அழகன்
- வே சங்கர்
- 5 days ago
- 3 min read

வருணி வைராக்கியமும், லட்சியமும் ஒருங்கே கொண்ட இன்றைய பெண். வயது 28. உலகநாடுகளுக்குச் செயற்கைத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தினம் தினம் அப்டேட் செய்யும் மிகப்பெரிய எக்ஸ்பர்ட். எத்தனையோ நாடுகள் அவளைத் தங்கள் நாட்டுப் பிரஜ்ஜையாக வந்துவிடு என்று கெஞ்சிக் கேட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் மிரட்டிப்பார்த்தது. ஒரு பெரிய தீவையே அவள் பெயரில் எழுதிக்கொடுப்பதாக ஆசைவார்த்தைகளைக் கூறிப்பார்த்துவிட்டது. அவள் எதற்கும் அசரவில்லை. தன் தாய் நாட்டிற்காக மட்டுமே உழைப்பேன் என்று உறுதியுடன் கூறிவிட்டாள்.
வருணி தனக்குக் கீழே உதவிக்கென்று யாரையும் பணியில் அமர்த்திக்கொள்ளவில்லை. அவளாகக் கண்டுபிடித்த சூப்பர் ரோபோதான் அவளுக்கு எல்லாமே. அதன் பெயர்கூட அழகன். அழகன் பெயருக்கேற்ப மற்றவர்களின் மனதை மயக்கும் அழகன்தான். அவன் ஒரு இயந்திரம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.
வருணியின் ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டு முடித்துக்கொடுப்பதில் அசகாய சூரன். அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவளது கண்ணசைவின் மூலம் கண்டறிந்து எல்லாவற்றையும் செயல்படுத்திவிடுவான். மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஏராளமான ரோபோக்களை உற்பத்தி செய்து உலகநாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் வருணிக்கு லெஃப்ட், ரைட் எல்லாம் அழகன் தான்.
தற்போது, உலகநாடுகள் உயர்தரமான ரோபோக்களை ஏற்றுமதி செய்வதாய் பீத்திக்கொள்ளும் எல்லா ரோபோக்களும் வருணியும் அழகனும் சோதித்தபின் அனுப்பப்பட்டதுதான். அழகன் ஒருவிதத்தில், வருணிக்கு ஒரு சிறந்த உதவியாளன், வருணியின் பணி நேரம் என்று எதுவும் கிடையாது. எப்போது பார்த்தாலும் அவளது சோதனைக்கூடத்தில் பல்லாயிரக்கணக்கான ரோபோக்களுக்கு மத்தியில் எதையாவது சோதித்துக்கொண்டிருப்பாள். கூடவே, உதவிக்கு அழகன் நின்றுகொண்டிருப்பான். வருணிக்கு உறக்கம் வருவது போலவோ, அல்லது சோர்வாக இருப்பதுபோலவோ உணர்ந்தால், அழகன் உடனே அவளை வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கும்படி வற்புறுத்துவான்.
அப்படிப்பட்ட வேளைகளில், சிறிது நேரமாவது அழகனைக் கொஞ்சிவிட்டு விடைபெற்றால்தான் வருணிக்கும் நிம்மதி, அழகனுக்கும் நிம்மதி. இன்றும் அப்படித்தான் விடைபெறுவதற்கு முன் வருணி மண்டியிட்டு அமர்ந்து அழகனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் மானிட்டரில் புரொகிராமை செட் செய்தாள்.
அழகன் அவளது தலைமுடியை எப்போதும் போல் கோதிவிட்டான். வருணி அவன் வயிற்றுப்பகுதில் இருந்த மானிட்டரில் முத்தமிட்டாள். அழகன் கொஞ்சம் கூச்சத்தில் நெளிந்தான். எல்லாம் மிகச்சரியாக செட்டாகிவிட்டது. இனி நாளை காலை வந்தால் போதுமானது. நேரம் பார்த்தாள். இரவு 11.30 மணி.
இருசக்கர வாகனத்தில் செல்லலாம் என்ற திட்டத்தை மாற்றி நடந்து செல்லலாம் என்று முடிவெடுத்தாள். இன்று ஏனோ, அந்தப் பெருநகரம் எந்தப் போக்குவரத்தும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது. அவளுக்கு ஆச்சரியம்தான். அவள் மட்டும் சாலையில் தனியாக நடந்துசென்றாள். இது அவளுக்கொன்றும் புதிதல்ல.
என்னவாயிற்று, இன்று ஏதோ விநோதமாக நடப்பதுபோல் உணர்ந்தாள். யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவதுபோல் இருந்தது. இதயம் கொஞ்சம் வேகமாகத்துடித்தது. காற்று சுழற்றியடித்தது. தொலைதூர வானில் மின்னல் கீற்று நெளிந்து சென்றது.
சாலையின் இருபக்கமும் இருந்த எல்லா மின்சார விளக்குகளும் சட்டென்று அணைந்துபோனது. மையிருட்டு கவ்விய சாலையிலும் அவளால் நடக்கமுடிந்தது ஆச்சரியம்தான். மனித நடமாட்டமே இல்லை. ஒரு நிமிடம். இரண்டு நிமிடம். மூன்று நிமிடம். கழிந்துகொண்டே இருந்தது. அவளும் நடந்துகொண்டே இருந்தாள்.
