top of page

மாபெரும் பெண் ஆளுமை வசந்தி தேவி

ree

வாழ்நாள் முழுவதும் பொது சமூகத்திற்காகவே உழைத்த வசந்தி தேவி என்னும் மாபெரும் பெண்ணாளுமை இன்று நம்மோடு இல்லை. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்  பரந்து கெடுக உலகியற்றியான்" என்ற குறளின்படி வாழ்ந்தவர். "ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி"   என்ற ராமலிங்கரின் அருட்பா வாசகத்தின் படி அப்பாவால் வழிநடத்தப்பட்ட வசந்தி தேவி இறுதியில் கம்யூனிசம் ஒன்றுதான் வழி. புரட்சி வந்தால் தான் அனைத்து விதமான சமூக சிக்கல்களும்  சரியாகும் என்று தன் தந்தையால் திசை மாற்றம் செய்யப்பட்டார். 


அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மற்ற பெண் பிள்ளைகளைப் போன்று தன் வாழ்க்கையை தேர்வு செய்யாமல் வாசிப்பு விவாதம் ஆகியவற்றின் ஊடாக சமூகத்தை அறிய விரும்பினார். பெரியார் சிந்தனை காலனிய எதிர்ப்பு அரசியல், சாதிய சமுதாயத்தை விமர்சன பூர்வமாக அணுக வேண்டிய தேவை ஆகிய மூன்றையும் அவரின் தந்தையின் கருத்தியல் மூலமாக புரிந்து கொண்டார்.  1957-ல் மாநில கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மார்க்சியத்தின் மீது வசந்தி தேவி அவர்களுக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது. 


சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் பிரம்மாண்டமான வளர்ச்சி, சீனத்தின் எழுச்சி, கியூபா, வியட்நாம் ஆகியவற்றின் போராட்ட வரலாறு வசந்தி தேவி அவர்களின்   உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்தன. அந்த காலகட்டத்தில் இந்திய அரசியலில் இடதுசாரி இயக்கத்தினர் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர். இது அனைத்தும் வசந்தி தேவியை மார்க்சியத்தின் பால் ஈர்த்தது. 1975 ஆம் ஆண்டு வசதி தேவி தன் கணவருடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றார். அப்போது அந்நாட்டில் ஏற்பட்டிருந்த இடதுசாரி அரசியல் கிளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட அறிவு புரட்சியும் அவருடைய உலக பார்வையை மாற்றி அமைத்தன. பிலிப்பைன்ஸ்ன் ஜனநாயகம் கெட்ட அரசியல் அந்நாட்டில் எத்தகைய விபரீதங்களை நிகழ்த்தியது என்பதை கண்கூடாக பார்த்த வசந்தி தேவி சுதந்திர இந்திய அரசினை ஜனநாயக படுத்த வேண்டும் என்பதிலும் மக்களின் அரசாக அதனை செயல்பட வைக்க வேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருந்தார். அரசு அமைப்புகளுக்கு இருக்கும் அதிகாரத்தை சரியான வகையில் கையாளுவதிலும் அவர் கவனம் செலுத்தினார்.

  "மகளிர் ஆணையத்தில் அவர் செயல்பட்ட போதும் சரி, பொதுக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி கல்வி உரிமை குறித்து பேசியும் எழுதியும் பரப்புரை செய்த போதும் சரி, மனித உரிமைக் கல்வியை அரசுப் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் சரி ஜனநாயக மதிப்பீடுகளை வளர்த்தெடுக்கும் பணிகளாகவே அவற்றை வசந்தி தேவி அணுகினார்" என்கிறார் 


வ.கீதா. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவராக திருமதி வசந்தி தேவி  2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். மகளிர் ஆணையத்தில் பணி செய்த தன்னுடைய பணி காலம் குறித்து வசந்தி தேவி அவர்கள் கூறும் போது "ஆணையத்தின் சிறிய கதவுகளை வந்து தட்டிய ஒவ்வொரு மனுவின் பின்னும் ஒரு பெண்ணின் ஆற்றமுடியாத கண்ணீர், கதறல், வேதனை, அவமானம், ஆதரவின்மை, ஆணாதிக்க சமுதாயத்தின் கொடூரங்களைப் பற்றிய அவலக் குரல்கள், ஆயிரம் ஆண்டு கடந்து தொடரும் பழம்பெரும் பாதகங்கள், நவீன இந்தியாவின் புதிய விவகாரங்கள், இவை அனைத்தையும் ஒரு அணுவில் குவிந்த குறுகிய உயிர்த்துளிகளைப் போல நான் கண்டேன்" என்கிறார்.

