யாருக்குப் பழம் ?
- சுகுமாரன்
- Sep 15
- 2 min read

அனிதா பத்து வயது சிறுமி. வீட்டில் அவள் ஒருத்தி தான். கூட பிறந்த தம்பி, தங்கை, அக்கா கிடையாது. அதனால் செல்லமாக வளர்ந்தாள். அவள் நினைப்பது நடந்தது. கேட்டது கிடைத்தது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பாள்.
அனிதா தினமும் வீட்டில் செய்யும் ஒரு வேலை உண்டு. அவள் குழந்தையாக இருக்கும் போது வைத்த கொய்யா மரத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதுதான்.
'என் கொய்யா மரமே, நீ சீக்கிரம் பழம் காய்க்கனும். முதல் பழத்தை நான்தான் சாப்பிடனும்' என்று மரத்திடம் பேசுவாள்.
அந்த நேரத்தில் காற்று பலமாக வீசும். மரம் ஆடும். 'ஓ'... சரியென்று தலையாட்டுகிறாயா?' என்று அனிதா கேட்பாள்.
சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்லும் முன் தோட்டத்திற்கு வந்தாள், தண்ணீர் ஊற்றினாள். மரத்தைப் பார்த்த அனிதாவின் கண்கள் பெரிதாயின. 'ஆஹா!' என்று கத்தினாள். கொய்யா மரத்தில் பச்சையாக ஒரு பழம் தொங்கிக் கொண்டிருந்தது.
அனிதா துள்ளிக் குதித்து அம்மாவிடம் ஓடினாள். 'அம்மா என் கொய்யா மரத்தில் முதல் பழம் காய்ந்திருக்கு' என்று சொன்னாள்.
'பழம்னு சொல்லாதே. காய்னு சொல்லு' என்று அம்மா திருத்தினாள்.
'இப்போ காய்... பிறகு பழம்... சரிதானே!' என்றாள் அனிதா.
'எங்கே காட்டு?' என்று அம்மாவும் தோட்டத்திற்கு வந்தாள். அனிதா விரலால் காட்டினாள்.
கொய்யா மரத்தின் ஒரு கிளையில் மட்டும் சில பூக்கள் வந்திருந்தன. ஒரு பூவில் கோலி குண்டு அளவில் காய் காய்த்திருந்தது. 'இப்போதான் பிஞ்சு வந்திருக்கு...' என்றாள் அம்மா.
அந்த நாளிலிருந்து அனிதாவுக்கு ஒரு புதிய வேலை வந்து விட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் அந்த காயைப் பார்க்கச் செல்வாள். சில வாரங்களுக்குப் பிறகு காய் பச்சையிலிருந்து மாறி மெல்ல மஞ்சள் கலந்து பச்சையாக மாறியது.
அனிதாவின் மனதில் ஒரு இனிய கனவு. 'இந்தப் பழத்தை நான் பறித்து சாப்பிட வேண்டும். இது என் உழைப்பின் பலன்.'
ஆனால் அவளுக்குத் தெரியாமல் இன்னொரு உயிர் அந்தப் பழத்தைக் கவனித்து வந்தது. தோட்டத்தில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டும் எதையாவது எடுத்து வாயில் வைத்து கொறித்துக் கொண்டும் இருக்கும் ஒரு அணில் தான் அந்த உயிர்.
மரக்கிளையிலிருந்த பழத்தை நோக்கி, 'சிறிய பழம்... இன்னும் கொஞ்ச நாட்களில் இனிப்பாக மாறும். அப்போ அதை நான் சாப்பிடுவேன்' என்று தன்னைப் பார்க்க வந்த நண்பன் அணிலிடம் சொன்னது.
இப்படியாக, மரத்திலுள்ள கொய்யா பழத்தை அனிதாவும் அணிலும் தனக்கே சொந்தம் என்று நினைத்தனர்.
கொய்யா மரத்தின் கிளைகளில் அணில் ஓடுவதையும் பறவைகள் வருவதையும் அனிதா பார்த்தாள்.
பழத்தைப் பாதுகாக்க ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடி கட்டலாமா? என்று நினைத்தாள், அதை அப்பாவிடம் கேட்டாள். 'அப்படி செய்தால் பழம் வீணாகி விடும்' என்று அப்பா சொன்னார்.
ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்லும் முன் அனிதா பழத்தைப் பார்த்தாள். 'இன்னும் இரண்டு நாட்களில் இதை பறிக்கலாம்' என்று மனதிற்குள் நினைத்தாள்.
அப்போது கிளையில் அமர்ந்திருந்த அணில் அவளை நோக்கி 'சுற்... சுற்...' என்று சத்தமிட்டது.
அனிதா சிரித்தாள். 'ஓ! நீயும் இந்தப் பழத்துக்காக காத்திருக்கிறாயா? ஆனா இது எனக்குத் தான்' என்று விளையாட்டாகச் சொன்னாள்.
அணிலும் அவள் சொல்வதுப் புரிந்தது போல, வாலை அசைத்துக் கொண்டே பழத்தை கண்களை சிமிட்டிப் பார்த்தது.
அடுத்த நாள். பழம் இன்னும் அதிகமாக மஞ்சளாகி வாசம் வீசத் தொடங்கியது. அனிதா அதை பறிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் அணில் வேகமாக பாய்ந்து வந்து கிளையில் அமர்ந்து விட்டது.
அந்த காட்சியைப் பார்த்த அனிதாவுக்கு மனதில் வேறொரு எண்ணம் வந்தது. 'இந்த மரத்தில் காய்த்த முதல் பழம்... நான் சாப்பிட்டால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் இதை எப்போதும் மரத்தோடு விளையாடிக் கொண்டிருக்கும் அணிலுக்குக் கொடுத்தால்? அது எவ்வளவு சந்தோஷப்படும்.'
அனிதா அணிலைப் பார்த்து சிரித்தாள். 'அணில் நண்பா, இந்தப் பழம் உனக்குத்தான். நீ சாப்பிடு. நான் கடையில் கூட வாங்கி சாப்பிடுவேன். உன்னால் முடியாது. நீ சாப்பிடு' என்று அன்போடு சொன்னாள்.
அனிதா அப்படிச் சொன்னதும் அணில் ஒரு பாய்ச்சலுடன் பழத்தைப் பறித்துக் கொண்டு கிளையில் அமர்ந்து மென்று சாப்பிட ஆரம்பித்தது. அதன் கண்களில் வெளிச்சமும், முகத்தில் திருப்தியும் தெரிந்தது.
அந்த காட்சியைப் பார்த்த அனிதாவின் மனம் மகிழ்ந்தது. நான் சாப்பிடவில்லையென்றாலும் இதனால் இன்னொரு உயிருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. அதுவே உண்மையான மகிழ்ச்சி என்று நினைத்தாள்.
சில நாட்களில் கொய்யா மரத்தில் இன்னும் பழங்கள் காய்த்தன. அனிதா பழங்களை குடும்பத்தோடு பகிர்ந்து சாப்பிட்டாள். ஆனால் முதல் பழம் அணிலுக்கு விட்டுக் கொடுத்தாள்... மறக்க முடியாத இனிய நினைவாக மாறி விட்டது.
Comments