இலண்டனிலிருந்து அன்புடன் - 8
- பஞ்சுமிட்டாய் பிரபு

- Dec 15, 2025
- 2 min read

Nina Peanut is Amazing – ஒரு சிறந்த Middle Grade Graphic Novel
காமிக்ஸ் புத்தகங்கள் என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? விதவிதமான வண்ணங்கள், அழகான ஓவியங்கள், குட்டி குட்டி வசனங்கள்—இதெல்லாம் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் தரும். காமிக்ஸ் உலகம் வளர வளர Graphic Novel எனும் தனிப்பிரிவும் உருவாகியுள்ளது.
அப்படிப்பட்ட Graphic Novel களில் ஒன்றாகும் “Nina Peanut is Amazing”. 9 முதல் 12 வயதினருக்கான Middle Grade புத்தகம் இது. அயர்லாந்தைச் சேர்ந்த சாரா பௌவி (Sara Bowie) இதன் எழுத்தாளரும் ஓவியரும் ஆவார்.
12 வயதான நீனா (Nina Peanut) இந்தக் கதையின் நாயகி. நீனாவின் நெருங்கிய நண்பன் ப்ரேன் (Brain)—நீனா என்ன செய்தாலும் அவன் எப்போதும் ஆதரவாக நிற்பான். நீனா தனக்கென ஒரு யூட்யூப் சானல் வைத்திருக்கிறாள். அவள் உருவாக்கும் வீடியோக்களுக்கு ப்ரேன்தான் காமெரா மேன். அந்த வீடியோக்களுக்கு விருப்பக்குறி(Like) இடுவதும் அவன்தான்.
நீனாவின் வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவியான மேகனும் சொந்தமாக யூட்யூப் சானல் வைத்திருக்கிறாள். சானலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் இருப்பதால், மேகன் தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராகவே நினைப்பாள். அதனால் சக நண்பர்களை எல்லாம் நன்றாக வேலை வாங்குவாள். நீனாவையும் ப்ரேயினையும் நண்பர்களாகச் சேர்த்துக்கொள்ள மாட்டாள்.
அந்த நேரத்தில்தான் ஆசிரியர், பள்ளியில் நடக்கவுள்ள ஆண்டு விழாவிற்காக மாணவர்களைச் சிறுசிறு குழுக்களாகப் பிரிக்கிறார். அதில், நீனா மற்றும் மேகன் இருவரும் ஒரே குழுவில் சேர்த்தப்படுகிறார்கள். நீனா மற்றும் மேகன் இருவருக்கும் இடையில் பிறக்கும் போட்டி, பொறாமை, சண்டை, பின்னர் உருவாகும் நட்பு — இப்படிப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளின் மூலம் இந்தக் கதை முன்னேறுகிறது.
வழக்கமான காமிக்ஸ் பாணியைப் போல இல்லாமல், இந்தப் புத்தகத்தில் பல புதிய முயற்சிகளைக் காணலாம். குறிப்பாக, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாயகி நீனா தனக்கே உரிய சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்துவது மிகவும் புதுமையாக இருந்தது.
மேலும், யூட்யூப் வீடியோ இந்தக் கதையின் முக்கிய அம்சமாக இருப்பதால், அதில் உள்ள சிறிய விவரங்களையும் ஆசிரியர் அழகான ஓவியங்களாக வடிவமைத்திருக்கிறார். இந்தச் சிறு சிறு காட்சிகள் கூட வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
நெருங்கிய நண்பனிடம் காரணமின்றி விலகிச் செல்வது, புதிய நண்பர்களுடன் கலவையில் நாமும் மாறிப்போகும் தருணங்கள், நாம் “bossy” ஆக நடந்துகொள்ளும் நேரங்களை புரியாமல் இருப்பது—இப்படி குழந்தைகளின் உண்மையான மனநிலைகளை மிக அழகாக ஆசிரியர் கதையில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த புத்தகத்தை வாசிக்கும் போது சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாது. சில இடங்களில் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்!
நாங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாசித்து மகிழ்ந்தோம். உங்களும் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் குடும்பத்துடன் வாசியுங்கள்! வாசித்துவிட்டு உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிருங்கள்!
தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.





Comments