இயலில் தேடலாம்!
361 results found with an empty search
- கோமாளி ராஜா
காலை நேரம் வந்ததுமே அரண்மனை வாசல் சங்கு முழக்கம் ஒலித்தது. "அரபு நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த நம் மாமன்னன் - கோணாங்கி நாடு திரும்பி தேரில் வந்து கொண்டிருக்கிறார்" என்று குதிரையில் அறிவிப்பு சொல்லியபடியே காவலாளி செல்ல, பின்னால் குதிரையில் படை வீரர்கள் செல்ல, அழகிய புதிய அரபு நாட்டு தேரில் மன்னர் திரையை விளக்கி மக்களை கவனித்து கையசைத்தபடியே வந்தார். சாலையில் இருபுறமும் நின்றிருந்த மக்கள், "வணக்கம்...வணக்கம்" என்று சந்தோஷம் இல்லாமல் வணங்கி நின்றார்கள். ஆனால் தனது புதிய தேரைத் தான் மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என்று நினைத்து வந்தார். சிலர் கிழிந்த உடையுடன் கூட்டத்தில் நிற்பதை மன்னர் கண்டுகொள்ளாமலே வந்தார். உடன் அமைச்சர் நெடுமுடியும் அமர்ந்திருந்தார். "அரசே, மக்களை கவனித்தீர்களா?", என்றார் அமைச்சர் நெடுமுடி. அவர்களை நோக்கி மகிழ்ச்சியாக கையசைத்தபடி, " எல்லாரும் என்னை உற்சாகமாக வரவேற்கிறார்கள். எனக்கு பரிசாக அரபு நாட்டு மன்னன் அக்கிம் கொடுத்த தேரையும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். "நன்றாக பாருங்கள் அரசே! அவர்கள் உங்களை உற்சாகமாக வரவேற்கிறார்களா? இல்லை சோகமாக வரவேற்கிறார்களா ?" என்றார் அமைச்சர். எதையும் கண்டு கொள்ளாதது போல, "ஏன் அவர்கள் என்னை சோகமாக வரவேற்க வேண்டும் ?" என்று கேள்வி கேட்டார். "மன்னா, அரபு நாட்டு பயணம் முடிந்து வந்த உங்களிடம் எதிர்மறையாக பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணி விட வேண்டாம். கடந்த சில மாதங்களாக நாட்டில் கடும் தண்ணீர் பிரச்சனை, அதனால் விவசாயமும் இல்லை, போதிய இருப்பு தானியங்களும் இல்லாமல் போனதால், கடும் பஞ்சம் நிலவ தொடங்கியுள்ளது. நிலைமையை சரி செய்ய, நம் பக்கத்து நாட்டிடம் தண்ணீர் கேட்டும், அவர்கள் அணையில் தடுப்பு போட்டு விட்டார்கள். அணையில் இருந்து தண்ணீரை அனுப்பவில்லை .நம் நாடு பெரும் வறட்சிக்கு உள்ளாகி இருக்கிறது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. அரண்மனையிலும் இப்பொழுது வறட்சி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலைமை கை மீறி போய்விட்டது." அமைச்சர் தொடர்ந்தார், "இந்த நிலைமையை சரி செய்யாமல், நீங்கள் உல்லாசமாக அரபு நாட்டுக்கு சென்று வந்தது மக்களுக்கு சற்று பிடிக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நீங்கள் குதூகலமாக இருப்பதாக அனைவரும் உங்களை விமர்சிக்கிறார்கள். அதுவும் நீங்கள் முற்காலத்தில் ஒரு நாடக நடிகர். அரசி உங்களின் நடிப்பை பார்த்து உங்களை மணந்து கொண்டதால், கிடைத்த மன்னர் பதவியை வைத்து, மக்களை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று பல பெரும் வணிகர்கள் கூட விமர்சிக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை உங்களை 'கோமாளி அரசன்' என்று கூட உங்களை வர்ணிக்கிறார்கள்" என்று சற்று சிரித்தவாறு நெடுமுடி சொன்னவுடன், சட்டென்று கோபப்பட்டு, "மக்கள் கூறியதா?, இல்லை மனத்திற்குள் நீர் தேக்கி வைத்ததை என்னிடம் மக்கள் கூறுவதாக கூறுகிறாயா ?" என்றார். " தங்களை நான் ஏன் தரகுறைவாக சொல்ல போகிறேன் ?, மக்கள் சொல்வதை தான் நான் சொல்கிறேன் மன்னா!" என்றார். "அப்படியென்றால் என்னை 'கோமாளி ராஜா' என்று சொல்லி திரியும் ஆட்களை பிடித்து கைது செய்து சிறையில் அடையுங்கள்" என்றார். "மன்னா!, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், இது போன்று செய்தால் மக்கள் நம் மீதும், ஆட்சி மீதும் மிகுந்த கோபம் அடைவார்கள்" என்றார் அமைச்சர். கடுகடுப்பின் உச்சத்தில், "கள்ளி வள்ளி" என்றார் மன்னர். "அப்படி என்றால் என்ன மன்னா ?" என்று குழப்பத்தில் அமைச்சர் கேட்க, "அது அரபு சொல். அதற்கு அர்த்தம் போகப் போக புரியும்" "மன்னா...." என்றவாறு இழுத்த அமைச்சரின் பேச்சை நிறுத்தி, "சற்று பொறு. இப்போது தான் பயணம் முடித்து வந்திருக்கிறேன். முதலில் எனக்கு ஓய்வு தேவை. பின் மக்களின் தண்ணீர்ப் பிரச்சினையை போக்க ஆலோசனை செய்யலாம்" என்று மன்னர் வெறுப்பாக சொன்னவுடன், அமைச்சரும் அமைதியானார். மன்னன் அரண்மனைக்கு வந்து தன் மனைவி ராணி லட்சுமி, மகன்களை பார்த்து மகிழ்ந்தார். வெகு நாட்களுக்கு பிறகு அவர்களை பார்ப்பதால் சற்று நேரம் அரபு நாட்டு பயணத்தில் நடந்தவற்றை மனம் விட்டு பேசினார். ஆனாலும் ஓய்வெடுக்க இயலாமல், அவருக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது. மக்கள் உண்மையாகவே தன்னை, 'கோமாளி ராஜா' என்று தான் அழைக்கிறார்களா ?, இல்லை அமைச்சரின் சூழ்ச்சியா ? என்ற குழப்பம் தான். "சரி குழப்பத்திற்கு தீர்வு காண்போம்" என்று தீர்மானித்து, இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் செல்ல குதிரையில் ஏறி புறப்பட்டார். சில தூரம் பயணம் செய்து அருகிலிருந்த சிற்றூருக்கு வந்து சேர்ந்தார். குதிரையை சாவடி பக்கத்தில் கட்டி வைத்து, ஊருக்குள் நடைபயணமாக சென்றார். மக்கள் கூடும் இடங்களான கோவில், சந்தை என சுற்றினார். அப்போது பூங்கா வாசலில் பலர் பேசிக் கொண்டிருக்க, மெதுவாக சென்று நின்று கவனித்தார். அதில் அவர்கள் நாட்டு சமாசாரங்களை பேசினார்கள். அப்போது மன்னர் தெரியாமல் ஒருவரின் காலை மிதித்தார். உடனே அவன் "அறிவு கெட்டவனே, கண் இல்லாதவனை" என்று திட்டி கொண்டிருக்க, "மன்னித்து விடுங்கள்" என்று மன்னர் கூறியும் அடிப்பதற்கு கையை ஓங்கி பின் அடிக்காமல் விட்டு விட்டு சென்றான். ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த மன்னருக்கு மீண்டும் கோபம் அதிகமானது. "நான் மாறுவேடத்தில் இருப்பதால், என்னை யாரென்று உனக்கு தெரியவில்லை" என்று மனதில் நினைத்தவாறு சென்றார். அந்தக் கூட்டத்தில் ஒருவர், "கோமாளி ராஜாவின் அடுத்த பயணம் எங்கவோ?" என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது "சத்தமாக பேசாதே நண்பா, காலையில் தான் ஒரு செய்தி வந்தது. 'கோமாளி ராஜா' என்று மன்னரை யாராவது கிண்டலாக சொன்னால் உடனே அவர்களை கைது பண்ணி பாதாள சிறையில் அடைக்கிறார்களாம். அதனால அமைதியாக இருங்கள்" என்று ஒருவன் சொல்லி கொண்டிருக்க, ஓரத்தில் இதை கேட்டு கொண்டிருந்த மன்னனுக்கு ஒரே இறுமாப்பு ஏற்பட்டது. "மக்கள் பயந்து இனிமேல் யாரும் 'கோமாளி ராஜா' என சொல்ல மாட்டார்கள்" என்று அங்கிருந்து புறப்பட்டு சந்தை பகுதிக்கு வந்தார். அங்கு குதிரையும் ஓரிடத்தில் நின்றது. குதிரையில் அமர்ந்தவாரே மன்னன் மக்களின் நடவடிக்கைகளை கவனிக்க, சாலையோரத்தில் வெளிச்சத்திற்காக எரிபந்தங்களில் நெருப்பை பற்ற வைத்து ஏற்ற, நெருப்பு சிதறிஅருகில் நின்றிருந்த குதிரை முகத்தின் மீது பட்டது. சட்டென்று குதிரை தனது முன் கால்களைச் சட்டென்று தூக்கியது, மன்னர் கீழே விழுந்து கல்லில் தலை மோதி மயங்கிய நிலையில் கிடந்தார். சிலர் ஓடி வந்து தூக்கி விட்டு, பக்கத்தில் இருந்த கோவில் மண்டபத்தில் உட்கார வைக்க, மன்னருக்கோ தண்ணீர் தாகம் ஏற்பட்டு, "தண்ணீர்...