அறிவோம் ஆளுமை – 10
- சரிதா ஜோ

- Jan 15
- 3 min read
நம் குரலின் வலிமை – கிரேட்டா தன்பர்க்

நகுலன் : அத்தை நீங்க மழையில நினைச்சுட்டீங்களா? நல்லவேளை நாங்கள் குடை எடுத்துட்டு வந்தோம்.
ஜோ : ஆமாம். நனைந்து விட்டேன். இது மழைக்காலமே இல்லை. முன்பெல்லாம் மழைக்காலத்தில் தான் மழை வரும் ஆனால் இப்போது பருவ நிலை மாற்றத்தால் எப்போது மழை வருகிறது? எப்பொழுது வெயிலடிக்கிறது? என்றே தெரிவதில்லை.
ரதி : பருவநிலை மாற்றம் என்றால் என்ன?
ஜோ: பருவநிலை மாற்றம் என்பது நீண்ட கால வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு எரித்தல், காடழிப்பு, போக்குவரத்து, தொழில் மற்றும் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4) போன்ற வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல வெப்பத்தை அடைத்து, புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கின்றன. இதைத் தடுக்கத்தான் கிரேட்டா தன்பர்க் தன் எட்டு வயதிலிருந்து இப்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்
ரதி : கிரேட்டா தன்பர்க் இந்தப் பெயரை கேள்விப்பட்டது போல இருக்கிறதே! யார் அவங்க?
ஜோ : கிரேட்டா 2003-ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தவர்.
தாத்தா இயக்குநர் மற்றும் நடிகர்.
அப்பாவும் நடிகர்.
அம்மா சர்வதேச பாடகர்.
எட்டு வயதிலிருந்தே காலநிலை மாற்றம் பற்றி கற்றும், கேட்டும், உணர்ந்தும் வந்தார் கிரேட்டா.
அப்போது அவருக்கு எழுந்த முதல் கேள்வி என்ன தெரியுமா?
“இவ்வளவு பெரிய பிரச்சனைன்னா இதைக் காப்பாற்ற யாரும் ஏன் முயற்சி எடுக்கல?”
அந்தக் கேள்விதான் அவரைப் போராட்டத்துக்குக் கொண்டு வந்துச்சு.
நகுலன் : எப்படிப் போராடினார்கள்?
ஜோ : பள்ளிக்குப் போக வேண்டிய வயசுல வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில்
ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு பதாகையை தாங்கிக் கொண்டு நின்னாங்க. அதுவும் தனியாக.
யாரும் சேரல. உலகம் கவனிக்கல. ஆனா அந்த ஒற்றைக் குழந்தை நின்னது இன்னிக்கு
“Fridays for Future” என்னும் உலகளாவிய போராட்டமாக மாறிடுச்சு. சென்னையில் கூட அந்த போராட்டம் நடந்தது.
ரதி : என்னென்ன பிரச்சனைகளுக்காக போராடினார்?
ஜோ : காலநிலை மாற்றத்திற்கு எதிராக. இயற்கையை அழிக்கும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக.“இது இயற்கை சீற்றம் இல்லை. அரசியல் தலைவர்களின் தவறான கொள்கைகள்தான் காரணம்" என்றார்.வெள்ளம், வறட்சி காரணமாக உணவு மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
நோய்கள் பரவுதல், தீவிர வெப்பம் போன்றவை. பேரிடர்கள் மற்றும் விவசாய பாதிப்புகளால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்றார்.
பேசுறதோட நிறுத்தல. வாழ்க்கையிலேயே மாற்றம் கொண்டுவந்தாங்க.
வீட்டிலிருந்து ஆரம்பிச்சாங்க. அம்மாவும் துணை நின்னாங்க.
நகுலன் : நான் மட்டும் பள்ளிக்கூடம் போகாம இப்படி செஞ்சிருந்தா அவ்வளவுதான். எங்க அம்மாவும் அப்பாவும் என்னை என்ன செய்திருப்பாங்க என்றே தெரியாது.
ரதி : சரியாகச் சொன்னாய் நகுலா. நம்ம அம்மா அப்பாக்களைப் பொறுத்த வரைக்கும் பள்ளிக்கூடம் போகணும். படிக்கணும். மார்க் வாங்கணும். அவங்க கவலை எல்லாம் பக்கத்து வீட்டுக்காரங்க பசங்களை விட சொந்தக்காரங்க பசங்களை விட நாம நல்லா படிக்கணும். என் பொண்ணு இந்த காலேஜ்ல படிக்கிறாள். அந்த காலேஜ்ல படிக்கிறாள்னு பெருமை பீத்தனும் அவ்வளவுதான்.
நகுலன் : அவங்க அம்மா எப்படித் துணை நின்னாங்க?
ஜோ : அம்மா மெலினா சர்வதேச பாடகர். விமானம் பறக்கும் போது வெளிவிடும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு என்று தெரிஞ்சதும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை நிறுத்திட்டாங்க.இந்தக் குடும்ப மாற்றம்தான் கிரேட்டாவுக்கு வீதிகளுக்கு வந்து போராடும்
மன வலிமையைக் கொடுத்தது.
2019-ல்ஜெர்மனியில் உள்ள ஹாம்பாக் காடுகள் நிலக்கரி சுரங்கத்துக்காக அழிக்கப்படும்போது
அதை எதிர்த்து குரல் கொடுத்தாங்க.
விமானங்களால் வெளிவரும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் எவ்வளவு ஆபத்து என்பதை
ஸ்வீடனில் பிரச்சாரம் செய்தாங்க.அதன் விளைவாக அந்த ஆண்டு ரயில் பயணிகள்
8 சதவீதம் அதிகரித்தது. பல நாடுகளுக்குச் சென்று உரையாற்றியதோடு ஐநாவிலும் இது பற்றிப் பேசினார்.
