குழந்தைகளின் உரிமைகள் - 7
- கமலாலயன்
- 4 days ago
- 2 min read

குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான யுனிசெப் அமைப்பின் சர்வதேசப் பிரகடனம் -
இன்று உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள், நாடுகளுக்கு இடையேயும் உள்நாட்டு அளவிலும் நடந்து கொண்டிருக்கும் போர்கள், எதிர்பாராத பல இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள் போன்ற பல்வேறு காரணங்களால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்கள் குழந்தைகளே. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்ரேல்-ஹமாஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் போரில், அன்றாடம் குண்டு வீச்சுகளில் சாகிறவர்கள் ஒரு பாவமும் அறியாத குழநத்தைகள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு, மருத்துவ சிகிச்சை, பல், ரொட்டி போன்ற அத்தியாவசியத் தேவைகள் எவையும் கிடைப்பதில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெப் போன்ற சேவை அமைப்புகளால் அனுப்பப்படும் மேற்கண்ட உதவிகளை, இஸ்ரேல் இராணுவம் நாட்டுக்குள் நுழையவே அனுமதிப்பதில்லை. உலக நாடுகளில் பலவும் வெறும் வார்த்தைகளால் அனுதாபம் தெரிவிப்பதுடன் நின்று விடுகின்றன. விளைவு, நம் கண்களுக்கு முன்னாலேயே ஒவ்வொரு நாளும் குழந்தைகள் குண்டுகளால் மட்டுமன்றி, பசியினால், நோயினால், மருந்துகள் கிடைக்காமையால் செத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் அதன் பெற்றோருடன்தான் வாசிக்கவும்,வாழவும் வேண்டும் என்கிறது யுனிசெப் பிரகடனம். எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு குழந்தையும் அதன் பெற்றோரிடமிருந்து தனியே பிரிக்கப்படவே கூடாது என்பது யுனிசெப்பின் விதிகளின்படி கட்டாயம். குழந்தைகளை அவர்களின் பெற்றோரே முறையாகப் பராமரித்து வளர்க்காத பட்சத்தில், அத்தகைய சூழலில் மட்டும், அத்தகைய அக்கறையற்ற பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டுக்காக, ஒரு குழந்தையைப் பெற்றோரே துன்புறுத்திக் கொண்டிருந்தாலோ, குழந்தைக்கு உணவு,உடை, பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக் கூட வழங்காமல் அக்கறையற்று இருந்தாலோ, அங்கு சட்டப்படியான நடவடிக்கைகளின் மூலம், அந்தக் குழந்தைகளைப் பிரித்துக் கொண்டு வந்து பராமரிப்பு நிலையங்களில் அல்லது சேவை மையங்களில் பாதுகாக்க வேண்டும் என்பது யுனிசெப் அமைப்பின் அறிவுறுத்தல்.
குடும்பத்தகராறுகள் காரணமாகப் பெற்றோர் பிரிந்து வாழும் நிலை இன்று பரவலாக உள்ளது. அந்த மாதிரிப் பெற்றோரின் குழநத்தைகள், அப்பா - அம்மா இருவருடனும் தொடர்பில் இருக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் இந்த விதியின் மற்றோரு நிபந்தனை. அவ்வாறு இருவருடனும் தொடர்பில் அக்குழந்தையை விடுவது, அதற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற நிலை இருக்குமானால், அப்படிப்பட்ட சூழ்நிலையில், இருவரில் யாரிடம் குழந்தை பாதுகாப்பாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து அவரிடம் அந்தக் குழந்தை வசிக்குமாறு செய்ய வேண்டும்.
இந்த விதிகளையெல்லாம் கேட்கவும், படிக்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆநாள், நடைமுறையில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் செய்திகள் நெஞ்சைப் பிறக்கின்றன. இருமல் மருந்து -சிரப்- குடித்ததால் சுமார் 19 குழநத்தைகள் மரணம். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமையால் நூற்றுக்கணக்கில் சாவுகள். ஒரு நடிகர், தான் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்குப் பிரச்சாரம் செய்ய ஓர் ஊருக்கு வந்தால்,அவரைப் பார்ப்பதற்குக் கூடும் கூட்டங்களில் நெரிசலில் சிக்கிய பல குழந்தைகள் சாகின்றன. கும்பமேளா போன்ற மதம் சார்ந்த திருவிழாக்களில், கடவுளை வணங்கும் வேகத்தில் குழந்தைகளைப் பற்றிய கவலையில்லாமல் ஆற்று நீரிலும், குளங்களின் நீரிலும் பலியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான செய்திகள் இல்லாமல், இன்றைய உலகில் ஒரேயொரு நாள் கூட இருப்பதில்லை.
என் இந்த அவல நிலை? இம்மாதிரி மரணங்களுக்கு யார் பொறுப்பு? பெற்றோர்தாம் முதன்மையான பொறுப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அரசாங்கம், காவல்துறை, பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் - இப்படி, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பு உண்டுதானே? ஊடகங்கள் தங்களின் கடமைகளில் ஒன்றாகக் குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி மிக விரிவாகவும்,அழுத்தமாகவும்,மக்களின் மனங்களில் பசுமரத்தாணியைப் போல் பதியும் வண்ணம் பரப்புரை செய்ய வேண்டாமா? மக்களின் பணத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படக் கலைஞர்கள் தங்களின் மீது வெறித்தனமான பக்தி கொண்டிருக்கும் ரசிகர்களிடம் குழந்தைகளைப் பாதுகாப்பகப் பார்த்துக் கொள்வது அவர்களின் தலையாய கடமை என வலியுறுத்திக் கூற வேண்டாமா? ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பிஞ்சு நெஞ்சுகளில் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என விழிப்புணர்வு ஊட்டி, நெறிப்படுத்த வேண்டாமா? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம்,சலுகைகளை அனுபவிக்கும் ஒவ்வோர் ஊழியருக்கும் இந்த விஷயத்த்தில் பொறுப்பும், கடமையும் உண்டுதானே?
கேள்விகள் முடிவில்லாமல் எழுகின்றன. இன்று செத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையின் சாவும் தவிர்க்கப்படக் கூடியதுதான். கொரானா அல்லது சுனாமி போன்ற, மனித ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட இயற்கைப் பேரிடர் நேரங்களில் தவிர, மற்ற எல்லா நிகழ்வுகளிலும் குழந்தைகளின் மரணங்கள் தடுக்கப்பட்டே தீர வேண்டும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் அவரவரின் பங்கினை ஆற்றிட வேண்டும். இதுதான் யுனிசெப் பிரகடனம் சொல்லும் செய்தி!

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று
பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
Comments