top of page

புலிக்குகை

ree

பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய மாலை நேரம். மாலாவும் மீனாவும் ஊரை அடுத்திருந்த சொர்ணமலைக்கு போய்வருவோம் என்று புறப்பட்டார்கள். மலையுச்சியில் ஒரு பழமையான கதிரேசன் கோவில் இருந்தது. அதுவரை போய் அதற்கடுத்திருந்த சரிவில் இறங்கினார்கள். நடந்த களைப்பில் தண்ணீர் தாகமாய் இருந்தது. எங்கும் பாறைகளும் எலுமிச்சைப்புல்லுமாய் நிறைந்திருந்தன. 


“அய்.ய்.யா.. வாசனைப்புல்” என்று ஓட்டமாய் போய் புல்லைப் பிடுங்கி உள்ளங்கைகளில் தேய்த்து முகர்ந்து பார்த்தார்கள். அதன் வாசனையில் களைப்பு நீங்கியது போலிருந்தது. ‘தண்ணீர் குடித்தால் தேவலை’ என்றிருந்தது. எங்கேயாவது கிடைக்குமா என்று கொஞ்சதூரம் போய் தேடினார்கள். மழையில் நனைந்தும் ஈரக்காற்று பட்டும் பாசம் பற்றி வெயிலில் கரேலென காய்ந்துபோன ஒரு பாறை பக்கமாய் போனபோது அங்கிருந்த ஒரு எறும்புத்தின்னி இவர்களைப் பார்த்தது. 


“குழந்தைகளே.. எங்கே வந்தீர்கள்” பாறை இடுக்கிலிருந்து தலையை நீட்டியபடி கேட்டது.

மாலா பயந்துபோய் ஓர் எட்டு பின்வாங்கினாள். 


“மாலா பயப்படாதே. எறும்புத்தின்னி நம்மை ஒன்றும் செய்யாது. அது சாதுவாக இருக்கும்” மீனா தைரியப்படுத்தினாள்.


“இதற்கு வால் ஏன் நீளமாக இருக்கு”


“அதோட குட்டி அந்த வால் மேலே உட்கார்ந்து சவாரி போகுமாம்”


“உடம்பெல்லாம் அதற்கு செதில்களாக இருக்கே”


“செதில்கள் இருக்கிறதாலதான் புலிகூட இதைத் தின்னாதாம்”


“நீ சொல்வதை பார்த்தால் ஆர்வமாக இருக்கே.. நான் தொட்டுப்பார்க்கட்டுமா”


“ம்.. தொட்டுப்பாரு”


மாலா எறும்புத்தின்னியை தொட்டு நீவினாள். அது சாதுவாக இருந்தது. 

“மாலா.. எறும்புத்தின்னி நம்ம கூட பழகீருச்சி. எதிரிகளைப் பார்த்தால்தான் அது பந்துபோல சுருண்டுகொள்ளும். இப்போது நாம் இதோடு பேசலாம்”.


“நாங்க புலிக்குகையை பார்க்க வந்தோம். தண்ணீர் தாகமாக இருக்கிறது. குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா”


“என்கூட வாங்க” என்று ஒரு உயரமான பாறைக்கு அருகில் கூட்டிக்கொண்டு போனது.

பாறை இடுக்கில் ஒரு அழகான நீர்ச்சுனை தென்பட்டது. உள்ளங்கைகளை குவித்து அள்ளிக்குடித்தால் அது ஒரு சுவையான நீராக இருந்தது”.


“எறும்புத்தின்னி.. இங்கே புலிக்குகை எங்கே இருக்கு”


“இங்கிருந்து கொஞ்சதூரம் போனால் குன்றின் மேற்குச்சரிவில் இருக்கிறது.. வாங்க போகலாம்” என்று கூட்டிக்கொண்டு சென்றது.


“குழந்தைகளே.. நீங்கள் போய் பாருங்கள். சீக்கிரமாக இங்கேயிருந்து போயிரணும். புலி குகைக்கு திரும்பி வருகிற நேரம். என் குட்டியை பார்க்க பாறை வீட்டுக்கு போகிறேன்”  என்று திரும்பிப்போனது.


புலிக்குகை ஒரு விசாலமான குவிமாடம் போன்ற அமைப்பில் இருந்தது. குகையின் முன்புறம் உயர்ந்து அகன்ற வாயிலும் அதற்கேற்ப ஒரு கல்கதவு பக்கவாட்டுப்பாறையில் சாய்த்துவைக்கப்பட்டும் இருந்தது. குகையின் உள்ளே நுழைந்தால் வலதுபுறம் வெளியேறிப்போக ஒரு திறப்பு இருந்தது. இடது மூலையில் ஒரு ஆள் தவழ்ந்து போகும்படியாக குகைப்பாதை நீண்டுபோனது. குகைக்குள்  அகல்விளக்கு தீபம் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது. 

