top of page

தத்துவம் அறிவோம் -6

ree

N.R.A


உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு ஒரே ஒரு ஊர் தான் சொந்த ஊர் தெரியுமா? 

யார் சொன்னார்கள்?


அறிவியல் சொல்லுது.


இந்த உலகத்திலுள்ள அத்தனை நாட்டு மக்களும் ஒரே ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு வெவ்வேறு நிலப்பகுதிகளுக்குச் சென்றார்கள்.– 

இது என்ன புதுக்குழப்பம்?


குழப்பம் இல்லை. அறிவியல் பூரவமான உண்மை. ஆமாம். எத்தியோப்பியாவில் ஹோமினிட் வகை பொது மூதாதை இரண்டு குழந்தைகள் பெற்றது. அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று தான் ஹோமோ சேப்பியன்ஸ். மற்றொன்று சிம்பன்சி வகை வாலில்லாக்குரங்கு. நம்முடைய புரிதலுக்காக இப்படிச் எளிமையாகச் சொல்லலாம்.  


அந்த ஹோமோ சேப்பியன்ஸ் தான் கிட்ட த் தட்ட 70000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவை விட்டு புலம் பெயர்ந்தனர். அதனால் தான் அறிவியல் சொல்கிறது,

நாம் அனைவரும் Non Residential Africans 


ree

நம்பும்படி இல்லையே. ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்கள் வெள்ளை நிறத்தில் உயரமாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் கருப்பாக வலுவாக இருக்கிறார்கள். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருக்கும் மக்கள் மஞ்சள் நிறத்துடன் உயரம் குறைவானவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் பல நிறத்திலும் பல விதத்திலும் இருக்கிறார்கள். 


கொஞ்சமும் சம்பந்தமில்லையே.


சந்தேகம் சரிதான். ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டவர்கள் இயற்கை அனுமதித்த அளவில் அவர்களுக்குப் பிடித்த இடங்களில் வாழத் தொடங்கினார்கள். அந்த இடத்தின் தட்பவெப்பநிலை, உணவு, அத்துடன் அங்கிருந்த மற்ற மனித இனங்களுடன் ( 9 வகையான மனித சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன ) உருவான உறவு இவையெல்லாம் சேர்ந்து புதிய புதிய உருவம், நிறம், உயரம், பருமன், மொழி, இவற்றை உருவாக்கியது.

அதனால் தான் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற ஒரே இனத்துக்குள் இவ்வளவு வேறுபாடுகள் தோன்றின.


ஆனால் உலகம் முழுவதும் உள்ள ஹோமோ சேப்பியன்ஸின் அடிப்படையான மரபணுக்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோசேப்பியன்ஸின் மரபணுவும் உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களின் மரபணுவும் ஒன்றாகவே இருக்கிறது. இதைத்தான் மரபணு அறிவியல் கண்டறிந்துச் சொல்லியிருக்கிறது. 

இப்போது இன்னும் குழப்பம் அதிகமாகிறதா? 


ஆமாம். ஒரே மாதிரியான மரபணுக்களை, உடலமைப்பை, மூளையைக் கொண்ட மனிதர்கள் ஏன் வெவ்வேறு மொழி பேசுகிறார்கள்?. ஏன் வெவ்வேறு இனம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்?. ஏன் வெவ்வேறு கடவுளரை வணங்குகிறார்கள்?. ஏன் வெவ்வேறு மதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்?. ஏன் இந்தியா போன்ற நாடுகளில் ஏராளமான சாதிகளை உருவாக்கியிருக்கிறார்கள்?. ஏன் எண்ணற்ற தத்துவங்களைச் சொல்கிறார்கள்? 


உண்மை தான். அறிவியலின்படி அனைத்து மனிதர்களின் மரபணு, மூளை அளவு, உடலமைப்பு எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவரைப் போல இருப்பதில்லை. ஒரு இனத்தைச் சேர்ந்தவர் இன்னொரு இனத்தைச் சேர்ந்தவரைப் போல இருப்பதில்லை. எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த தத்துவத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும், சரி எல்லாரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறானவர்களாக இருக்கிறார்களே ஏன் தெரியுமா?  

சூழ்நிலையும், வாழ்நிலையும் தேவைகளும் தான் மனிதர்களின் உடலிலும் சிந்தனையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்குகின்றன. 


சூழ்நிலை என்பது புவியியல் சூழலைக் குறிக்கும். அதாவது வாழும் இடம், தட்பவெப்பம், உணவு, தண்ணீர், இவையே அங்கே இருக்கும் மனிதர்களின் வாழ்க்கைநிலையைத் தீர்மானிக்கும். 


உதாரணத்துக்கு காட்டில் வாழும் பழங்குடி மக்கள் காட்டில் கிடைக்கும் உணவு, நீர், அங்கேயுள்ள தட்பவெப்பம் இதற்கு ஏற்றவாறு தங்களுடைய  வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இயற்கையுடன் இயற்கையாக வாழும் அவர்கள் எதற்கும் பேராசைப்படுவதில்லை. அதனால் அவர்களுடைய தேவை என்பது மிகக் குறைவு. அவர்களுக்கு பணம் முக்கியமில்லை. ஆடம்பரம் என்றால் என்னவென்றே தெரியாது. இல்லையா?


அதேநேரம் நகரத்தில் வாழ்பவர்களின் தேவைகளை நினைத்துப்பாருங்கள். கார், பைக், மின்சார அடுப்பு, கேஸ் அடுப்பு, டி.வி. ஏ.சி. பெரிய பெரிய வீடுகள், விதவிதமான செயற்கை உணவுகள், உடைகள், ஆடம்பரம், என்று தேவைகள் அதிகமாக அதிகமாக ஆசைகளும் அதிகமாகின்றன. ஆசைகளைப் பூர்த்தி செய்ய பணம் சம்பாதிக்க வேண்டும். அதுவும் சுலபமாக கிடைக்க வேண்டும். 

அதற்கு ஒரே வழி.


தான் மட்டும் முன்னேற வேண்டும். திடீரென்று எப்படி முன்னேற முடியும்? அதற்கு நம்முடன் சேர்ந்து வாழ்கிற நம்முடைய சக மனிதர்களை ஏமாற்ற வேண்டும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும். என்பது போன்ற சிந்தனைகள் உருவாகின்றன.


இதையே காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் சுருக்கமாகச் சொல்கிறார்.

‘ வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கும் ‘

வாழ்நிலையும் சூழ்நிலையும் சிந்தனையை மட்டுமல்ல. உடலமைப்பு, உருவம் நிறம், மொழி, இனம், தத்துவம், சாதி, மதம், கடவுள், என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.


சரி. இப்போ முதல்லருந்து ஆரம்பிப்போம்.


தத்துவம் எப்போது தோன்றியது? 


( தத்துவம் அறிவோம் )


உதயசங்கர்
உதயசங்கர்

150 க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page