தண்ணீர் கொடுங்க" என்று பரிதாபமாக கேட்டார். ஒருவன் தன் குடுவையைப் பார்த்தான். அது தண்ணீர் இல்லாமல் காலியாக இருந்தது. "என்னுடைய குடுவையில் தண்ணீர் இல்லை. இங்கு வேறு யாரிடமும் தண்ணீர் இல்லை. அந்த கடையில் தண்ணீர் இருக்கும். ஆனால் ஒரு குவளைத் தண்ணீர் ஒரு ரூபாய் சொல்லுவாங்க. எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே" என்றார். மன்னனின் தலையில் லேசாக இரத்தம் வந்தது. வயதான மூதாட்டி அதை துடைத்து விட்டு, தன் சுருக்கு பையில் இருந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்து, "இந்தா! தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல், நான் சாப்பிட்டு என்ன பண்ண போறேன். இந்தாப் புடி" என்று காசை அவனிடம் கொடுத்து தண்ணீர் வாங்கி வரச் சொன்னாள். அவரும் வேகமாக சென்று ஒரு குவளைத் தண்ணீர் வாங்கி வந்து மன்னருக்கு கொடுக்க அதைக் குடித்துவிட்டு கொஞ்சம் நிதானமாக அமர்ந்தார். அந்த பகுதியில் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருப்பதையும், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அளவுக்கு தன்னுடைய ஆட்சி நடைபெறுவதையும் எண்ணி மன்னர் மனதிற்குள் வருந்தினார். யாரென்று தெரியாத நபருக்காக தண்ணீர் வாங்கி வந்தவரையும், அதற்கு பணம் கொடுத்து உதவிய அந்த மூதாட்டியைப் பார்த்தும் மன்னர் கையெடுத்து கும்பிட்டார். "சாப்பிட்டியா" என்று மூதாட்டி கனிவாக கேட்க மன்னரின் கண்களோ கலங்கியது. அருகில் இருந்த நபர் தனது சோற்று பொட்டலத்தை சாப்பிடக் கொடுத்தார். மன்னரும் அதை வாங்கி, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உணவை உண்ண ஆரம்பித்தார். "யாரப்ப நீ ?, ஊருக்கு புதுசா ?" என்று கேட்டாள் அந்த மூதாட்டி. "ஆமாங்க" என்று சாப்பிட்டபடியே சொல்லி சுற்றி பார்த்தார். அந்த இடத்தில் பலர் ஆங்காங்கே படுத்துக் கிடந்தனர். "என்னப்பா அப்படி பார்க்குற" என்றாள். "பாட்டி, உங்களுக்கு வீடு இல்லையா ?" என்றார் மன்னர். "இருக்குப்பா, நான் இங்க பொருள் விற்பதற்காக வந்தேனப்பா, இரவு பொழுது ஆச்சுன்னு நான் இங்கேயே தங்கிட்டேன்" என்றாள் பாட்டி. மூதாட்டியைப் போலவே பலரும் வெவ்வேறு தொழில் செய்வதற்காக வந்து இரவு அங்கு தங்கியிருந்தனர். மன்னரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, மூதாட்டியின் அருகிலேயே அமர்ந்தார். அப்போது பக்கத்தில் ஒருவர், மற்றவரிடம் "என்ன பண்ண பொழப்புக்காக நான் இப்படி மாறி மாறி அலைஞ்சுகிட்டு இருக்கேன். எல்லாம் விலைவாசி ஏறிடுச்சு. தண்ணி பஞ்சம்.அதனால விவசாயம் பண்ண முடியல. நானும் வேற வேற பக்கம் வேலை தேடி போயிட்டு இருக்கேன். ஒரு கோமாளி அரண்மனைக்கு சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. மாறாக அரண்மனை வட்டரங்கு (சர்க்கஸ்) கூடாரமாகிவிடும்ன்னு பழமொழி சொல்ற மாதிரி இருக்கு நம்ம மன்னர் ஆட்சி " என்று வருத்தமாக சொல்லி கொண்டிருக்க மன்னர் அதை கேட்டு வருந்தினார். "ஆமாங்க இப்ப கோமாளி ராஜான்னு சொன்னா கூட கைது பண்றாங்க. அதனால அந்த வார்த்தையை பயன்படுத்தவே பயமா இருக்கு. மக்களுக்கு நல்லது பண்ணினா, அந்த பேரு மாறிட்டு போகுது" என்று கிண்டலாக இன்னொருவர் சொன்னார். "தலைமுறை தலைமுறையா, மன்னர் வம்சம் இல்லாம, நம்மில் இருந்த மனிதன், நாடக நடிகராக இருந்து இப்போ மன்னர் ஆகிருக்காரு. ஒவ்வொரு நாடகத்திலேயும் நல்லது செய்ற மாதிரி தான் நடிப்பாரு. நிஜத்திலும் கண்டிப்பா நல்லது செய்வார். கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா" என்று அவர்களிடம் மூதாட்டி சொன்னார். மூதாட்டி சொன்னதைக் கேட்டு மன்னருக்கு மனதில் ஒரு உத்வேகம் உண்டானது. அந்த மூதாட்டியை பார்த்து, "எனக்கு மிகவும் பெரிய வேலை வந்துவிட்டது. மிகப் பெரிய பொறுப்பு எனக்கு இருப்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். அந்த பொறுப்பை முடித்துவிட்டு நான் ஓய்வெடுக்க பார்க்கிறேன்" என்று மூதாட்டியை வணங்கி விட்டு, தனது குதிரையை லேசாக தட்டிக் கொடுத்து, ஏறி அரண்மனைக்கு புறப்பட்டார். குதிரையில் செல்லும் போது, அந்த மூதாட்டியின் வார்த்தை மன்னனின் மனதை ஏதோ செய்தது. விடியற்காலை பொழுதில் அரண்மனை வந்து சேர்ந்தார். பக்கத்து நாடு, கரிநாடக மன்னன் விஷ்ணு வர்மனின் பிறந்தநாள் விழாவிற்கு கோணங்கி மன்னனையும் அழைத்திருந்தார்கள். அந்த விருந்திற்கு மன்னனும் சென்றார். "பக்கத்து நாட்டு மன்னன் தான், அணையில் நீரை தடுத்து தண்ணீர் வரவிடாமல் செய்துள்ளார். அவர் அழைப்புக்கு நம் மன்னரும் சென்றுள்ளார்..!" என்ற செய்தி நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது. மன்னன் கோணங்கிக்கு கரிநாடாக நாட்டில் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. 64 வகையான உணவு பரிமாறி விருந்து வழங்கப்பட்டது. மன்னர் கோணங்கியும் மகிழ்ச்சியாக விருந்து உணவை உற்சாகமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அவர் சற்று வேகமாக சாப்பிட்டதாலோ என்னவோ விக்கல் ஏற்பட ஆரம்பித்தது. பதறிய மன்னன் விஷ்ணு, "அடடே மன்னருக்கு தண்ணீர் கொடுங்கள்" என்றார். மூன்று நான்கு வேலைக்காரர்கள் குடுவையில் தண்ணீரோடு அவர் முன்னால் வந்து நின்றார்கள். ஆனால் கோணங்கி தண்ணீரை குடிக்காமல் விக்கி கொண்டே இருந்தார். "தண்ணீர் ஏன் குடிக்காமல் இருக்கிறார்" என்று விஷ்ணுவுக்கு கோணங்கியின் செயல் ஒன்றும் புரியாமலே இருந்தது. "விருந்து போதும் நண்பா" என்று விக்கியபடியே கூறிவிட்டு வெளியில் கோணங்கி வந்தார். விஷ்ணுவிற்கும், அவரது அம்மாவிற்கும் பெரும் மனக்கசப்பு ஆகியது. "விருந்துக்கு வந்தவர், விக்கல் எடுத்தும் நம் நாட்டு தண்ணீரை குடிக்காமல் செல்கிறாரே" என்று அந்த தாய் புஷ்பா அம்மாள் கோணங்கியை நிறுத்தி, "தண்ணீர் இருந்தும் ஏன் குடிக்காமல் செல்கிறீர்கள்?" என்றாள். "அம்மா, எனக்கு விக்கல் எடுக்கிறது. நீங்கள் தண்ணீர் கொடுத்து விடுவீர்கள். ஆனால் என் நாட்டு மக்கள் தண்ணீர் இல்லாமல் எத்தனையோ கவலைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி தண்ணீர் கொடுப்பது?, நீங்கள் அணையில் தண்ணீர் விடாமல் தடுத்து, அங்கு பெரும் துன்ப சூழல் நிலவிக் கொண்டிருக்கும்போது நான் எப்படி அம்மா உங்கள் தண்ணீரை குடிக்க முடியும்?, நான் பொறுத்துக் கொண்டு என் நாட்டிற்கு சென்று தண்ணீர் குடிக்கிறேன்" என்று வருத்தமாக கோணங்கி சொன்னது. விஷ்ணுவிற்கு தூக்கி வாரிப் போட்டது. "என் நாட்டு மக்களின் எதிர் காலத்திற்காகதான் தண்ணீரைத் தடுத்தேன். அதை எங்கள் நாட்டில் வேறு பகுதிக்கு திருப்பி பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார் விஷ்ணு. "இயற்கை நமக்கு தந்த பெரும் கொடையை, என் தண்ணீர், உன் தண்ணீர் என்று நாம் பிரித்துப் பார்ப்பது பெரும் தவறு. தங்கள் நாட்டில் வெளிச்சத்திற்கு பயன்படுத்தும் விளக்கு, எண்ணெய் பொருட்கள் எங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள். அதை நாங்கள் உங்களுக்கு தர மறுத்தால், உங்கள் நாடு இருளிலே மூழ்கிவிடும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. நட்போடு இருக்கிறோம்.. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம்" என்று விக்கியபடி கோணங்கி சொல்ல, "நான் பெரும் தவறு இழைத்து விட்டேன். நீங்கள் தண்ணீர் குடியுங்கள். இந்த கணம் முதல் உங்கள் நாட்டிற்கு தண்ணீர் பாயும். இனி அணையில் தண்ணீரை தடுக்கமாட்டேன்" என்று சொல்லியபடி, அமைச்சரிடம், தண்ணீரை திறந்து விட விஷ்ணு உத்தரவிட்டார். மன்னன் கோணங்கியும் மகிழ்ச்சியாக தண்ணீரை வாங்கி குடித்தார். விருந்தும் சிறப்பாக முடிந்தது. நடந்த இந்த மனக்கசப்பான விஷயத்திற்கு கோணங்கி, விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். பின் தான் அரபு நாட்டில் இருந்து கொண்டு வந்த பேரிச்சம் பழங்களை அவருக்கு கொடுத்தார். அவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். விஷ்ணு தன் நாட்டின் சிறந்த இனிப்புகளை அவருக்கு பரிசாக கொடுத்தார். நட்புறவாக இருவரும் கைக்குலுக்கிக் கொண்டு விடை பெற்றார் கோணங்கி. மூன்று நாட்கள் கழித்து அரண்மனை சங்கு ஒலித்தது. மன்னர் வந்து கொண்டிருக்கிறார் என அரண்மனை கதவு திறந்தது. பொது மக்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்றார்கள். சந்தோஷத்தில் மன்னருக்கு வணக்கம் தெரிவித்தும், சிலர் கைகுலுக்கியும் வரவேற்றார்கள். அமைச்சர் நெடுமுடி, மக்களின் மகிழ்ச்சியை கண்டு திக்குமுக்காடினார். அமைச்சரை அழைத்து, "உடனே நாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள் அனைத்தையும் தூர் வாருங்கள். நிறைய மரக்கன்றுகளை நடுங்கள். முக்கியமாக பனை மரங்களை நடுங்கள் இதை துரிதப்படுத்துங்கள்" என்றார். நெடுமுடி மன்னரிடம், "மன்னா, கள்ளி வள்ளி என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் பிறகு சொல்வதாக சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள்" என்றார். சிரித்தவாரே, "அது இருக்கட்டும் விடுங்கள்" என்றார். கார்த்திக் கிருபாகரன் அபுதாபியில் இயந்திரப் பொறியாளராகப் பணிபுரியும் கார்த்திக் கிருபாகரன் (எ) சீனிவாசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். கணையாழி, குமுதம், தீராநதி போன்ற அச்சிதழ்களிலும், சொல்வனம், பதாகை உள்ளிட்ட இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 2019-இல் 'தீதும் நன்றும்' என்ற இவரது நாவலும், 2024-இல் 'ஒரு கோடி' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் புத்தகமாக வெளிவந்துள்ளன.
