top of page

மீன்காட்டி!

ree

கிழவரும் அவர் பேரன் வேலனும் அந்தக் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.


ஊருக்கு அருகே உள்ள குளங்களில் தண்ணீர் வற்றிவிடவே . மீன் பிடிப்பதற்காகத் தூரமாக உள்ள அந்தக் குளத்திற்கு வந்திருந்தனர். சலனமற்றிருந்த தண்ணீரில் தூண்டில் விழும் போது மட்டும் 'சளக்'கென்ற சத்தத்துடன் நீரலைகள் வட்டமாக விரிந்து விரிந்து அகன்று சென்றுகொண்டிருந்தன.


கிரிக் ஈ கிரிக் ஈ.


கரையில் இருந்த மரக்கிளையிலிருந்து ஒரு பறவை நீட்டிக் கத்தியது; பின், சடாரெனப் பாய்ந்து, கிழவரின் அருகில் வந்து அமர்ந்து, தத்தித் தத்திச் சென்று மேலே பறந்தது; அடுத்த கிளையில் அமர்ந்து அதே போலக் கத்தியது.


"வேலா, ஒரு கல்லை எடுத்துப் போட்டு அந்தக் குருவியை விரட்டு. சும்மா சும்மா வந்து இம்சை செய்யுது.ஏற்கெனவே மீனு கெடக்காமெ வருத்தமா இருக்கு. இது வேற கெடுத்துட்டு இருக்கு.''


குளத்தில் பாய்ந்து அல்லிப்பூக்களைப் பறித்து வந்து விளையாடிக்கொண்டும், அல்லித்தண்டை 'ஸ்ட்ரா' போல வைத்துக் குளத்து நீரை உறிஞ்சிக் குடித்துக்கொண்டுமிருந்த வேலன். தாத்தாவின் அருகில் வந்தான்..


வேண்டாம், தாத்தா.குருவி பாவம்,பாக்குறதுக்கு ரொம்ப நல்லாருக்கு. அதைப் போய் அடிக்கச் சொல்லுறியே!" என்றதும் கிழவர் தூண்டிலைக் கரைமீது வைத்துவிட்டு, "நீ நான் சொன்னதை என்னைக்கித்தான் கேட்டே...?" என்று அலுத்துக் கொண்டார்.


தூரத்தில் குளத்தில் அல்லிக்கொடிகளுக்கு இடையில் ஒரு சிறுவன் முங்கி முங்கிக் கிழங்கு எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தார். மறுபடியும் அந்தப் பறவை அவர் அருகில் வந்து அமர்ந்தது.


அதன் தலை கோலிக்குண்டு அளவில் இருந்தது. மரங் கொத்தி போல அலகும். நீண்ட கால்களும், உடல் சாம்பல் நிறத்திலும், அடிவயிறு வெள்ளையாகவும். இறக்கை வால் உடலைவிட நீண்டும் இருந்தன.


கிழவர் எழுந்து ஒரு கல்லை எடுத்தார்.கிழங்கு எடுத்துக்கொண்டிருந்த சிறுவன் அதைப் பார்த்ததும் வேகமாக நீந்திக் கரையேறி ஓடி வந்தான். "சாமி சாமி, குருவிய கல்லாலே அடிக்காதீங்க. அது ஒங்களுக்கு நல்லதுதான் செய்ய வந்திருக்கு,'' என்று கூறினான்.


அவன் கோவணம் மட்டும் தரித்திருந்தான்.தலை,பரட்டை யாக இருந்தது. தலைமுடிகளில் நீர்த்துளிகள் முத்துகளாய் மின்னின.


''நீ யாருப்பா? இந்தக் குருவி என்ன நல்லது செய்யும்?"'


சாமி, நான் மலப்பளியன். எம் பேரு நீலன். இது மீன் காட்டிக் குருவி : மீனுக ரொம்ப உள்ள குளத்தையோ. ஆத்தையோ உங்களுக்குக் காட்டும். அதுக்காகத்தான் கிட்ட வந்து இப்படிக் கத்துது.


"இப்ப எந்தக் குளத்துல மீனு இருக்காம்?"


''நீங்க எந்திரிச்சி நடந்தீங்கன்னா ஓங்களுக்கு முன்னாலயே இந்தக் குருவி போகும். நீங்க பின்னாலேயே போங்க. மீனு இருக்கிற குளம் வந்ததும் சுத்திச் சுத்திக் கத்தும். நீங்க தெரிஞ்சிக்கலாம்.


"நீலன் பேசியது கிழவருக்கு அதிசயமாய் இருந்தது."


