சீனப்புத்தாண்டு
- எழில் சின்னத்தம்பி
- 4 days ago
- 3 min read

ஒவ்வொரு வருடமும், சனவரி 21க்கும் பிப்ரவரி 20க்கும் இடைப்பட்ட அமாவாசை தினத்துக்கு மறுநாள் - புது நிலவு தோன்றும் அந்த நாளே சீனப்புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது. சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது சீனப்புத்தாண்டு. ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு விலங்குப் பெயர் அளிக்கப்பட்டு, அந்த வருடத்தில் பிறந்தவர்கள் அந்த விலங்கு இராசியில் இருப்பவர்களாகச் சொல்லப் படுவார்கள். உதாரணத்துக்கு, இந்த வருடம் (2025) சீனாவில் ‘பாம்பு’ வருடமாகக் கருதப்படுகிறது. மொத்தம் பன்னிரெண்டு விலங்குகள். வரிசையாக அந்த விலங்குகளின் பெயரால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கான பெயரும் அளிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் முடிந்ததும் மீண்டும் முதல் மிருகத்திலிருந்து அந்தப் பன்னிரெண்டு வருடச் சுழற்சி ஆரம்பிக்கும். முதல் வருடத்தின் சின்னம் எலி. அதனைத் தொடந்து எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி என அடுத்தடுத்த வருடங்களுக்குப் பெயர் வைக்கப்படும். இப்படி, ஆண்டுகளுக்கு மிருகங்களின் பெயர் எப்படி வந்தது என்பதைப் பற்றி காலங்காலமாகச் சீனாவில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.
வெகுகாலத்துக்கு முன் சீனாவின் முதல் பேரரசராக இருந்தவர் மாணிக்க வம்சத்தைச் சேர்ந்த யுவாங். ‘வானுலகையும் மண்ணுலகையும்’ ஆள்பவர் என்று இவருக்குப் பட்டமுண்டு. அனைத்துக் கடவுளருக்கும் மனிதர்களுக்கும் அவரே தலைவர். இயற்கைச் சக்திகளான நதி, காற்று, மழை போன்றவையும் அவரையே வணங்கி வந்தன. நன்மை செய்பவர்களை உற்சாகப்படுத்தி, தீமை செய்பவர்களைத் தண்டிக்கவும் செய்பவர் பேரரசர்.
ஒவ்வொரு புது வருடத்தையும் பெயரிட்டு அழைப்பதற்காக, ஒருமுறை அவர் விலங்குகள் அனைத்தையும் வரச்சொன்னார். அந்த விலங்குகளுக்கு ஒரு போட்டி வைக்கப் போவதாகச் சொன்னார். நாய், ஆடு, பூனை, புலி போன்ற விலங்குகளும் எலி போன்ற சிறிய விலங்குகளும் டிராகன் போன்ற மாபெரும் விலங்குகளும் பேரரசரைக் காண வந்து அவரை வணங்கி நின்றன.
“விலங்குகளே! உங்களுக்குப் போட்டி ஒன்றை நடத்தப் போகிறேன். ஒரு பெரிய ஆற்றைக் கடந்து மறுபுறம் நீங்கள் வரவேண்டும். முதலில் வரும் பன்னிரெண்டு விலங்குகளின் பெயரை வரிசையாக ஒவ்வொரு ஆண்டுக்கும் சூட்டப் போகிறேன்” என்றார். விலங்குகள் ஆர்வத்துடன் ஆரவாரம் செய்தன. போட்டி மறுநாள் காலையில் நடைபெறும் என்று பேரரசர் அறிவித்தவுடன் விலங்குகள் கலைந்து சென்றன.
கலைந்து செல்லும்போது, பூனை தனது நண்பன் எலியிடம் சொன்னது: “நண்பா, நாளைக் காலை என்னை நீ அதிகாலையிலேயே எழுப்பி விடுவாயா? இல்லையேல் நான் அதிக நேரம் உறங்கி விடுவேன்; என்னால் போட்டியில் கலந்துகொள்ள முடியாது.”