ரதி : கிரேட்டா தன்பர்க் அம்மாவுக்கு ஒரு சல்யூட். எனக்கு ஒரு சந்தேகம். பல நாடுகளுக்குச் செல்ல விமானத்தில் தானே அவர் பயணித்திருக்க வேண்டும்?
ஜோ : ரதி நீ சரியாக கவனித்திருக்கிறாய்.
ஐநாவில் பேசுவதற்காக ஸ்வீடனிலிருந்து அமெரிக்கா படகிலேயே போனாங்க.
துளியும் புகை வராத சோலார் படகு. அமெரிக்கா, தென் அமெரிக்கா, பிரேசில் எல்லா இடங்களுக்கும் அதே முறையில்தான் பயணம் செய்தார். உன்னோட சந்தேகம் தீர்ந்து போச்சா?
ரதி : தீர்ந்து போச்சு அத்தை. ஆனால் இன்னொரு சந்தேகம். அவங்க ஏதாவது புத்தகம் எழுதி இருக்காங்களா?
ஜோ : “Scenes from the Heart” என்ற நூலைக் கிரேட்டா குடும்பமே சேர்ந்து எழுதியது.
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரோட உரைகளும் நூலாக வெளியிட்டிருக்கிறார்.
அவற்றிலிருந்து வரும் பணத்தை காலநிலை போராட்டத்துக்கே செலவழிக்கிறாங்க..
ரதி : உலக தலைவர்களை எல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார். இவருக்கு எதிர்ப்புகள வரவில்லையா?
ஜோ : வராமல் இருக்குமா? ஏராளமான எதிர்ப்புகள் இன்றும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சில அமைப்புகள்.
“மன வளர்ச்சி குன்றிய குழந்தை” அதனால்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறது என்றும் அவர்களுடைய பெற்றோர்களின் வளர்ப்பு சரியில்லை. அதனால் தான் உலகத் தலைவர்களை நோக்கி சற்றும் மரியாதை இல்லாமல் கேள்வி கேட்கிறது என்றும் கூடப் பேசினார்கள்.
ஆனா அவங்க தைரியமா க நின்னாங்க.பின்வாங்கல.
“இப்போதுதான் சத்தமாக பேச வேண்டிய நேரம். நம் குரல்களை ஒடுக்க சத்தமில்லாமல் வேலை நடக்கிறது.”
“நீங்கள் வயதால் இறக்கிறீர்கள். நாங்கள் காலநிலை மாற்றத்தால் இறக்கப் போகிறோம்.”
“அறிவியலுக்கு செவிமடுங்கள். எங்களுக்கு துரோகம் செய்தால் நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்.” என்று உரக்கப் பேசினார்.
ரதி : மனவளர்ச்சி குன்றியவர் என்று ஏன் அவரை கூறினார்கள்?
ஜோ : கிரேட்டாவுக்கு இருந்தது ASD. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் என்பார்கள். ஆட்டிசம் என்பது மனநோய் அல்ல. மூளை தகவல்களை செயல்படுத்தும் முறை சற்றே வேறுபடும் அவ்வளவே. சிந்தனை, கவனம், உணர்வு வெளிப்பாடு ஆகியவற்றில் தனித்தன்மை இருக்கும். கிரேட்டா துன்பெர்க் தன்னுடைய ஆட்டிசத்தை “Superpower” என்று பலமுறை கூறியுள்ளார்.
நான் விஷயங்களை கருப்பு, வெள்ளை போலத் தெளிவாகப் பார்க்கிறேன் தவறு தவறாகவே தெரியும் அதனால் சமரசம் செய்ய முடியாது என்கிறார்.
ஆட்டிசம் அறிவுக் குறைபாடு அல்ல. ஆட்டிசம் உள்ளவர்கள் பலர் அறிவாற்றல்,படைப்பாற்றல் மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றில் முன்னணி மனிதர்களாக இருக்கிறார்கள் என்பதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். கிரேட்டா ஒரு பெண் குழந்தை இல்லை. ஒரு எச்சரிக்கை.
நகுலன் : உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இவ்வளவு செய்திருப்பவருக்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்குமே?
ஜோ : ஆம், அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இவருடைய பெயரும் இடம் பெற்றிருந்தது. 2018 டைம் இதழ் தேர்ந்தெடுத்த உலகின் 25 தலைசிறந்த இளைஞர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது.
அதே ஆண்டு டைம் இதழ் முகப்பு அட்டையில் “அடுத்த தலைமுறை தலைவர்” என்ற தலைப்பிட்டு அவருடைய புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டிருந்தது.
பிரிட்டன் இதழில்
“மாற்றத்திற்கான சக்திகள்” பட்டியலில் இடம இவரும் இடம் பெற்றிருந்தார். ஸ்வீடன் தன் நாட்டின் உயரிய விருதைக் கொடுத்து இவரைக் கௌரவப்படுத்தி இருக்கிறது.
ஜோ : ஒரு தலைமுறையின் குரலாக கிரேட்டா தன்பர்க்கின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ரதி : கிரேட்டா இஸ் தி கிரேட். நகுலா! இனிமேல் நாமும் கேள்வி கேட்போம்.
நகுலன் : நாம் மட்டுமல்ல நம் நண்பர்களையும் இணைத்துக் கொள்வோம். இந்தப் பிரச்சனைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு பிரச்சனைக்கும் குரல் கொடுப்போம். பயப்படாமல் தைரியமாக துணிந்து கேள்விகளைக் கேட்போம்.
ஜோ : மகிழ்ச்சி குழந்தைகளே! உலகின் மிக வலிமையான குரல் உங்களுடையதுதான்.

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.




Comments