மீன்காட்டிப் பறவை சிறிது தூரம் பறப்பதும், இவர்கள் வரும்வரை கிளையில் அமர்வதும், கிழவரும் வேலனும் அருகில் வந்ததும் மீண்டும் பறப்பதுமாக அவர்களை மலையடிவாரத் திற்கே அழைத்து வந்துவிட்டது! 


அந்த இடத்தில் சிறிய ஏரி போல் நீர் தேங்கியிருந்தது. தண்ணீரில் கெண்டை மீன்கள் வெயிலுக்குப் பளபளத்தவாறு கூட்டங்கூட்டமாக ஆய்ந்துகொண்டிருந்தன. அவற்றை கண்டதும் கிழவருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை..


"வேலா ! நாட்டுக்கெண்டை மீனுல்லே நெறய்யா இருக்கு! ஊர் குளங்கள்ல ஜிலேகா மீனு வந்து நாட்டு மீனுகளே அத்துப் போச்சே ! இங்க என்னடான்னா கெண்டை மீனு சொமக்கி அள்ளலாம் போலிருக்கே. தூண்டியெல்லாம் வேணாம்; என் வேட்டியால ரெண்டு பேரும் பிடிப்போம், வாப்பா," என்றார்.


அவரும் பேரனும் வேட்டியின் முனைகளைக் கைகளால் பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறங்கி, நீருக்கடியில் வேட்டியைப் பிடித்தவாறே மீன்கள் உள்ள பகுதிக்குச் சென்று, படக்கென்று மேலே தூக்க. சில மீன்கள் துள்ளி நீரில் விழுந்தாலும் வேட்டியில் மீன்கள் நிறையவே அகப்பட்டன.


கூடை நிறைந்ததும் வேட்டியை அலசிக் காயப் போட்டு. இருவரும் குளித்து விட்டு. அலுமினிய வாளியில் கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துவிட்டுப் புறப்பட்டனர். மீன் கூடையைத் துண்டால் மூடி, கிழவர் தலையில் தூக்கிக்கொண்டார். வேலன் தூண்டிலைக் கையால் எடுத்துக்கொண்டதும் அவர்கள் நடந்தனர்.


மீன்காட்டிக் குருவி வேகமாகக் கத்திக்கொண்டு இவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தது.


"என்ன குருவி, இன்னும் போகலே...?ஏய், நாங்க மீனு புடிச்சிட்டமில்லே? நீ ஒன் வேலைய பாத்துக்கிட்டு போவியா... இன்னும் இம்சைப்படுத்துறியே..."எ ன் று குருவியோடு பேசுவது போலச் சொல்லிக்கொண்டே நடந்தார்.


பறந்து வந்த குருவி அவர் விலாப்புறத்தில் டக்கென்று கொத்திவிட்டுப் பறந்து சென்று, மீண்டும் வந்து பேரன் தலை யிலும் டக்கென்று கொத்திவிட்டு மேலே பறந்தது.


"ஏன்னடாது தொந்தரவா போச்சி இதுகூட..." என்ற வாறு கூடையை இறக்கியவர், பறவை கொத்திய இடத்தில் துண்டால் துடைத்துக்கொண்டார். 


வேலன், வலித்ததால் தலையில் தேய்த்துவிட்டுக்கொண்டான் மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.


குருவியும் மீண்டும் அவர்களைச் சுற்றிப் பறந்து வந்து கொத்தியது.


"சே... என்னடாது பெரிய சங்கடமா போச்சி !" என்றவாறு ஒரு பாறையில் அமர்ந்தார்.


குருவியும் ஒரு மரக்கிளையில் அமர்ந்துகொண்டு 'கிரிக்ஈ ... கிரிக்ஈ' என்று கத்திக்கொண்டிருந்தது. தூரத்தில் அல்லிக் கிழங்குகளை அவற்றின் இலைகளாலேயே கட்டி அவற்றினைத் தலையில் வைத்தவாறு நீலன் வந்துகொண்டிருந்தான். அவன் அருகில் வரும்வரை காத்திருந்த கிழவர்.


"ஏய், என்னப்பா. மீன்காட்டி குருவின்னு சொன்னே, அது காட்டிச்சி. நாங்க மீனுகள புடிச்சுட்டுப் போறோம். பின்னாலே வந்து கொத்துது, சுத்துது, போக மாட்டேங்குதேப்பா..."


கிழவர் சொன்னதும் அவன் குருவியைப் பார்த்தான். அது இப்போது அவனைச் சுற்ற ஆரம்பித்தது.