- சிலந்தி சொன்ன இரகசியம்
"கண்ணா வாட்டர் பாட்டில் எங்க டா?!" என ஆச்சர்யமாக கேட்டார் அம்மா. "அது வந்து.. காணோம்" "காணோமா? நல்லா தேடுனியா?" "ம்ம்... தேடுனேன். இல்ல" "பெஞ்ச்ல பார்த்தயா?" "பெஞ்ச்ல, அப்றம் வேன்ல ஏறி பேக்ல பார்த்தேன். காணோம்" திருதிருவென விழித்தான் சுரேன். சுரேன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் ப்ரிகேஜியில் இருந்து பள்ளிக்கு போகிறான். ஆனால் இதுவரை எதையுமே தொலைத்தது இல்லை. பத்திரமாக வைத்திருப்பான். கோடை விடுமுறை முடிந்து இன்று தான் பள்ளிக்குச் சென்றான். முதல் நாளே பாட்டில் தொலைந்து விட்டது. அம்மா உடனே வகுப்பாசிரியருக்கு போன் செய்தார். "மேம், சுரேன் வாட்டர்பாட்டிலைக் காணோம்" என சொன்னார். சுரேனின் வகுப்பு ஆசிரியை மிகவும் பொறுமையாக பதிலளிப்பார். குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார். "சரி சுரேன் அம்மா. நான் தேடுகிறேன்" என்றார் ஆசிரியர். மறுநாள், பள்ளிக்கு வேறு ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுத்தார் அம்மா. "சுரேன், பள்ளியில் சென்று ஆசிரியரிடம் பாட்டில் கேக்கணும் சரியா?" என சொல்லி அனுப்பினார். ஆசிரியர் வகுப்பறை முழுவதும் தேடினார். வகுப்பு புத்தக அலமாரியில் தேடினார். மாணவர்களிடமும் கேட்டார். ஆனால் யாருக்குமே சுரேனின் வாட்டர் பாட்டில் எங்கு சென்றது எனத் தெரியவில்லை. மாலை பள்ளி முடிந்தது. சுரேன் அம்மா கொடுத்து விட்ட பாட்டிலை எடுத்தான். அதைப் பத்திரமாக உணவுப் பையில் வைத்தான். வேனில் ஏறி வீடு வந்தான். உணவுப் பையைத் திறந்த அம்மா ஆச்சர்யப்பட்டார். "சுரேன், இன்னிக்கு கொடுத்த பாட்டில் எங்க?!" "அம்மா நான் பாட்டில பேக்ல வச்சேன் மா. ஆனா இப்ப காணோம் மா" என்றான். "நிஜமா! பேக்கில் வச்சயா?" எனக் கேட்டார் அம்மா. “ஆமாம்.. ஆமாம்” என மாலை பள்ளி விட்டதில் இருந்து சொன்னதையே சொன்னான். வகுப்பாசிரியர் பாட்டில் கிடைக்கவில்லை என்று சொல்லி விட்டார். தண்ணீர் பாட்டில் எங்கே போயிருக்கும்?! ஒரே ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் இன்னொரு பாட்டில் கொடுத்து விட்டார் அம்மா. அந்தப் பாட்டிலும் காணாமல் போய் விட்டது. அம்மா கோபமாக சொன்னார், "நாளைக்கு உனக்கு பாட்டில் தர மாட்டேன். நீ உன் பாட்டில் எல்லாம் தேடி எடுத்துட்டு வரணும்" சுரேன் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். 'பாட்டில்கள் எல்லாம் எங்க போச்சு?' சுரேனின் நண்பர்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது. வகுப்பில் எல்லாரும் சுரேனின் பாட்டில்களைத் தேடினார்கள். ஒவ்வொரு பெஞ்சின் அடியிலும் தேடினார்கள். புத்தக அலமாரிகளில் தேடினார்கள். பக்கத்து வகுப்பறையில் தேடினார்கள். எங்கேயும் இல்லை. பார்த்தவர்களிடம் எல்லாம் கேட்டார்கள். "சுரேனோட பாட்டில பாத்தீங்களா?" யாருமே பார்க்கவில்லை. உணவு இடைவேளையில், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேன். "எட்டுக்கால் பூச்சி... என் பாட்டில நீ பாத்தியா? காணோம். ஒண்ணு இல்ல நிறைய. அம்மா திட்டுறாங்க" என சோகமாக சொன்னான் சுரேன். "ஓ உன் பாட்டிலா எனக்குத் தெரியும்" என சத்தம் கேட்டது. சுரேன் சுற்றிலும் பார்த்தான். அவன் நண்பர்கள் எல்லாம் வகுப்பிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்கள். வகுப்பில் சுரேன் மட்டும் தான் அமர்ந்திருந்தான். "யாரு யாரு பேசுறீங்க" குரல் நடுக்கத்தோடு கேட்டான் சுரேன். எழுந்து வகுப்பில் இருந்து வெளியே ஓடத் தயாராக இருந்தான். "நாந்தான் சிலந்தி. நீ என்கிட்ட தான கேட்ட. அதான் பதில் சொன்னேன்" மீண்டும் குரல் மட்டுமே கேட்டது. "சி..சி.. சிலந்தியா?" யாராவது விளையாடுகிறார்களா என சுற்றிலும் பார்த்தான். இல்லை. "ஆமா, இங்க மேல பாரு. சிலந்தி தான்" என்றது. சுரேனுக்கு பயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. "என் பாட்டில் எங்க இருக்கு?" எனக் கேட்டான் மெதுவாக. "உன் இருக்கைக்குப் பின்னால் ஒரு செடி இருக்கு இல்ல?" எனக் கேட்டது சிலந்தி. "ஆமா, செம்பருத்தி" "செம்பருத்தி.. அதுகிட்ட போய் கேளு" "என்ன செடிகிட்டயா? செடி பேசுமா?" ஐயத்தோடு கேட்டான் சுரேன். "சிலந்தி பேசும் போது, செம்பருத்தி பேசாதா?" எனக் கேட்டது சிலந்தி. சுரேன் மெதுவாக செடியின் பக்கம் போனான். அது அவனது வகுப்பறைக்கு வெளியே வளர்ந்தது. சில இலைகளும் ஒரு பூவும் மட்டும் வகுப்பறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தது. "செம்பருத்தி.. நீ என் வாட்டர் பாட்டில பார்த்தியா?" என மெதுவாகக் கேட்டான் சுரேன். "உன் ஒரு பாட்டில் மட்டும் இல்ல.. மூணு பாட்டிலும் என்கிட்ட தான் இருக்கு" என சொன்னது செம்பருத்தி. செம்பருத்திச் செடி பேசும் போது, அதற்கேற்ப அதன் பூ ஆடியது, யாரோ தலையை ஆட்டி ஆட்டி பேசுவது போல வேடிக்கையாக இருந்தது சுரேனுக்கு. "என்ன.. உன்கிட்ட இருக்கா?" மீண்டும் அதிசயமாகக் கேட்டான் சுரேன். "ஆமா. என்கிட்ட தான் இருக்கு.." என்றது செம்பருத்தி. "உன்கிட்ட எப்படி வந்தது?" "ஆமாம். நான் தான் எடுத்தேன்" "ஏன் எடுத்த?" "எனக்கு ஒரு நாள் தண்ணி கிடைக்குது. ஒரு நாள் தண்ணி கிடைக்கல. அதான் எடுத்தேன்" "ஓ அப்படியா! ஆனா வகுப்பில அத்தனை பேர் இருக்காங்க. நீ ஏன் தினமும் என் பாட்டிலயே எடுத்த? தினம் புதுசு குடுத்து விட்டாங்க அம்மா. இன்னிக்கு திட்டிட்டாங்க" சொல்லும் போதே அழுகை வந்து விட்டது சுரேனுக்கு. "ஐயோ அழாத அழாத.." என சமாதானம் சொன்னது செம்பருத்தி. "ஏன் என் பாட்டில மட்டும் எடுத்த?" மீண்டும் கேட்டான் சுரேன். "ஏன்னா, வகுப்பில் எல்லாரும் அவங்க தண்ணிய குடிக்கிறாங்க. எல்லார் பாட்டிலும் காலி ஆகிடும். நீ தான் தண்ணியே குடிக்கறது இல்ல. உன் பாட்டில் முழுசா இருக்கும். அதான் அத எடுத்தேன்" என்றது செம்பருத்தி. "நான் தண்ணி குடிப்பேன்" என்றான் சுரேன். "ஆமா சாப்பிடும் போது ஒரு மடக்கு குடிப்ப. அப்பறம் உன் பாட்டில்ல தண்ணி அப்படியே இருக்கும்" என்றது செம்பருத்தி. "சரி, என் பாட்டில்கள திரும்பக் கொடு. நான் உனக்கு தினமும் தண்ணீர் தெளிக்கிறேன்" என்றான் சுரேன். "வெயில் ரொம்ப ரொம்ப அதிகம். நீயும் அடிக்கடி நிறைய தண்ணி குடிக்கணும்" என சொன்னது செடி. "இனிமே நான் அம்மா சொன்ன மாதிரி, நீ சொல்ற மாதிரி நிறைய தண்ணி குடிப்பேன்" என்றான் சுரேன். "அது தான் நல்ல பையன்!" என்று மகிழ்ச்சியாகச் சொன்னது செம்பருத்திச் செடி. "நீ தண்ணீர் குடிச்சா உன் உடம்பு ஆரோக்கியமா இருக்கும். எனக்குத் தண்ணீர் ஊத்துனா நானும் ஆரோக்கியமா இருப்பேன்." தன் வேர்களுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த வாட்டர் பாட்டில்களை எடுத்து அவனிடம் கொடுத்தது செம்பருத்தி. சுரேன் மகிழ்ச்சியாக குதித்தான். பாட்டில்களை பத்திரமாக பைக்குள் வைத்தான். "அம்மா பாட்டில் கிடைச்சிருச்சு" என மகிழ்ச்சியோடு கத்திக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினான் சுரேன். எல்லா பாட்டில்களையும் அம்மாவிடம் கொடுத்தான். தினமும் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு சென்றான். ஒன்று சுரேனுக்கு. மற்றொன்று செம்பருத்திக்கு! அதற்குப் பிறகு, சுரேனின் வாட்டர் பாட்டில் காணாமல் போகவே இல்லை. ராஜலட்சுமி நாராயணசாமி ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார். பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார். இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. 'கனலின் பயணம்' நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது.
- வளரிளம் புதிர்ப்பருவம்-13 குழந்தைகளின் குரலைக் கேட்போம்.
காட்சி: 1 ஓர் ஊரில் திருவிழா. ஆடல்பாடல் நிகழ்ச்சி. பக்திப் பாடலுடன் நிகழ்வு தொடங்கும். பிறகு திரைப்படப் பாடல்களுக்கு நடனம். நேரம் செல்லச்செல்ல ஆடல் மகளிரின் ஆடைகள் குறையும். முக்கல் முனகல் பாடல்களுக்கு நடனம். ஆபாச நடனம் என்று பொதுவாகச் சொல்லப்படும் நடனங்களைக் குழந்தைகள், பெரியவர்கள் என ஊரே ரசிக்கும். பலரும் செல்பேசியில் படம் பிடிப்பார்கள். காட்சி: 2 புகழ்பெற்ற கதாநாயகன் நடித்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி. பேரல் பேரலாக ரத்தம் தெரிக்கும் சண்டைக் காட்சிகள். கதாநாயகன் கத்தியை வீசுகிறார். அடியாள் ஒருவரின் தலை துண்டாகி உருள்கிறது. கழுத்திலிருந்து ரத்தம் பீய்ச்சுகிறது. குழந்தைகள் கைதட்டி ரசிக்கிறார்கள். பெரியவர்கள் முகம் மலர்கிறார்கள். பொது இடத்தில் சிகரெட் பிடிப்பவர்கள், குடித்துவிட்டு ரகளை செய்பவர்கள், வீட்டிலும் வெளியிலும் பெண்களை அவமதிக்கும் பல்வேறு சூழல்களைப் பார்த்துப் பார்த்து வளர்கிறார்கள் குழந்தைகள். பெண்ணை என்ன வேண்டுனாலும் செய்யலாம் என்பதே ஆண்மை என்று ஆண் குழந்தைகள் நம்புகிறார்கள். பெண்ணைச் சக உயிராக மதிக்காமல் தனது ஆளுகைப் பொருளாகப் பார்ப்பது பழக்கமாகிறது. ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் பெண்ணும் விரும்பியே ஆகவேண்டும். இல்லையென்றால் மிரட்டுவது, பலாத்காரம் செய்வது, முகத்தில் ஆசிட் ஊற்றுவது, போன்ற பலாத்காரச் செயல்கள் இப்போது பெண்ணின் உயிரை வாங்குவதாகவும் மாறியிருக்கிறது. பொது இடங்களிலும் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஒரு செயலைச் செய்யும் போது சரியா தவறா என்று பகுத்து ஆராயும் திறனைக் குழந்தைகளிடம் நாம் உருவாக்கவே இல்லை. பெரும்பாலும் விதி மீறலையே திறனாக எண்ணுகிறார்கள். அதுவே பெருமிதமாகவும் மாறியுள்ளது. இதே உணர்வோடுதான் ஜேமியும் வளர்ந்தான். சமூக ஊடகத்தில் தன்னைக் கேலி செய்தது ஒரு பெண் என்பதே அவன் கோபத்தைத் தூண்டியது. நண்பர்கள் தூபம் போட்டனர். கத்தியை வைத்து மிரட்ட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். நேரில் சக மாணவி பேசிய முறை ஜேமிக்குள் வளர்த்திருக்கும் ஆதிக்க உணர்வைத் தூண்டியது. கொலை செய்தான். தவறு செய்தவன் தண்டனை அடைகிறான். அவனது குடும்பமே அதிகப் பாதிப்புகளை அடைகிறது. சமூகம் அவர்களையும் குற்றவாளிகளாகவே நடத்துகிறது. கேலி செய்கிறது. வெறுப்பை உமிழ்கிறது. அவமானப்படுத்துகிறது. அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு, பிள்ளையைச் சரியாக வளர்க்கவில்லையே என்ற குற்ற உணர்வில் பெற்றோர் தவிக்கின்றனர். அவர்களே அவர்களுக்கு ஆறுதல். பிள்ளையைச் சரியாக வளர்ப்பது எப்படி? குழந்தை வளர்ப்பு குறித்த புத்தகங்களுக்கும் காணொலிகளுக்கும் இப்போது மவுசு அதிகம். Parenting என்று இன்றைய இளம் தலைமுறையினர் குழந்தைகளைக் கவனிக்கிறோம் என்று செய்யும் செயல்களில் பலவும் முந்தைய /தலைமுறையை அதிர்ச்சியடைய வைக்கின்றன. பொதுவாக ஒழுக்கம் என்று பேசப்படுவது குழந்தைகளின் முடி, உடை மீதான குறைகளாகவே நின்றுவிடுகிறது. பேசும் முறை, நடத்தை போன்றவை பற்றிப் பேசுவோர் மிகவும் குறைவு. நீதியைப் பின்பற்றாத சமூகம், குழந்தைகளுக்கு நீதி நூல்கள், நீதிக்கதைகளைச் சொல்லித் தராததால் தான் இவ்வளவு சிக்கல்களும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறது. தவறு பெரிதாகி வெளியே தெரியும் வரை எல்லோருமே நான் சரி, மற்றவர்கள் தான் தவறு என்று பேசுகிறோம். இந்தத் தலைமுறை கெட்டுவிட்டது என்று குறைகளைப் பட்டியலிடுவதே முந்தைய தலைமுறையின் கடமையாக மாறிவிட்டது. இதுவே காலம்காலமாகத் தொடர்கிறது. குழந்தைகளுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். அவர்களின் இணையப் பயன்பாடு குறித்து விமர்சனம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்துவது பற்றிக் கலந்துரையாட வேண்டும். எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் குழந்தைகளும் நிறைய கலந்துரையாட வேண்டும். காலத்திற்கு ஏற்ற செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அவற்றைப் பழகும் இடங்களாகவே பள்ளியும் வீடும் சமுகமும் திகழவேண்டும். அப்போதுதான் நாம் வெறுமனே பேசிப் புளகாங்கிதம் அடையும் சமத்துவ சமூகம் மலரும். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்த உரையாடல்களை முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது Adolescence தொடர் . இங்கு அது அவ்வளவு ஆழமான பேசு பொருளாக மாறவே இல்லை. அதுதான் அத்தொடரின் முதல் மூன்று பாகங்களை விரிவாகவும் நான்காம் பாகத்தை மிகச் சுருக்கமாகவும் இங்கு எழுதக் காரணமாக அமைந்தது. Adolescence தொடர் தனிப்பட்ட உண்மை நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. உலகெங்கும் நடைபெற்ற பல்வேறு இளம்பருவக் குற்றச் செயல்களே இத்தொடரை உருவாக்கக் காரணமாக அமைந்தது. ஜேக் தார்ன், ஸ்டீபன் கிரகாம் இணைந்து கதையை உருவாக்கினர். நான்கு பாகங்களையும் இயக்கியவர் பிலிப் பராந்தினி. ஜேமியாக நடித்தவர் ஓவன் கூப்பர். அவரது தந்தையாக நடித்து கதை, தயாரிப்பு உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஸ்டீபன் கிரகாம். ஒளிப்பதிவாளர் மேத்யூ லூயிஸ். ஒவ்வொரு பாகமும் படத்தொகுப்பு இல்லாமல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. ஒத்திகையும் படப்பிடிப்பில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் தொடக்கத்திலிருந்து மீண்டும் படமாக்கியதும் இதனைச் சாத்தியமாக்கின. இது பார்வையாளர்களுக்கு நெருக்கமான உணர்வைத் தந்தது. இங்கிலாந்து நாட்டின் பிரதமர் Adolesence குழுவினரைச் சந்தித்து உரையாடினார். நாட்டிலுள்ள நடுநிலைப்பள்ளிகளில் இத்தொடரைத் திரையிட ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பேசுவோம்.
