top of page

எங்கிருந்தோ வந்தான்?

வெளியீடு – பழனியப்பா பிரதர்ஸ் – 1983


ree

வாசிப்பு அஞ்சலி



தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் காலத்தால் மறையாத பல கதாபாத்திரங்கள் உண்டு. அப்படி அற்புதமான  கதாபாத்திரமாக நீலனை உருவாக்கி சிறார்களின் மனதில் உலவ விட்டவர் கொ.மா.கோதண்டம். தன்னுடைய முதல் நூலான ஆரண்ய காண்டம் நூலுக்கு குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றவர். முதன்முதலாக குறிஞ்சி நிலத்தை, காடுகளை, பழங்குடி மக்களை, அந்த வாழ்க்கையை, எளிய குணத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியவர். காட்டை வெளியிலிருந்து பார்த்துக் கதைகளை உருவாக்கவில்லை. காடுகளுக்குள் சென்று அங்கிருந்த பழங்குடி சமூகத்துடன் தங்கியிருந்து அவர்களுடைய இயற்கையறிவைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கதைகளை எழுதினார். 


என்னுடைய பள்ளிப்பருவத்தில் நூலகத்தில் கொ.மா.கோதண்டம் கதைகளைப் படித்து அடர்ந்த காடுகள், யானைகள், கழுதைப்புலிகள், ஓநாய்கள், புலிகள், எல்லாம் கனவில் வந்திருக்கின்றன. நீலன் என்ற கதாபாத்திரத்தின் இயற்கையைப் பற்றி, விலங்குகள், பறவைகளைப் பற்றிய நுண்ணறிவு, காட்டுக்குள் அவன் செய்யும் சாகசங்கள், காட்டில் நடக்கும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் தைரியம் எல்லாம் என்னைப் போன்ற குழந்தைகளை மிகவும் பிடித்திருந்தது. 

1980-களில் கல்லூரி முடித்து இலக்கியத்தைக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் நீலன் என்ற காவியக் கதாபத்திரத்தை உருவாக்கிய கொ.மா.கோதண்டம் அவர்களைத் தோழராக நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 


அவருடைய மறைவையொட்டி அவருடைய எங்கிருந்தோ வந்தான் சிறார் சிறுகதை நூலை இப்போது வாசித்து அஞ்சலி செலுத்தினேன். 


எங்கிருந்தோ வந்தான் தொகுப்பில் பனிரெண்டு கதைகள் இருக்கின்றன. அந்தக் காலங்களில் தொடர் நாயகர்களைக் கொண்டு நாவல், சிறுகதைகள் எழுதும் பழக்கம் இருந்த து. அப்படித்தான் இந்த த் தொகுப்பிலுள்ள பனிரெண்டு கதைகளிலும் நீலன் வருகிறான். எளிய பளியர் குலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒவ்வொரு கதையிலும் காட்டைப்பற்றி, விலங்குகளின் குணாதிசயங்களைப் பற்றி, மூலிகைகளைப் பற்றி, அங்கிருக்கும் ஆபத்துகள், அதிலிருந்து பாதுக்காப்பாக இருக்க வழிகள், மனிதர்களின் அட்டூழியங்கள், இயற்கையின் மீதான ஆக்கிரமிப்புகள் என்று ஒவ்வொரு கதையிலும் காட்டைப்பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கிறான் நீலன். 


இப்போது வாசிக்கும்போதும் எளிமையாகவும் சுவாரசியமாகவும், புதிதாகவும், புதிய தகவல்களைச் சொல்வதாகவும் இருக்கின்றன. அத்துடன் நீலன் என்ற எளிய பழங்குடிச் சிறுவனை அதிகாரம் செய்கிற நகரத்தைச் சேர்ந்த தோட்டத்த்துக்குச் சொந்தக்காரரின் மகனின் அதிகாரத்தையும் பதிவு செய்திருக்கிறார் கொ.மா.கோதண்டம். வர்க்கவேறுபாட்டினையும் அதன் விளைவான அதிகாரச்செருக்கையும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே செல்வதும் நீலனின் இயற்கையறிவுக்கு முன்னால் அதிகாரம் அடிபணிந்து நிற்பதையும் சொல்கிறார். மிக முக்கியமானது எல்லாக் கதைகளிலும் நீலன் புன்முறுவலுடனே வருகிறான். உதவி செய்கிறான். உயிரைக் காப்பாற்றுகிறான். நீலனைப் போல அறிவும், சமயோசிதமும், சாமர்த்தியமும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும்படி இந்தக் கதைகளை எழுதியிருக்கிறார் தோழர்.கொ.மா.கோதண்டம்.


குழந்தைகளுக்காக எழுதுபவர்களும் எழுத நினைப்பவர்களும் கூட வாசித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகளை பதிவு செய்திருக்கிறார். சிறார் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம்.

ree

உதயசங்கர்

150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page