top of page

இயலில் தேடலாம்!

178 results found with an empty search

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 4

    1. நட்சத்திரங்கள் ஏன் கீழே விழுவதில்லை?   -அருண் பிரசாத், நான்காம் வகுப்பு, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம். அன்புள்ள அருண் பிரசாத், உங்கள் ஊரில் நட்சத்திரங்கள் நன்றாகத் தெரிகின்றன என்று நினைக்கிறேன். நட்சத்திரங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதவர் இருக்க முடியாது. ஆனால், இந்த நட்சத்திரங்கள் அந்தரத்தில் அல்லவா இருக்கின்றன. அப்படியானால், அவை கீழே விழுந்தாக வேண்டுமே, ஏன் விழுவதில்லை? முதல் விஷயம் நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான வாயுப் பந்துகள். இருந்தாலும் அவற்றுக்குள்ளேயே ஈர்ப்புசக்தி உண்டு. அது மட்டுமில்லாமல், அவை அங்கம் வகிக்கும் பால்வெளியில் அவை தொடர்ந்து இயங்கிக்கொண்டும், அவற்றினுடைய பால்வெளியின் மையத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றிக்கொண்டும் இருக்கின்றன. அவற்றின் உள்ளே நிலவும் ஈர்ப்புசக்தி, செயலற்றதன்மை (inertia) ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையின் மூலம் நட்சத்திரங்கள் தங்கள் இடத்தை பராமரிக்கின்றன. சூரியனைச் சுற்றி சூரியக்குடும்பக் கோள்கள் எப்படி இடைவிடாமல் தாங்கள் சுழன்றுகொண்டும், சூரியனை சுற்றிவந்தும்கொண்டிருக்கின்றன. அதைப் போலவே நட்சத்திரங்களும் சுற்றிகொண்டிருக்கின்றன. இப்படி இடைவிடாது சுற்றுவதால், அவை கீழே விழுவதற்கு வாய்ப்பு இல்லை.  2. கால யந்திரம் கண்டுபிடிக்கப்படுமா? அதில் பயணம் செய்து மனிதர்கள் குழந்தைகளாக மாற முடியுமா?   - ஜோ.ச. சச்சின், நான்காம் வகுப்பு, ஈரோடு. அன்புள்ள சச்சின், வணக்கம். மனிதர்கள் எல்லாருமே கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதும், கடந்த காலத்துக்குப் போக ஆசைப்படுவதும் இயல்புதான். நீங்கள் குழந்தையாக இருந்ததை படத்தில் பார்த்திருப்பீர்கள். அப்போது நீங்கள் செய்த குறும்புகளை, சேட்டைகளை உங்களைச் சுற்றி இருப்பவர்கள் சொல்வது சுவாரசியமாக இருக்கும். அந்தக் காலத்துக்கே திரும்பிப் போய்விட முடிந்தால் நன்றாக இருக்குமே என ஆர்வமாக இருக்கும். இதுபோல் மனிதர்கள் பலரும் யோசித்தார்கள், யோசிக்கிறார்கள். புகழ்பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் 'தி டைம் மெஷின்' (கால இயந்திரம்) என்கிற கதையை 1895இல் எழுதினார்.  அந்தக் கதையில் வரும் கால இயந்திரத்தில் ஏறினால் கடந்த காலத்துக்குப் போகலாம், எதிர்காலத்துக்கும் போகலாம். ஆனால், அதேநேரம் இன்றுவரை கால இயந்திரம் என்பது அறிவியல்ரீதியாக சாத்தியப்படவில்லை. கதைகளிலும் திரைப்படங்களிலும் கற்பனையில் இப்படி சித்தரிக்க முடிகிறது. நமது பழங்கதைகளில் கூடுவிட்டு கூடு பாய்தல், அதன் மூலம் ஒரு மனிதர் வேறொருவராக மாறுதல் பற்றியெல்லாம் கூறப்படுகிறது. கால இயந்திரம் இதுபோல் கடந்த காலம், எதிர்காலத்துக்கு செல்லலாம் என்கிறது.  இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளின்படி கடந்த காலம், எதிர்காலத்துக்குச் செல்வது நடைமுறையில் சாத்தியமில்லை. அதேநேரம் ஹெச்.ஜி.வெல்ஸ் கால இயந்திரம் கதையை எழுதிய பிறகு, உலகில் பல சிறார் /பெரியவர்களுக்கான கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்ற அனைத்துப் பொழுதுபோக்கு வடிவங்களிலும் கால இயந்திரம் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு நடப்பு வாழ்க்கையைவிட பழைய நினைவுகளை ரசிப்பதும், தற்போது உள்ளதைவிட எதிர்காலத்தில் மாறுபட்ட வகையில் இருப்பதிலும் உள்ள ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது. நம் எல்லாருக்குமே கற்பனை செய்வதில் ஆர்வம் இருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது. எனவே, கால இயந்திரம் கற்பனையில் மட்டுமே சாத்தியம். மனிதர்கள் குழந்தையாக மாற நினைத்தால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிமையான வாழ்க்கையை உருவாக்கப் பெரியவர்கள் மெனக்கெட வேண்டும். தங்கள் மனதை என்றைக்கும் இளமையாகவும் வெள்ளந்தியாகவும் வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கே உரிய ஆச்சரியப்படும் தன்மை, எதையும் ஆராய்ந்துபார்க்கும் தன்மையை காலாகாலத்துக்கும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஆணவம், மற்றவர் மேல் கோபம், பொறாமை, வெறுப்பு போன்றவற்றை விலக்கி வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எல்லாரும் கால இயந்திரத்தில் உட்காராமலேயே குழந்தைகளாக மாறலாம். -அமிதா

  • கொழுக்கு மொழுக்கு கத்தரிக்காய்

    கொழுக்கு மொழுக்கு கத்தரிக்கா!  குண்டு குண்டு கத்தரிக்கா!  கொத்துக் கொத்தாக் காச்சிருக்கு கொண்டையாட்டும் கத்தரிக்கா!  ஊதா நிறக் கத்தரிக்கா!  உன் போல் இங்கே யார் இருக்கா!  குழம்பு சாம்பார் எல்லாத்திலும் நீ இல்லைன்னா  சுவை இருக்கா!   கொழுக்கு மொழுக்கு கத்திரிக்கா! குண்டு குண்டு கத்தரிக்கா! சரிதா ஜோ   சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • ஒரு சோம்பேறி சாகச வீரனாக மாறிய கதை!

