top of page

அறிவோ ஆளுமை -8

ree

நகுலன் :

தென்னைமரத்தில் ஏறலாம்.

தேங்காயைப் பறிக்கலாம்.


மாமரத்தில் ஏறலாம்.

மாங்காயைப் பறிக்கலாம்.


புளியமரத்தில் ஏறலாம்,

புளியங்காயைப் பறிக்கலாம்.


நெல்லிமரத்தில் ஏறலாம்.

நெல்லிக் காயைப் பறிக்கலாம்.


வாழைமரத்தில் ஏறினால்,

வழுக்கி வழுக்கி விழுகலாம் !


வழுக்கி வழுக்கி விழுகலாம்!


ரதி : 

அடடே! நகுலா! இது நம்ம சின்னப் பிள்ளையா இருக்கும் போது பாடுனது. அப்படியே ஞாபகம் வச்சிருக்கே?


நகுலன்:

ஆம்! இன்னும் ஒரு பாடல் இருக்கே!

மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம், 

சேலத்து மாம்பழம்.


ரதி :

நிறுத்துனதுக்கு அடுத்து மீதிய நான் பாடுறேன். 


அழகான மாம்பழம்

அல்வா போன்ற மாம்பழம்.

தங்க நிற மாம்பழம் 

உங்களுக்கு வேண்டுமா?

இங்கே ஓடி வாருங்கள்

 பங்கு போட்டுத் தின்னலாம்.


எப்படி எங்களுக்கும் ஞாபகம் இருக்குல்ல!


ஜோ :

வாவ்! என் குட்டி பாடகர்கள் என்ன அருமையாகப் பாடுறீங்க!

உங்க இருவருக்கும் இந்தப் பாடல்கள் யார் எழுதினார்னு தெரியுமா?


ரதி:

எனக்குத் தெரியாது அத்தை!

ஆனா  புத்தகத்தில் அந்தப் பாடலுக்கு கீழே 'அழ' ன்னு போட்டிருக்கும்.  என்னவோ பெயர் வரும் மறந்துட்டது அத்தை.


ஜோ :

அழ. வள்ளியப்பா! 


நகுலன்:

ஆமா அத்தை எனக்குப் புத்தகத்தில் படித்தது ஞாபகம் வந்துருச்சு. 

அழ. வள்ளியப்பா.


ரதி : 

அத்தை! அவரு இந்தப் பாட்டெல்லாம்  எங்கள மாதிரி சின்ன வயசா இருக்கும் போதே எழுதிட்டாரா?


ஜோ :

இந்தப் பாட்டெல்லாம் அவர் வளர்ந்து பெரியவர் ஆனதுக்கு அப்புறம்தான் எழுதினார். ஆனால், அவர் சிறுவயதிலிருந்தே பாடல் பாடும் திறமை பெற்றவர்.

எப்போதும் துருதுருவென்று சுறுசுறுப்பாக இருந்தவர்.

வீட்டில் சேட்டை செய்து எல்லாரையும் சிரிக்க வைப்பார்!


ரதி:

அப்படியா!  அப்போ நகுலனோட தம்பி வினய் மாதிரி அப்படின்னு சொல்றீங்க. அப்படித்தானே அத்தை! அவன் தான் எப்பப் பார்த்தாலும் ஏதோ ஒன்னு கிண்டல் பண்ணி பாட்டு பாடிக்கிட்டே எல்லாரையும் சிரிக்க வச்சுக்கிட்டே இருப்பான்.


நகுலன் :  

ஏன் உன்ன மாதிரி கூட சொல்லலாமே நீயும் எப்பவும் எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டுத் தானே இருக்கே?


ரதி :

 நான் எப்ப கிண்டல் பண்ணினேன். யாரக் கிண்டல் பண்ணேன். ஏதாவது பேசினா எனக்குச் சரியான கோபம் வந்துரும் நகுலன். 


ஜோ:  

சரி சரி உங்க சண்டையை விடுங்க. 


நகுலன் :

 சரி சரி நீ அப்படி எல்லாம் ஒன்னும் சண்டை போடல நல்ல பிள்ளைதான்.  அவர் எந்த ஊருங்க அத்தை?


ஜோ :

அவர் புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் என்ற ஊரில் 1922-ல் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார்.