- வைரக்கல்
குளத்தில் நிறைய தண்ணீர் இருக்குது குட்டிப் பாப்பா தாமரைப்பூ பூத்திருக்குது சின்னப் பாப்பா பூவைச் சுற்றி இலைகள் மிதக்குது குட்டிப் பாப்பா வட்டத் தட்டென சூழ்ந்திருக்குது சின்னப் பாப்பா இலையில் உருளும் தண்ணீர்த் துளிகள் குட்டிப் பாப்பா வைரக் கல்போல் தகதகக்குது சின்னப் பாப்பா பாவண்ணன் இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.
- குழந்தைகளின் உரிமைகள் - 15
ஐக்கிய நாடுகளின் பிரகடனம் – சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் : குழந்தைகளுக்கும் தனிப்பட்ட - அந்தரங்க உரிமைகள் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் குடும்பம், வீடு, தகவல் தொடர்புகள் போன்று பல்வேறு விஷயங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வயது வந்த ஆணும்,பெண்ணும் பேசும் போது “என்னோட ‘பிரைவசி’யில் யார் தலையிடுவதையும் நான் விரும்புவதில்லை” என்று சொல்வதைக் கேட்டிருப்போம். அவர்களின் நெருங்கிய நண்பர்களோ,பெற்றாரோ,உறவினர்களோ,அண்டை-அயல் வீட்டுக்காரர்களோ யாருமே அவ்வாறு தலையிடுவதை, பொதுவாக ஆணோ பெண்ணோ யாரும் விரும்புவதில்லை. அவர்களாக விரும்பி, முன்வந்து சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு;அது வேறு விஷயம். ஆனால், அவர்கள் விரும்பாத போது, வேறு யாரும் அவர்களின் அந்தரங்க உலகில் பிரவேசிக்க அனுமதிக்க மாட்டார்கள். இப்படிக் குழந்தைகளுக்கும் அந்தரங்க உரிமைகள் உண்டு என்று ஐக்கிய நாடுகளின் சர்வதேசப் பிரகடனத்தின் 16-ஆவது பிரிவு கூறுகிறது. “என்னது?குழந்தைகளுக்கும் அந்தரங்க உரிமைகளா? அது எப்படிச்சாத்தியம்?” என்று முதலில் நாம் அதிர்ச்சியே அடைவோம். இதுதான் எண்றில்லை,எந்த ஓர் உரிமை என்றாலும் அது பெரியவர்களின் கவனத்திலேயே பதிந்திருப்பதில்லை. பெரியவர்களின் உரிமைகளைப் பற்றியே பலருக்கும் விழிப்புணரவோ, பரிச்சயமோ, புரிதலோ இன்று வரைக்கும் இல்லை எனும்போது, குழந்தைகளின் அந்தரங்க உரிமைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். குழந்தைகளுக்கு என்று அப்படியென்ன அந்தரங்கம் இருக்க முடியும் என்று உடனே ஒரு கேள்வியும் எழும். ஓர் எடுத்துக்காட்டைச் சொன்னால், ஓரளவுக்குப் புரிந்து விடும். சமீப காலங்களில், இரண்டு வயது மூன்று வயதேயான பெண் குழந்தைகள் முதல், 75 வயது நிரம்பிய மூதாட்டி வரை, வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் காம வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய செய்திகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் பெயர்கள்,புகைப்படங்கள், குடும்பம்,முகவரி போன்ற எந்த விவரத்தையும் செய்தி ஊடகங்களிலோ,காவல்துறை,நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான ஆவணங்களிலோ வெளியிடக் கூடாது என்று ஒரு சட்டவிதி உள்ளது. அவ்வாறு உண்மைத்தகவல்கள் வெளியானால்,அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு தொடர்புடையவர்களைப் பற்றி விவரங்களை வெளியிடக்கூடாது என்பதற்குக் காரணம், அவ்வாறு வெளியிடுவதால், வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு,ஏற்கெனவே கடும்மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருப்போர், மேலும் கடுமையான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அவ்வாறான மன அழுத்தங்களுக்கு, ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை ஆளாக்கிவிடக்கூடாது என்பதில் இன்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. குழந்தைகளின் மன உலகம் மிகவும் நுண்ணியதாக இருக்கும். நம் பார்வையில் மிக அற்பமானவையாகத் தோன்றும் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றக்கூடும். இன்றைய அவசர உலகில், அவர்களின் நுண் உணர்வுகளைக் கவனித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பொறுமையோ,புரிதலோ பெரியவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே முரட்டுத்தனமாகக் குழந்தைகளை அணுகும் நிலைக்குப் பெரியவர்கள் ஆளாகிறார்கள். ஓர் அரசுப்பள்ளியில்,சிறு மாணவியிடம் அவரின் ஆங்கிலத்திறனைப் பரிசோதிக்கிறேன் என்று ஓர் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவை நாம் சமூக ஊடகத்தில் காண முடிந்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய பெற்றோர்கள், ஒன்று, குழந்தைகளின் மனவுலகம் என்ன மாதிரியான தன்மையுடன், எந்தவிதமான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது என்பதைப் பற்றிய துளிக்கவனமும் இல்லாமல் தங்களுடைய விருப்பங்களைக் குழந்தைகள் மீது திணித்து, தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே குழந்தைகள் செய்தாக வேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்கள். குழந்தைகள் பொதுவாகப் பெரியவர்களின் வார்த்தைகளை மறுத்துப் பேச முடிவதில்லை;முயல்வதுமில்லை. இதற்கு நேர எதிர்நிலையில், வேறு சில பெற்றோர்கள் குழந்தை எதை விரும்பினாலும் மறு பேச்சே இல்லாமல்,அந்தக் குழந்தை விரும்பும் எது ஒன்றையும் உடனே வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள். அதன் விருப்பம் என்னவாக இருந்தாலும்,அது சரியா தவறா என்றெல்லாம் யோசனையே செய்யாமல் அதை நிறைவேற்றி விடுகிறார்கள். எடுத்துக்காட்டுக்காக, குழந்தை விரும்பிக் கேட்கிறது என்பதற்காக செல்போன் வாங்கிக் கொடுப்பதற்குக்கூட இந்த வகைப் பெற்றோர் தயங்குவதில்லை. செல்போனில் எந்தெந்த வகையான செயலிகள் இருக்கின்றன,அவற்றில் என்ன வகையான விஷயங்கள், செயல்பாடுகள் இடம் பெறுகின்றன என்பதைப் பற்றி அந்தப் பெற்றோர் எவ்விதப் புரிதலும், அறிதலும் இல்லாமலே குழந்தையின் கைகளில் விலையுயர்ந்த செல்போனைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகளின் இயல்பான துறுதுறுப்பின் விளைவாக குழந்தைகள்,தங்களின் வயதுக்கு மீறிய ஆட்சேபகரமான வன்முறைகள்,பாலியல் காட்சிகளைப் பாரக்கத்தொடங்கி அவற்றில் தங்களின் கவனம் முழுவதையும் செலுத்துகிறார்கள். அதன் விளைவுகளை நம் ஊடகங்களிலும், அண்டை வீடுகளிலும் பார்த்துக்கொண்டே இருந்தாலும், இன்னொருபுறம் பெற்றோர் அதே தவறுகளைச்செய்யும் போது இறுதியில் பாதிப்புகளால் சிதைவுறுவது அந்தக் குழந்தைகள்தாம். இத்தகைய ஒரு சூழலில், குழந்தையின் அந்தரங்க உரிமைகளை நாம் எப்படி அணுகுவது? இது ஒரு பெரிய உளவியல் சிக்கலாக மாறி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளின் பிரகடனம் சொல்லும் இந்த உரிமையின் அம்சங்களை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டால்தான் நமது குழந்தைகளை நாம் சரியாகக் கையாள முடியும். தொடர்ந்து சிந்திப்போம்... கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- ஆழியும் பேண்ட் சட்டையும்
ஆழி இந்த வருடம் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவள் தோழி கயலும் அதே வகுப்பு தான். அரசு பள்ளியில் தான் இருவரும் படிக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் சுமார் 7 கி. மீ தூரம். சென்ற வருடம் பள்ளி விடுமுறையில், இதற்காகவே தோழிகள் இருவரும் சைக்கிள் கற்றுக் கொண்டாரகள். வழக்கம் போல தோழி கயல் வீட்டின் முன் நின்று சைக்கிள் பெல் அடித்தாள் ஆழி. "வந்துட்டேன் ஆழி," என்ற கயல் "அம்மா கிளம்புறோம்' என்று சொல்லிவிட்டு, அவளின் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வரும் போது கயல் பாவாடை சைக்கிள் செயினில் மாட்டிக் கொண்டது. அதை கவனிக்காமல் அவர்கள் வர.... சிறிது தூரத்தில் பாவாடை இறுக்கி கயல் சைக்களோடு கீழே விழந்துவிட்டாள். பதறிய ஆழி சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினாள். அதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து கயலின் பாவாடையை சைக்கிளிலிருந்து எடுத்து விட்டார்கள். “பொட்ட புள்ளைங்களுக்கு சைக்கிள் எதற்கு? எப்ப பார்த்தாலும் இதே வேலை தான்” என புலம்பிவிட்டு கடந்து சென்றார்கள். ஆம் அவர்கள் சொல்வது சரிதான். ஒரு நாள் ஆழி, ஒரு நாள் கயல் இப்படி யாராவது ஒருவருக்கு இந்த பிரச்சனை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை வந்துவிடும். கயல் மெதுவாக சைக்கிளை சரி செய்தாள். பின்னர் இருவரும் கிளம்பினார்கள். கயல், "நமக்கு சைக்கிள் பிரச்சனை இல்ல பா....." என்றாள் ஆழி. "பின்ன என்ன பிரச்சனை?" என கயல் கேட்க, "நம்ம உடை தான் பிரச்சனை பா" என்றாள். "என்னது உடையா?" என ஆச்சிரியத்தோடு கயல் கேட்டாள். "ஆமாம் உடை தான் பா!. இதற்கு நாம் ஒர் தீர்வு கண்டே ஆக வேண்டும்." "இந்த வாரம் வெள்ளிக்கிழமை விருப்ப உடை அணிந்து செல்லலாம் இல்ல" "ஆமாம்" "அப்போ நாம நம்ம தோழிகள் அனைவரும் பேண்ட் சட்டை போட்டு போகலாம்", என்றாள் ஆழி. "என்னடீ.. என்ன சொல்லற? நம்ம அப்பா அம்மா எல்லாம் சம்மதிக்க மாட்டார்கள். பள்ளியிலும் நமக்கு அனுமதி கிடைக்காது" என்றாள். 'நாம முயற்சி செய்யலாம் டீ. இந்த வாரம் வெள்ளிக்கிழமை பேண்ட் சட்டை சீருடை அணிந்து தான் வரோம் " என்று முடிவு எடுத்தனர். PANTS DAY - வெள்ளி கிழமை என்ற பதாகையோடு ஆழி கூட்டாளிகள் ஒன்றாக பள்ளி உள்ளே நுழைந்தார்கள். "உடையில் சமத்துவம் வேண்டும் என்றால், அந்த மாற்றத்தை நாம் ஆரம்பிக்கவேண்டும். பேண்ட் சட்டை அணிந்து அதை துவங்கலாம் என பேசிக் கொண்டே சென்றார்கள். மற்ற வகுப்பு பெண்களும் இவர்களைப் பார்த்து வியந்து நின்றார்கள். "இங்கே விசேஷம் நடக்குது போல?"