“நிச்சயமாக நண்பா. நான் கிளம்பிச் செல்கையில் உன்னையும் எழுப்பி அழைத்துச் செல்கிறேன்” என்று உறுதி சொன்னது எலி.
மறுநாள் அனைத்து விலங்குகளும் ஆற்றங்கரைக்குச் சென்றன. எலி வேண்டுமென்றே பூனையை எழுப்பாமல் விட்டுச் சென்றது. பூனை தொடர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, பூனையைத் தவிர மற்ற அனைத்து விலங்குகளும் போட்டியில் கலந்துகொண்டன.
ஆற்றின் மறுகரையில் பேரரசர் காத்திருந்தார். விலங்குகள் ஓடிச்சென்று ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தன.
எலிக்கு நீந்தத் தெரிந்தாலும், பிற வலுவான விலங்குகளுடன் போட்டி போட்டுக்கொண்டு நீந்தும் அளவுக்குத் தனக்குத் திறமை இருக்கிறதா என்று யோசித்தது. என்ன செய்யலாம் என்று சிந்தித்த எலி, அருகில் வந்த எருதிடம், “எருது நண்பா, எனக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது; என்னை உன் முதுகில் ஏற்றிக் கொண்டு அக்கரைக்குச் செல்லமுடியுமா?” என்று கேட்டது.
அதற்கு உடனே சம்மதித்தது எருது. எருதின் முதுகில் எலி ஏறிக்கொள்ள, ஆற்றை விரைவாகக் கடந்தது எருது. மறுகரையை எருது அடைவதற்கு முன் எருதின் முதுகிலிருந்து குதித்துக் கரையை அடைந்து ஓடிப் பேரரசருக்கு அருகில் நின்றது.
“எலியே! நீதான் முதலில் வந்தாய். அதனால் முதல் வருடத்துக்கு உனது பெயரைத்தான் சூட்டப்போகிறேன்” என்றார் பேரரசர்.
மகிழ்ந்த எலி, “மிக்க நன்றி பேரரசரே!” என்று சொல்லி வணங்கி நின்றது.
தன்னைப் பயன்படுத்திக் கொண்டு முதலிடம் பெற்ற எலியைக் கண்டு சற்றுக் கோபப்பட்டாலும், அதை மறைத்துக் கொண்டு நின்றது எருது.
“இரண்டாவதாக வந்த எருதே! உன் பெயராலேயே இரண்டாவது வருடத்தை அழைக்கப் போகிறேன்” என்றார் பேரரசர். எருது நன்றி சொல்லிச் சென்றது.
அடுத்த வந்த புலியின் பெயரால் மூன்றாவது ஆண்டுக்குப் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார் பேரரசர்.
துள்ளிக் குதித்து வந்தது முயல். நான்காவது ஆண்டுக்கு முயலின் பெயரை அறிவித்தார் பேரரசர்.
டிராகன் அடுத்ததாக வந்தது. அதைப் பார்த்த பேரரசர் கேட்டார்: “கடல் நாகமே, நீ பறந்து வந்து முதலிடம் பெற்றிருக்கலாமே! ஏன் தாமதமாக வருகிறாய்?”
“பேரரசரே, வரும் வழியில் என்னிடம் பலர் உதவி கேட்டார்கள். அவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு வருவதற்கு நேரமாகி விட்டது” என்றது டிராகன்.
ஐந்தாவது வருடத்துக்கு டிராகனின் பெயர் வைப்பதாக பேரரசர் அறிவித்தார்.
வேகமாக வந்தது குதிரை. ஆனால் குதிரையின் கால்களைச் சுற்றிக் கொண்டு வந்து அதன் வேகத்தைக் குறைத்தது பாம்பு. குதிரைக்கு முன் வந்து நின்றது.
“பாம்பே, நீ குதிரையை முந்திவிட்டாய். அதனால் ஆறாவது ஆண்டுக்கு உனது பெயரைச் சூட்டுகிறேன். குதிரையே, ஏழாவது ஆண்டு உனது பெயரால் அழைக்கப்படும்.”