    தொலைக்காட்சியில் ‘தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்’ (மோதிரங்களின் மாமன்னன்) பார்த்து ரசிச்சிருப்பீங்கதானே? தென்னாப்பிரிக்கா நாட்டிலே 1892ஆம் ஆண்டு பிறந்து பிரிட்டனில் 1973 வரையில் வாழ்ந்தவர் ஜே.ஆர்.ஆர். டோல்கீன். அவர் எழுதி 1954, 1955 ஆண்டுகள்ல மூணு பாகங்களாக வெளியான நாவலைத்தான் முதல்ல திரைப்படமாகவும், அப்புறம் வலைத் தொடராகவும் தயாரிச்சாங்க. அதுக்கு ஒரு முன்கதை போல அவர் எழுதி 1937ஆம் ஆண்டுல வந்த நாவல்தான் ‘தி ஹோபிட்‘. அதைப் பத்திதான் இப்ப நாம பார்க்கப் போறோம். பல நாடுகள்லேயும் பசங்களுக்கு ரொம்பவும் பிடிச்ச புத்தகம் இது. குழந்தைகளுக்கு எப்பவுமே பிடிக்கிற மாய உலகக் கதைதான். இந்தக் கதையில்தான், ரிங்ஸ் தொடரில் வர்ற மைய பூமியை டோல்கீன் முதல்ல அறிமுகப்படுத்தினார். கதை என்னான்னு பார்க்கலாமா? ஹோபிட்டுங்கிறது என்னன்னா டோல்கீன் கற்பனையாக உருவாக்கிய ஒரு இனத்தோட பெயர். அந்தச் இனத்தைச் சேர்ந்தவங்க சின்ன உருவத்தோட இருக்கிறவங்க. நல்லா சாப்பிட்டுட்டு பரபரப்பு இல்லாம அமைதியாக வாழ விரும்புறவங்க. அங்கே இங்கேன்னு சுத்தாம ஊருலேயே இருக்க நினைக்கிறவங்க. அப்படிப்பட்ட ஹோபிட் இனத்தைச் சேர்ந்தவன்தான் பில்போ பேகின்ஸ். அவனும் வீட்டுல அமைதியா சுகமா இருந்தா போதும்னு நினைக்கிறவன்தான். வழிகாட்டியும் மாயவித்தைகள் தெரிஞ்சவருமான  காண்டால்ஃப், உயரம் குறைஞ்சவங்களா இருக்கிற  ஒரு  குழுவைச் சேர்ந்த 13 பேர்களைக் கூட்டிக்கிட்டு பில்போவைப் பார்க்க வர்றாரு.  அந்தக் குட்டி மனுசங்களோட குழுத் தலைவன் தோர்ன் ஓக்கன்ஷீல்ட்.  அவங்க  வருகையால பில்போவொட அமைதி குலையுது. அவங்க மேல அவனுக்கு முதல்ல கோபம் வருது. அவங்க எதுக்காக வந்திருக்காங்கன்னு அவன்ட்ட சொல்றாங்க. கைப்பற்றப்பட்ட செல்வங்கள் அந்தக் குட்டி மனுசங்களோட பல செல்வங்களை ஒரு கொடிய டிராகன் பறிச்சு வெச்சிருக்கு. அதோட பெயர் ஸ்மாக்.  அவங்களோட ஆதி காலத்துக் குடியிருப்பு ஒரு மலை. அதுக்குப் பேரு தனிமை மலை. அதுவும் ஸ்மாக் ஆக்கிரமிப்புலதான் இருக்கு. “எங்க கூட நீ வரணும், ஒரு திருடனா மாறி எங்க பரம்பரைச் செல்வங்களை மீட்டுக் கொடுக்கணும்.” இப்படி தோர்ன் ஓக்கன்ஷீல்ட் கேட்டுக்கிடுறான். . பில்போ தயக்கத்துடன் இந்த சாகசப் பயணத்துல இணையுறான். காண்டால்ஃப் வழிகாட்டுறாரு. போற வழியிலே, நிறையா பூதம் வருது,  குட்டி அரக்கர் நாலைஞ்சு பேரு வர்றாங்க.  பெரிய பெரிய சிலந்திப் பூச்சிகள்  மிரட்டுது.  இது மாதிரி வேற பல  ஆபத்துகளையும் அவங்க சந்திக்கிறாங்க. மாய மோதிரம் ஒரு சிக்கலான நேரத்துல, பில்போ அந்தப் பயணக் குழுவிலிருந்து எப்படியோ பிரிஞ்சிடுறான். ஒரு குகைக்குள்ள நுழையுறான். அங்கே ஒரு விசித்திரமான பிறவியைப் பார்க்கிறான். அதோட பெயர் கோல்லம். “நான் புதிர் போடுறேன், நீ பதில் சொல்லு. என்னோடு கேள்விக்கெல்லாம் சரியா பதில் சொல்லிட்டா உன்னை விட்டுடுறேன்.” இப்படி அந்த கோல்லம் நிபந்தனை போடுது. அந்தப் புதிர் விளையாட்டுல, எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் சொல்லி பில்போ வெற்றியடையுறான்.  கோல்லம் ஒரு மோதிரத்தைப் பரிசாக் கொடுத்து அவனை மகிழ்ச்சியா அனுப்பி வைக்குது. அது சாதாரணமான மோதிரம் இல்லை, அதிசய மோதிரம்! அதை விரல்ல மாட்டிக்கிட்டா நாம யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோமாக்கும். குட்டி மனுசங்களோட மறுபடி சேரும் பில்போ மாய மோதிரத்தைப் பயன்படுத்தி அவங்களோட செல்வங்களை மீட்கிறான். அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னா, அந்த செல்வங்களுக்காக ஐந்து படைகளின் போர் ஏற்படுது.  ஸ்மாக் டிராகன் வீழ்த்தப்பட்டதால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளவும், சொத்துகளைக் கைப்பற்றவும் திட்டமிடுற கோப்ளின், வர்க்  என்ற கூட்டங்கள் சேர்ந்து ஒரே  படையா வர்றாங்க.. ஸ்மாக் தோற்கடிக்கப்பட்டால், அது கைப்பற்றி வைத்திருந்த தங்களுடைய சொத்துகளும் திரும்பக் கிடைக்கும்னு எதிர்பார்க்கும் மனுசங்க ஏரி நகரிலிருந்து வர்றாங்க. அதே மாதிரி  எதிர்பார்ப்புடன் காட்டிலேயிருந்து ஏல்வ் என்ற இனம் ஒரு கூட்டமாக வருது. இவங்களும் குட்டி மனுசங்களும் ஒரு படையா சேருறாங்க.   எதிர்பார்ப்பு எதுவும் இல்லாம உதவி செய்யுற நோக்கத்துடன் கழுகுகள் படை வந்து சேருது. இந்த ஐந்து படைகளின் போரில் குட்டி மனுசங்க – ஏரி மனுசங்க – காட்டு உயிரி படைகளுக்கு வெற்றி கிடைக்குது. அவரவர் உடைமைகள் பிரித்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கழுகுப்படைக்கு நன்றி சொல்லிட்டுப் புறப்படுறாங்க. சோம்பேறியாவும் கோழையாவும் சுயநலவாதியாவும் இருந்த பில்போ சுறுசுறுப்பானவனாக,  துணிச்சல்காரனாக, மத்தவங்களுக்காகப் பாடுபடுறவனாக  மாறுறான்.  போரில் வெற்றி பெற்று புது மனுசனா வீடு திரும்புறான். கதையின் பெயர் வந்த கதை ஜே.ஆர்.ஆர். டோல்கீன் ஆங்கிலோ–சாக்ஸன் எனப்படும் பழங்குடி இன மக்கள் தொடர்பாகவும் அவர்களுடைய மொழி, இலக்கியங்கள் பற்றியும் ஆராய்ச்சிகளை நடத்திய ஒரு பேராசிரியர். அவர் தன் பேரக் குழந்தைகள் வாசிப்பதற்காகத்தான் இந்த நாவலை எழுதினாராம். அவருடைய ஆராய்ச்சி அறிவு நாவலில் அழகா வெளிப்படுதுன்னு எழுத்தாளர்கள் சொல்றாங்க. அதே நேரத்திலே பசங்க விரும்பிப் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி எளிமையா எழுதியிருக்காருன்னும் சொல்றாங்க. ஹோபிட் –இந்த வார்த்தை எப்படிக் கிடைச்சது  தெரியுமா? “ஹோல்பைட்லா” என்ற பழங்கால ஆங்கிலச் சொல்லிலிருந்து கிடைச்சதாம். ஹோல் என்றால் துளை என்று உங்களுக்குத் தெரியும்தானே? ஹோல்பைட்லா என்றால் “துளையில் வாழ்கிறவர்” என்று பொருள். அதாவது, வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாமல் தன்னுடைய ஊர், தன்னுடைய வீடுன்னு சுருங்கிப்போய் வாழுற இனம்னு உணர்த்துறதுக்காகத்தான் அதிலேயிருந்து ஹோபிட்டுங்கிற பெயரை டோல்கீன் கற்பனையாக உருவாக்கினாராம். சுயநலமா தனிச்சுப் போகாம, மத்தவங்களுக்குப் பயனளிக்கிற வாழ்க்கையை வாழ்ந்தா மனசுக்கு நிறைவா இருக்கும்னு இந்தக் கதை சொல்லுதுல்ல? அது மட்டுமில்லாம தங்கம், வைரம் மாதிரியான செல்வம் எப்படி மனுசங்களை மோத வைக்குதுன்னும் கதை காட்டுது, சரிதானே நண்பர்களே?

