top of page

சறுக்கு ரயில் சாகசத்தில் ஒரு கணிதப் பாடம்!

புத்தகங்களோடு ஒரு இன்பச் சுற்றுலா - 4

ree

நம்ம ஊர்ல திருவிழா நடக்கிற நேரத்துல ராட்டினம், குடைராட்டினம் எல்லாம் பார்க்லாம். இப்பவும் கடற்கரைகள்லேயும் சிறுவர் பூங்காக்கள்ளேயும் பார்க்க முடியுது. தெருவுக்கே கூட சின்ன அளவு குடைராட்டினத்தைத் தள்ளிட்டு வர்றாங்க. செங்குத்தா மேலே போயிட்டு, கீழே  இறங்குற ராட்டினத்தில அடியிலே இருக்கிறப்ப கைக்குட்டையையோ வேற ஏதாச்சும் ஒரு பொருளையோ தரையில போட்டுட்டு, மறுபடி பெட்டி கீழே வர்றப்ப அதை எடுக்கிறதே ஒரு சாகசமா இருக்கும்.

இப்ப, சுற்றுலா மையங்களா இருக்கிற மனமகிழ் பூங்காக்கள்ல தொடர்வண்டி போலவே பல பெட்டிகளோட இருக்கிற ரோலர் கோஸ்டர்  எல்லாரையும் கவர்ந்து இழுக்குது. திறந்த நிலையில் இருக்கும் பெட்டிகளோட இருக்கைகள்ல உட்கார்ந்துகிட்டா, வண்டி புறப்பட்டு, வளைஞ்ச வளைஞ்சு திரும்புற தண்டவாளங்கள்ல வேகமாகப் போகும். ஏறி இறங்குற இடங்கள் நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கும். பயமா இருந்தாலும் அந்தச் சவாரி வேணாம்னு  மறுக்கிறவங்க  ரொம்பக் கொஞ்சம் பேர்தான் இருப்பாங்க. ஆ…ஈ… ஊ… ஏ… ஓ… என்று கூச்சல் போட்டுக்கிட்டே அதிலே பயணம் செய்யத்தான் பொதுவா எல்லாரும் விரும்புவாங்க.


அந்த ரோலர் கோஸ்டர் பயணத்தை கணினிக் கணித முறையில் நிரலாக்குவது பற்றி ஒரு சுவையான புத்தகம் வந்திருக்கிறது. நம்ம கைப்பேசியிலோ, இல்லாட்டி தொலைக்காட்சி விளையாட்டுக்கு உள்ளேயோ நுழையுறதுக்கு ஒரு கடவுச் சொல் பயன்படுத்துறோம். அந்தக் கடவுச்சொல் ஒரு கோட், இல்லைன்னா நிரலாக்கம்னு சொல்லலாம். நாம பயன்படுத்துற எல்லாத்தையுமே ஒரு முறையான வரிசைப்படியான செயலுக்கு உட்படுத்த முடியும். அதாவது நிரலாக்கம் அல்லது கோட் செய்ய முடியும்.


என்ன பயன்?

அப்படி கணினி வழியில் செய்கிற நிரலாக்கத்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? அதைப் பத்திப் பேசுற புத்தகம்தான் ‘ஹவ் டு கோட் எ ரோலர் கோஸ்டர்’. தமிழ்ல சொல்றதுன்னா, ‘ஒரு சறுக்கு ரயிலை நிரலாக்கம் செய்வது எப்படி’.


இந்த அறிவியல், தொழில்நுட்பத் புத்தகத்தை, ஒரு கதைப் புத்தகம் போல சுவைபட  எழுதியிருப்பவர் ஜோஷ் ஃபங்க்.  சிறார் அறிந்துகொள்ள வேண்டிய நடைமுறை அறிவியலுக்கு எளிதான கதவைத் திறந்துவிடுதுன்னு இந்தப் புத்தகம் பத்திச் சொல்றாங்க. 