சேவல், குரங்கு, ஆடு ஆகிய மூன்று விலங்குகளும் ஒன்றாக வந்தன. ஆற்றைக் கடக்க அவை இணைந்து வேலை செய்திருந்தன. கோழி ஒரு படகைக் கொண்டுவந்தது. ஆடு புற்களை உண்டு ஆற்றுக்கு நடந்து செல்ல ஒரு பாதையை உருவாக்கியிருந்தது; குரங்கு படகைச் செலுத்தி ஆற்றைக் கடக்க உதவியது. இத்தகைய சிறந்த குழுப்பணியைக் கேட்ட பேரரசர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் ஆட்டை எட்டாவதாகவும், குரங்கை ஒன்பதாவதாகவும், சேவலைப் பத்தாவதாகவும் அறிவித்தார்.
பதினோராவதாக வந்தது நாய். ஆச்சரியமடைந்த பேரரசர் நாயிடம் கேட்டார்: “நாயே, உனக்கு நன்றாக நீந்தத் தெரியுமே! நீ எப்படி இவ்வளவு தாமதமாக வந்தாய்?”
“பேரரசே, தண்ணீர் தெளிவாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தபடியால் நான் ஆற்றுநீரில் சிறிது நேரம் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தேன். ஆற்றை விட்டு வெளியே வர மனமில்லாமல் நீந்திக் கொண்டிருந்தேன். அதனால் நேரமாகிவிட்டது” என்றது நாய்.
நாயைப் பதினோராவது ஆண்டின் பெயராக அறிவித்தார் பேரரசர்.
பின்னர் அடுத்து வரப்போகும் விலங்குக்காகக் காத்திருந்தார் பேரரசர். ஆனால் வெகுநேரமாக வேறந்த விலங்கும் வரவில்லை. எல்லா விலங்குகளும் வந்துவிட்டன போலும் என்று எண்ணிய பேரரசர் புறப்படத் தயாரான போது கடைசியாக வந்தது பன்றி.
“மன்னித்துக் கொள்ளுங்கள் பேரரசே. வரும் வழியில் சிறிது உணவு உண்டேன்; உண்ட களைப்பில் சிறிது நேரம் படுத்து உறங்கிவிட்டேன். வருவதற்குத் தாமதமாகி விட்டது” என்று வெட்கத்துடன் சொன்னது பன்றி.
சிரித்த பேரரசர் பன்றியின் பெயரைப் பன்னிரெண்டாம் ஆண்டிற்கு வைத்தார்.
“இனிவரும் ஆண்டுகள் இந்தப் பன்னிரெண்டு விலங்குகளின் பெயரிலேயே வரிசையாக அழைக்கப்படும்” என்று அறிவித்தார் பேரரசர். அனைவரும் மகிழ்ச்சியானார்கள்; அனைவருக்கும் விருந்துணவு அளிக்கப்பட்டது.
உறங்கி விட்டதால் போட்டிக்கு வர மறந்த பூனை எழுந்து பார்த்தது. “போட்டிக்கு நேரமாகி விட்டதே! இந்த எலி என்னை எழுப்பாமல் ஏமாற்றிவிட்டதே” என்று எண்ணிக்கொண்டே வேகமாகப் போட்டி நடக்கும் இடத்துக்கு வந்து பார்த்தது பூனை. போட்டி வெகுநேரத்துக்கு முன்பே முடிந்திருக்க, ஏமாற்றமடைந்தது பூனை.
“என்னை ஏமாற்றிய எலி இன்றிலிருந்து எனது நண்பன் அல்ல” என்று சொல்லிக் கொண்டே எலியைப் பிடித்துத் தண்டிப்பதற்காக பூனை எலியைத் தேடி ஓடியது. அன்றிலிருந்து இன்றுவரை எலியை விரட்டிக்கொண்டே இருக்கிறது பூனை.
இப்படித்தான் சீனப்புத்தாண்டுகளுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. குறிப்பிட்ட வருடங்களில் பிறந்தவர்களின் குணங்களும், பிறந்த வருடங்களைக் குறித்த விலங்குகளின் பண்புகளைப் பொறுத்தே அமையும் என்ற நம்பிக்கையும் இராசி பலன்களும் இன்றும் சொல்லப் படுகின்றன.
Comments