என வகுப்பு ஆசிரியர் வினவ, ஆழி தயக்கமில்லாமல் சொன்னாள். "ஆமாம் டீச்சர், வாரத்தில் ஒரு நாள் 'Pants Day' – பெண்கள் விருப்பமாக பேண்ட் சட்டை அணிவதற்கான தினம். அது ஒரு 'வாரியர் வீக்' ஆரம்பம் மாதிரி!" "தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு துவங்குங்கள்" என்றார். "சரிங்க டீச்சர்." என்று சொன்னதோடு, தலைமை ஆசிரியரை சந்தித்து அனுமதியும் பெற்று விட்டனர். வீட்டில் பெற்றோரிடம் அனுமதி பெறுவது அதைவிட பெரிய டாஸ்காக இருந்தது. வெள்ளிக்கிழமை வந்தது. Pants Day வந்து விட்டது. அன்று ஆழியும் அவளின் 11 தோழிகளும் அழகாக பேண்ட் சட்டை சீருடையில் பள்ளிக்கு சைக்களில் வந்தார்கள். எல்லோரிடமும் முக்கியமாக ஒரு அம்சம் இருந்தது: அது கம்பீரம்! அரங்கத்திலிருந்த வகுப்பு ஆசிரியர் பார்த்தவுடன் புன்னகைத்தார். சட்டென்று, "தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கினீர்களா?" என்றார். "இன்றைய விழா நாயகனே நமது தலைமை ஆசிரியர் தான் டீச்சர்" என்றாள் ஆழி. "அனுமதி பெற்று தான் இந்த பேண்ட் சட்டை அணிந்து வந்துள்ளோம் டீச்சர்" என்றார்கள். தலைமை ஆசிரியர் சிரித்தபடி அரங்கம் உள்ளே நுழைந்தார். அரங்கம் அமைதியானது. விழா துவங்கியது. அவரவர் விருப்ப உடையில் மாணவர்கள் மேடையில் வலம் வந்தார்கள். ஆழியும் அவளின் தோழிகளும் மிகவும் கம்பீரமாக மேடை ஏறி பேண்ட் சட்டை சீருடையில் ஒரு வெற்றி நடை போட்டார்கள். தலைமை ஆசிரியர், "நான் வழக்கமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவேன். ஆனா இப்போ நான் 'விழிப்புணர்த்தப்படுற' நிலைக்கு வந்திருக்கேன் போல இருக்கு! ஆடை அரசியல் வேண்டாம். இனிமேல், மாணவிகளும் ஒரு நாள் மட்டும் அல்ல எல்லா நாட்களும் பேண்ட் சட்டை சீருடை அணிந்து வரலாம் என புதிய அறிக்கை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." "அது மட்டுமல்லாமல் நமது இந்த அறிக்கையை பரிந்துரை செய்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பேண்ட் சட்டை அணிந்து வர சட்டம் நடைமுறைப்படுத்த அரசுக்கு கோரிக்கை சமர்ப்பிக்கிறேன்." என்று பேசினார். மாணவிகளிடமிருந்து வந்த பலத்த கைத்தட்டல் அரங்கத்தை அதிரச் செய்தது. "ஆழி ஒரு பேண்ட் சட்டை மட்டும் போட்டுத்தான் பள்ளிக்கு வந்தாள்… ஆனால் வருங்காலத்தில் இது ஒரு சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். ஒரு சீருடை மாற்றம், ஒரு சிந்தனை மாற்றத்துக்கு வித்தாய் இருக்கலாம்.” என்றார் தலைமை ஆசிரியர். பலத்த கைத்தட்டலோடு விழா நிறைவடைந்தது. ஆழியும் அவளின் தோழிகளும் பேண்ட் சட்டையில் பட்டாம்பூச்சி போல சைக்கிளில் பறந்து சென்றார்கள். இனி பாவாடை சைக்கிளில் மாட்டாது. மாற்றம் துவங்கியது. சாந்தி சரவணன் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, ஹைக்கூ மற்றும் சிறார் இலக்கிய தளங்களில் இயங்கி வருகிறார். ‘மலர் மேல் மழைத்துளி’, ‘முள்ளின் மொழி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். குழந்தைகளுக்காக கதை சொல்லி வருகிறார்.
- இருபது லட்சம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்த உலகம்
( 87ஆவது பிறந்த நாள் காணும் எரிக் கார்லேவுடன் ஒரு நேர்காணல் ) ( எரிக் கார்ல் (Eric Carle) சின்னக் குழந்தைகளுக்காக 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி, அவற்றுக்கான சித்திரங்களையும் வரைந்தவர் ஆவார். இதில் அவருடைய மிகவும் புகழ்பெற்ற படைப்பான 'தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்' (The Very Hungry Caterpillar) புத்தகமும் அடங்கும்! ) சந்திப்பு: ஸ்டோரி டாய்ஸ் இணைய தளம் ஸ்டோரி டாய்ஸ்: கேட்டர்பில்லர் (Caterpillar) செயலிகளை 15 லட்சத்திற்கும் (1.5 மில்லியன்) மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தி வருகிறார்கள். 'மை வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்' (My Very Hungry Caterpillar) செயலியில் மட்டுமே, குழந்தைகள் அரை பில்லியன் (50 கோடி) பழத் துண்டுகளை உண்ணச் செய்துள்ளனர், 18 ஆண்டுகளுக்கான சமமான நேரத்தை ஓவியம் வரைவதில் செலவிட்டுள்ளனர், மேலும் 20 லட்சத்திற்கும் (2 மில்லியன்) அதிகமான வண்ணத்துப்பூச்சிகளை உருவாக்கியுள்ளனர். உங்களுடைய படைப்புகளும், அனைவரும் நேசிக்கும் கதாபாத்திரங்களும் இப்போது டிஜிட்டல் உலகில் இவ்வளவு சிறப்பாக வலம் வருவதைப் பார்ப்பதற்கும், ஒரு புதிய தலைமுறையினரை புதிய வழிகளில் தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?" எரிக் கார்லே: கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதில் நான் இன்னும் என்னை ஒரு தொடக்கநிலையில் இருப்பவராகவே கருதுகிறேன் – ஆனால் தொழில்நுட்பமும் செயலிகள் (apps), மின்புத்தகங்கள் (ebooks) மற்றும் கணினிகளின் வளர்ச்சியும் நம் உலகப் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஆரம்பத்திலிருந்தே இது இப்படித்தான் இருந்து வருகிறது. குகை மனிதர்கள் ஒரு காலத்தில் கதைகளைக் கல்லில் படங்களாக எழுதினார்கள்; பின்னர் புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது, இப்படியே அது தொடர்கிறது. எனவே மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மேலும் எனது படைப்பு ரசிக்கப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 20 லட்சம் (2 மில்லியன்) வண்ணத்துப்பூச்சிகளா, எவ்வளவு அழகு! ஸ்டோரி டாய்ஸ்: உங்களுடைய முதல் படைப்பு வெளியானது முதலே, உங்களுடைய பார்வை, அழகியல் மதிப்புகள் மற்றும் கலை நுட்பங்கள் ஆகியவை உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரின் கற்பனைத் திறனையும் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. இப்போது நீங்கள் உங்களது 87-ஆவது பிறந்தநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுடைய தனித்துவமான பார்வை இவ்வளவு நீடித்த, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிவது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? எரிக் கார்லே: எனது புத்தகம் தலைமுறை தலைமுறையாக வாசகர்களாலும் குடும்பங்களாலும் வாசிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிவது எனக்குக் கிடைத்த பெரும் பெருமை. எனது புத்தகங்களைப் படித்து வளர்ந்த பெற்றோர், இப்போது அதே புத்தகங்களைத் தங்களது குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டிவிட்டு எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்களையும் கடிதங்களையும் பெறும்போது அது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு மனிதருக்குக் குழந்தைப் பருவத்தில் அர்த்தமுள்ளதாக இருந்த ஒரு விஷயத்தை, அவரே தன் சொந்தக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு: AI உதவியுடன் சுகன்யா ராமநாதன் சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- தத்துவம் அறிவோம் -16 : எனக்கு மட்டும் தான் எல்லாம் சொந்தம்
விவசாயத்தைக் கண்டுபிடித்த மனிதனின் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. என்னென்ன மாற்றங்கள் நடந்தன? வேட்டைச் சமூகமாக உணவைத்தேடிக் காடு காடாக அலைந்து கொண்டிருந்த மனிதர்கள் ஒரே இடத்தில் தங்கி வாழத் தொடங்கினார்கள். புலம்பெயர் வாழ்க்கை நிலையான வாழ்க்கையாக மாறியது. அதாவது முன்பு அடுத்தவேளை உணவு கிடைக்குமா? என்று தெரியாது. இப்போது உணவைத் தாங்களே உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலையை விவசாயம் உருவாக்கியது. தானியங்களை உற்பத்தி செய்ய முடிந்ததால் மனிதர்கள் ஆண்டு முழுவதும் பசி, பட்டினி இல்லாமல் வாழத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல. விவசாயம் தேவைக்கு அதிகமான உணவுப் பொருளைக் கொடுத்தது. அதிகமாக உற்பத்தியான தானியங்களைப் பாதுகாக்க வேண்டும் இல்லையா? ஒரே இடத்தில் நிலையாக இருந்தால் தானே பாதுகாக்க முடியும். ஆகவே மனிதன் ஒரே இடத்தில் நிலையாக வாழத் தொடங்கினான். இன்னொரு மாற்றமும் நிகழ்ந்தது. அதுவரை, கிடைத்த அத்தனை விலங்குகளையும் வேட்டையாடிச் சாப்பிட்டார்கள். இப்போது சில விலங்குகளை குட்டிகளிலிருந்தே வளர்க்கவும் பழக்கவும் தொடங்கினார்கள். காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக்கினார்கள். உதாரணத்துக்கு நாய், குதிரை, மாடு, பன்றி, ஆடு, கோழி போன்றவற்றைப் பிடித்து தாங்கள் இருந்த இடத்தில் வளர்த்துப் பழக்கினார்கள். இதனால் அவர்களுடைய இன்னொரு பிரச்சினையும் தீர்ந்தது. அலைந்து திரிந்து விலங்குகளை வேட்டையாடி மாமிசம் சாப்பிட்ட மனிதர்களுக்கு இப்போது இருந்த இடத்திலேயே மிருகங்களைச் சாப்பிட முடிந்தது. ஆக,அலைந்து திரிந்த வாழ்க்கை முடிந்து ஒரே இடத்தில் நிலையாக வாழும் வாழ்க்கை தொடங்கியது. மனித குல வாழ்க்கை வரலாற்றில் இது தான் மிக முக்கியமான மாற்றம். இந்த மாற்றம் அன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொடுத்தது. ஆனால் அதே நேரம் சில பல கெடுதல்களையும் கொண்டு வந்தது. அவைகளும் மாற்றங்கள் தான். முன்பு வேட்டைச் சமூகமாக இருந்தபோது கிடைத்ததைத் தன்னுடைய கூட்டத்துடன் பகிர்ந்து சாப்பிட்டார்கள். உணவைப் பகிர்ந்து கொள்வதில் சமத்துவம் இருந்தது. தனிநபர்களை விட கூட்டம் அல்லது குழு முக்கியம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அதையே ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் என்று ஆய்வாளர்கள் அழைத்தனர். பொதுவுடமை என்றால் என்ன? இதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்க்கலாம். இப்போதைக்கு ஒரு சமூகத்தில் மனிதர்களின் உழைப்பு, அதன் பலன்கள், நன்மைகள், வசதிகள், முன்னேற்றங்கள் எல்லாம் அந்த