“கோடிங்” –இப்படி ஆங்கிலத்திலேயும் “கணினி நிரலாக்கம்” –இப்படித் தமிழ்லேயும் சொல்றோமே, இது எதிர்காலத்துல கண்டிப்பா தெரிஞ்சி வைச்சிருக்க வேண்டிய அடிப்படையான, இன்றியமையாத ஒரு திறன். அதை சலிப்பூட்டாமல், ரோலர்கோஸ்டர்  சவாரி எப்படி சிலிர்ப்பும் சுவையுமாக இருக்குமோ அதையே தலைப்பாகவும் வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஃபங்க்.  புத்தகத்தின் ஒரு சிறப்பாக, “இப்படி இருக்குமானால்” (இஃப்), “அதன் பின்” (தென்) என்ற கூற்றுகளை நூலாசிரியர்   வரிசைப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டுறாங்க நூல் திறனாய்வாளர்கள். அவ்வாறு வரிசைப்படுத்துற செயலையும், அதற்குப் பிறகு ஏற்படும் சுழற்சி (லூப்) எனும் அடிப்படைக் கூறுகளையும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த நூல் விளக்குறதா அவங்க சுட்டிக்காட்டுறாங்க.


அன்றாட வாழ்க்கையிலேயே கணினி நிரலாக்கம எப்படிப் பயன்படுதுன்னு விளக்குறதன் மூலம், தொழில்நுட்பம் என்பது வெறும் கணினித் திரை அல்ல, அது நம்மைச் சுற்றியுள்ள உலகம்னு இந்தப் புத்தகம் புரிய வைக்குது. இதுவும் புத்தகத்தோட ஒரு சிறப்புதான்னு  சொல்றாங்க.

                           

ரோலர் கோஸ்டர் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்தானே? அதையே பின்னணியா வைச்சிக்கிட்டு, அதன் பாதுகாப்பை உறுதி செய்றதுக்கும், சரியான நேரத்தில் சவாரியைத் தொடங்குறதுக்கும்,  வேகத்தைக் கட்டுப்படுத்துறதுக்கும் இந்தக் கணினி நிரலாக்கம் மிக முக்கியமானது. இது போன்ற வெற்றிகரமான நூல்களின் வெற்றிக்குப் பெரும்பாலும் எளிய மொழியும், வண்ணமயமான ஓவியங்களும் முக்கியமா பங்களிக்கும். இந்த நூலும் அப்படிப்பட்ட தெளிவான விளக்கப் படங்களைக் கொண்டிருக்குது. இது கடினமான கருத்துகளைக் கூட சிறுவர்கள் புரிந்துகொள்ள உதவுதுன்னும் பாராட்டியிருக்காங்க. குழந்தைகளை வெறும் வாசகர்களாக நிறுத்திவிடாமல், இளம் கண்டுபிடிப்பாளர்களாக  மாற்றத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதப்பட்டிருக்குதுன்னு சொல்றாங்க.


எல்லாருக்குமான புத்தகம்


புத்தகத்துல இருக்கிற இன்னொரு முக்கியமான சிறப்பு என்ன தெரியுமா? பொதுவா நம்ம ஊர்லேயும் மத்த எல்லா நாடுகள்லேயும் பெண், ஆண் ஆகிய இரண்டு பாலினங்களை மட்டும்தான் அடையாளப்படுத்துவாங்க. ஆண்–பெண் சமத்துவம்னு அவங்களை அறியாமலே ஆணைத்தான் முதல்ல குறிப்பிடுவாங்க. இந்தப் புத்தகம், இந்த இரண்டு பாலின வரையறுகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக்க விரும்பாதவங்க இருக்காங்க. இருவகைப் பாலினமும் அல்லாதவங்களா வாழுற “நான்–பைனரி” மனுசங்களும் தொழில்நுட்பத்தைக் கத்துக்கிட மாதிரி, அவங்களையும் உள்ளடக்கியதா  எழுதப்பட்டிருக்காம். அதுக்காகவே ஜோஷ் ஃபங்க்கைப் பாராட்டலாம்னு தோணுதுல்ல?


