top of page

குட்டிப் பன்றியும் சிலந்திப் பூச்சியும்

புத்தக நண்பர்களோடு இன்பச் சுற்றுலா –3


ree

சுற்றுலாத் துணைவர்களே, இந்தத் தடவை ஒரு கதைப் புத்தகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம், சரியா?


உங்களுக்கெல்லாம் நட்பு  ரொம்பப் பிடிக்கும்தானே?

நீங்களும் நட்புக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருப்பீங்கதானே? உங்களோட நண்பர்களும் அப்படித்தானே? அப்படிப்பட்ட நட்பைப் பத்தின கதைதான் ‘சார்லோட்‘ஸ் வெப்’ (சார்லோட்டின் வலை).


இந்தக் கதையை எழுதியர் ஈ.பீ.  ஒயிட். அமெரிக்காக்காரர்.


அவருடைய புகழ்பெற்ற கதைப் புத்தகங்கள்ல ஒண்ணுதான் இதுவும். 1952ஆம் ஆண்டுல ஹார்ப்பர் அன் பிரதர்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டாங்க. இப்ப அந்தப் பதிப்பகத்தோட பெயர் ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ். மொதமொதல்ல வந்த புத்தகத்திலே சித்திரங்கள் வரைந்திருந்j ஓவியரின் பெயர்  கார்த் வில்லியம்ஸ்.


1973ஆவது ஆணடுல அசையும் ஓவியத் திரைப்படமா (அனிமேஷன் மூவி) இந்தக் கதை வந்துச்சு. 2003இல அதனோட இரண்டாம் பாகமா இன்னோர் அனிமேஷன் படம் வந்துச்சு. 2006இல கதாபாத்திரங்கள்ல நடிகர்களும் விலங்குகளும் தோன்றிய நேரடித் திரைப்படமாவே வந்துச்சு.  பாட்டிலேயே எல்லாரும் பேசுற இசை நாடகமாவும் இந்தக் கதை மேடையேறியிருக்கு.

இப்ப அனிமேஷன் வடிவத்திலேயே ஒரு வலைத்தொடர் (வெப் சீரிஸ்) தயாரிச்சிக்கிட்டு இருக்காங்களாம். 


வாசகர்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் ரொம்பவும் பிடிச்சுப் போனதாலதான் இப்படி திரைப்டமாகவும் வலைத்தொடராகவும் தயாரிக்கிறாங்கன்னு புரிஞ்சிக்கலாம். அப்பேர்ப்பட்ட அந்தக் கதையை நாம தெரிஞசிக்க வேணமா?


வலையில் பொறித்த வார்த்தைகள்

ஒரு சின்னப்பொண்ணு. அவ பேரு ஃபெர்ன் ஆரபிள். அம்மாவும் அப்பாவும் ஒரு விலங்குப் பண்ணை வச்சி நடத்துறாங்க. அதிலே ரொம்ப சிறிசாகவும். உடம்பு வலிமை இல்லாமலும் இருக்கிற ஒரு குட்டிப்பன்னி  மேல அவளுக்கு அன்பு ஏற்படுது. அந்தக் குட்டியோட பேரு வில்பர்.


ரொம்பவும் மெலிஞ்சிருக்கிற வில்பரைக் கொண்ணுடலாம்னு அப்பா பேசுறாரு.  அதைக் கேட்ட ஃபெர்னுக்கு வருத்தமாகுது.


அவனை எப்படியாச்சும் காப்பாத்தனும்னு அப்பாக்கிட்ட வாதாடுறா, போராடுறா. கடைசியில அவனைக் காப்பாத்தி, அவளே வளர்க்குறா. சில மாசங்கள் போனப்புறம் வில்பரை பக்கத்து வீட்டு மாமா பண்ணைக்கு வித்துடுறாங்க.


புதுப் பண்ணையில வில்பருக்கு ஒரு மாதிரி தனிமை உணர்வு ஏற்படுது. பயமாவும் இருக்கு. அப்ப, அவனுக்கு ஒரு சாம்பல் சிலந்தி கூட நட்பு ஏற்படுது. ஆமா, நீங்க ஊகிச்சது சரிதான், அந்தச் சிலந்திப் பூச்சியோட பேருதான் சார்லோட். அவளுக்கும் வில்பரைப் பிடிச்சுப்போகுது. வரப்போற பண்டிகைக் கொண்டாட்டத்துக்காக வில்பரைக் கொல்றதுன்னு பண்ணைக்காரங்க பேசிக்கிட்டது அவ காதுல விழுது. 


