புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 8
- புத்தகப் புழு
- Jan 15
- 2 min read

பொங்கலை ஏன் தமிழர் திருநாள் என சொல்றாங்க? அப்புறம் உழவர் திருநாள்னு சொல்றாங்க, ஆனா தமிழ்நாட்டுல எல்லாரும் இதைக் கொண்டாடுறாங்களே, ஏன்? அப்புறம் இன்னொரு கேள்வி ஜல்லிகட்டுல காளையை எல்லாம் துன்புறுத்துறாங்க, சிலர் காயமும் அடையுறாங்க. இப்படி ஒரு ஜல்லிக்கட்டை எதுக்கு நடத்தணும்?
- கி.தினேஷ்குமார், 9ஆம் வகுப்பு, அசோக் நகர், சென்னை
தினேஷ்குமார் வணக்கம். நான் புத்தகப் புழு பேசுறேன். பொங்கல் திருநாள் நேரத்துல நீங்க கேட்டிருக்கிற கேள்வி நல்லா இருக்கு. இதுக்கு நான் பதில் சொல்றதை விடவும், பேராசிரியர் தொ.பரமசிவனோட பதிலை சொன்னா சரியா இரக்கும்.
பேராசிரியர் தொ.பரமசிவன்னு ஒரு தமிழ்-பண்பாட்டு அறிஞர் இருந்தார். அவர் நம்முடைய பண்பாடு பத்தி நிறைய ஆராய்ச்சி செஞ்சு பேசியிருக்கார். எழுதியிருக்கார். பொங்கல், ஜல்லிக்கட்டு பத்தியெல்லாம் அவர் சிறப்பா குறிப்பிட்டு எழுதியிருக்கார். அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்:
தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப்பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்கு உரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.
பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் மிக விரைவாக வீட்டைச் சுத்தம் செய்து இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன் தைப்பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம்.
பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகளை (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) தமிழ்நாட்டில் ஒரு சாதியினரும், பெருங் கோயில்களும் காலங்காலமாக விலக்கி வைக்கப்பட்ட உணவு வகைகளாகக் கருதுகின்றன. மேற்குறித்த இரண்டு செய்திகளாலும் தைப் பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும் அது ஆரியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என்பதனையும் உணர்ந்துகொள்ளலாம்.
அதேபோல, ஜல்லிகட்டு என்பது ஒரு வேட்டை சமூகத்தை சார்ந்த விளையாட்டு. மாட்டின் திமிலைப் பிடித்துக்கொண்டு 30 அடிக்கு ஒருவர் ஓடினாலே அவர் வெற்றி பெற்றவர்தான். அவருக்குப் பரிசு உண்டு. இதில் மாடு அடக்குதல் என்பதைவிட மாட்டை அணைத்தல் என்பதுதான் சரி. இதை wild animal என்று யார் சொன்னது? ஜல்லிக்கட்டு மாடு என்ன காட்டிலா பிறந்து வளருது, அது வீட்டிலே பிறந்து மனிதனோடு வாழ்கிறது.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு, பண்பாடு, மரபு சார்ந்தது. இதில் மாட்டை துன்புறுத்துதல் என்பது இல்லை. ஜல்லிகட்டு மாடு வளர்ப்பவர்கள் யாரும் மாட்டுக்கறி சாப்பிடமாட்டார்கள். மேலும் ஜல்லிகட்டு மாடு யார் வயலிலும் போய் பயிர் பச்சையைச் சாப்பிட்டாலும், அதை யாரும் விரட்டக்கூட மாட்டார்கள்.
அயல் நாடுகளில் thanks giving day, harvesting day, easter day என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். இவை எல்லாம் அறுவடைத் திருவிழா தானே. நாம் வெப்ப மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம். மாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இது தமிழ்ப் பண்பாடு. நாம் விலங்குகளை, இயற்கையை, சூரியனை, நிலத்தை, நீரை வணங்குபவர்கள்.




Comments