  • வளரிளம் புதிர்ப்பருவம் -5.

    கேட்டி கொலை பற்றிய கேள்விகளால் சுதாரித்த ரயான் முதலுதவி அறையிலிருந்து வெளியேறுகிறான்.  ஆசிரியை ஒருவருடன் ஜேட் ஓர் அறையில் இருக்கிறாள்.  பதற்றம் குறையவில்லை. அவளது அம்மா வந்து கொண்டு இருக்கிறார் என்று ஆசிரியை சொன்னதும் அவளது பதற்றம் அதிகரிக்கிறது. வேலையிலிருந்து  வருவதால் அம்மா என் மீது கோபப்படுவார் என்று ஜேட் சொல்கிறாள். ரயானை அடித்ததால் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று பயப்படுகிறாள். ஆசிரியை அவளோடு பேசுகிறார்.  "கேட்டி மட்டுமே எனது தோழி. என்னை நன்றாகப் புரிந்து கொண்டவள். இயல்பாக என்னை ஏற்றுக் கொண்டவள். இப்போ எனக்கென்று யாருமில்லை." என்று ஜேட் கலங்குகிறாள்.  ஆசிரியை ஜேட்டை சமாதானப்படுத்துகிறார். உனக்கென நிறையப்பேர் இருக்காங்க என்கிறார். உளவியலாளரிடம் பேசலாம் என்கிறார். "மீண்டும் உளவியலாளரா!"  என்று ஜேட் பதறுகிறாள். அந்த அறையிலிருந்து வெளியேறுகிறாள்.  குழந்தைகள் தாங்கள் பழகியவரோடு, நம்பிக்கையானவரோடு பேச விரும்புகிறார்கள். வீட்டில் அதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து விட்டன. சமூகத்தில் குழந்தைகள் கலந்துகொள்ளும் உரையாடல்கள் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. பள்ளியிலும் உரையாடும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. பெரியவர்கள், குழந்தைகளின் குரலைக் கேட்காமல் அறிவுரை சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். இதைத்தான்  ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.  ஆதம் தனது அப்பா எந்த வகுப்பில் இருக்கிறார் என்று தேடி வருகிறான். பாஸ்கம் ஒரு வகுப்பில் மாணவருடன் பேசிவிட்டு வெளியே வருகிறார். "உங்களோடு நான் தனியாகப் பேசலாமா?" என்று ஆதம் கேட்கிறான். இருவரும் ஓர் அறைக்குச் செல்கிறார்கள்.  பாஸ்கம், ஆதமோடு பேசும் இந்தக் காட்சி மிகவும் முக்கியமானது.   ஆதம் பதற்றமாக இருக்கிறான். தயங்கித் தயங்கி பேசத் தொடங்குகிறான்.  "ஆதம், என்னைப் பயமுறுத்தாதே. இங்கு என்ன நடக்குது?" என்று அவசரமாக பாஸ்கம் கேட்கிறார்.  "என்ன நடக்குதுன்னு புரியறதுக்கு உதவுற மாதிரி சில பேர்கிட்ட பேசணும்னு சொன்னீங்கல்ல..." என்று ஆதம் சொல்லும் போதே " நீ எனக்குப் புரிய வைக்கப் போறியா?" என்று பாஸ்கம் கேட்கிறார்.  ஆதமின் முகம் இன்னும் இறுகுகிறது. அப்பா, நீங்க கிளம்புங்க என்கிறான்.  "ஆதம், உனக்கு ஏதாவது தகவல் தெரியுமா? அந்தக் கத்தி எங்கே இருக்குன்னு தெரியுமா? யாராவது ஏதாச்சும் உன்கிட்டே சொன்னாங்களா?" தொடர்ந்து கேள்விகளை வேகவேகமாகக் கேட்கிறார் பாஸ்கம். "அப்பா, உங்களுக்கு இங்கே என்ன நடக்குதுன்னு புரியல. இங்க நடப்பதை எல்லாம் நீங்க கவனிக்கல." என்று ஆதம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "நீ எதைப் பற்றிப் பேசுற?" என்று பாஸ்கம் கேட்கிறார். "இன்ஸ்டா. நீங்க இன்ஸ்டா பார்த்துட்டு இருக்கீங்கல்ல!"  ஆமாம். "அவ, என்ன எழுதியிருக்கான்னு பார்த்தீங்களா?"  "ஆமாம். பார்த்தேன்." தனது செல்பேசியை எடுத்து கேட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவை பாஸ்கமிடம் காட்டுகிறான் ஆதம். அவ நல்ல பொண்ணு மாதிரி தெரியலாம். ஆனால் அது உண்மை இல்லை என்றும் சொல்கிறான். பாஸ்கம் அவனது செல்பேசியை வாங்கிப் பார்க்கிறார். எதுவுமே புரியவில்லை என்று சொல்கிறார்.  "இதைப் பாருங்க. இது டைனமைட்." என்று ஆதம் சொல்கிறான். எனக்கு எதுவுமே புரியவில்லை என்று பாஸ்கம் சொல்கிறார்.  " டைனமைட்னா வெடி. அதன் அருகே சிவப்பு, மாத்திரை.அடுத்தது நீல மாத்திரை. நீல மாத்திரைன்னா இந்த உலகத்தை நீங்க எப்படிப் பார்க்கணும்னு நினைக்கறீங்களோ அப்படிப் பார்ப்பது." என்கிறான் ஆதம். பாஸ்கமுக்கு Matrix திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில்தான் சிவப்பு மாத்திரை அல்லது நீல மாத்திரையைத் தேர்ந்தெடுப்பது வரும்.  ஆதமிடம்,"நீ Matrix படம் பார்த்திருக்கிறாயா?" என்று பாஸ்கம் கேட்கிறார்.  "சிவப்பு மாத்திரைன்னா நான் உண்மையைப் பார்க்கறேன்.  ஆண்கள் குழுவுக்காக வேலை செய்யணும்னு  அர்த்தம். அங்கே இருந்துதான் 100 தொடங்கும். 80-20 விதி."என்று ஆதம் சொல்கிறான். ஆதம், எனக்கு எதுவுமே புரியவில்லை. தெளிவாகச் சொல்லு என்று பாஸ்கம் கேட்கிறார். நாமும் சற்றே emoji களைப் பார்த்துவருவோம். சமூக ஊடகங்கள் வந்தபிறகு கொஞ்சநஞ்சம் இருந்த கையால் எழுதும் பழக்கம் வேகமாக மறைந்து வருகிறது. செல்பேசியில் தட்டச்சு செய்பவர்களாக மாறியிருக்கிறோம். குழந்தைகளுக்குக் கையால் எழுதுவதில் உள்ள சோம்பலும் வெறுப்பும் செல்பேசியில் தட்டச்சு செய்வதில் இன்னும் அதிகமாகவே பிரதிபலித்தது. வார்த்தைகளின் சுருக்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம். இறப்புச் செய்திகளில் 'இரங்கல்' கூட இல்லாமல் RIP ஆக மாறிவிட்டது. வார்த்தைகளின் முதல் எழுத்துச் சுருக்கத்தை தட்டச்சு செய்வதை விட emoji என்ற சிறுபடங்களை பயன்படுத்துவது எளிதாக ஆனது. உணர்வுகளை வெளிப்படுத்தச் சுலபமான வழியாகவும் மாறியது.  அவற்றிற்கான பொது அர்த்தம்  இருந்தாலும் இளம்பருவத்தினர் பயன்படுத்தும் படங்களுக்கான அர்த்தத்தில் மாறுபாடு இருக்கலாம்.  சிவப்பு மாத்திரை, நீல மாத்திரை என்ற கருத்தாக்கம் முதலில் 1999-ல் வெளியான The Matrix திரைப்படத்தில் இருந்து வந்தது. அந்தப் படத்தில், 🔴“Red Pill” (சிவப்பு மாத்திரை) எடுத்தால் உண்மையை தெரிந்துகொள்ளலாம், 🔵“Blue Pill” (நீல மாத்திரை) எடுத்தால் பழைய போலி உலகத்திலேயே வாழலாம் என்று காட்டப்பட்டது. (பட உதவி: chatgpt) இணையக் கலாச்சாரங்களில் “Red Pill” புதிய அர்த்தங்களைப் பெற்றது. உண்மையை உணர்தல். பொதுவாகச் சமூக, அரசியல் அல்லது பாலினம் தொடர்பான, கடினமான உண்மைகளை புரிந்து கொள்ளுதல். ஆண்மை சார்ந்த இயக்கங்கள் . பெண்கள், உறவுகள், திருமணம், சமூக விதிகள் ஆகியவை ஆண்களுக்கு எதிராக உள்ளன என்று வாதிடும் குழுக்கள் “Red Pill” என்ற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தன. Incel / Manosphere கலாச்சாரம்.  பெண்களைச் சுலபமாக ஈர்க்க முடியாது. பெண்கள் சில ஆண்களையே விரும்புகிறார்கள்” போன்ற கோட்பாடுகள் உருவாயின. தொடர்ந்து பார்ப்போம்!...

