அலெக்ஸாந்திரியா நூலகம்
- எழில் சின்னத்தம்பி

- Dec 15, 2025
- 3 min read

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியது எகிப்திய நாகரீகம். நைல் நதியின் இருமருங்கும் வளர்ந்த எகிப்திய நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருந்தது. சிலகாலம் பாரசீக ஆட்சிக்குள் சிக்கிய எகிப்தை மாவீரன் அலெக்ஸாண்டர் கி. மு. 332-ல் மீட்டுத் தனது இராச்சியத்தின் கீழ் கொண்டுவந்தான்; எகிப்திய அரசனாகவும் (ஃபாரோ) முடிசூட்டப் பட்டான். அலெக்ஸாண்டரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ரக்கோட்டிஸ் ஏரிக்கும் மத்தியதரைக்கடலுக்கும் நடுவே அமைந்த பூசந்தி நிலப்பகுதியில் கட்டப்பட்ட நகரமே அலெக்ஸாந்திரியா. கனோப்பஸ் என்னும் நைல் நதியின் கிளைநதி அங்கே ஓடிக்கொண்டிருந்தது. மேற்குப்பகுதியில் அமைந்த கடைசிக் கிளைநதி அது. சில வருடங்கள் கழித்து அலெக்ஸாண்டர் இறந்துவிட, அவன் வென்ற நாடுகளை அவனது தளபதிகள் பிரித்துக் கொண்டனர். எகிப்தின் ஆளுகை அலெக்ஸாண்டரின் ஒரு தளபதியான தாலமி-யிடம் வந்து சேர்ந்தது. தாலமியும் அவனைத் தொடர்ந்து வந்த தாலமி வம்சத்தினரும் சுமார் முன்னூறு ஆண்டுகள் எகிப்தை ஆட்சி செய்தார்கள் . மாசிடோனியர்கள் ஆண்ட எகிப்தின் தலைநகரமாக அலெக்ஸாந்திரியா விளங்கியது. தாலமி வம்சத்துக் கடைசி அரசர் கிளியோபாட்ரா.
போர்ப்படைகளையும், ஆயுதங்களையும் அரண்மனைகளையும் கட்டியதோடு மட்டும் அல்லாமல் மனித அறிவாலும் ஆராய்ச்சியாலும் பகுத்தறிக் கருவி கொண்டு கட்டப்பட்ட நகரம் அலெக்ஸாந்திரியா. கிரேக்கத்தில் எழுச்சி பெற்றிருந்த தத்துவக் கொள்கைகளையும் அறிவுசார் நூல்களையும் அறிந்திருந்த முதலாம் தாலமி (தாலமி சோட்டர்) அலெக்ஸாந்திரியாவையும் கற்றறிந்த அறிஞர்களால் நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். அலெக்ஸாண்டரும் தாலமி சோட்டரும் கிரேக்கத்தின் தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் பயின்றவர்கள். அரிஸ்டாட்டிலின் மறைவுக்குப் பிறகு அவரது சீடர் தியோஃப்ரேஸ்டஸ், அவரது கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். தாலமி சோட்டர் தனது மகனுக்கு ஆசிரியராக இருக்கும்படி தியோஃப்ரேஸ்டஸைக் கேட்க, அவர் அதனை மறுத்து, தனது சீடர் டெமிட்ரியஸை அலெக்ஸாந்திரியாவுக்கு அனுப்பி வைத்தார்.
‘உலகில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களும் அலெக்ஸாந்திரியாவில் இருக்க வேண்டும்’ என்பதே தாலமி சோட்டர் டெமிட்ரியஸிடம் இட்ட கட்டளை. கிரேக்கத்திலிருந்து பல்துறை அறிஞர்களும் அலெக்ஸாந்திரியாவுக்கு வருகை தர, ஆராய்ச்சிகளுக்கென ஒரு கல்விக்கூடம் போல ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் புத்தகங்கள் சேரத்துவங்கின. அந்தக் காலத்துப் புத்தகங்கள் ஓலை நாணல் செடியான பாப்பிரஸ் தண்டுகளால் செய்யப்பட்டு பாப்பிரஸ் சுருள் புத்தகங்களாக எழுதப்பட்டன. கிரேக்க மொழியிலேயே பெரும்பாலான நூல்கள் எழுதிவைக்கப் பட்டன. சில எகிப்திய மொழி நூல்களும் சேர்ந்தன. அரண்மனையை ஒட்டி அமைக்கப்பட்ட அந்த நூலகத்தின் உள்ளும் புறமும் எண்ணற்ற தூண்கள் விண்ணைத் தொட்டன. கடவுளரின் சிலைகள் ஒவ்வொரு மூலையிலும் அணிவகுத்தன. ‘பிப்லியோதெக்கை’ என்றழைக்கப்பட்ட முக்கிய அறைகளில், செவ்வக மர அலமாரிகளில் பாப்பிரஸ் சுருள்களில் புத்தகங்கள் சேமித்து வைக்கப் பட்டன. தனது காலத்திலேயே டெமிட்ரியஸ் இரண்டு லட்சம் பாப்பிரஸ் சுருள்களைச் சேர்த்து வைத்தார் இந்த நூலகத்தில்.
தாலமி சோட்டரின் மரணத்துக்குப் பிறகு மன்னனான அவனது மகன் இரண்டாம் தாலமி (தாலமி ஃபிலடெல்ஃபஸ்) நூலகத்தை விரிவுபடுத்தி, மேலும் அதிக நூல்கள் சேர்க்கத் தலைப்பட்டான். பிற நாடுகளிலிருந்து வந்த நூல்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டு, மூலப்புத்தகம் நூலகத்தில் வைக்கப்பட்டது; பிரதி எடுக்கப்பட்ட புத்தகம் திருப்பித் தரப்பட்டது. அந்த நூலகத்தில் ஏறத்தாழ நான்கு லட்சம் பாப்பிரஸ் சுருள்களுக்கும் மேல் இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்வி கற்பதற்கும் ஆராய்ச்சிகள் செய்வதற்கும் பல நாடுகளிலிருந்தும் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் குவிந்தவண்ணம் இருந்தனர். கிரேக்க இலக்கியம், தத்துவம், எகிப்திய வரலாறு, கணிதம், மருத்துவம், வானியல், புவியியல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வகைப்பட்ட நூல்கள் இங்கே இருந்தன.
மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த எகிப்திய வரலாறு மானெத்தோ என்பவரால் எழுதப்பட்டது. இன்றும் அது பயன்படுத்தப்படுகிறது. கணிதமேதை ‘யூக்லிட்’ வடிவியல், வட்டம், அளவியல், எண்கள், இருபடி மூலம், பரும வடிவியல் தோற்றங்கள் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதி வைத்தார். எரட்டாஸ்தெனிஸ் எனும் பல்துறை அறிவாளர் கணிதவியல், புவியியல் மற்றும் புவியளவீட்டியலில் ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் எழுதி வைத்தார். பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டுச் சொன்னவர் எரட்டாஸ்தெனிஸ் ஆவார். சைரீன் நகரத்திலிருந்து வந்த அறிஞர் கல்லிமாச்சஸ் இந்த நூலகத்தின் நூலகராக இருந்தபோது (கி.மு 240) இங்கிருக்கும் நூல்கள் அனைத்தையும் பற்றிய அட்டவணையை உருவாக்கி வெளியிட்டார்.