மொத்தக் கூட்டத்துக்குச் சொந்தம். கூட்டம் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும். அங்கே அம்பானியும் கிடையாது. அதானியும் கிடையாது. எல்லாரும் ஓர் நிறை. எல்லோரும் சமம். ஆதிப்பொதுவுடமைச் சமூகத்தில் இந்த நிலைமை இருந்தது. ஆனால் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டபோது என்ன நடந்தது? இப்போது ஒரு சிலர் நிலத்தைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். வலுத்தவர்கள் எளியவர்களை அடிமைகளாக்கினார்கள். அவர்களை நிலத்தில் வேலை செய்ய வைத்தார்கள். சொந்தமாக நிலம் வைத்திருந்தவர்கள் அந்த நிலத்தில் விளைந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள். வேலை செய்தவர்களுக்கு உணவு அல்லது கூலி கொடுத்தார்கள். கூலி என்றால் விளைச்சலில் சமபங்கு கிடையாது. நிலத்தில் வேலை பார்த்தவர்களின் உழைப்பை மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார்கள். உழைப்பை விலைக்கு விற்றவர்களுக்கு அதற்கு மேல் எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் கிடைத்த கூலியை வைத்து வாழ்க்கை நடத்த வேண்டும். நிலம் வைத்திருப்பவர் நிலத்தில் விளைந்த மொத்தப்பலனையும் எடுத்துக் கொள்வார். அதனால் அவர் வசதியாக வாழ்வார். புரிந்து விட்டதா? அமெரிக்கா, செவ்விந்தியாவின் மீது போர் தொடுத்தபோது அமெரிக்கப்படைத் தளபதி, “ இன்றிலிருந்து இந்த நிலம் எங்களுக்குச் சொந்தம்.. ” என்று சொன்னானாம். அதைக் கேட்ட செவ்விந்தியப் பழங்குடி மக்களின் தலைவன், “ நாம் தான் பூமிக்குச் சொந்தமானவர்கள். பூமி நமக்குச் சொந்தமானது இல்லை..” என்று சொல்லிச் சிரித்தாராம். இப்படியொரு கதை உலவுகிறது. யோசித்துப்பாருங்கள். நாம் வாழும் பூமியை யாராவது நிரந்தரமாய்ச் சொந்தம் கொண்டாடமுடியுமா? மனிதர்கள் மட்டுமல்ல… எல்லா உயிர்களுமே உயிரோடு வாழும்வரை மட்டுமே இது என் நிலம், இது என் தெரு, இது என் ஊர், இது என் நாடு, என்று சொந்தம் கொண்டாட முடியும். உயிர்கள் மறைந்த பிறகு நாம் அனைவருமே பூமிக்குச் சொந்தமானவர்களாகி விடுவோம். இல்லையா? அப்படியென்றால் பூமிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்த மனிதன் என்ன செய்திருக்க வேண்டும்? அனைவரும் உழைப்போம். கிடைக்கின்ற விளைச்சலை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம். என்று சொல்லியிருக்க வேண்டுமா? இல்லையா? நீங்களே சொல்லுங்கள். மனிதன் அப்படிச் செய்யவில்லை. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? தனக்கு மட்டுமே அனைத்தும் வேண்டும் என்ற ஆசை. அதற்கு இன்னொரு பெயர் தான் சுயநலம். இதுவரை உலகில் தோன்றிய தத்துவங்களும் இந்த வார்த்தையை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. இந்தச் சுயநலம் என்ன செய்தது? மனிதகுலத்தை என்ன பாடுபடுத்தியது? பார்க்கலாம். ( அறிவோம் தத்துவம்) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- படிக்கப் பழகு
பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! பைய பைய அகரவரிசை படிக்கப் பழகு பாப்பா ! பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! படம் பார்த்து சொற்களை படிக்கப் பழகு பாப்பா ! பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! எழுத்துக் கூட்டி சத்தமாக படிக்கப் பழகு பாப்பா ! பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! குட்டிக் குட்டிக் கதைகளைப் படிக்கப் பழகு பாப்பா பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! எளிய இனிய திருக்குறளை படிக்கப் பழகு பாப்பா ! பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! அருமையான ஆத்திசூடி படிக்கப் பழகு பாப்பா ! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
- அறமதியின் கதை - 6 : எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் – சோசியலிசம்
கடுங்குளிர் காற்று வீசியது. அன்பினியின் காத்திரமான கேள்விகள் மோதித் தீப்பொறிகளை உருவாக்கின. அவற்றிலிருந்து கருகிய காகிதத் துணுக்குகள் காற்றில் பறந்தன. அப்போது அன்பினியின் கைகளில் ஒரு காகிதத் துண்டு வந்து விழுந்தது. அவள் அதை உற்று நோக்கினாள். “இந்தக் கையெழுத்து... நான் இதைப் பார்த்திருக்கேன்...” என்று குழப்பத்துடன் சொன்னாள் அன்பினி. அப்போது அறமதி இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலையிலிருந்து ஒரு ஒளி, அலையாய்ப் பனிமலை எங்கும் பரவியது. அந்த ஒளி அவர்களை ஓர் இருண்ட அறைக்குள் கொண்டு சேர்த்தது. அந்த இருண்ட சிறைச்சாலையின் சுவரில் செதுக்கப்பட்டிருந்த ஒரு வாசகத்தை அன்பினி பார்த்தாள். “ஒவ்வொரு துளி சாம்பலும் என் வெப்பத்தால் இயங்குகிறது. சிறையிலும் சுதந்திரமாய் இருக்கும் பைத்தியக்காரன் நான்!” அரை இருளில் ஓர் இளைஞன் எழுதிக் கொண்டிருந்த காட்சி தோன்றி மறைந்தது. “பகத் சிங்!", அன்பினி உற்சாகமாகச் சொன்னாள். அறமதியின் கைகளில் நான்கு கையெழுத்துப் பிரதி நூல்கள் இருந்தன. “இந்த நூல்கள் பகத் சிங் எழுதியவை. இந்த நூல்களோட சாம்பலைத்தான் நாம் அங்கே பார்த்தோம்,” என்றாள் அறமதி.“நான் இவர் எழுதிய 'ஏன் நாத்திகன் ஆனேன்' நூலைப் படிச்சிருக்கேன்... எங்க பள்ளி மாணவர் எல்லாருக்கும் சிவசுப்ரமணியம் எழுதிய 'பகத் சிங் ஏன் நாத்திகரானார்?' என்கிற ஒரு குட்டிப் புத்தகம் கொடுத்தாங்க. அதைப் படிச்சதில் இருந்து எனக்கு பகத் சிங் மேல் ஒரு பெரிய ஈர்ப்பு வந்துச்சு...” “பகத் சிங் ஒரு புரட்சியாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த அறிவுஜீவியும்கூட. நிறைய புத்தகங்கள் படித்தார். அவர் ஜெயிலில் இருந்த காலத்தில் எழுதின இந்த நான்கு நூல்களையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் பயந்து அழித்துவிட்டார்கள். உன்னோட கேள்விகளுக்கான பதில் இதோ இதில் இருக்கு,” என்றபடி அறமதி அந்த நூல்களை நீட்டினாள். அன்பினி அந்த நூல்களை வாங்கிக்கொண்டு ஒருமுறை தடவிப் பார்த்தாள். அதிலிருந்த எழுத்துகள் தீப்பொறிகளாகி, அங்கே பகத் சிங்கின் வடிவத்தைப் பெற்றன. “நான் பகத் சிங் பேசுகிறேன்... நமது இந்தியா சுதந்திரம் அடைய வேண்டியது வெறும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து மட்டுமல்ல; ஜாதி, மதம் போன்ற மக்கள் நலனுக்கு எதிரான அடிமைத்தனங்களில் இருந்தும் தான். இந்த நாட்டை உருவாக்கும் உழைக்கும் மக்களும் விவசாயிகளும் வறுமையில் இருந்து விடுதலை பெற வேண்டும். கல்வி, மருத்துவம் மாதிரியான அத்தியாவசியமான வசதிகள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். இங்கு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது வெறும் அரசியல் லட்சியம் இல்லை, அது நம் அறக்கடமை. அதிகப்படியான சொகுசுகளை இங்கு ஒருசிலர் அனுபவிக்கிறார்கள். பல மனிதர்கள் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மிஞ்சுவது என்ன? பசி, பட்டினி, சுரண்டல்... அதைப் பார்த்துக்கொண்டு நமது வேலையை மட்டும் நாம் பார்த்துக்கொண்டிருப்பது அறம் தவறுவதாகும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதரும் சக மனிதர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர்களுக்காகப் போராட வேண்டும். அந்த நாள் தான் உண்மையிலேயே நமக்கு விடுதலை கிடைக்கும் நாள். ஒரு சோசியலிச நாடாக நமது நாடு மாற, நான் என் உயிரைத் தியாகம் செய்யச் சந்தோஷப்படுகிறேன்.” “அந்த மாவீரன் தூக்கில் போடப்பட்டபோது அவருக்கு வயது வெறும் 23 தான்” உணர்ச்சி மேலிட சொன்னாள் அறமதி. “எவ்வளவு சரியா சொன்னார் இல்ல... சோசியலிச நாடாக நம்ம நாடு மாறணும்... அப்படி ஒரு நாடு தான் எனக்கு வேணும்.” என்றாள் அன்பினி. “சோசியலிசம் அதாவது சமநிலைச் சமுதாயம் என்பது நம்ம அரசியல் அமைப்புச் சட்டத்தோட அடிப்படை. ‘இந்த உலகத்துல சோசியலிசம் தான் இயற்கையானது. பொருளாதாரச் சமத்துவம், அதாவது எல்லா மக்களும் பொருளாதார அடிப்படையில சமமா இருக்கிறது தான் இதோட அடிப்படைன்னு’ காந்தி வலியுறுத்தினார்.” “அப்படியா... அப்போ காந்தி சொன்னதையும் பகத் சிங் சொன்னதையும் சேர்த்தாங்களா?” அன்பினி கேட்டாள். "நிச்சயமா! இதைப் பத்தி அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘நம்ம நாட்டுல சோசியலிசம் உருவாகப் பெரிய தடையா இருக்கிறதே ஜாதி தான். ஜாதி ஒழியாமல் பொருளாதார சமத்துவமும் முழுமையடையாது’ என்று அவர் நினைத்தார். இந்தியா சோசியலிஸ நாடா மாறத் தேவையான வழிகாட்டுதலை அரசியல் அமைப்புச் சட்டத்துல சேர்த்தார். மக்கள் நலனை உறுதி செய்வது நம்ம அரசோட கடமை. இந்த அடிப்படையில தான் நம்ம அரசுகள் சட்டம் கொண்டு வரணும், மக்கள் நலத் திட்டங்கள் வகுக்கணும்.” அன்பினி கவனமாகக் கேட்டாள். அறமதி தொடர்ந்தாள்.