சரி, இப்படிப்பட்ட பாலின சமத்துவ எண்ணம் எப்படி வந்திருக்கும்? “நிரலாக்கம் செய்திடும் சிறுமிகள்” (கேர்ஸ் ஹூ  கோட்) என்ற கருத்துடன் ஒரு திட்டத்தை அமெரிக்காவிலே தொடங்கினாங்களாம். படிப்படியா அது மத்த நாடுகளுக்கும் பரவியிருக்காம். நம்ம நாட்டிலேயும் இதைப் பல இயக்கங்கள் ஏற்றுக்கொண்டு, பாலினப் பாகுபாடு இல்லாத சமத்துவம் என்ற கருத்தைப் பரப்பிட்டு இருக்காங்க. அந்த இயக்கத்தோட ஒரு பகுதியாத்தான், நான்–பைனரி மக்களையும் சேர்த்துக்கிடணுன்னு வலியுறுத்துறாங்க. அதை ஏத்துக்கிட்டுதான்  ஜோஷ் ஃபங்க் தன் புத்தகத்தை எல்லாருக்கும் பொருந்துற மாதிரி எழுதியிருக்கிறாராம்.


இந்த நூல் 2019ஆம் ஆண்டுல வெளிவந்துச்சு. முதல்ல சொன்ன திட்டத்துல பல புத்தகங்களைத் தொடர்ச்சியா வெளியிட்டுட்டு வர்றாங்க. இதை வெளியிட்டிருக்கிற பதிப்பகத்தோட பெயர் ‘பெங்குயின் யங் ரீடர்ஸ்’. உலகம் முழுக்க இந்த இயக்கத்தோட புத்தகங்கள் பல லட்சக்கணக்கான படிகள் வித்திருக்காம். ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை உலக அளவில் அதிக விற்பனையான புத்தகங்களோட பட்டியல்ல, இந்தத் தொடரையும் சேர்த்திருக்காங்க.


பேர்ளும் பாஸ்கலும்


கதைப் புத்தகம் இல்லைன்னாலும் கூட, இதிலே  ஒரு பொண்ணு வர்றாங்க. அவங்க பேரு பேர்ள். அவங்களுக்குத் துணையா ஒரு ரோபோ வருது.  அதோட பேரு பாஸ்கல். அவங்க ரெண்டு பேரும் ஒரு மனமகிழ் பூங்காவுல இருக்கிற ரோலர் கோஸ்டரிலே ஒரு சுத்து சவாரிக்கு  எவ்வளவு பேரை ஏத்திக்கிடறது, எத்தனை அடையாள வில்லை விக்கிறது, அடுத்த  சவாரியைத் தொடங்குறதுக்கு எத்த நேரம் எது அப்படீங்கிறதையெல்லாம், கணினியைப் பயன்படுத்தி நிரலாக்கம் செய்றாங்க. 

சறுக்கு ரயிலை இயக்குறவங்களுக்கும், அதிலே பயணம் செய்ய விரும்புறவங்களுக்கும் இவங்களோட நிரலாக்கம் ரொம்ப உதவியா இருக்கு. இதைச் சொல்றப்பவே, நிரலாக்கம்னா என்ன, அது எங்கேயெல்லாம் பயன்படுது, இதை எப்படி சிரமமில்லாம கத்துக்க முடியும்கிற  விளக்கங்கள் கணினித் தரவுத்தளங்களின் தகவல்கள் போல அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்குது. கதை வாசிக்கிறது போலவே சுவையாவும் இருக்கின்றன.


அந்த ரோபோவுக்கு பாஸ்கல்னு பெயர் வைச்சிருக்காங்க இல்ல? பிரெஞ்சு நாட்டவரான பிளேஸ் பாஸ்கல் என்ற கணித மேதையின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்குது. 17ஆம் நூற்றாண்டுல வாழ்ந்தவரான அவர் கணித ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய பங்களித்தவர்.  இன்றைய கணினிக்கெல்லாம் முன்னோடியாக இயந்திரவியல் கணக்குக் கருவியை உருவாக்கியவர்.

நூலாசிரியர் ஜோஷ் ஃபங்க் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்குமான படைப்புகளுக்குப் புகழ்பெற்றிருப்பவர். மிகவும் அனுபவம் வாய்ந்த ஓர் எழுத்தாளர். கல்வி சார்ந்த, அறிவியல் தொடர்பான, வரலாறு பேசுகிற, கணிதத்தை விளக்குகிற புத்தகங்களை ஏராளமா எழுதியிருக்கிறாராம்.


வாய்ப்பு உள்ளவங்க, இணையத்தளத்திலே ஒரு சிற்றுலா போய் இந்தப் புத்தகத்தைப் பெற்றுப் படித்துப் பயனடையலாம்.

அ.குமரேசன்
அ.குமரேசன்

பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page