புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 7
- புத்தகப் புழு
- Dec 15, 2025
- 2 min read

1. ஏன் ஊர் ஊருக்கு வெயில், மழை என்று மாறிமாறி கிளைமேட் இருக்கு?
- ஆதிரன், 2ஆம் வகுப்பு, கோவில்பட்டி.
ஆதிரன் வணக்கம். நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்க கேட்டிருக்கிற கேள்விக்கான பதில் ரொம்பப் பெரிசு. அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். ஒரு நாளிலோ, சில நாட்களுக்கோ நீடிக்கும் வெயில், மழை, காத்து போன்றவற்றை Climate என்று சொல்லக் கூடாது. Weather-னுதான் ஆங்கிலத்தில் சொல்லணும். தமிழில் அதற்குப் பெயர் தட்பவெப்பநிலை. இந்த தட்பவெப்பநிலை ரொம்ப காலத்துக்கு எப்படி இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணினா, அதுதான் கிளைமேட் (காலநிலை). அதனால, ரெண்டு வார்த்தையையும் குழப்பிக்கக் கூடாது.
சரி, இப்போ உங்க கேள்விக்கு வருவோம். இயற்கைல நிறைய விஷயங்கள் சுழற்சியின் அடிப்படையில்தான் காலம்காலமாக நடைபெற்று வருது. பருவகால மாற்றமும் (Seasonal Cycles) அப்படிப்பட்டதுதான். பொதுவா கோடை காலம், மழைக் காலம், குளிர் காலம்னு மூன்று வகை பருவங்கள் நமக்கு வரும். இன்னும் தெளிவா சொல்லணும்னா, நமது முன்னோர்கள் காலங்களை ஆறா பிரிச்சிருக்காங்க. ஜனவரி மாசத்துல முன்பனிக்காலம் தொடங்கினா பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம், கார்காலம், கூதிர்காலம்னு (குளிர்காலம்) டிசம்பர் மாசத்துல முடியும்.
ஏன் இப்படி காலங்கள் வேறுபடுது? ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கிற நமது பூமி சூரியனை சுத்தி வருது. ஆனா, இப்படிச் சுத்தும்போது, அது சாதாரண பந்து மாதிரி சுத்தல. ஆரஞ்சுப் பழத்தோட நடுவுல ஒரு கம்பிய செருகி, அதை 23.5 டிகிரி சாய்வுக்கு சாய்ச்சா எப்படி இருக்கும்? பூமியும் அப்படித்தான் சாஞ்சுக்கிட்டே சூரியனை சுத்தி வருது. இப்படி சுத்தும்போது பூமி மேல இருக்கும் நிலப்பகுதிகள் சிலவற்றுக்கு, ஆண்டின் சில மாதங்களுக்கு சூரிய வெப்பம் கம்மியா போய் சேரும். இதனால அந்தப் பகுதிகள்ல குளிர் அதிகமா இருக்கும். அதேநேரம் சில பகுதிகள் மேல சூரிய ஒளி அதிகமாக படும். அப்ப அங்க வெப்பம் அதிகமா இருக்கும். பூமியின் வட பகுதிகள் குளிரா இருக்கும்போது, தெற்கு பகுதிகள் வெப்பமாகவும், பின்னர் அப்படியே தலைகீழா மாறியும் இருக்கும்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்துல இயற்கை நீர் சுழற்சி பற்றி படிச்சிருப்போம். அதாவது நீர்நிலைகள்ல இருக்கும் நீரை, வெப்பம் ஆவியாக்கும். இந்த நீராவி மேல போகும். அந்த நீராவி ஒன்னுசேர்ந்து மேகமாத் திரளும். மேகத்தில் நீராவி சுருங்கி மழைத்துளிகள் உருவாகும். மழையா பெய்யும். இதுவே பருவமழை காலம் என்றால் மழை அதிகமாகப் பொழியும்.
சரி அதுக்காக மழை, குளிர் காலத்துல வெயில் அடிக்காதா? அடிக்கும். அடிச்சாலும் வெயில் அதிகமா இருக்காது, வெயில் அடிக்கும் நாட்களும் இந்தக் காலத்துல குறைவா இருக்கும். சரி, கோடை காலத்துல மழை பெய்யாதா? அரிதா கோடை மழை பெய்யும். அதேநேரம் நிறைய நாள் வெப்பமா இருக்கும். நம்ம ஊரோட தட்பவெப்பநிலை குறிப்பிட்ட காலத்துக்கு வெப்பமாவும் குறிப்பிட்ட காலத்துக்கு மழையாவும் இருக்கிறதுக்கு அடிப்படைக் காரணம் பூமி சாய்வா இருக்கிறதுதான். அத்துடன் காத்து, மழை, பருவமழை, புயல் போன்றவையும் தட்பவெப்பநிலையை தீர்மானிக்கிறதுல தாக்கம் செலுத்துகின்றன. பூமியின் இயற்கைச் சமநிலை, இயற்கை சுழற்சிகள் தொந்தரவுக்கு உள் ஆகாம முறையா இருக்கிறப்ப, இதுல பெருசா எந்தப் பிரச்சினையும் வர்றதில்ல.
அதேநேரம், ஒரு நாள் மழையும் ஒரு நாள் வெயிலும் மாறிமாறிக்கூட வரலாம். ஒரு ஊருல மழையும், பக்கத்து ஊருல மழை இல்லாமலும் இருக்கலாம். மழை மேகங்கள் ஒன்றுதிரளும்போது அவை ரொம்பப் பெரிசா இல்லாவிட்டால் சூரிய வெப்பம், பெரிய காற்றடிக்கும்போது மேகம் நகர்ந்துசென்றுவிடும். அதேநேரம் மழை மேகம் ரொம்ப அடர்த்தியா இருந்தா, சூரிய வெப்பம், காற்றால ஒன்னும் செய்ய முடியாது.
காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் போன்றவை உருவாகும்போது நிறைய மேகங்கள் ஒரு பகுதில திரண்டுவிடும். சூரிய வெப்பமோ, சாதாரண காற்றோ அதை நகர்த்திவிட முடியாது. இதனால் அடுத்தடுத்து பல நாட்களுக்கு மழை பெய்யும். பக்கத்துப் பக்கத்து ஊர்கள்லயும் மழை பெய்யும். பல நாட்களுக்கு சூரிய வெப்பத்தையே பார்க்க முடியாமல் போகும்.




Comments