  • போரே! போ! போ

    என்றைக்கும் இல்லாத அளவிற்கான கரும்புகை மேகக் கூட்டத்தை நெருங்கியது. நிவ்யா மேகம் அன்றைய கதையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது.   நிவ்யாவின் அம்மா வஞ்சி அன்றைய புத்தகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. சில நாட்கள் புத்தகங்கள் வரும். சில நாட்கள் புத்தகங்கள் வராது.  அன்று ஏராளமான புத்தகங்கள் வந்திருந்தன.  வஞ்சி என்று ஒரு புத்தகத்தை எழுதி முடித்திருந்தது. அந்தப் புத்தகம் வஞ்சியின் மனதை மிகவும் பாதித்தது. அதைக் குழந்தைகளிடம் எப்படிப் பகிர்வது என்று பலத்த யோசனையோடு இருந்தது வஞ்சி. ஆனாலும் குழந்தைகள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்தப் புத்தகத்தை கையில் எடுத்துச் சென்றது.  நிவ்யாவும் வஞ்சியும் வானத்தில் தவழ்ந்து திரிகின்ற மேகங்கள்.  வஞ்சி ஒரு எழுத்தாளர். கீழே எரிக்கப்படுகின்ற புத்தகங்களின் புகை வழியாக வரும் கதைகளோடு தன்னுடைய கற்பனையையும் கலந்து எழுதும். சில நேரங்களில் ஆண்டுக் கணக்கில் வாசிக்கப்படாத புத்தகங்களில் இருந்து பறந்து மேலே வரும் கதைகளில் இருந்து கூட தன்னுடைய கற்பனையைக் கலந்து கதைகளை உருவாக்கும். அப்படி அது எழுதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு இருக்கும் நூலகத்தில் இருக்கின்றன. அந்தப் புத்தகங்களை படிப்பதற்கு மேகக் கூட்டங்களுக்கு ஒரு பெரும் போட்டியே ஏற்படும்.  தினமும் மாலை நேரத்தில் வஞ்சி தன் வேலைகளை முடித்துவிட்டு வரும். கையோடு தான் அன்று எழுதிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரும். அந்த மாலை நேரத்திற்காக வயதான மேகங்கள் மற்றும் குழந்தை மேகங்கள் எல்லாம் காத்திருக்கும். தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் இருக்கும் கதைகளை அவர்களுக்குக் கூறும்.  அன்றும் அப்படித்தான் நிவ்யாவோடு எல்லா மேகங்களும் ஆர்வத்தோடு காத்திருந்தன.  வஞ்சி மேகம் வந்து அமர்ந்தது. அதுவரை ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குட்டி மேகங்கள் வஞ்சியை நோக்கி ஓடிவந்தன. வஞ்சியின் முகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சோகமாக இருந்தது.  "அம்மா இன்று ஏன் ரொம்ப சோகமா இருக்கீங்க?" என்று கேட்டது நிவ்யா மேகம். "இன்று நான் எழுதிய புத்தகம் என்னை மிகவும் பாதித்தது. எப்படி இதை உங்களிடம் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. உங்களைப் போலத் தானே மனிதக் குழந்தைகளும் கீழே விளையாடிக் கொண்டிருக்கும்" "அந்தப் புத்தகத்துடைய தலைப்பு என்ன?" என்று கேட்டது வயதான மேகம் தேஜா.   "போர்"  "போரா? போர் என்றால் என்ன அம்மா ?" "போர் என்றால் இரண்டு நாடுகள் சண்டையிட்டுக் கொள்வது"  " நானும் பூஸும் சண்டையிட்டு கொள்வது போலவா அம்மா" என்று கூறிவிட்டு தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த குட்டி மேகம் பூஸை விளையாட்டாக ஒரு குத்து குத்தியது நிவ்யா.  "அப்படி அல்ல. இந்தப் போரில் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்வார்கள்" "அய்யய்யோ துப்பாக்கியாலா? துப்பாக்கியால் சுட்டுக் கொண்டால் இறந்து விடுவார்களே" என்று சோகமாக கேட்டது பூஸ் "அப்பொழுது தானே எந்த நாடு வலிமையானது என்று தெரிந்து கொள்ள முடியும்" என்றது நிவ்யா.  "அப்படி அல்ல தங்கமே. போரில் வென்றாலும் தோற்றாலும் இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்"  "இரண்டு நாடுகளும் சண்டையிட்டு கொள்வதற்குக் காரணம் என்ன அம்மா ?" "ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இதில் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சாரக் காரணங்கள். சில நேரங்களில் போரின் காரணங்கள் மிகவும் சிக்கலானது." "வஞ்சி அத்தை எனக்குப் புரியவில்லை. இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூறுங்களேன்" என்று கேட்டது நிவ்யாவிற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த குட்டி மேகம் மோலி.  "இனப் பிரச்சினை மற்றும் மதப் பிரச்சினை, இயற்கை வளங்கள், நிலம் மற்றும் தண்ணீர் இதுக்காகக் கூடப் போர் நடக்கலாம். சில பேரின் சுயநலத்திற்காகக் கூட இருக்கலாம்" "கியூபாவில் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தது. அதைக் கொள்ளை அடிக்கிறதுக்கு அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்‌. பிறகு அந்த நாட்டைப் பிடித்துக் கொண்டார்களே அந்த மாதிரி சொல்றீங்களா?" என்று வயதான மேகம் ஒன்று கேட்டது. "சரியா சொன்னீங்க. அந்த மாதிரி தான். கியூபா விடுதலைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? ஆச்சரியமாக இருக்கிறதே எப்படி?" என்று கண்கள் விரியக் கேட்டது வஞ்சி. "நீங்கள் எழுதிய கியூபா விடுதலை புத்தகத்தை நமது நூலகத்தில் இருந்து எடுத்து நான் வாசித்து இருக்கிறேன். அதை வாசித்து இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் " "பரவாயில்லையே இப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே" "எனக்கு கேட்டதை விட பார்த்ததை விட வாசிப்பது மனதில் எப்போதுமே மறக்காது. அதுமட்டுமில்லாமல் மகிழ்ச்சியான ஒன்றைவிட மனதைப் பாதித்தது எனக்கு மறக்க முடிவதில்லை" என்று கூறிய அந்த அந்த வயதான மேகத்தின் முகத்தில் அத்தனை சோகங்கள் அப்பிக் கிடந்தன. "நாட்டுடைய எல்லையில் இருக்கிற பகுதி என்னுடையது உன்னுடையது என்று சண்டை வரலாம். நான் பேசும் மொழி வேறு நீ பேசும் மொழி வேறு அதனால் நீ எனக்கு எதிரி என்று கூட சண்டை வரலாம்" என்றது வஞ்சி மேகம். "இந்தப் புத்தகத்தில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறீர்கள் அம்மா?" என்று கேட்டுவிட்டு அம்மாவின் கையில் இருந்த புத்தகத்தைத் தடவியபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தது நிவ்யா.  "போர் எப்படித் தொடங்குது? போரின் மூலம் ஏற்படும் அழிவுகள் என்ன? அதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? இது பற்றித் தான்" "போரால் யாருக்கு முதலில் பாதிப்பு?" "போர்கள் நடக்கும்போது அந்தப் போரால் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான். போர் மனிதர்களைப் பயத்தில் வைத்திருக்கிறது. அதன் பிறகு நூலகம்.  ஒரு புத்தகத்தில் இதைப் பற்றிப்  நான் எழுதி இருக்கிறேன். அது பற்றி கூட உங்களுக்குக் கூறியிருக்கிறேன் ஞாபகம் இருக்கிறதா?"  "ஆமாம் ஆமாம் புத்தக தேவதை ஆலியா. ஈராக்கில் யுத்தம் நடந்த போது அங்கிருந்த நூலகர் ஆலியா நூலகத்தில் இருந்த புத்தகங்களைக் காப்பாற்றினார் சரியா அத்தை ?" என்று கேட்டது குட்டி மேகம் மோலி.  "சரியாகச் சொன்னாய் மோலி குட்டி" என்று கூறி மோலியின் தலையை வருடியது வஞ்சி மேகம். உடனே பெருமை பொங்க பார்த்தாயா என்ன அறிவை என்பது போல் நிவ்யாவைப் பார்த்து முகத்தை ஆட்டியது மோலி மேகம்.  சரி சரி நீயும் அறிவாளி தான் ஒத்துக்கொள்கிறேன் என்பது போல் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தது நிவ்யா மேகம் "நூலகத்தின் மீது ஏன் குண்டுகளைப் போடுகிறார்கள்? புத்தகங்களை ஏன் அழிக்க வேண்டும்?" என்று கேட்டது பவுஸி மேகம்.  குட்டி மேகம் பவுஸி வேறு நாட்டிலிருந்து வந்து சமீபத்தில் தான் இந்தக் கூட்டத்தில் இணைந்து. "ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் அறிவுச் சொத்தாக இருக்கும் நூலகத்தை அழிக்க வேண்டும். அதனால்தான் நூலகத்தின் மீது குண்டு போடுவார்கள்" "காலையிலிருந்து வரும் புகையை பார்த்தால், இப்போது கூட நூலகத்தின் மீது குண்டு போட்டு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என்றது ஒரு வயதான மேகம். "எப்போதாவது, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் நேரங்களில் தான் புத்தகங்கள் கிடைக்கும். இந்த நாட்டில் யாரும் புத்தகங்களை எரிப்பது இல்லை. புத்தகங்களை அறிவின் சுரங்கமாக நினைக்கிறார்கள். ஆனால் இன்று ஏராளமான புத்தகங்கள் வந்தன. அனேகமாக ஏதாவது நூலகத்தை எரித்து இருப்பார்கள் என்று நான் அப்போதே நினைத்தேன்" வஞ்சி மேகம் கூறிய தகவல்களைக் கேட்டு மற்ற மேகங்கள் மிரட்சியோடு அமர்ந்திருந்தன. "சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று கரும்புகை என்னைத் தாக்கியது. கலவரத்தின் போது ஒரு வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்த குழந்தை எரிந்து கொண்டிருக்கும் தன் வீட்டிற்குள் சென்று புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தது.    நான் படிக்கணும் நான் படிக்கணும் என்று கதறிக்கொண்டே வந்தது. புகை வழியாக அந்தக் கதறல் என் காதுகளை அடைந்தது. அந்த நேரத்தில் இருந்து இப்பொழுது வரை அந்தக் கதறல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது" என்று வருத்தம் கலந்த குரலில் கூறியது வஞ்சி மேகம்.  கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புத்தகத்தைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தது வஞ்சிமேகம். வஞ்சி மேகத்தைச் சுற்றி அமர்ந்திருந்த அனைத்து மேகங்களின் முகங்களிலும் பயத்தின் ரேகை தாறுமாறாக ஓடியது. குட்டி மேகம் பவுஸி அழ ஆரம்பித்தது.  "எதற்காக அழுகிறாய் பவுஸி?"  "இதற்கு முன் நான் இருந்த நாட்டில் போர் நடைபெற்றது. அங்கு ஏராளமானவர்கள் போரில் இறந்து போனார்கள். போர் நடைபெற்ற நேரத்திலும் போர் முடிந்த பிறகும் கூட அவர்கள் உணவிற்குச் சிரமப்பட்டார்கள். தண்ணீருக்குச் சிரமப்பட்டார்கள். குழந்தைகளையும் கூட கொன்று குவித்தார்கள். அதைப் பார்த்து பயந்து தான் நான் எங்கெங்கோ ஓடித்திரிந்து முடிவாக இங்கு வந்து சேர்ந்தேன்"  "அடடா அப்படியா ! இத்தனை நாளாக நீ இதைப் பற்றிக் கூறவே இல்லையே"  "அதை நான் மறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதை மறந்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வந்த புதிதில் நான் பேசும் மொழி உங்களுக்கு புரியாது. நீங்கள் பேசும் மொழி எனக்கு புரியாது. ஆனாலும், என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டீர்கள். இந்த நாடு அமைதியாக இருந்தது. ஆனால் இந்த ஒரு மாத காலமாக இங்கு கேட்கும் சத்தங்கள் எனக்கு திரும்பவும் பயத்தைக் கொடுத்திருக்கிறது" என்றது பவுஸி.  "ஒருவேளை பவுஸி சொல்வது போல் இங்கும் போர் வந்து விட்டதோ?" என்று கேட்டது நிவ்யா மேகம். "போராகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் அப்படி இருக்கக் கூடாது" என்றது பவுஸி "சரியாகச் சொன்னாய். மக்கள் பதட்டத்தோடு தான் இருக்கிறார்கள். இங்கு இப்போது போர் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைப்பற்றித் தான் இதில் எழுதி இருக்கிறேன்" "அம்மா என்று கூறி தன் அம்மாவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டது நிவ்யா. நிவ்யாவை வாரி அணைத்துக் கொண்டது வஞ்சி மேகம்.  அதைப் பார்த்தவுடன் பவுஸிக்கு தன் அம்மா அப்பாவின் ஞாபகம் வந்தது. கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டது பவுஸி. வஞ்சி புத்தகத்தைக் கையில் எடுத்த  கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மேகக் கூட்டத்திற்குள் ஏதோ ஒன்று பாய்ந்தது. பயத்தில் மேகங்கள் கலைந்து ஓட ஆரம்பித்தன. பாய்ந்து வந்த அது வஞ்சியின் மார்பைத் துளைத்துச் சென்றது. நிவ்யாவும் தன்னை அறியாமல் எங்கெங்கோ ஓடியது. முடிவில் ஓர் இடத்தில் நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தது. அங்கு யாருமே இல்லை. நிவ்யாவும் தான் இருந்த இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தது.  "அம்மா அம்மா நீ எங்க இருக்கே?" என்று கதறியது. அந்தக் கதறல் அனைவருக்கும் கேட்டது. அம்மா உயிரோடு இல்லை என்பதை நிவ்யாவிற்குச் சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது? சரிதா ஜோ  சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • தத்துவம் அறிவோம் -6