அந்த வெளிச்சத்தில் தவழ்ந்துபோய் பார்த்தால், ஓரிடத்தில் நிமிர்ந்து நிற்கும் அளவிற்கு குகையின் மேல்பகுதி உயர்ந்திருந்தது. அங்கிருந்த கல்திண்டில் சிறிதுநேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். அதற்கப்பால் குகையினுள் ஒன்றுமே தெரியவில்லை. சரி போவோம் என்று குகைவாயிலுக்கு திரும்பிவந்தார்கள். 


வெளிக்காற்று சிலீரென வாயில் வழியாக குகைக்குள் வீசிக்கொண்டிருந்தது. சூரியன் தொடுவானத்தில் இறங்குவது தெரிந்தது. மஞ்சள்வெயில் பாறைச்சுவர்களின் மேல் படர்ந்திருந்தது. “குழந்தைகளே.. நான் பூமியின் இன்னொரு பக்கமுள்ள தேசத்திற்கு செல்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது இருட்டிவிடும். நீங்கள் வெளிச்சத்திலேயே வீட்டிற்கு போய்விடுங்கள்” என்று செவேலென கிரணங்களை கையசைப்பது போல் விசிறி சிரித்தது. 

குகைக்கு வெளியே புலியின் உறுமல் சப்தம் கேட்டது. சிறுமிகள் நடுங்கிப்போய் குகையின் ஒரு மூலையில் போய் ஒண்டியபடி பதுங்கிக்கொண்டனர். “இப்ப என்ன செய்வது. சற்றுமுன்பே இங்கிருந்து போயிருக்கலாமே” மாலா முணுமுணுத்தாள்.


“என்ன.. புதிதாக இன்றைக்கு மனிதவாசம் வீசுகிறதே..” கேட்டபடியே புலி குகைக்குள் நுழைந்தது. ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் இருந்த சிறுமிகளை உற்றுப்பார்த்தது. 

“ஏய்.. குழந்தைகளே.. நீங்கள் யார்.. என் வீட்டில் வந்து என்ன செய்கிறீர்கள்” அதட்டலாய் கேட்டது. 


“எங்களை  ஒன்றும் செய்துராதே. இங்கிருந்து போயிருவோம்”

“பயப்படாதீர்கள். நான் உங்களுடைய நண்பன். வரும் வழியில் எறும்புத்தின்னி உஙகளைப் பற்றி சொல்லி அனுப்பியது” என்று தான் கொண்டு வந்திருந்த மல்பெரி பழங்களையும் சிவந்த ஜிங்கிலிகினி  பழங்களையும் குழந்தைகளிடம் நீட்டியது. அவை இரவு நேரங்களில் குகையில் தங்கவரும் வெளவால்களுக்காக  வழக்கமாக கொண்டு வரும் பழங்கள். நீலமும் சிவப்பு நிறமுள்ள அந்த காட்டுப்பழங்கள் பார்ப்பதற்கு வசீகரமானதாக இருந்தன.

“ம்.. சாப்பிடுங்கள் குழந்தைகளே. பழங்கள் சுவையாய் இருக்கும். நீங்கள் என் விருந்தாளிகள்” புலி உபசரித்தது.


“நீ மனிதர்களை பார்த்தால் அடிச்சி சாப்பிட்டுருவேன்னு ஊர்ல சொன்னாங்களே.. எங்களிடம் அன்பாக இருக்கிறாயே” புலி மீதான பயம் இப்பொழுது விட்டுப்போயிருந்தது. 

“உங்களைப் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன். நீங்க நல்ல பிள்ளைங்கன்னு. மற்றவர்களை துன்புறுத்துகிற கொடூரமான மனிதர்களைத்தான் எனக்குப் பிடிக்காது”


“அப்படியென்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்” என்று அருகில் போய் புலியைத் தொட்டு வருடிக்கொடுத்தனர். அது பூனையைப் போல் சாதுவாகி கண்களை மூடிமூடித்திறந்து பார்த்தது. 

அந்த நேரத்தில் வெளவால்கள் கூட்டமாக பறந்து வந்து குகையின் மேற்கூரையில் தலைகீழாக தொங்கியபடி கேட்டது, “புலி நண்பா.. எங்களுக்கு பழங்களை கொண்டு வந்திருக்கிறாயா”.