வலையில் அதிசயம்


வில்பரின் உயிரைக் காப்பாத்தணும்னு முடிவு செய்ற சார்லோட், அதுக்காக அருமையான ஒரு திட்டத்தை வகுக்கிறா. ராத்திரியோட ராத்திரியா தன்னோட வலையைப் பெரிசா பின்னி, அதுல ரொம்ப கவனமா சில  வார்த்தைகளை எழுதுறா.


மறுநாள் பண்ணைக்காரங்க சிலந்தி வலையில் இருக்கிற வார்த்தைகளைப் பார்த்து வியந்து

 போறாங்க. “சிறப்பான பன்னி”, “அட்டகாசப் பன்னி”, “ஒளிவீசும் பன்னி” – இப்படி எழுதியிருந்தா வியப்பு ஏற்படாதா என்ன?  . இதை கடவுளோட அதிசச் செயல்னு நினைக்கிறாங்க. இயற்கைக்கு அப்பாற்பட்ட துன்னும் நினைக்கிறாங்க. அதுக்கப்புறம் வில்பரை ஒரு சாதாரணப் பன்னியா அல்லாமல், ஒரு மகத்துவமான விலங்குன்னு பார்க்குறாங்க. எப்பவுமே அவனைக் கொல்றதில்லைன்னும் முடிவு செய்றாங்க.


பண்ணையில நடக்கிற ஒரு விழாவுல வில்பர் பரிசுகளை வெல்லுறான்.  அவனோட புகழ் பரவுது. பண்ணை விழாவுக்கு வரும் ஃபெர்ன் அங்கே வில்பரைப் பார்த்து மகிழ்ச்சியடையுறா. அவ முந்தி மாதிரியே தன் மேல பாசம் காட்டணும்னு வில்பர் ஆசைப்படுறான். ஆனாலும்  இப்ப  அவ  பெரிய பொண்ணா வளர்ந்திட்டா,அவளுக்கு இன்னொரு பையன் கூட

 நட்பாப் பழகுறதுதான் ரொம்பவும் பிடிக்குது. ஏமாத்தமா இருந்தாலும் இது இயல்பான மனித உறவுதான்கிறதை வில்பர் பக்குவமாப் 

புரிஞ்சிக்கிடுறான்.


வயது முதிர்ந்த சார்லோட்டோட மனசு,  மத்தவங்களுக்குப்  பயனுள்ள  வாழ்க்கையை  வாழ்ந்ததை  நினைச்சு நிறையுது. தன்னோட அடுத்த தலைமுறைக்காக இட்ட முட்டைகளை வில்பர் பொறுப்பில் விட்டுட்டுக் கண்மூடுறாள். நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் வில்பர் அவளுடைய முட்டைக் கூடுகளை அக்கறையாப் பராமரிக்கிறான். அவற்றிலிருந்து வரும் சிலந்திக் குஞ்சுகளை ஒரு அண்ணன் போல வளர்த்து மகிழ்ச்சிகரமா வாழுறான்.

கருப்பொருள்

கதையோட கருத்து என்னன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்வீங்கன்னு நான் சொல்லட்டுமா? “நட்பின் அருமையையும் தியாகத்தின் பெருமையையும் ஈ.பீ. ஒயிட்  அழகாக  வெளிப்படுத்தியிருக்கிறார்!”


சார்லோட் முடிவு ஒரு சோகம்தான்னாலும், இயற்கையோட  சுழற்சி  இப்படித்தான்  இருக்குதுன்னும்  புரியுதுல்ல? அதிசய நிகழ்வுன்னு எல்லாரும் நினைச்சாலும் உண்மையில் நமக்கு, வலையிலே அந்த வார்த்தைகள் வந்தது எப்படின்னு தெரியும்கிறதால இயற்கைக்கு அப்பாற்பட்டதுன்னு எதுவும் இல்லைங்கிறதும் தெளிவாகுதுல்ல?


அப்புறம் ஒரு தகவல் – நீங்க திரையரங்கத்துலேயும் ஓடிடி–யிலேயும்  ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ சினிமா பார்த்திருப்பீங்க. 


ஒரு துறுதுறு சுண்டெலியைத் தத்தெடுத்து வளர்க்கும் குடும்பத்தைப் பத்திய அந்தக் கதையை எழுதினவரும் இவர்தான். இது  மாதிரி நிறைய சிறார் கதைகள் அவர்ட்டயிருந்து நமக்கு வந்திருக்கு.


நல்லது, நம்ம சுற்றுலாப் பயணத்துல அடுத்த மாசம் வேற ஒரு சூப்பர் புத்தகத்தைப் பார்க்கலாம், ஓகே–யா?



அ. குமரேசன்
அ. குமரேசன்

பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page