“இதப் பத்தி இந்தியாவோட முதல் பிரதம மந்திரி நேரு என்ன சொன்னார் என்று சொல்லுறேன் கேளு. ‘இந்த உலகமே சோசியலிஸத்தை நோக்கித் தான் நகரும் என்று நம்புகிறேன். நம்ம இந்திய நாடு ஒரு சோசியலிஸ்ட் நாடாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இந்தியா நிச்சயம் அதை நோக்கி நகரும்’ அபடீன்னு சொன்னார்.” “அவருதானே பதவியில இருந்தாரு... அப்போ அதுக்காக என்ன செஞ்சாரு?” “நல்ல கேள்வி... இப்படித்தான் கேள்விகள் கேட்கணும். பதவிகள்ல இருக்கிறவங்களுக்குப் பதில் சொல்லுற பொறுப்பு இருக்குது. இப்போ நான் உனக்கு நேரு இதுக்கு என்ன பதில் சொன்னாருன்னு சொல்லுறேன்.” என்று சொல்லித் தொடர்ந்தாள் அறமதி. “இந்தியாவில் முக்கியமான நிறுவனங்கள், உதாரணமா ரயில்வே, பெட்ரோலிய நிறுவனங்கள் மாதிரியான முக்கியமான நிறுவனங்கள நாட்டுடைமை ஆக்குனாங்க. அதே சமயம் தனியார் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதிச்சாங்க. ஆனா, இந்திய மக்களோட நலனைக் கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வந்தாங்க. கூட்டுறவு முறையில விவசாயம் செய்யத் திட்டங்கள் வகுத்தாங்க. இது எல்லாமே ஒரு அளவு பலன் தந்தது. அதேபோல, 'மனித முயற்சிகள் தவறுகள் அற்றதா இருக்காது' என்றும் சொல்லுறார்.” “அப்போ இதையெல்லாம் எப்படித்தான் சரி செய்யுறது?” என்று அன்பினி கேட்டாள். “அதையும் அவரே சொல்லியிருக்காரு... சுதந்திரம் கிடைக்கும்போது நம்ம மக்களுக்குப் படிப்பறிவு இல்லை; ஜாதியிலேயும் பொருளாதாரத்திலேயும் மேல, கீழன்னு பிரிஞ்சு கிடந்தோம். ஆனா... விவசாயிகளோட, செருப்பு தைப்பவரோட, கசாப்புக்காரரோட பொண்ணும் பையனும் படிச்சிருக்கிற ஒரு புதிய சமுதாயமா நம்ம மாறியிருக்கிறோம். இந்த படித்த தலைமுறை, உங்களை மாதிரி படிக்கிற குழந்தைகள், நாட்டுக்காகப் பாடுபடும் என்று அவர் நம்பினார்.” “அப்போ என்னை மாதிரி குழந்தைகள் நம்ம நாட்டை மாத்த முடியும்னு சொல்லுறாரா?” “நிச்சயமா... முடியும்.” “புரிஞ்சுது.. இங்கே எல்லாமே மாறியிருக்கு, முன்னேறியிருக்கோம்.” என்றாள் அன்பினி. “அதேசமயம்.. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க.. ஒரு சோசியலிஸ நாடா நம்ம மாற.. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.” அறமதி சொன்னாள். இதைக் கேட்ட அன்பினி யோசித்தாள். “நம்ம போக வேண்டிய இடம் இப்போ தெளிவா புரியுது; ஆனா எப்படிப் போறது? இங்க நிறைய தடைகள் இருக்கே? ஜாதி... மதம்... பணம்...” என்று கேட்டாள் அன்பினி. (அறிவோம் தெளிவோம்) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- சிறுவர் நாடகம் : வியனின் கொட்டாவி
கதாபாத்திரங்கள்: கதைசொல்லி வியன் (முதன்மைக் குழந்தை) குமார் & ரமா (வியனின் நண்பர்கள்) அறிவியல் ஆசிரியர், கணக்கு ஆசிரியர், வரலாறு ஆசிரியர், தமிழ் ஆசிரியர் தலைமையாசிரியர் பட்டாம்பூச்சி, கம்பளிப்பூச்சி, கூட்டுப்புழு, தவளை அண்ணன் பார்வையாளர்கள் (நாடக அரங்கிலுள்ள குழந்தைகள்) காட்சி 1: பள்ளி வகுப்பறை ( கதைசொல்லி ஆடிக் கொண்டே மேடைக்கு வருகிறார்.) கதைசொல்லி: நம்ம எல்லாரையும் போலவே பள்ளிக்கு போகும் ஒரு சின்னப் பையன் தான் வியன். ஆனால் அவனுக்கு அவன் ஸ்கூல் பிடிக்கும், வகுப்பறை பிடிக்காது. அறிவியல் பிடிக்கும், ஆசிரியர் பிடிக்காது. விளையாடப் பிடிக்கும், பிடி (PT) பீரியட் பிடிக்காது. அதனால் என்ன ஆகுதுன்னு நீங்களே பாருங்கள்! (கதைசொல்லி ஆடிக் கொண்டே ஓரமாய் ஒதுங்குகிறார். மேடை வகுப்பறைக் காட்சியாக மாறுகிறது. வியன், குமார், ரமா மற்றும் மற்ற மாணவர்கள் பென்ச்சுகளில் அமர்ந்திருக்கிறார்கள். அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.) அறிவியல் ஆசிரியர்: இன்னைக்கு நம்ம வகுப்புல உயிர்களின் உருமாற்றம் பற்றி பார்க்கப் போகிறோம். வியன்: ஹா... (ஒரு பெரிய கொட்டாவி விடுகிறான்) அறிவியல் ஆசிரியர்: கரப்பான் பூச்சிகள், தவளைகள், பட்டாம்பூச்சிகள்... வியன்: ஹா... வ் (சத்தத்தோடு இன்னும் ஒரு பெரிய கொட்டாவி) அறிவியல் ஆசிரியர்: நான் பூச்சியைப் பத்தி சொல்லிகிட்டு இருந்தா... இவன் வாயில ஈ போயிடும் போலயே...! (என்று கோபமாகச் சொல்லி, ஒரு சாக்பீஸ் துண்டை அவனை நோக்கி எறிகிறார்) வியன்: (டக் என்று அலர்ட் ஆகி நேராக நிமிர்கிறான்) அறிவியல் ஆசிரியர்: வியன் எப்பாப் பாரு தூங்கி வழி...! வியன்: (திருதிருவென முழிக்கிறான்) ரமா: (பக்கத்தில் உட்கார்ந்திருந்தபடி ரகசியமாகக் கேட்கிறாள்) ஏண்டா தூங்குற... நானும் எவ்வளோ தான் உன்னை எழுப்புறது? வியன்: ஏன்னே தெரியலப்பா... கிளாசுக்கு வந்தாலே தூக்கமா வருது. அறிவியல் ஆசிரியர்: புழுக்கள், கூட்டுப்புழுக்களாகி பிறகு பட்டாம்பூச்சிகளாக முழு உருமாற்றம் அடையுது... அதன் வளர்ச்சி..நிலைகள்... (இப்போது வியன் சௌகரியமாக பென்ச்சில் படுத்துத் தூங்கியே விடுகிறான்.) அறிவியல் ஆசிரியர்: இன்னைக்கு இவனைச் சும்மா விடுறது இல்ல...! (ஒரு பிரம்புக் குச்சியை ஓங்கிக்கொண்டு வியனை நோக்கி வருகிறார்) (ரமா பயந்துபோய் வியனை அவசரமாக எழுப்ப முயற்சிக்கிறாள். லேசாக கண்விழித்த வியனுக்கு ஒரு பிரம்மாண்டமான கொட்டாவி முட்டிக்கொண்டு வருகிறது.) வியன்: ஹா.......வ்! (என்று கொட்டாவி விடுகிறான்) ( புயலைப் போல பெரும் சத்தம் கேட்கிறது. அது சுனாமியாக மாறி அறிவியல் ஆசிரியரை உள்ளே இழுக்கிறது. ஆசிரியர் முதலில் காற்றின் வேகத்தால் பின்னே சென்று, பின் ஓடி வந்து வியனின் வாய்க்குள் போவதாகச் செய்கை செய்து, சட்டென்று ஸ்டேஜின் வெளியே ஓடி மறைகிறார். வியன் மீண்டும் பென்ச்சில் படுத்துத் தூங்கி விடுகிறான். வகுப்பறையில் ஒரே அமளித்துமளி. திரை விழுகிறது.) காட்சி 2 இடம் : தலைமையாசிரியர் அலுவலகம் ( மேடையில் தலைமையாசிரியர் அலுவலகம். பெரிய மரங்கள் போல ஆசிரியர்கள் வியனைச் சூழ்ந்து சுற்றி நிற்கிறார்கள். வியன் அவர்களுக்கு மத்தியில் ஒரு குட்டிப் பூ போலப் பாவமாக நிற்கிறான். ) கணக்கு ஆசிரியர்: டேய் வியன்... என்ன நடந்தது? ஒழுங்கா சொல்லுடா... எங்க தேடியும் அறிவியல் சாரைக் காணோம்! வரலாறு ஆசிரியர்: சார், இவன் எப்போதுமே கிளாசுக்கு வந்தாலே தூங்குவான்... நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். தமிழ் ஆசிரியர்: தூங்கினதுக்காக அறிவியல் ஆசிரியர் திட்டினா தப்பா... அவரை என்னடா பண்ணுன? (மேடையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த கதைசொல்லி..பார்வையாளர்களிடம்) கதைசொல்லி: பெரிய மரங்கள் போல நிற்கும் ஆசிரியர்கள் மத்தியில் வியன் குட்டியாக ஒரு குட்டிப் பூ மாதிரி நின்று கொண்டிருக்கிறான். பாக்குற எனக்கே அவனைப் பார்த்தா பாவமா இருக்கு. உங்களுக்கு எப்படி? நம்ம மனசு வச்சா அவனைக் காப்பாற்ற முடியும். நீங்க சொல்லுங்க, அவனைக் காப்பாற்றுவோமா... வேண்டாமா? கூட்டம் (பார்வையாளர்கள்): காப்பாற்றுவோம்... காப்பாற்றுவோம்! கதைசொல்லி: அப்போ... எல்லாரும்... 'ஹா...' என்று வாயைத் திறந்து கொட்டாவி விடுங்கள்... விடுங்கள்... விட்டுத் தான் பாருங்களேன்...! (கதைசொல்லி 'ஹா வ் ‘ என்று கொட்டாவி விடுவது போல ஓசையோடு செய்கை செய்கிறார். அரங்கில் உள்ள கூட்டமும் 'ஹா' என்று கொட்டாவி விடுகிறார்கள். உடனே மேடையில் வியனும் பெரிய கொட்டாவி விடுகிறான்.) வியன்: ஹா...வ்....! (மீண்டும் அவன் வாயிலிருந்து ஒரு பெரும் புயல் கிளம்புகிறது. அது அங்கிருக்கும் எல்லா ஆசிரியர்களையும் பின்னால் தள்ளுகிறது. பின் ஒரு சுனாமி போல மாறி, அப்படியே ஒவ்வொரு ஆசிரியராக, தலைமையாசிரியர் உட்பட அனைவரையும் வியன் வாய்க்குள் இழுத்துக் கொள்கிறது. ஆசிரியர்கள் அனைவரும் வியன் வாய்க்குள் விழுந்து மேடையை விட்டு மறைகிறார்கள்.) காட்சி 3: வகுப்பறை & பட்டாம்பூச்சியின் வருகை (காட்சி மீண்டும் வகுப்பறைக்கு மாறுகிறது. எல்லா குழந்தைகளும் ஒரே ஆரவாரம் செய்கிறார்கள். இப்போது அந்தப் பள்ளியில் ஒரு ஆசிரியரும் இல்லை. அப்போது வகுப்பிற்குள் ஒரு பட்டாம்பூச்சி நுழைகிறது. அது முகத்தில் கண்ணாடியும், கையில் ஒரு குச்சியும், தோளில் ஒரு பையும் மாட்டியிருக்கிறது.) பட்டாம்பூச்சி: ஹாய் குழந்தைகளா...! குழந்தைகள்: ஹாய்...! (பட்டாம்பூச்சி தன்னுடைய கண்ணாடியை எடுத்துத் துடைத்து மீண்டும் அணிந்து கொள்கிறது.) குமார்: நீ ஏன் கண்ணாடி போட்டிருக்க? பட்டாம்பூச்சி: அதுவா... ஆசிரியர் அப்படின்னா கண்ணாடி, ஒரு குச்சி கையில, புக் இதெல்லாம் இருந்தா... ஒரு கெத்தா இருக்குமேனு... சரி விடு... இதெல்லாம் நமக்கு ஒத்தே வரல! (பட்டாம்பூச்சி கண்ணாடியைக் கழற்றி எறிகிறது. தோளில் போட்டிருந்த பையைக் கழற்றும் போது, அதனுடைய சிறகுகளில் ஒன்று கழன்று விடுகிறது. பட்டாம்பூச்சி நகைச்சுவையாகத் தன் உடலை அசைத்து, காற்றில் பறக்கிற அந்தச் சிறகைத் தாவிப் பிடிக்கிறது.) பட்டாம்பூச்சி: அய்யோ... சிறகுகள் ரொம்ப முக்கியம்பா... தேவை இல்லாததெல்லாம் போடுறதுனால பாருங்க... முக்கியமான சிறகே கழன்றுடுச்சு! குமார்: நீ தான் எங்க புது டீச்சரா? பட்டாம்பூச்சி: ஆமா.. வேற வழி... இந்த வியன் பையன், இருந்த எல்லா ஆசிரியர்களையும் முழுங்கிட்டான்... சிலபஸ் கவர் பண்ணனும்... ஒரே டென்ஷனா இருக்கு பா... இனிமே நாங்க தான் உங்களுக்கு ஆசிரியர்கள்! ரமா: நீங்கன்னா... இன்னும் வேற யாரெல்லாம் இருக்காங்க? பட்டாம்பூச்சி: அதோ நிக்கிறாங்களே... கரப்பான் பூச்சி, தவளை அண்ணன் அறிவியல் ஆசிரியர்கள். அப்புறம் நம்ம சிந்துசமவெளி நடன மங்கை (Indus dancing girl), டைனோசர் எலும்புக்கூடு, பானை ஓடு எல்லாரும் மியூசியத்துல இருந்து வந்துகிட்டு இருக்காங்க... வரலாறு பாடம் எடுக்க...! வியன்: ஐ... சூப்பர்... நான் கிளாசில் தூங்கும் போது இவங்க தான் என் கனவுல வருவாங்க... (குழந்தைகள் அனைவரும் ஒரே ஆரவாரம் செய்கிறார்கள்.) பட்டாம்பூச்சி: சரி வாங்க வகுப்புக்கு போவோம்! ரமா: ஏற்கனவே கிளாசில் தானே இருக்கோம்? பட்டாம்பூச்சி: இதுவா.. சீ சீ... இதில எப்டி பாடம் நடத்துறது? இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தா... எனக்கே எல்லா பாடமும் மறந்திடும் போலையே! (பட்டாம்பூச்சிக்குக் கொஞ்சம் மயக்கம் வர மாதிரி ஆகிறது... மூச்சு அடைக்கிற மாதிரி செய்கிறது... பிறகு ஒரு பெரிய கொட்டாவியை விடுகிறது.) (பட்டாம்பூச்சியின் வாயிலிருந்து வரும் கொட்டாவிப் புயல் காற்றில் குழந்தைகள் எல்லோரும் பின்னாடி தள்ளப்படுகிறார்கள். பின் ஒரு சுனாமி காற்று வீசுகிறது. அதில் எல்லோரும் ஒவ்வொருவராய்ப் பட்டாம்பூச்சியின் வாய்க்குள் போய்விடுகிறார்கள். இப்போது பட்டாம்பூச்சி தன் சிறகுகளை