புலி கல்திண்டில் இன்னுமிருந்த பழங்களை எடுத்து நீட்டியது. பழங்களை தின்ற வெளவால்கள் குகைக்கு உள்ளேயும் வெளியேயும் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. 

“இப்படி வாஞ்சையோடு உபசரிக்கிற நீ எதற்காக மான், காட்டுப்பன்றி, கேளை ஆடுகளை அடிச்சி சாப்பிடுறே..” மாலா தன் மனதிலிருந்த சந்தேகத்தை கேட்டாள்.


“இயற்கையில் மாமிசம் உண்பது என்னோட சுபாவம். அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கவும் காடு சமநிலையை பராமரிக்கவும் இது இயல்பாக நடக்கிற ஒன்றுதானே”


“சரி. நாங்கள் புறப்படுகிறோம். பொழுது இருட்டி நேரமாகிப்போச்சி”


“உங்களிடம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். நீங்கள் நன்றாக படித்து முன்னேற்றமாகி சகமனிதர்களுக்கு உங்களால் முடிந்த சேவைகளை செய்யணும். பணம் பொருளுக்கு ஆசைப்பட்டு மயங்கிப்போய் யாரையும் துன்புறுத்தி கையேந்தியாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் கொடுப்பவர்களாகத்தான் இருக்கணும். அதுதான் இந்த புலி நண்பனின் விருப்பம்”


“அப்படியே செய்கிறோம் என்று வாக்குத் தருகிறோம். சொன்ன சொல்லை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றுவோம். இப்போது நாங்கள் விடை பெறுகிறோம்”


நிலவு கீழ்வானில் எழும்பிக்கொண்டிருந்தது. அதன் வெளிச்சம் பாதையில் படர்ந்திருந்தது. ஊர் எல்லைவரை வழித்துணையாக புலியும் கூடவே போய் வந்தது. வெளவால்களும் வானவெளியில் பறந்தபடியே சுற்றிசுற்றி வந்தன. நட்சத்திரங்கள் மினுக்மினுக்கென கண்சிமிட்டிக்கொண்டிருந்தன.


4 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
சு.அய்யப்பன்
Sep 22
Rated 5 out of 5 stars.

நான் பார்த்த புலிக்குகையில் என்னே அழகாக கதை பிள்ளைகளுக்குப் புலியும் நண்பனாவது அடடா அற்புதம் Sir

நன்று நனிநன்று நல்வாழ்த்து Sir


Like

பெ. பா. ஜகந்நாதன்
Sep 15

நான் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவனாக படித்தபோது அடிக்கடி புலிக் குகைக்கு சென்று வருவேன்.. உள்ளே வெறும் வௌவாலில் நாற்றம் தாங்க முடியாத அளவு இருக்கும் ஆனால் அந்த புலி குகையை வெளியில் இருந்து பார்த்தால் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் ஒரு வாய்ப் பிளந்தவாறு ஒரு மிருகம் படுத்திருப்பது போல அவ்வளவு அழகாக இருக்கும். கதிரேச மலையின் குறுக்கு வெட்டுப் பரப்பில் நடந்து திரிந்தவன் என்பதால் சொல்கிறேன் சிறுவர்களுக்காக அந்த கற்பனையை தூண்டு வண்ணம் உங்கள் கதை அருமையாக உள்ளது அதுவும் முரட்டு விலங்கான புலி மாணவர்களுக்கு அறிவுரை சொல்வது போல கதையை அமைத்துள்ளீர்கள். உங்கள் கற்பனை எல்லை விரிநது கொண்டே போகிறது வாழ்த்துக்கள் சார்.

Like

இல. ஸ்ரீதரன்
Sep 15
Rated 5 out of 5 stars.

புலிக்குகை கதை மிகச் சிறப்பாக இருந்தது.

சிறு குழந்தைகளுக்கு நேர்மறையான செய்தியை சொல்வதாக கதை அமைந்துள்ளது.

Like
பிரபுஜாய்
Sep 15
Replying to

இயற்கையோடு சேர்ந்து வாழும் இயல்பையும், இலக்கை எட்டியபின்பும்

இணக்கமாக வாழும் மாண்பினையும்

இன்றைய குழந்தைகளுக்கு

இயம்புவதாக இக்கதை

செல்வது, சொல்வது சிறப்பு.- பிரபுஜாய், கோவில்பட்டி 628501, 9894189311

Like
bottom of page