அவருடைய முதல் கதை “ஆளுக்கு பாதி” என்ற பெயரில் வெளியானது.


நகுலன் :‌ 

என்ன வேலை செய்தார்?


ஜோ :

அவர் வங்கியில் வேலை பார்த்தார். 

அவர் குழந்தைகளுக்காக எத்தனையோ இதழ்களில் பணியாற்றினார்.

பாலர் மலர், டமாரம், சங்கு இதழ்களில் கௌரவ ஆசிரியராகவும்,

கோகுலம் இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.


ரதி:

அப்படின்னா அவர் குழந்தைகளுக்காக மட்டும் தான் எழுதினாரா?


ஜோ :

ஆம்! அவர் குழந்தைகளின் நலனுக்காகவே வாழ்ந்தார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். எளிமையும் இனிமையும் குழந்தைகள் சுலபமாகப் பாடுவதற்கு ஏற்ற இசையுடன் கூடிய பாடல்கள்.  அதுமட்டுமல்ல. 1950-ல் “குழந்தை எழுத்தாளர் சங்கம்” என்ற சங்கத்தையும் தொடங்கினார்.

அதின் முதல் தலைவர் வை. கோவிந்தன். பிறகு வள்ளியப்பா தலைவராக ஆனார். குழந்தை 

எழுத்தாளர் சங்கத்தின் மூலம்  ஏராளமான புதிய எழுத்தாளர்களை உருவாக்கினார்.


நகுலன் :

அப்படியா! அத்தை.


ஜோ :

கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். 300 எழுத்தாளர்கள் அந்தச் சங்கத்தின் மூலம் உருவாகியிருக்கிறார்கள். ஒரு வருடத்தில் 200 புத்த கங்களை வெளியிட்டிருக்கிறார்கள். 


ரதி : 

அடேயப்பா….அத்தை இப்பவும் அந்த சங்கம் இருக்கா? 

ஜோ இப்போ இல்ல. ஆனா தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பு 2021 இல் தொடங்கப்பட்ட து.  தற்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறார் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறார் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராகவும் தலைவராகவும் எழுத்தாளர் உதயசங்கர் உள்ளார். செயலாளராக எழுத்தாளர்.சாலைசெல்வம் இருக்கிறார். 


 நகுலன் :

அத்தை நான் கூட எழுதலாமா? 


ஜோ : 

தாராளமாக எழுதலாம்! இன்று தமிழில் ஏராளமான குழந்தைகள் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  புத்தக ங்களும்  வெளியிட்டிருக்கிறார்கள். கதை சொல்லிகளாகவும் குழந்தைகள்  இருக்கிறார்கள். 


ரதி : 

இரு நகுலன் அவரைப் பற்றி முழுவதும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். அத்தை, அவர் எழுதிய நூல்கள் எத்தனை?


ஜோ :

அவர் 50-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்!

அதோடு தொகுத்தும், மொழிபெயர்த்தும், பதிப்பித்தும் இருக்கிறார்.



ரதி:

அவருக்கு விருதுகள் கிடைத்ததா அத்தை?


ஜோ:

1963-ல் லக்னோவில் நடந்த அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில்

பதக்கமும் பாராட்டும் பெற்றார்.

அதோடு குழந்தை இலக்கிய முன்னோடி,

பிள்ளை கவியரசு, மழலைக் கவிச்சம்மல்உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

1982-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,

அவரை “தமிழ் பேரவை செம்மல்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது.


ரதி :

அருமை! அவரை சந்திக்கணும்னு தோணுது!


ஜோ :

அவர் இப்போது நம்மோடு இல்லை, இந்த ஆண்டு அவருடைய் 103 ஆவது பிறந்த நாள் நூற்றாண்டு. ஆனால் அவருடைய கதைகள்,

அவருடைய பாடல்கள் இருக்கின்றன. 

நீங்க இப்போ பாடினீங்களே அந்தப் பாடல்கள் வழியே  அவர் நம்மோடு இருக்கிறார்.


நகுலன்:

அப்படின்னா நாம் அவருடைய பாடல்களையும் கதைகளையும் மற்ற குழந்தைகளுக்குச் சொல்லணும்!

சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page