    N.R.A உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு ஒரே ஒரு ஊர் தான் சொந்த ஊர் தெரியுமா?  யார் சொன்னார்கள்? அறிவியல் சொல்லுது. இந்த உலகத்திலுள்ள அத்தனை நாட்டு மக்களும் ஒரே ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு வெவ்வேறு நிலப்பகுதிகளுக்குச் சென்றார்கள்.–  இது என்ன புதுக்குழப்பம்? குழப்பம் இல்லை. அறிவியல் பூரவமான உண்மை. ஆமாம். எத்தியோப்பியாவில் ஹோமினிட் வகை பொது மூதாதை இரண்டு குழந்தைகள் பெற்றது. அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று தான் ஹோமோ சேப்பியன்ஸ். மற்றொன்று சிம்பன்சி வகை வாலில்லாக்குரங்கு. நம்முடைய புரிதலுக்காக இப்படிச் எளிமையாகச் சொல்லலாம்.   அந்த ஹோமோ சேப்பியன்ஸ் தான் கிட்ட த் தட்ட 70000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவை விட்டு புலம் பெயர்ந்தனர். அதனால் தான் அறிவியல் சொல்கிறது, நாம் அனைவரும் Non Residential Africans  நம்பும்படி இல்லையே. ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்கள் வெள்ளை நிறத்தில் உயரமாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் கருப்பாக வலுவாக இருக்கிறார்கள். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருக்கும் மக்கள் மஞ்சள் நிறத்துடன் உயரம் குறைவானவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் பல நிறத்திலும் பல விதத்திலும் இருக்கிறார்கள்.  கொஞ்சமும் சம்பந்தமில்லையே. சந்தேகம் சரிதான். ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டவர்கள் இயற்கை அனுமதித்த அளவில் அவர்களுக்குப் பிடித்த இடங்களில் வாழத் தொடங்கினார்கள். அந்த இடத்தின் தட்பவெப்பநிலை, உணவு, அத்துடன் அங்கிருந்த மற்ற மனித இனங்களுடன் ( 9 வகையான மனித சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன ) உருவான உறவு இவையெல்லாம் சேர்ந்து புதிய புதிய உருவம், நிறம், உயரம், பருமன், மொழி, இவற்றை உருவாக்கியது. அதனால் தான் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற ஒரே இனத்துக்குள் இவ்வளவு வேறுபாடுகள் தோன்றின. ஆனால் உலகம் முழுவதும் உள்ள ஹோமோ சேப்பியன்ஸின் அடிப்படையான மரபணுக்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோசேப்பியன்ஸின் மரபணுவும் உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களின் மரபணுவும் ஒன்றாகவே இருக்கிறது. இதைத்தான் மரபணு அறிவியல் கண்டறிந்துச் சொல்லியிருக்கிறது.  இப்போது இன்னும் குழப்பம் அதிகமாகிறதா?  ஆமாம். ஒரே மாதிரியான மரபணுக்களை, உடலமைப்பை, மூளையைக் கொண்ட மனிதர்கள் ஏன் வெவ்வேறு மொழி பேசுகிறார்கள்?. ஏன் வெவ்வேறு இனம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்?. ஏன் வெவ்வேறு கடவுளரை வணங்குகிறார்கள்?. ஏன் வெவ்வேறு மதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்?. ஏன் இந்தியா போன்ற நாடுகளில் ஏராளமான சாதிகளை உருவாக்கியிருக்கிறார்கள்?. ஏன் எண்ணற்ற தத்துவங்களைச் சொல்கிறார்கள்?  உண்மை தான். அறிவியலின்படி அனைத்து மனிதர்களின் மரபணு, மூளை அளவு, உடலமைப்பு எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவரைப் போல இருப்பதில்லை. ஒரு இனத்தைச் சேர்ந்தவர் இன்னொரு இனத்தைச் சேர்ந்தவரைப் போல இருப்பதில்லை. எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த தத்துவத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும், சரி எல்லாரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறானவர்களாக இருக்கிறார்களே ஏன் தெரியுமா?   சூழ்நிலையும், வாழ்நிலையும் தேவைகளும் தான் மனிதர்களின் உடலிலும் சிந்தனையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்குகின்றன.  சூழ்நிலை என்பது புவியியல் சூழலைக் குறிக்கும். அதாவது வாழும் இடம், தட்பவெப்பம், உணவு, தண்ணீர், இவையே அங்கே இருக்கும் மனிதர்களின் வாழ்க்கைநிலையைத் தீர்மானிக்கும்.  உதாரணத்துக்கு காட்டில் வாழும் பழங்குடி மக்கள் காட்டில் கிடைக்கும் உணவு, நீர், அங்கேயுள்ள தட்பவெப்பம் இதற்கு ஏற்றவாறு தங்களுடைய  வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இயற்கையுடன் இயற்கையாக வாழும் அவர்கள் எதற்கும் பேராசைப்படுவதில்லை. அதனால் அவர்களுடைய தேவை என்பது மிகக் குறைவு. அவர்களுக்கு பணம் முக்கியமில்லை. ஆடம்பரம் என்றால் என்னவென்றே தெரியாது. இல்லையா? அதேநேரம் நகரத்தில் வாழ்பவர்களின் தேவைகளை நினைத்துப்பாருங்கள். கார், பைக், மின்சார அடுப்பு, கேஸ் அடுப்பு, டி.வி. ஏ.சி. பெரிய பெரிய வீடுகள், விதவிதமான செயற்கை உணவுகள், உடைகள், ஆடம்பரம், என்று தேவைகள் அதிகமாக அதிகமாக ஆசைகளும் அதிகமாகின்றன. ஆசைகளைப் பூர்த்தி செய்ய பணம் சம்பாதிக்க வேண்டும். அதுவும் சுலபமாக கிடைக்க வேண்டும்.  அதற்கு ஒரே வழி. தான் மட்டும் முன்னேற வேண்டும். திடீரென்று எப்படி முன்னேற முடியும்? அதற்கு நம்முடன் சேர்ந்து வாழ்கிற நம்முடைய சக மனிதர்களை ஏமாற்ற வேண்டும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும். என்பது போன்ற சிந்தனைகள் உருவாகின்றன. இதையே காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் சுருக்கமாகச் சொல்கிறார். ‘ வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கும் ‘ வாழ்நிலையும் சூழ்நிலையும் சிந்தனையை மட்டுமல்ல. உடலமைப்பு, உருவம் நிறம், மொழி, இனம், தத்துவம், சாதி, மதம், கடவுள், என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும். சரி. இப்போ முதல்லருந்து ஆரம்பிப்போம். தத்துவம் எப்போது தோன்றியது?  ( தத்துவம் அறிவோம் ) உதயசங்கர் 150 க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • வெப்பநிலைமானிகளும் இரு உலோகங்களும்

