top of page

லண்டனிலிருந்து அன்புடன் - 9

புத்தாண்டில் குதூகலமான புத்தகப் பயணம்: காத்தரீன் ரெய்னருடன்...



குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களில் அதுவும் குறிப்பாக படக் கதைப் புத்தகங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கே ஓவியர்கள் கதைகளுக்குப் படம் வரைவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் தாங்களே எழுதுகிறார்கள்.


தமிழில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளுக்கே ஓவியர்கள் படங்கள் வரைகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில், ஓவியர்கள் பலரும் எழுத்தாளர்களாகவும் இருக்கின்றனர். படக் கதைகள் உருவான காலம் முதல் இன்று வரை, ஓவியர்கள் குழந்தைகளுக்காக எண்ணற்ற புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இந்தக் கதைகளில் படங்களும் வார்த்தைகளும் ஒன்றோடொன்று சேர்ந்து, குழந்தைகளின் கற்பனை உலகை இன்னும் விரிவாக்குகின்றன.


ஓவியர்களே எழுத்தாளர்கள் என்பதால், பல புதிய முயற்சிகளை அவர்கள் ஓவியங்களிலும், எழுத்தோவியங்களிலும், வடிவமைப்பிலும் செய்ய்கிறார்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவரான, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காத்தரீன் ரெய்னர் (Catherine Rayner) அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.


சமீபத்தில் நான் நூலகம் சென்ற போது, காத்தரீன் ரெய்னர் அவர்களின் Ernest என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எர்னஸ்ட் என்று பெயரிடப்பட்ட மூஸ் மான் (moose) பற்றிய கதை. எர்ன்ஸ்ட் அளவில் மிகவும் பெரிய விலங்கு. நம்மூர் எருமை மாட்டைவிட பெரியது என்று வைத்துக்கொள்ளலாம். அதனால், அது புத்தகத்தினுள் வர முடியாமல் தவிக்கிறது. ஆனால் எப்படியாவது புத்தகத்தினுள் வந்து குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று அது ஆசைப்படுகிறது.


எர்னஸ்ட்டுக்கு சிம்பக் என்ற அணில் நண்பன் இருக்கிறது. அதனிடம் சென்று யோசனை கேட்கிறது. சிம்பக், “குனிந்து பாரு”, “வளைய்ந்து பாரு” என்று சொல்கிறது. எர்னஸ்ட் எல்லாவற்றையும் முயற்சி செய்கிறது. ஆனால் எது செய்தாலும், அது புத்தகத்தினுள் வர முடியுமா? முடியாதல்லவா!


இறுதியில், எர்ன்ஸ்ட் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்பதை கடைசிப் பக்கத்தில் தான் பார்க்க முடியும். எப்படித் தெரியுமா? நீங்களே சற்று கண்களை மூடி யோசித்துப் பாருங்கள்…


இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், எர்னஸ்ட்டின் உடலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஓவியமாக இருக்கும். ஆனால் புத்தகத்தின் கடைசி பக்கத்தில், பெரிய அளவிலான ஒரு பக்கத்தை எட்டாக மடித்து வைத்திருப்பார்கள். அதை விரித்தால், எர்னஸ்ட்டின் முழு ஓவியம் தெரியும்!


இப்போது புரிகிறதா? எர்னஸ்ட் என்ற பெரிய மிருகம் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்று?


இப்போது, ஓவியர் காத்தரீன் ரெய்னர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அவர் ஸ்காட்லாந்தின் முக்கிய நகரமான எடின்பராவைச் சேர்ந்தவர். இவரது முதல் படக் கதைப் புத்தகமான Augustus and His Smile 2007ஆம் ஆண்டில் வெளியானது.


அதன் பிறகு Harris Whose Feet Are Too Big, Abigail, a Giraffe Who Loves Counting, Iris and Isaac போன்ற பல புத்தகங்களை அவர் எழுதியும் வரைந்தும் உள்ளார். இவரது புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் விலங்குகளே.


அது பற்றி அவர் சொல்வது என்ன தெரியுமா?


“விலங்குகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என் ஓவியங்களிலும் பெரும்பாலும் விலங்குகளையே வரைகிறேன்,” என்று காத்தரீன் ரெய்னர் கூறுகிறார். இந்த ஆர்வம் அவருக்கு சிறுவயதிலிருந்தே இருந்ததாம்.

அவர் குழந்தையாக இருந்தபோது வீட்டில் பல செல்லப்பிராணிகள் இருந்தன. முயல், நாய், ஹாம்ஸ்டர், தங்கமீன் என்று நிறைய! அவர் 13 வயதாக இருந்தபோது, குதிரை ஒன்றை பராமரித்தாராம். இன்றும் அவரிடம் ஒரு குதிரை இருக்கிறதாம்.


புதிய ஒரு விலங்கு கதாபாத்திரத்தை வரைய வேண்டுமென்றால், அவர் முதலில் அந்த விலங்கை நன்றாக கவனிப்பாராம். முடிந்தால், நேரில் சென்று அந்த விலங்கைக் காண்பாராம். Augustus என்ற புத்தகத்துக்காக, அவர் ஒரு பூங்காவில் புலியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாராம்.


ஒரு கதாபாத்திரம் சரியாக உருவாகும் வரை, அவர் அதை மீண்டும் மீண்டும் பென்சிலால் வரைவாராம். சில நேரங்களில் 30 அல்லது 40 முறை வரை முயற்சி செய்வார்! பிறகுதான் அதற்கு வண்ணம் தீட்டுவார்.


அதுவே டிராகன் போன்ற கற்பனையான விலங்கு என்றால், இரண்டு-மூன்று விலங்குகளின் குணங்களை கவனித்து அதனை ஒன்று சேர்ப்பார். அதே போல், மிருகங்களுக்குத் தகுந்தாற் போல் liquid acrylic அல்லது water colour pencil crayon போன்ற முறைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டுவார்.


அவர் சொல்வது போல், நீங்களும் ஒரு விலங்கை கவனித்து பிறகு வரைந்து பாருங்களேன்!


சரி குழந்தைகளே! இந்தப் புத்தாண்டை நாம் ஒரு குதூகலமான புத்தகத்துடன் தொடங்கி இருக்கிறோம்.

2026 நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வாசிப்பு ஆர்வமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்.

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


பஞ்சு மிட்டாய் பிரபு
பஞ்சு மிட்டாய் பிரபு

தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page