"பேரன்பின் தேவதூதர்கள்"
- துரை. அறிவழகன்

- Nov 15
- 3 min read
(நம் தோழி நம் தோழன் தொகுப்பை முன்வைத்து)

சிறப்புக் குழந்தைகள் குறித்த தெளிந்த பார்வைக்கான திறப்பைக் கொடுப்பவைகள் "நம் தோழி நம் தோழன்" எனும் தொகுப்பு நூலில் உள்ள பத்துக் கதைகளின் கருப்பொருள்கள். இக்கதைகளின் சாரம்சத்தின் பொதுத்தன்மையை "கள்ளமின்மையின் பேரன்பு" என சொல்லலாம். "தன்னுள் ஆழ்ந்த ஒரு ஆசிரியர் இடமிருந்து நற்படைப்பென வருகிற நூலானது, எளிமையும் உண்மையும் நிரம்பிய எண்ணங்களை உள்ளடக்கியிருக்கும்" எனும் வார்த்தைகளை மெய்ப்பிக்கிறது "கீதா ஷ்யாம் சுந்தர்" அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுள்ள இந்நூல். தொகுப்பாசிரியர், பாண்டிச்சேரியில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர். இதற்கு முன்னர் இவருடைய, 'தூரிகை தீட்டிய வண்ணங்கள்', 'புதிய உத்திகள்', 'நட்புடன் நேசிப்போம்', 'Infinite Possibilities' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
"தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும் போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுட ஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் குழந்தை மொழியைக் கற்றுக் கொள்ளும் போது உணரலாம்" என்பது நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள். மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு; அவர்களுடைய மொழியை, உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது 'மானுட ஞானம்' மற்றும் அன்பால் ஆன சமூகம் மலரும், என்பதை வெளிச்சப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன தொகுப்பிலுள்ள கதைகள்.
`சக குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் நேசிப்பில் சிறப்புக் குழந்தைகளிடம் இருந்து எவ்வாறு பல்வகை தனித்திறன்மிக்க பரிமாணக் கதிர்கள் வெளிப்படுகின்றன என்பதை வெளிச்சப்படுத்துகின்றன தொகுப்பிலுள்ள கதைகள்.
அறியப்பட்ட எல்லைகளைத் தாண்டி வாழ்வியலின் அறியப்படாத சகல திசைகளையும் பேசுகிறார்கள் இந்த நூலிலுள்ள கதாசிரியர்கள். அன்பான எளிய செயல்களின் மூலம் சிறப்புக் குழந்தைகளின் அகச்சோர்வை நீக்க முடியும் எனும் திசைவழியை வாழ்வியல் அனுபவமாக பேசியுள்ளார்கள் கதாசிரியர்கள்.
ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பூக்கள் பூக்கின்றன; அனைத்திலுமான பிரகாசமாய் ஒளிர்கிறது குழந்தைகளின் இதயம். பனி, நிலவு, பூக்கள் ஆகியவைகள் குழந்தைகளின் மொழியில் மலைகள், ஆறுகள், புற்கள், மரங்களின் சித்திரங்களாக காட்சி பெறுகின்றன. இத்தகைய உளவியல் வாய்க்கப் பெற்றவர்களே சிறப்புக் குழந்தைகளும் எனும் தரிசன உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் கதைப் பரப்பினைக் கொண்ட நூல் இது. தர்க்க சிந்தனை, அறிவகங்காரம், நீதி போதனை ஆகிய முட்கள் இல்லாத கருத்தியல் கொண்டவைகள் இந்த நூலிலுள்ள கதைகள்.
"இந்த நூலிலுள்ள ஒன்பது கதைகளும் ஒன்பது வகையான தெய்வக் குழந்தைகளின் மாறுபட்ட நிலையை எளிமையாக விளக்குகிறது. அந்தக் குழந்தைகளின் இயல்பைக் கண்டு அஞ்சுவதும் வெறுப்பதும் வேண்டாம்; அவர்களிடம் அன்பு பாராட்டி அவர்களின் திறமையை வளர்க்க வேண்டும்; போற்ற வேண்டும் என்பதைக் கதையாகக் குழந்தைகளுக்கு வழங்கி இருப்பது சிறப்பு. இந்நூலில் சிறந்த எழுத்தாளர்கள் சிறப்புமிகு கதைகளை படைத்துள்ளார்கள்" என தனது வாழ்த்துரை/முன்னுரையில் குறிப்பிடுகிறார் சாகித்திய பாலபுரஸ்கார் விருதாளர் 'தேவி நாச்சியப்பன்' அவர்கள். (தொகுப்பாசிரியரின் கதையை எண்ணிக்கையில் சேர்க்கவில்லை முன்னுரையாளர்).
இத்தொகுப்பிலுள்ள கதைகளை பெரியவர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் படித்து கதைகளின் பொருண்மைகளை குழந்தைகளிடம் கடத்த வேண்டும் என்பது என்னுடைய பெரும் ஆசை.
'கவின்மொழியின் வகுப்பறை' எனும் கார்த்திகா கவின் குமார் அவர்களின் கதை தொகுப்பின் முதல் கதையாக இடம்பெற்றுள்ளது. 'வாயில் எச்சில் ஒழுகும் குறைபாடுள்ள கவின்மொழி இக்கதையின் மையப்புள்ளி. அழகாக பாடும் திறமை மற்றும் கதை சொல்லும் திறமை ஆகியன இருந்தும் தன்னுடைய குறைபாட்டால் மற்ற குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறாள் கவின்மொழி. அவளுடைய தனிமை இருள் உலகத்தை, தன்னுடைய அன்பால் வண்ணமயமான உலகமாக மாற்றுகிறாள் அவளது தோழி தீபிகா. 'அன்பு என்னவெல்லாம் மாயம் செய்யும்' என்பதை அழகாகச் சொல்கிறது இக்கதை.