    திரவமாக இருக்கும் ஒரே ஒரு உலோகம் எல்லோரும் அறிந்ததே. அது பாதரசம். இதன் உறை நிலை −39℃ ஆகும். இந்த உறைநிலையே இது பல்வேறு வகை வெப்பநிலைமானிகளில் பயன்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. வெப்பநிலைமானிகளில் பயன்படும் பாதரசத்திற்கு ஒரு முக்கியமான எதிரியென்றால் காலியத்தைக் கூறலாம். காரணம் என்னவென்றால், பாதரசமானது கிட்டத்தட்ட 300℃- இல் கொதிக்கிறது. இதன் காரணமாகவே, பாதரசமானது உயர் வெப்பநிலையை மதிப்பிடப் பயன்படும் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்த இயலாததாய் இருக்கிறது. காலியமானது 2000℃- இல் ஆவியாகத் தொடங்குகிறது. காலியத்தின் உருகுநிலையோ உள்ளங்கையில் வைத்தாலே உருகிவிடும் வெப்பநிலை. ஆம், காலியம் 29.7℃- இல் உருகி விடும். காலியத்தைத் தவிர எந்த ஒரு உலோகமும் இவ்வளவு நீண்ட வெப்பநிலை இடைவெளியில் திரவமாக இருக்க முடியாது. ஆம். காலியம் 30℃ முதல் 1999℃ வரை திரவ நிலையிலேயே இருக்கக்கூடியது.  இதன் காரணமாகவே உயர் வெப்பநிலைகளை அளக்கப் பயன்படும் வெப்பநிலைமானிகளுக்கு  காலியம் சிறந்த தேர்வாக உள்ளது.

  • தக்காளி நீ! தக்காளி!

    தக்காளி நீ! தக்காளி! செக்கச் சிவந்த தக்காளி!  கிரீடம் வச்ச  தக்காளி  உருண்டு  ஓடும் தக்காளி! அம்மா வந்து ஆசையோடு  கைகளாலே அள்ளி எடுக்க அம்மா கையில் நீ இருக்க  ஆசையோடு நான் பிடிக்க  தப்பி எட்டி நீ குதிக்க  தாவி ஓடி நானும் வர  கண்ணாமூச்சி நீயாட கண்ட நானும் பிடித்து விட!  அம்மா கையில் உன்னைத் தர  வாங்கிக் கொண்ட அம்மாவும்!  துண்டு துண்டாய் வெட்டியே  கொதிக்கும் குழம்பில் போட்டு விட! ஆஹா என்ன வாசனை ஆசையாகத் தட்டில் போட்டு  அள்ளி அள்ளித் தின்றேனே!  தலையைக் கோதும் அம்மாவை வாரி அணைத்துக் கொண்டேனே! சரிதா ஜோ  சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • பேசும் கடல் - 6

