top of page

பனித்துளியின் வடிவம்!

ree

நம்மூரில் கொளுத்தும் வெயிலில் பனித்துளியைப் (snowflakes) பற்றியெல்லாம் நாம் நினைப்பதே இல்லை. ஏதோ,திரைப்படப் பாடல்களில் மட்டும் ‘பனித்துளி’யை இஷ்டத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.


ஆனால், நம் உள்ளூர் கவிஞர்கள் மட்டுமல்ல,விஞ்ஞானிகளும் பனித்துளியைப் பற்றித் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா?


இப்போது, பக்கத்தில் இருக்கும் ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்கொண்டு,ஒரு பனித்துளி எப்படியிருக்கும் என்று வரைந்து பாருங்கள் பார்ப்போம்.


‘நீர்த்துளி’ கிடையாது... ‘பனித்துளி’ வரைய வேண்டும்.


நீங்கள் என்ன வரைந்திருக்கிறீர்கள்?


சிலர் அறுங்கோணமாக வரைந்திருக்கிறீர்களா? இல்லை, இந்தக் கட்டுரையை வாசிப்பதை நிறுத்திவிட்டு, கூகுளில், chatgptயில் தேட ஆரம்பித்துவிட்டீர்களா?

பனித்துளியில் படம் மேலே தந்திருக்கிறேன்.


பனித்துளி எப்படி உருவாகிறது?


நீரில்  வெப்பநிலை குறையும்போது, நீரின் மூலக்கூறுகள் ஒன்று சேரத்தொடங்கும். சின்ன சின்ன தூசு இருந்தால், அதைச்சுற்றி நீரின் மூலக்கூறுகள் ஒன்றன் பின் ஒன்றான இணைத்தொடங்கும். இது பனிக்கட்டி உருவாவதற்கு ஒரு விதையாக (nucleus/seed) செயல்படும். இந்தப் பனிக்கட்டி விதையைச் சுற்றி நீர்மூலக்கூறுகள்அதன் மேற்பரப்பில் ஒட்டும் போதெல்லாம், அவை அறுங்கோண வடிவில் (hexagonal structure) சீராக வளரத் தொடங்கும். எப்படி வளர்கிறது என்பதைப் பொறுத்து, பனிக்கட்டியின் இறுதி வடிவம் முடிவாகிறது.


ஜப்பானிய ஆய்வாளரான உகிச்சிரோ நகாயா (Ukichiro Nakaya) பனித்துளியின் வடிவம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார் (1900 – 1962). இவர் ஆயிரக்கணக்கான பனிக்கட்டிகளைப படமெடுத்து, அவை வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து எவ்வாறு வடிவம் பெறுகிறது என்பதைப் பதிவு செய்தார். இது இன்றளவும் பனித்துளி குறித்த ஆய்வுக்கு ஆணி வேறாக இருக்கிறது.அவரின் ஆய்வுப்படத்தையும் இங்கே தருகிறேன்.


ree

இப்போது ஆயிரக்கணக்கான வகைகளில் பனித்துளிகள் வடிவம் பெறுகின்றன. தற்காலத்தில் கென்னத் லிப்ரே (Kenneth G Libbrecht) என்னும் ஆய்வாளர் பனியுலக ஆய்வில் முன்னோடியாக இருக்கிறார். அமெரிக்க கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். டிஸ்னியின் பிரபல “Frozen” திரைப்படத்தில் பனிக்கட்டிகள் எந்த உருவத்தில் இருக்க வேண்டும் என்பதை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இவரும் பல்வேறு புதிய பனி வடிவங்களைக் கண்டறிந்திருக்கிறார்.


ree

இவ்வளவு மெனக்கெட்டு ஏன் பனித்துளியின் வடிவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்? முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா? இதன் வடிவம், ஈரப்பதம், வெப்பநிலை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது என்று... இப்போது நிலவில் ஊர்தி (rover) அனுப்பி நம்மால் படம்பிடிக்க முடிகிறது. அங்கே உள்ள பனித்துளியைப் படம்பிடித்தால், அங்கே என்ன மாதிரியான தட்பவெப்பம் நிலவியது என்று அறியலாம்தானே? மேலும், நம் மேகங்களின் பனித்துளி வடிவங்களைக் கணிப்பதன் மூலம் மழை பொழியுமா இல்லையா, தூசு அளவு எவ்வளவு இருந்தது, அதனால்தான் பனித்துளியின் வடிவம் இவ்வாறு உருவானதா? என்று பல்வேறு கேள்விகளுக்கு விடை காணலாம்.


ஓர் அறிவியலாளர், இதைக் கண்டுபிடிப்பதால் என்ன பயன் என்று யோசித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. “இது ஏன் இப்படி நடக்கிறது?” என்னும் ஆர்வத்தோடு இயங்கி, காரணிகளைக் கண்டுபிடிப்பதே போதும். இந்த உலகம் அதிலிருந்து தானாகப் பயனடைந்து கொள்ளும்.


ஹேமபிரபா
ஹேமபிரபா

இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்  “உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில்”  உதவிப் பேராசிரியராகப்  பணியாற்றி வருகிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக்  கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தோற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. சிறார்களுக்காக  இவர் எழுதிய “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல் பரவலான வாசகர்களைச்  சென்றடைந்து  பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே  அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார்.

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page