"சாமி... அது உங்களுக்கு உதவி செஞ்சதில்லே?"


"ஆமா."


"நீங்க அதுக்குப் பதிலா ஏதாச்சும் செய்ய வேண்டாமா?"


அவன் சொன்னதைக் கேட்ட கிழவர் அவனை வியப்புடன் பார்த்தார். நீலனே கூடையைத் திறந்து, ஒரு மீனைக் கையில் எடுத்து, உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நீட்டினான். மீன் காட்டி அவன் கையில் வந்து அமர்ந்தது. அவன் அதை மெல்லத் தடவி விட்டான்; இறக்கைகளை விரித்து இறகுகளை எண்ணி னான்; அது மீனைக் கொத்திக்கொண்டதும் மேலே பறக்க விட்டான்.


"சாமி. கூடையில உள்ள மீன்களிலே சின்னதா பாத்து ஓர் அஞ்சாறு எடுத்துக் கீழே போட்டுருங்க. அதுபாட்டுக்குக் கொத்திக்கிட்டுப் போயிடும், இந்த மீன்காட்டிக்குப் பாவம் இன்னும் ரெண்டு வயசுகூட ஆகலே. இதுக நமக்கு மீனைக் காட்டிட்டு நாம ரெண்டு மீன் தருவோம்னு எதிர்பார்க்கும்; தரலேன்னா கூடவே வரும்; அப்படியும் தரலேன்னாதான் கொத்தும்.''


''அது சரிப்பா. இதன் வயசெல்லாம் எப்படித் துல்லியமாச் சொல்லிட்டே?"


"அது சாமி... ரெக்கைகளை விரிச்சுப் பாத்தனா... எத்தனை விழுந்து மொளச்சிருக்குன்னு பாத்தா, வயசைச் செரியாச் சொல்லிடலாம். இந்த மாதிரி மலைக்கு மேற்கால உள்ள காட்டுல தேன்காட்டி குருவின்னு ஒரு வகை இருக்கு. அது எங்களுக்குத் தேனடெ இருக்குற மரக்கிளையைக் காட்டும். நாங்க தேனு எடுத்துக்கிட்டு, கொஞ்சம் தேனுள்ள அடையைப் பிழியாமெ அதுக்குப் போடணும். இல்லேன்னா நம்மளக் கொத்தும். இன்னொரு வகைக் குருவி பெருங்காத்து வந்தால் மொத நாளே கத்திக் கத்திச் சொல்லிடும். ஒருவகைக் குருவி மறுநாள் மழை வரும்னா கத்திச் சொல்லிடும்.


''நீலன் சொல்லச் சொல்லக் கிழவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை; நீலனைக் கட்டித் தழுவிக்கொண்டார். 


'நீலர, என் எழுவதுவயசுஅனுபவத்துலஇந்தக்காடுகள்லேயேதிரிஞ்சவன்இந்த மீன்காட்டிக் குருவியவும். அது கத்துற தையும் பல தடவைப்பாத்தவன்தான். நான் உண்டு. என் வேலை உண்டுன்னுபோயிட்டேனேப்பா எதையும் தெரிஞ்சுக்கணும்னு பேராசைப்படாம போயிட்டேனேப்பா. ஒன் வயசென்ன... இவ்வளவுக்கும் நீ பளியன். அடேயப்பா... உன் அனுபவத்தைப் பாத்தா எனக்குப் பொறாமையா இருக்குப்பா ! பேரப்புள்ளே! வேலா! நீயாச்சும் நீலனை மாதிரி ஒவ்வொன்றையும் என்ன எதுக்குன்னு கவனி. அனுபவ அறிவு வளரணும்பா," என்று நா தழுதழுக்கக் கூறினார்.


"நா வாறேஞ்சாமி..." என்று நீலன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.


இருவரும் அவன் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தனர்.


(1983)


2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
muthurajakgm@gmail.com
6 hours ago
Rated 5 out of 5 stars.

மிகச்சிறப்பான. கதை

Like

Guest
4 days ago
Rated 5 out of 5 stars.

மீன் காட்டி குருவி, தேன் காட்டி குருவி, பெருங்காற்று மழை காட்டி குருவி எத்தனை அரிய தகவல்கள். குருவிக்கு ரெண்டு மீன்களை கொடுக்கணும் என்று கிழவரிடம் நன்றியில்லாமல் போனதே.. வயது குறைவானாலும் நீலனின் அனுபவம் பெரிது. நல்ல கதை

ஜெ.பொன்னுராஜ்

Edited
Like
bottom of page