மருத்துவத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து உடலியல், உடற்கூற்றியலில் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துப் பதிவு செய்த ஹெரோஃபிலஸ் மற்றும் எராசிஸ்றேட்டஸ், இலக்கிய ஆய்வுகள் செய்து கவிதைகள், இலக்கிய நூல்கள் வெளியிட்ட அப்போலொனியஸ் மற்றும் அரிஸ்டார்சஸ், கிரேக்க மொழி இலக்கண ஆய்வுகள் செய்த அரிஸ்டோஃபேன்ஸ் என்று கணக்கிடவியலாத பல அறிஞர்களும் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்து வந்தனர். முன்னூறு ஆண்டுகளாக அலெக்ஸாந்திரிய நூலகம் அறிவுத்தேடல் செய்ய வந்த அனைவருக்கும் பயன்பட்டு வந்தது.
கி.மு. 48-ல் ரோமாபுரியின் ஜூலியஸ் சீஸர் அலெக்ஸாந்திரியாவைத் தாக்கியபோது, தனது கப்பல்களைக் காப்பாற்றுவதற்காக, துறைமுகக் கிடங்குகளில் தீவைத்தான். அந்தத் தீ அருகிலிருந்த கட்டடங்களுக்குப் பரவி, நூலகத்தின் காப்பகப் பகுதியில் இருந்த பெரும்பாலான பாப்பிரஸ் சுருள்களை எரித்து அழித்தது. இருப்பினும் நூலகம் தொடர்ந்து இயங்கியது. முன்னூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரோமாபுரியின் பேரரசன் ஆரெலியன், அலெக்ஸாந்திரியாவைக் கைப்பற்ற நடந்த போரில் நூலகத்தின் முக்கியக் கட்டடப் பகுதி சேதமடைந்து பெரும்பாலான நூல்கள் அழிந்து விட்டன. பதவியாசை பிடித்த அற்ப மனிதர்களின் செயலால் அற்புதமான புத்தகங்களும், வரலாறும், அறிவு நூல்களும் அழிந்து போய்விட்டன.
எத்தனையோ நூலகங்கள் பின்னர் வரலாற்றில் தோன்றிப் புகழ் பெற்றிருந்தாலும் உலகில் முதன்முதலில் தோன்றி எண்ணற்ற நூல்களால் நிரம்பியிருந்த அலெக்ஸாந்திரியாவின் நூலகத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கிறது.

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.
தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன.
வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’
‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி




Comments