இதே போன்று அன்பு செய்யும் மாயத்தை வெளிச்சப்படுத்தும் மற்றொரு கதை 'அன்புச்செல்வி சுப்புராஜு' அவர்களின் 'கடவுளின் குழந்தைகள்'.
இத்தொகுப்பிலுள்ள கதைகளில் வித்தியாசமாகவும், கவன ஈர்ப்பையும் பெறும் விதத்தில் அமைந்திருப்பதாக எனக்குப்படுவது ஆறாவது கதையாக இடம் பெற்றிருக்கும் 'நீரோடை மகேஸ்' அவர்களின் 'அதர்வனாவும் ஏலியன் உளவாளிகளும்' கதை தான். குழந்தைகளுக்கான 'அறிவியல் புனைவுக் கதை' இது. இக்கதையின் நாயகி அதர்வனா எனும் அம்மு 'டிஸ்லெக்சியா' எனும் குறைபாடுள்ள குழந்தை. டிஸ்லெக்சியா எனும் கற்றல் குறைபாட்டிற்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பில்லை என்பதைக் காட்சிக் கட்டமைப்புகளால் நமக்கு விவரிக்கிறார் கதாசிரியர். 'செஸ்' விளையாட்டில் அபார திறன் பெற்ற அதர்வனா 'கிறிஸ்டல் கேலக்சி' எனும் புது வகையான ' செஸ்' விளையாட்டை கண்டுபிடிக்கிறாள். தன்னுடைய தோழி இனியாவுக்கு மட்டுமல்லாமல் பிற கிரகவாசிகளான 'ஏலியன்'களுக்கும் புது வகையான ' செஸ்' விளையாட்டை கற்றுக் கொடுக்கிறாள்.
சிறப்புக் குழந்தைகளின் தனித்துவமான சிந்தனைத் திறன். புத்திகூர்மை ஆகிய பரிமாணங்களை செறிவான மொழி, காட்சிக்கட்டமைப்பு ஆகியவைகளால் சிறப்புற நெய்துள்ளார் கதாசிரியர்.
டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். 1992 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையால் ஊக்குவிக்கப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்பு தினம் இது. உலகம் முழுவதும் பல்வேறு அளவிலான வெற்றிகளுடன் அனுசரிக்கப்படுகிறது இத்தினம். இதன் முக்கிய நோக்கம், மாற்றுத்திறனாளிகளை சமூகம் ஏற்றுக்கொள்ளுதல், அவர்களின் திறன்களை அங்கீகரித்தல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் அவர்களை ஈடுபடுத்துதல் ஆகும்; மற்றும் மாற்றுத்திறனாளிகளைத் தாழ்வாகப் பார்க்காமல், அவர்களுக்கு சமமான மரியாதையையும் வாய்ப்புகளையும் வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் ஆகும்
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது இத்தினம். 1981-ஆம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டின் கருப்பொருள் "முழு பங்கேற்பு மற்றும் சமத்துவம்" என்பதாகும். இன்னும் சில மாதங்களே இருக்கின்றன இந்த ஆண்டின் இத்தினம் வருவதற்கு.
இத்தருணத்தில் "கீதா ஷ்யாம் சுந்தர்" அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள "நம் தோழி நம் தோழன்" எனும் நூல் வெளிவந்துள்ளது. சிறப்புக் குழந்தைகளின் சிறப்புகளை வெளிச்சப்படுத்தும் இந்நூலை பெரியவர்களாகிய நாமும் வாசித்து, குழந்தைகளிடமும் சேர்த்து சிறப்புக் குழந்தைகளின் உலகை வண்ணமயமாக்க உறுதிகொள்வோம்.
நூல் : "நம் தோழி நம் தோழன்"
தொகுப்பாசிரியர் : "கீதா ஷ்யாம் சுந்தர்"
வகைமை : சிறுகதைகள்
பக்கங்கள் : 100 / விலை:140/-
நூல் தேவைக்கு : 96593 96636

1967-ல் பிறந்த தமிழ் மொழி எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான இவர் தற்போது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் காரைக்குடியில் வசிக்கின்றார். சிறார், பெரியவர்கள் ஆகியோருக்கான பத்துக்கும் மேற்பட்ட இவரது நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
2023-ல் வெளிவந்த கி.ராஜநாராயணனின் ஒன்பது தொகுதிகள் நூலாக்கத்தில் இவர் பதிப்பாசிரியராக செயல்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் இவரது சிறுவர் கதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன.
தமிழக அரசின் 2023-24-ஆண்டிற்கான, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக கலை இலக்கிய படைப்புகளை உருவாக்கிடும் எழுத்தாளருக்கான ரூ.1,00,000/- பரிசுத்தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும், இவரது "சுதந்திரவேங்கை ஒண்டிவீரன் பகடை" எனும் நாவல் பெற்றுள்ளது.




Comments