விரித்துப் பறந்து வெளியே போகிறது. மேடை ஒரு அழகான காடாக மாறுகிறது.) காட்சி 4: மாயாஜாலக் காடு (குழந்தைகள் ஒரு பெரிய இலையின் மீது இருந்த பட்டாம்பூச்சியின் முட்டைகளைப் பார்க்கின்றனர். அதிலிருந்து ஒரு குதி குதித்து ஒரு கம்பளிப்பூச்சி வெளியே வருகிறது.) ரமா: ஐ... கம்பளிப்பூச்சி! (கம்பளிப்பூச்சி ரமாவை ஒரு முறை முறைத்துவிட்டு இலைகளை வேகமாகச் சாப்பிட ஆரம்பிக்கிறது. சாப்பிட்டு முடித்த பிறகு...) கம்பளிப்பூச்சி: அப்பாடா... என்னா பசி.... ஏவ்! (பெரிய ஏப்பம் விடுகிறது) ரமா: என்னா தீனி திங்குற நீ? கம்பளிப்பூச்சி: அப்புறம் உன்ன மாதிரி கொரிப்பாங்களாக்கும்... (ரமா கோபமாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். இன்னொரு பக்கம் ஒரு கூட்டுப்புழு தன் தோலைக் கிழித்துக் கொண்டு வெளியே வர முயல்கிறது.) குமார்: (அதைத் தொடப் போகிறான்) கூட்டுப்புழு: ஏய்... போடா அங்கிட்டு... தொடாதே...! குமார்: ஏன் கோபப்படுற... நான் உனக்கு உதவி செய்யலாம்னு தானே வந்தேன். கூட்டுப்புழு: யாரு... நீயா? தட்டான் வாலுல கயிறைக் கட்டினவன் தானே நீ? குமார்: (ஈ என்று இளித்துக்கொண்டே) அது அப்போ... இப்போ நான் நெஜமாவே உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்தேன்... (கூட்டுப்புழு இன்னும் கொஞ்சம் தோலைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகிறது.) கூட்டுப்புழு: நீ சும்மா இருந்தாலே பெரிய ஹெல்ப் தான்... நான் வெளியே வந்ததும் என் ரெண்டு சிறகையும் எடுத்து உன்னை கும்பிடுறேன் பா... கொஞ்சம் தள்ளி நில்லு! (குழந்தைகள் அனைவரும் சிரிக்கிறார்கள்.) ரமா: டேய்... உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்குடா! குமார்: நீ மட்டும் என்ன... அந்த கம்பளிப்பூச்சிகிட்ட மொக்கை வாங்கினதை நானும் பாத்தேன்... வவ்! (கிண்டலாகப் பாவனை செய்கிறான்) (பதிலுக்கு ரமாவும் 'வவ்' என்று பாவனை செய்கிறாள். அப்போது அங்கே தவளை அண்ணன் ‘கொர்ர கொர்ர’ என்று சத்தம் போட்டுக்கொண்டே, குதித்து வருகிறார்.) தவளை அண்ணன்: வாங்க, அடுத்து நம்ம குளத்துக்குப் போவோம்... வியன்: குளத்துல நாங்க எப்படி வர்றது? மூழ்கிட மாட்டோமா? தவளை அண்ணன்: அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல... என்ன மாதிரியே தாவி தாவி வந்தா, அல்லிக் குளத்துல ஒரு இலையில இருந்து இன்னொரு இலைக்கு நீங்களும் தாவி தாவி போயிடலாம்... கமான் ஸ்டார்ட்! (தவளை தாவித் தாவிப் போக... பின்னாடியே வியன், ரமா, குமார் என எல்லோரும் தவளையைப் போலவே தாவித் தாவிப் பின்செல்கிறார்கள்.) காட்சி 5: அல்லிக் குளம் (கதைசொல்லி மேடையின் ஒரு பக்கமாக வந்து பார்வையாளர்களை நோக்கிப் பேசுகிறார்.) கதைசொல்லி: அடுத்ததா அவங்க எல்லோரும் குளத்துல போய் தவளை அண்ணனின் வாழ்க்கையைப் பார்த்தாங்க. உங்களுக்குப் பார்க்கணும்னா ரொம்ப ஈசி... நீங்களும் தவளை மாதிரி தாவி தாவிப் போனா, அவரை மாதிரியே அல்லி இலை மேல நிக்க முடியும். ஐயோ... மறந்தே போயிட்டேன்... நம்ம இங்க இந்த நாடகக் கொட்டகையிலேயே மாட்டிக்கிட்டு இருக்கிறோம்... முதல்ல நாம அவங்க இருக்குற குளத்துக்குப் போகணும். எல்லாரும் ஒரு தடவை கொர்ர கொர்ர’ன்னு அடித் தொண்டையில இருந்து கத்துங்க... (நாடக அரங்கில் உள்ள பார்வையாளர்கள்/குழந்தைகள் அனைவரும் கொர்ர கொர்ரன்னு' சத்தமாகக் கத்துகிறார்கள். மேடையில் கதைசொல்லி ஒரு பக்கமாக ஒதுங்கிக்கொள்ள, அல்லி இலைகளின் மீது குமார், ரமா, வியன் மற்றும் தவளை அண்ணன் நின்றிருக்கிறார்கள்.) கதைசொல்லி: அட... பார்த்தீங்களா.... நம்ம குளத்துக்கு வந்துட்டோம். தாவுங்க... தாவுங்க... எல்லாரும் மூழ்கிடுவோம்! (அப்படிச் சொல்லிக்கொண்டே கதைசொல்லி தாவித் தாவி மேடையை விட்டு வெளியேறுகிறார்.) குமார்: அண்ணன், நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க... மீன் மாதிரி நீந்தவும் செய்றீங்க... எங்கள மாதிரி நிலத்திலேயும் நடக்குறீங்க... தவளை அண்ணன்: என்ன இருந்து என்ன பண்ண... இந்த வாயால கெடுறேனே... (என்று தனக்குள்ளேயே முணுமுணுப்பது போலச் சொல்கிறது) ரமா: என்ன சொன்னீங்க? தவளை அண்ணன்: அது ஒண்ணுமில்ல... தவளைகள் வாழ்க அப்படின்னு சொன்னேன்! வியன்: அண்ணன்... அதோ பாம்பு...! தவளை அண்ணன்: அய்யோ...! (பயந்து தடுமாறி கீழே விழுகிறது) (எல்லாரும் சிரிக்கிறார்கள்.) தவளை அண்ணன்: அட போப்பா... சும்மா பயமுறுத்திக்கிட்டு! எல்லாரும் கிளம்புங்க... கிளாஸ் (Class) முடிஞ்சது! குமார்: சரி... கோச்சுக்காதீங்க. தவளை அண்ணன்: சரி... சரி... கோவம் எல்லாம் இல்ல.. நீங்க எல்லாம் நல்ல பிள்ளைங்க.. சரி நாளைக்கு பார்ப்போம். வியன்: என்னது கிளாஸ் முடிஞ்சதா... அப்போ எங்க ஆசிரியர்கள்...? தவளை அண்ணன்: அட.. கிளாஸ் அவங்களுக்குத் தான்...! ரமா: என்ன சொல்லுற... புரியலையே? தவளை அண்ணன்: நீங்க வந்தீங்க, பார்த்தீங்க, கேள்விகள் கேட்டீங்க... நாங்க அதுக்கு பதில் சொன்னோம்... அவ்வளவு தான்... நீங்களே கத்துக்கிட்டீங்க! குழந்தைகள்: ஆமா..! தவளை அண்ணன்: (அரங்கிலுள்ள பார்வையாளர்களைப் பார்த்து) ஆனா, உங்க ஆசிரியர்கள் நீங்க கேள்வி கேட்டா என்ன செய்தாங்க... நீங்க சொல்லுங்க? பார்வையாளர்கள் (குழந்தைகள்): திட்டுவாங்க... அடிப்பாங்க... வாயை மூட சொல்லுவாங்க...! தவளை அண்ணன்: இப்போ புரியுதா.. இந்த கிளாஸ் யாருக்குன்னு? வியன்: ஆனா எங்க ஆசிரியர்கள் பாவம்... அவங்களைக் காப்பாத்து... ப்ளீஸ்! தவளை அண்ணன்: அட நான் ஒன்னும் பண்ணலப்பா... உங்க ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்துல இருக்காங்க... (தரையைப் பார்த்து) கேக்குதா...? ரமா: என்ன பண்ணனும் சொல்லு... அவங்க எங்க இருக்காங்க? தவளை அண்ணன்: அவங்களும் இங்க தான்.. இந்த குளத்துல தான் இருக்காங்க... (மீண்டும் பார்வையாளர்களைப் பார்த்து) நீங்களே சொல்லுங்க... நம்ம எப்படி குளத்துக்கு வந்தோம்? குதிச்சு குதிச்சு... தாவி தாவி...! தவளை அண்ணன்: ஆமா... சரியா சொன்னீங்க... அவங்களும் அப்படி குதிச்சு குதிச்சு மேல வரலாம் தானே... நீங்களாவது சொல்லிப் பாருங்க... அவங்க கேக்குறாங்களான்னு பாக்கலாம்! குழந்தைகளும் பார்வையாளர்களும் இணைந்து: குதிச்சு வாங்க... தாவி வாங்க... தவளை மாதிரி பண்ணுங்க! (மேடையின் பக்கங்களிலிருந்தும், தரையோடு தரையாக கீழே இருந்து மேலே எழுந்து வருவது போலவும்... குதித்துக் குதித்துத் தவளை வடிவில் வந்து மேடையில் சேருகிறார்கள் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் தலைமையாசிரியரும்.) குழந்தைகள்: ஐ... யே...! (சந்தோஷமாகக் குதித்துச் சத்தம் போடுகிறார்கள்) வியன்: எல்லாம் சரி, இப்போ நாங்க எப்படி எங்க உலகத்துக்குப் போறது? தவளை அண்ணன்: எப்படி இங்க வந்தீங்க? குழந்தைகள்: கொட்டாவி விட்டு! தவளை அண்ணன்: இப்போ தூக்கம் கலைய கண் கசக்குங்க... (குழந்தைகள் அனைவரும் கண்ணைக் கசக்குகிறார்கள்.) தவளை அண்ணன்: (பார்வையாளர்களை நோக்கி) நீங்களும் கண்ணைக் கசக்குங்க... நீங்க வீட்டுக்கு போக வேணாமா? கதைசொல்லி: (அவசரமாக மேடைக்கு ஓடிவந்து) எப்பா... என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க... (அவரும் கண்ணைக் கசக்குகிறார்) தவளை அண்ணன்: போதும் போதும்... கண்ணு முழி வெளிய வந்துடப் போகுது... நிறுத்துங்க... இப்ப பாருங்க... நம்ம வந்துட்டோம்... ரமா: என்ன விளையாடுறியா... நம்ம அங்கேயே தான் இருக்கோம்... எங்க உலகம் எங்க? தவளை அண்ணன்: என்னது உங்க உலகமா? நாங்களும் அதே உலகத்துல தான் இருக்கோம்.. நாங்க மட்டும் என்ன வேற கோளிலிலிருந்தா வந்திருக்கிறோம்... இப்படி நேரா போய் ரைட் எடு... உங்க ஸ்கூல் (School) வந்துடும்... உங்க பள்ளிக்கூட த்துக்குப் பின்னாடி இருக்குற பார்க்ல (Park) தான் நம்ம இப்போ இருக்கோம்! குழந்தைகள்: அட... அப்படியா... நாங்க பயந்தே போயிட்டோம்...! ஆசிரியர்கள்: வாங்க போகலாம்...வியன்: சார் உங்க பிரம்பு.. (கையில் நீட்டிக்கொண்டே)அறிவியல் ஆசிரியர்: அது எதுக்கு டா இனிமே.. தூக்கி அங்கிட்டு போடு.. வியன் தோளில் அறிவியல் ஆசிரியர் கை போட்டுக்கொண்டார். (ஆசிரியர்கள் பழைய கோபங்கள் எல்லாம் மறந்து, தங்களின் இறுக்கமான உடல் மொழியை உடைத்து, அன்போடு குழந்தைகளை அணைத்துக் கொண்டும், தோளில் கைப் போட்டுக் கொண்டும் நெகிழ்ச்சியோடு மேடையை விட்டு வெளியேறுகிறார்கள்.) கதைசொல்லி: ( பாடுவதைப் போல ) நாடகம் பார்த்த குழந்தைகளுக்கு நன்றி, வணக்கம்! நாடகம் பார்த்த பெரியவர்களுக்கு நன்றி, வணக்கம்! நாடகம் பார்த்த ஆசிரியர்களுக்கு நன்றி, வணக்கம்! (திரை விழுகிறது) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- வெள்ளாடே வெள்ளாடே
(வெள்ளாடும் இறைச்சி கடைக்காரரும்) வெள்ளாடே வெள்ளாடே மேயப் போறியா? - நான் வேண்டும் தழை உனக்குத் தருவேன் கூட வருவியா ? காடு கரை அலைந்து திரிந்து சுற்றி வருவேன் - அட காலாற மேய்வதுதான் மகிழ்ச்சி தருமே! உனக்கு பிடித்த அகத்திக்கீரை உடைத்து தருவேன் - நீ தேடித் திரிந்து அயர வேண்டாம் கூட வந்திடு ! கொழுந்து புல்லைத் தின்றாலே வலிமை பிறக்கும் - என் குட்டிக்குத் தருவதற்கு பாலும் சுரக்கும்! கொட்டகையில் இடம் தருவேன் நனைய வேண்டாம் நீ கட்டிப்போட மாட்டேன் நான் கிட்ட வந்திடு ! வெட்டி தின்னும் உனது திட்டம் எனக்கு தெரியும் விட்டுவிடு ஓடிப் போவேன் விடுதலை வேண்டும்! குருங்குளம் முத்துராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம் பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர். இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.