    பாட்டியிடம் பேசும்போது அமுதாவுக்கும் இனியனுக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அப்போது அப்பாவின் குரல் கேட்டது.  " இனியா...... இனியா போய் சார்லஸ் மாமா கிட்ட அப்பாவோட பங்கு காசு வாங்கி வாய்யா" என்று இனியனிடம் அப்பா கூற,  இனியனும் சார்லஸ் மாமா வீட்டை நோக்கி சென்றான்.  கடல் பாட்டி...... உயரமான அலையாக எழும்பி  கரையைத் தொட்டு திரும்பிக் கொண்டிருந்தாள் " அமுதா...... அமுதா அண்ணனை எங்கே?" என்று கடல் பாட்டி  கேட்க, "நான் இங்கதானே இருக்கேன் என்னைய கேட்காம இனியனை தேடுறீங்களே......"  அமுதா சிணுங்கி கொண்டே கேட்டாள்.  "அப்படி இல்லம்மா.... இருப்பதை விட இல்லாததை தானே தேடுவோம்" என்றது கடல் பாட்டி.  ” என்னதான் இருந்தாலும் இது ஒர் ஆணாதிக்க சமூகம், ஆண்களை தான் முதலில் தேடுவார்கள் . எங்கள் ஊரில் ஆண்கள் மட்டும் தான் கடலுக்கு போகிறார்கள்.  பெண் பிள்ளைகள் எங்களை கடலில் விளையாடக் கூட விட மாட்டாங்க...."  என்று படபடவென வெடித்தாள் அமுதா.  வேகமாக ஓடி வந்தான் இனியன்...... "அப்பா... அப்பா... சார்லஸ் மாமா இல்ல ” என்று கூறிக்கொண்டே கடல் பாட்டியிடம் சென்றான். " பாட்டி , அமுதா என்ன கேள்வி கேட்டாள்?" என்றான் இனியன். " அவள் கேள்வியை தொடங்குவதற்குள் நீ வந்துட்ட....  எங்க போனாய்?"  என்று நுரையாய்ச் சிரித்தாள் கடல் பாட்டி  "அப்பாவோட பங்கு காசு வாங்கப் போனேன்". இனியன் பேசிக்கொண்டே ஈர மணலில் முழந்தாளிட்டு கடல் நீரை உடம்பில் அப்பிக் கொண்டான். " அமுதா...... இனியன் 'பங்கு காசுன்னா' என்னன்னு தெரியுமா?” என்று கேள்விக்குறி போல அலையை எழுப்பிக் கேட்டாள். " தெரியாது" என்றாள் அமுதா. " அப்பாவுக்கான கூலி" என்றான் இனியன். " இனியன்..... கடலோர மீனவர்களிடம், அதாவது என் மக்களிடம் கூலி கொடுப்பது என்ற பேச்சே இருக்காது.  செய்கிற தொழிலுக்கு கூலி கொடுக்கிறேன், வாங்குறேன் என்று சொல்லவே மாட்டார்கள்".  "பாட்டி.... பாட்டி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்" அமுதாவுக்கு ஆர்வம் மிகுதியானது.  "உலகிலேயே மிகவும் கடினமான அபாயகரமான தொழில்களில் முதலிடம் கடல் மீன்பிடித் தொழில்தான்.  இதில் இழப்பு என்றால் எல்லோருக்கும் தான். அதனால் கிடைப்பதை பொதுவாக பங்கிட்டு கொள்வார்கள். எனவே அதை பங்குப்பணம் என்கிறார்கள்" பாட்டியின் வார்த்தைகளில் உற்சாகம் கூடியது.  "எப்படி பங்கு  பிரிப்பார்கள்?" இனியன் கேட்க. " மீனவர்கள் முதலில் கட்டுமரம், அதன் பிறகு இயந்திரம் பொருந்திய நாட்டுப் படகு, விசைப்படகு என்று மீன்பிடித்தலுக்கு பயன்படுத்துகிறார்கள்.  கட்டுமரம் பயன்படுத்திய போது செலவு மிகக் குறைவு. கிடைத்ததை எல்லாம் பொதுவாக வைத்து சரிபாதியாக பிரித்துக் கொள்வார்கள்.  கட்டுமரத்தில் மூன்று பேர் சென்றால் 3000 ரூபாய் வருமானம் கிடைத்தால் ஆளுக்கு ஆயிரம் என்று பங்கு போட்டுக் கொள்வார்கள் .  கூலி என்ற வார்த்தை ஆண்டான் அடிமை சமூகத்தை நினைவூட்டுகிறது. கடல்தொழிலில் எல்லாரின் உயிரும் சமம்,  எல்லாரின் உழைப்பும் சமம். எனவே இலாபம் சமமாக பங்கிடப்படும்." என்று கடல்பாட்டி பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டான் இனியன். " பாட்டி... பாட்டி.... இப்போ நாட்டுப் படகு, விசைப்படகு என்று மாறிவிட்டதே". .   ” ஆமாம் நாட்டுப் படகு, விசைப்படகு, வெளிப் பொருந்து இயந்திரங்கள் கொண்டு படகை செலுத்தும் போது மண்ணெண்ணெய், டீசல் போன்ற முதலீடுகள், படகு முதலீடுகள் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்போது ஒரு படகில் 5 பேர் தொழில் செய்ய சென்றால், ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் மீன்பிடித்தலில் வருமானம் கிடைத்தால் அதில் 5000 ரூபாய் படகு உரிமையாளர் எடுத்துக் கொள்வார்கள். இதில் மண்ணெண்ணெய், டீசல், படகு தேய்மானம், இஞ்சின் பழுது நீக்குதல், வலைகள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவு செய்வதற்கு ஒதுக்கப்படும். மீதி 5000 அனைவருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்கப்படும்." என்று விரிவாக பேசிக் கொண்டிருந்தாள் கடல் பாட்டி.  " பாட்டி மற்ற தொழிலுக்கும் கடல் தொழிலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது...? இனியன் கேள்வி கேட்டான். . "இனியா , உலகில் மற்ற எந்த தொழிலிலும் இலாபத்தை பங்கிட மாட்டார்கள். மீன்பிடித் தொழிலில் மட்டும்தான் இலாபப் பங்கீடு உண்டு. இன்று பத்தாயிரம் ரூபாய் மீன் பட்டாலும் சம பங்குதான், 50,000 மீன் பட்டாலும் சமபங்குதான், ஐயாயிரம் ரூபாய் மீன் பட்டாலும் சம பங்குதான்". என்று பாட்டி சொல்லி முடிப்பதற்குள், "I love fisher People " அமுதா பூரிப்புடன் கூறினாள். " wow great " என்று துள்ளி குதித்தான் இனியன். " பாட்டி நாங்க அப்பா கிட்ட இது பத்தி கேட்க போறோம்...."  என்று இருவரும் தன் அப்பாவை நோக்கி ஓடினார்கள்.  கடல் பாட்டி சொன்னது எல்லாம் அப்படியே ஒன்று விடாமல் தன் அப்பாவிடம் கேட்டார்கள். " எவ்வளவு மீன் பட்டாலும், பணம் கிடைச்சாலும் கரைக்கு திரும்பி வந்தாதான் மீனவனுக்கு வாழ்வு, அதனால்தான் கிடைத்ததை செலவு போக அனைத்தையும் பொதுவில் வைத்து பங்கு போட்டு பிரித்துக் கொள்வோம்" என்று கூறிய அப்பா தன் வாயில் ஒதுக்கி வைத்திருந்த வெற்றிலை துப்பினார். பின் அதன் மீது மண் மூடினார்.   இனியன் கடல் பாட்டி சொன்னதை நினைத்து கடலைப் பார்த்தான் . அது அமைதியாக இருந்தது. அழகாய் சிறுஅலை எழும்பி வந்தது . அருகில் இருந்த அமுதாவும், இனியனும் இணைந்து "I love you"  கடல்பாட்டி என்று கோரசாகக் கூறினார்கள். ( கடல் பேசும் )

  • Magic Square

    A special magic square is done for 15-8-2025 This magic squares can be used from 2025 to 2099 All vertical, Horizontal and in both Diagonals are 68. One more magic square for the year 2026 is also done with the total 69 From 2025 to 2026, simply add one number in the yellow colored squares and in total. By adding one number every year in all the yellow squares and in total, this magic square can be used from 2026 to 2099 (75 Years)

  • ஈரோட்டில் கதைத்திருவிழா -2025

    ஈரோடு மாவட்டத்தில் 21 வருடங்களாக புத்தகத் திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 17 வருடங்களாக மக்கள் சிந்தனை பேரவை தனியாகவும் கடந்த நான்கு வருடங்களாக தமிழ்நாடு பொது நூலக துறையோடு இணைந்தும் நடத்தி வருகிறது.  இதில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில்  ஆளுமைகளின் சிறப்புரை நடைபெறும். இந்த வருடம் 5 கோடிக்கு மேல் நூல்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு கடந்த வருடம் நடைபெற்றது. இந்த வருடமும் தினமும் காலையிலிருந்து மாலை வரை பல்வேறு பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் கதை கேட்டார்கள்.  கதைக்களம் என்ற ஒரு அரங்கம் அமைத்து அதில் குழந்தைகளுக்கு கதை சொல்லிகள் கதை சொன்னார்கள்.  கதை சொல்லிகள் வனிதாமணி, கோதை, லட்சுமி விசாகன், சரிதா ஜோ, நான்சி கோமகன், சங்கீதா பிரகாஷ், சர்மிளா தேவி, கார்த்திகா கவின் குமார்  மற்றும் தீரா தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டு மிகச் சிறப்பான கதைகளைக் கூறினார்கள்.   10 வயதுக்குள் குழந்தைகள் கேட்கும் கதைகள் பிற்காலத்தில் அவர்கள் ஆளுமையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.  அந்த வகையில் குழந்தைகளுக்கு கதைகளை கொண்டு சேர்த்த ஈரோடு புத்தக திருவிழா ஏற்பட்டாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

bottom of page