புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 5
- புத்தகப் புழு
- 4 days ago
- 1 min read

கடல் நீர் உப்புக் கரிக்குது. அதிலிருந்து தானே மேகம் உருவாகுது. ஆனா, மேகத்திலிருந்து கீழே விழுற மழை தண்ணி, உப்பா இல்லையே. அப்ப தண்ணில இருந்த உப்பு, எங்கே போச்சு?
-வா.சு.வர்ஷினி, மதுரை
வணக்கம் வர்ஷினி, நான் புத்தகப் புழு பேசுறேன்.
ஒரு விஷயத்துக்குப் பின்னாடி இருக்கிற காரணத்தைத் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு கேட்டிருக்கீங்க. மலைப்பகுதியில் ஆறுகள் சிற்றோடைகளாகத் தொடங்குகின்றன. அவை சமவெளி வழியாகப் பயணிக்கின்றன. இப்படிப் பாயும்போது, அத்துடன் நிறைய சிற்றாறுகள் கலக்கின்றன. பிறகு கடலில் சென்று அந்த ஆறு கலக்கிறது. இப்படிச் செல்லும்போது வழியில் உள்ள பாறைகள், மண்ணில் உள்ள கனிமங்கள், உப்பை ஓடை, சிற்றாறு, ஆறுகள் கரைத்து எடுத்துச் செல்கின்றன. காலம்காலமாக இப்படி அவை கடலில் சென்றுசேர்கின்றன.
ஆற்று நீரில் இருந்த கனிமங்களும் உப்புகளும் கடலில் சிறிதுசிறிதாகச் சேகரம் ஆகின்றன. அங்கிருக்கும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது. இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது, கடல் நீரில் இருக்கும் உப்பு ஆவியாகி மேலே செல்வதில்லை. அதற்கு எடை அதிகம். அதனால் உப்பு கடலிலேயே தங்கிவிடுகிறது. அதனால்தான் கடல்நீர் உப்புக் கரிக்கிறது. ஆற்றுநீரில் கனிமங்கள், உப்புகள் இருந்தாலும், அவற்றின் அளவு குறைவு, அதனால் உப்புக் கரிப்பதில்லை. வானத்தில் ஒன்றுகூடும் நீராவி குளிர்ந்து, மழை மேகம் ஆகிறது. அது மழையாகப் பொழியும்போது, உப்புக் கரிப்பதில்லை. ஏனென்றால், அதற்கு ஆதாரமாக இருந்த நீராவியில் உப்பு இல்லையே.
பாலூட்டிகள், பறவைகள் போன்றவற்றின் குஞ்சுகள், குட்டிகளுக்கு எல்லாம் தங்கள் பெற்றோர் யார் என்று தெரியும். மீன்களுக்கும் தங்கள் பெற்றோர் யார் என்று தெரியுமா?
-வெ.ரா.மகிழினி, திண்டுக்கல்
வணக்கம் மகிழினி, நான் புத்தகப் புழு பேசுறேன். நல்லா யோசிச்சிருக்கீங்க.
கடல், ஆறுகள், ஏரிகளில் இயற்கையாக வாழும் மீன்களைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன், மகிழினி. பாலூட்டிக் குட்டிகளுக்கு தங்கள் பெற்றோர் யார் என்று தெரியும். ஏனென்றால், தங்கள் குட்டிகளுக்கு முதலில் பாலூட்டியும், பிறகு அவை தன்னிச்சையாக இயங்கும்வரை நீண்ட காலத்துக்குப் பாலூட்டிகள் பராமரித்து வளர்க்கின்றன. இதனால் அவை பாதுகாப்பாக வளர முடிகிறது. குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்துப் பறக்கும்வரை பறவைகளும் வளர்க்கின்றன. அதேநேரம், மீன்களுக்குப் பெற்றோர் யாரென்று தெரியாது. பெரும்பாலான மீன்கள் அதுபோல் தங்கள் குஞ்சுகளை வளர்ப்பதோ, பாதுகாப்பதோ இல்லை. விதிவிலக்காக, கடல்குதிரை போன்ற சில மீன் வகைகள் குஞ்சுகளை வளர்க்கின்றன. பெரும்பாலான மீன் குஞ்சுகள் தாங்களாகவே இரை தேடி வளர்ந்துகொள்கின்றன. அதனால், அவற்றுக்குத் தங்கள் பெற்றோர் யார் எனத் தெரியாது.
-அமிதா
Comments