையும் தந்து பிரமிப்பு ஏற்படுத்தினார்கள். கப்பல் மூழ்கியபோது மன்னர் போலந்து நாட்டில் இருந்ததால் அமைச்சர் ஒருவரது தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு இதற்கான காரணம் ஆராயப்பட்டதாம். இயற்கையின் விளையாட்டு என ஒரு சிலர் எண்ணினர். எவரோ செய்த சதி என்று சிலர் சந்தேகித்தனர். கப்பலிலிருந்து தப்பித்தவர்கள், கப்பல் கட்டிய தொழிலாளர்கள், கப்பலைக் கட்டிய ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் என அனைவரும் விசாரிக்கப்பட்டனர். முடிவில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. யாரும் தண்டிக்கப்படவுமில்லை. பின் ஏன் கப்பல் மூழ்கியது? மன்னரின் விருப்பப்படி ஈரடுக்குப் பீரங்கித்துளைகள் கப்பலில் அமைக்கப்பட்டதால், அத்துளைகள் கப்பலின் கீழ்தளத்தில் சமநிலைப்படுத்தும் கற்கள் (Ballasts) நிரப்பும் இடத்தைப் பெரிதும் பாதித்தன. எனவே போதிய கற்கள் எடுத்துச் செல்லாமல் குறைவான கற்களே நிரப்பப் பட்டன. காற்று பலமாக வீசியதால் கப்பல் தனது எடையச் சமன் செய்து கொள்ள முடியாது கவிழ்ந்து விட்டது.


கப்பலின் அடிப்பகுதி முதல் மேல்பகுதி வரை ஒவ்வொரு தளமாய்ப் பார்த்து வியந்தோம். ஒவ்வொரு தளத்திலும் இது தவிர வேறு எதாவது காட்சியோ , குறிப்புகளோ அல்லது மீட்டெடுக்கபட்ட பொருட்களோ வைக்கப்பட்டு மேலும் சுவை சேர்த்தன. மூழ்கிய கப்பலை மேலே உயர்த்த கப்பலினடியில் துளைகள் இட்டு, வளையும் கம்பிகள் செலுத்தித் தூக்கியதைக் கண்முன் நிறுத்தும் ஒரு மாதிரியும் ஒரு தளத்தில் இருந்தது. கப்பலின் மீது செதுக்கிய சில சிலைகளையும் தனியாக ஒரு தளத்தில் காண முடிந்தது. சிற்பங்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.


மியூசியம் விட்டு வெளிவந்த பின்னும் வாஸாவின் பிரம்மாண்டம் கண்களுக்குள் புகுந்து தொடர்ந்து கொண்டேயிருந்தது.

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.

தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன.

வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’

 ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page