 

பெண்ணின் நிலை பற்றிய    விழிப்புணர்வை கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களிடையே அவர் உருவாக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார். அவர் திண்டுக்கல் கல்லூரியில் பணியாற்றிய சமயத்தில் 'பெண்ணின் நிலை வரலாற்றுப் பின்னணியில்' என்ற கண்காட்சி ஒன்றை உருவாக்கியதன் மூலம் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்ணுக்கு நிகழும் அநீதிகளை வரலாற்றின் பின்னணியில் புள்ளி விவரங்களோடு சித்தரித்து வரலாறு முழுவதும் பெண்கள் பெற்ற வலியை   உலகிற்கு உரக்கச் சொன்னார்.  அந்த கண்காட்சி தமிழகத்தின் பல கல்லூரிகளுக்கு பயணித்து பெரும் வெற்றி கண்டது. 


கல்லூரி மாணவியரும் ஆசிரியர்களும் வீதிக்கு வருவது என்பது மிகப் புதுமையாக இருந்த அந்த காலகட்டத்தில் உளுத்துப்போன நில பிரபுத்துவம் பத்தாம் பசலித்தனமான ஆணாதிக்கம் இவற்றுக்கு இலக்கணமாக கருதப்பட்ட கும்பகோணத்தின் தெருக்களில் அந்த புதுமையை வசந்தி தேவி  நிகழ்த்தி காட்டினார். 


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் மகளிரியல் என்ற சிறப்புத் துறையை உருவாக்கி மாறுபட்ட கல்வி சூழலை ஏற்படுத்தி பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார்   நிர்வாகத்திலும் ஆசிரியர்களின் நடத்தையிலும் ஆசிரியர் மாணவர் உறவிலும், மாற்றங்களை கொண்டு வருவதற்காக அவர் பெரும் புரட்சியே  செய்தார். உசிலம்பட்டி தாலுகாவில் பெண் சிசுக்கொலைகள் பற்றிய அவரது ஆய்வு மிக சுவாரசியமானது என்கிறார் வ.கீதா  சிசுக்கொலை தொடர்பான ஆய்வின் போது  உசிலம்பட்டி வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து இப் பிரச்சனை குறித்து பேசினார். பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொண்டார். 

இவை அனைத்தும் அவர் மகளிர் ஆணையத்தின் தலைவியாக பொறுப்பு ஏற்றதற்கு பிறகு மிகப்பெரிய அளவில அவருக்கு உதவியது என்பது மறக்க முடியாத உண்மை. அந்த ஆய்வு குறித்து வசந்த தேவி கூறும் போது  "ஆய்வுகள் சமுதாயம் குறித்து நமக்குள்ள சராசரியான பார்வையை மாற்ற உதவும்" என்கிறார். 


ஜாதி மற்றும் பெண் அடிமைத்தனம் ஆகியவற்றிற்கு இடையிலான நெருக்கமான உறவை அதன் அத்துணை சிக்கலோடும் முரண்களோடும் வசந்தி தேவி அவர்கள் புரிந்து கொண்டதால்  மகளிர் ஆணைய தலைவராக இருந்த போது குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறை  சமுதாய வேலைத்தளங்களில் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் ஆகியவற்றின் வேறான பிரச்சனைகளை முழுமையாக புரிந்து கொண்டு அவற்றை தீர்வு நோக்கிய பாதையில் கொண்டு செலுத்துவதில் வசந்தி தேவியால் சிறப்பாக செயல்பட முடிந்தது. 


இப்படியாக வாழ்நாள் முழுவதும் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மனித உரிமைக்காகவும் போராடிய ஆகச்சிறந்த ஆளுமையான திருமதி வசந்தி தேவி அவர்கள் இலக்கியத்திலும் கணிசமான பங்களிப்பை செய்துள்ளார். 


குழந்தைகள் மத்தியில் பாட புத்தகம் தாண்டிய வாசிப்பைக் கொண்டு செல்வதில் அரசோடு இணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டார். குழந்தைகளுக்கான கதைகளையும் அவர் எழுதியுள்ளார். அனைவரும் சமம் அனைவருக்கும் சமநீதி சம உரிமை என்ற மேம்பட்ட சமூகம் அமைவதற்காக தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் பெண் ஆளுமையாகத் திகழ்ந்த வசந்திதேவியின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு மாபெரும் இழப்பு.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page