top of page

புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 6

ree

மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள் என்று அறிவியல், தொல்லியல் அறிஞர்கள் சொல்வதாகப் படித்தேன். ஆனால், நாம் மாநிறத்திலும், சீனர்கள்-ஜப்பானியர்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், ஐரோப்பியர்கள்-வட அமெரிக்கர்கள் வெள்ளையாகவும் இருக்கிறார்கள். நாம் அனைவரின் மூதாதையரும் ஆப்பிரிக்கர்கள் என்றால், நாம் அனைவரும் கறுப்பாகத்தானே இருக்க வேண்டும். இது நம்புற மாதிரி இல்லையே?

கவின்மொழி, 10ஆம் வகுப்பு, திருநெல்வேலி


வணக்கம் கவின்மொழி, நான் புத்தகப்புழு பேசுறேன். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய மொராக்கோ பகுதியிலும், இரண்டு லட்சம்-இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய எத்தியோப்பிய பகுதி, இன்றைய தென்னாப்பிரிக்க பகுதியிலும் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்ஸின் (Homo sapiens) புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. அதேபோல் இன்றைய போட்ஸ்வானா, நமீபியா, ஸிம்பாப்வே ஆகிய பகுதிகளிலும் ஹோமோ சேப்பியன்ஸ் வாழ்ந்ததற்கான மரபணுத் தடயங்கள் கிடைத்துள்ளன. நாம் எல்லாரும் ஹோமோ சேப்பியன்ஸ்தான். ஹோமோ சேப்பியன்ஸ் நவீன மனித இனம் என அழைக்கப்படுகிறது.


இப்படி ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நவீன மனித இனம் 70,000 ஆண்டுகளுக்கு முன் வறட்சி, இயற்கை மாறுபாடுகளால் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டது. அப்போது அங்கிருந்து கால்நடையாகவே ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய கிழக்குப் பகுதிகள், பிறகு அங்கிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு மனிதர்கள் இடம்பெயர்ந்தார்கள்.


ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் ஒரேயடியாக வெளியேறி விடவில்லை. குழுகுழுவாகவே வெளியே வந்தார்கள். புதிய நிலப் பகுதிகளில் இந்த மனிதக் குழுவினர் வாழத் தொடங்கினார்கள். புதிய நிலத்தின் தட்பவெப்பநிலை, புவியியல் தன்மைகள் ஆப்பிரிக்காவைப் போல் இருக்கவில்லை. அவர்கள் குடியேறிய பகுதிகளுக்கு ஏற்ப மனிதர்கள் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படி வாழ்ந்தார்கள். ஒரு பகுதியின் தட்பவெப்ப நிலையும், புவியியல் தன்மைகள், அவர்கள் பார்க்கும் வேலைகள் போன்றவை அந்தப் பகுதி மக்களின் உடலமைப்பு, நிறம், முகத் தோற்றம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தக்கூடியவை. அப்படித் தகவமைத்துக்கொண்டால்தான் அந்தப் பகுதியில் மக்கள் வாழ முடியும். இப்படித்தான் நம்முடைய நிறம், உடலமைப்பு, முகத் தோற்றம் போன்றவை மாறின. பரிணாமவியல் கொள்கையின் ஒரு பகுதியாக தகவமைப்புக் கோட்பாடு பற்றி சார்லஸ் டார்வினும் விளக்கியிருக்கிறார்.


நட்சத்திரங்கள் எங்கோ தொலைவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரத்தில் இருந்து அவை மின்னுவது நமக்கு எப்படித் தெரிகிறது? முதலில் நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன, அதற்கு என்ன காரணம்?

ஆதிரை, 6ஆம் வகுப்பு, செங்கல்பட்டு


வணக்கம் ஆதிரை, நான் புத்தகப் புழு பேசுறேன். நட்சத்திரங்கள் கோடிக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ளன. பூமியின் மேலே உள்ள வளிமண்டலம் (காற்று) நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஓரிடத்தில் நிற்பதில்லை. அலைபோல் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் வழியாக ஊடுருவும் நட்சத்திர ஒளி, மின்னுவதுபோல நமக்குத் தோன்றுகிறது. உண்மையில் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. ஒளியை மட்டுமே வெளியிடுகின்றன. நம் தலைக்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தில் உள்ள காற்று இடையில் புகுந்து விளையாட்டு காட்டுகிறது. அப்போது மின்னுவதுபோலத் தோன்றுகிறது. நிஜத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. விண்வெளிக்குப் போய்விட்டால், மின்னாத நட்சத்திரங்களைப் பார்க்கலாம்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page