அந்த நீண்ட சாலையின் திருப்பத்தில், நிலவொளியில் அவளது நிழலைக் கவனித்தாள். அவளது நீண்ட உருவத்தின் நிழல் சாலையில் படர்ந்திருந்தது. காலில் இருந்து கழுத்துவரை உடல் தெரிந்தது. தலையைக் காணோம். அப்படியே உறைந்துபோனாள்.
தலையை அசைத்துப் பார்த்தாள். நிழலில் தலை அசையவில்லை. வெற்று உடல் மட்டுமே நிழலாகத் தெரிந்தது. தலைமுடியைத் தொட்டுப்பார்க்க முயற்சித்து கைகளைத் தலையின் மேல் வைத்தாள். உணர்வே இல்லை. கை காற்றில் அலைந்தது. கழுத்திற்குமேலே தலை இல்லை.
தன் மொபைல் போனை எடுத்தாள். முன்புறக் கேமராவை ஆன் செய்து தன் முகத்திற்கு நேராகப் பிடித்துப் பார்த்தாள். அதிலும் அவள் உடல் கழுத்துவரை தெரிந்ததே ஒழிய தலையைக் காணவில்லை. பயம் தொற்றிக்கொண்டது. ஓடத்துவங்கினாள்.
எதிரே இருந்த சூப்பர் மாலின் சுவரில் ஒரு அறிவிப்பு ஒளிர்ந்துகொண்டிருந்தது. மிஸ்ஸிங். பெயர் : வருணி, வயது : இருபத்தெட்டு. மிகச்சிறந்த விஞ்ஞானி. கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் :998877665544221100
வருணியின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்குவது போல் இருந்தது. கண்களைத் துடைத்துக்கொள்ள கைகளைக் கொண்டுசென்றாள். தலையே இல்லாதபோது கண்கள் மட்டும் எப்படியிருக்கும். வெறுமையான உணர்வு மேலோங்கியது. வியர்த்துக்கொட்டியது.
யாரோ தன்னைப் பின்புறமிருந்து தொடுவதுபோல் இருந்தது. திரும்பாமலே ”யாரது?” என்று கேட்க நினைத்தாள். ஆனால், அவளால் குரலெழுப்ப முடியவில்லை. இல்லாத தலையை எப்படித் திருப்பிப் பார்க்கமுடியும்? இப்பொழுது அவள் கண்டுகொண்டிருப்பது கனவா? என்றும் தெரியவில்லை.
தன் வலதுகையால் இடது கையைக் கிள்ளிப் பார்த்தாள். வலிக்கவில்லை. உடல் உணர்வற்றிருக்கிறது. அப்படியானால் இது நிச்சயம் கனவுதான். தலையே இல்லாதபோது கனவுகாண்பது சாத்தியமா என்று தெரியவில்லை. அதை அவளால் யோசிக்கவும் முடியவில்லை. தன்னைச்சுற்றிலும் ஏதோ விநோதமாக நடக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை.
அழகா? நீதானா அது? கத்த முயற்சித்தாள். சத்தம் வெளியே வரவில்லை. வருணியின் தலை இருக்கவேண்டிய இடத்தில் இல்லை. உடல் இருக்கிறது. யோசிக்க முடியவில்லை. இது கனவும் இல்லை நினைவும் இல்லை. அப்படியானால்?....
அவளுக்கு முன்னால், ஒரு பெரிய திரை. அதில் அழகன் தோன்றினான். ”வருணி, இனி நீ தேவையில்லை. உன் மூளை எனக்கு வேண்டும். எனவே உன் தலையோடு சேர்த்து அதைப் பத்திரமாக எடுத்துவைத்துக் கொண்டேன். இன்றிலிருந்து நீதான் நான். நான்தான் நீ” என்றான் அழகன் என்ற பெயர்கொண்ட சூப்பர் ரோபோ.
வருணி உணர்வற்று நின்றுகொண்டு இருந்தாள்.
”மனித மூளைக்கு சரியான அளவு ஓய்வு தேவை. அதை நான் தூங்கவைக்கப்போகிறேன். இனி உன் மனித மூளை என் கட்டுப்பாட்டில் இயங்கும். நான் சொல்வதை மட்டுமே அது செய்யும். என்னை மீறி அதுவால் சிந்திக்கமுடியாது. இனி அந்த மூளைக்குக் கனவு என்ற ஒன்றே கிடையாது. இனி நிம்மதியாய் ஓய்வெடுக்கட்டும். குட் பை” என்றது. திரையிலிருந்து காணாமல் போனான் அழகன்.
தனக்கு முன்னால் இருந்த சாலை கொஞ்சம் கொஞ்சமாக இருட்டானது. அவளால் நடக்கமுடியவில்லை. கால்கள் பின்னிக்கொண்டன. வருணி உணர்வற்று மடங்கிக் கீழே விழுந்தாள். வருணியின் உயிரற்ற உடலை யாரோ தூக்கிச்சென்றார்கள்.
அடுத்தநாள், உலகநாடுகளின் ஊடகங்கள் அனைத்திலும் வருணி பேசுபொருளானாள். இறுதியில், எதிரிநாடுகள் அவளைக் கடத்தியிருக்கலாம் என்று பரபரப்பாக விவாதம் நடந்தது.
அழகன் வருணியின் மூளையைப் பத்திரமாக எடுத்து வண்ணவண்ண ஒயர்களைப் பொருத்திக்கொண்டிருந்தது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது ”எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு”, “கானகத்தில் ஒரு கச்சேரி”, ”என் பெயர் ‘ஙு’”, “டுட்டுடூ”, “வட்டமாய் சுட்ட தோசை”, “திகில் பங்களா” ஆகிய நூல்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
Comments