நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை அளித்தது பாக்ட்டீரியாவா!
- ஹேம பிரபா

- Jul 15
- 2 min read

உங்கள் பள்ளியில், ஊரில் மரம் நடும் விழா நடந்திருக்கிறது அல்லவா? உங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு செடியை நட்டிருப்பீர்கள்.
சுத்தமான காற்று வேண்டுமென்றால், மரங்களை நடுங்கள்; நிழல் வேண்டுமென்றால் மரங்களை நடுங்கள்; காற்றில் நிறைந்த அளவு ஆக்ஸிஜன் வேண்டுமென்றால் மரங்களை நடுங்கள்.
இவற்றில் எந்த தவறும் இல்லை.
கட்டுரைக்கு போகும் முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மீம்ஸை பார்த்து விடுங்கள் சொல்லப்போனால் இந்த கட்டுரையின் சாராம்சமே இதுதான்.
ஃப்யூச்சர் பயோடெக்னாலஜி என்ற இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து எடுத்தது.

மரங்கள் மட்டுமே ஆக்ஸிஜனை அளிக்கின்றன என்று நினைக்கிறோம். உண்மையில் ஆக்சிஜனை அளிப்பதில் முக்கிய காரணி பாக்டீரியா தான் என்றால் நம்ப முடிகிறதா?
இந்த பூமி உருவானபோது வளிமண்டலம் எப்படி இருந்தது? பூமி உருவாகி கிட்டத்தட்ட 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது இருந்த வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களே அதிகம் இருந்தன. நீராவியும் இருந்தது.
இப்போது இருப்பதைப்போல நைட்ரஜனாலும் ஆக்சிஜனாலும் நிறைந்திருக்கவில்லை. சூரிய ஒளி நீராவியின் மீது பட்டு அதிலிருந்து ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் பிரிந்தன. அப்படி பிரிந்து வந்த ஆக்சிஜன் உடனடியாக மீதேனுடன் வினை புரிந்து விடும். எனவே வளிமண்டலத்தில் அவ்வளவாக ஆக்சிஜனே இருக்காது.
சயனோ பாக்டீரியா என்னும் ஆக்ஸிஜன் கொடையாளி பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அடுத்த 70 கோடி ஆண்டுகளுக்கு பூமியில் உயிர் எதுவும் உருவாகவில்லை. அதற்குப் பிறகு தோன்றிய உயிர்களும் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜனை பயன்படுத்தவில்லை.
கடலில் இருந்த தாதுக்களை வைத்து தங்கள் உடலுக்கான ஆற்றலை பெற்றுக் கொண்டன. புதிய உயிர்கள் அப்படித் தங்களைத் தகவமைத்துக் கொண்டன.
கிட்டத்தட்ட 270 கோடி ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு புவியில் சயனோ பாக்டீரியாக்கள் தோன்றின. இந்த பாக்டீரியாக்களால் ஒளிச் சேர்க்கை செய்ய முடிந்தது. அதாவது சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை பெற முடிந்தது.
ஒளிச்சேர்க்கை செய்வதற்கான ஆற்றல் மூலமாக இவை கடல் நீரை பயன்படுத்திக் கொண்டன. மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்போது சூரிய ஒளி கார்பன்டை ஆக்சைடு நீர் ஆகியவற்றை பயன்படுத்தி குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜனை தயாரிக்கும்.
குளுக்கோசை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். கிட்டத்தட்ட அதே பாணியில்தான் சயனோ பாக்டீரியாக்கள் ஆக்ஸிஜனை கொடுக்கின்றன. இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும்.
சயனோ பாக்டீரியாக்கள் ஆக்ஸிஜன் கொடுக்க ஆரம்பித்த காலத்தில் மரங்கள் இல்லை.
ஒளிச்சேர்க்கையின் போது எப்படி ஆக்ஸிஜன் உருவாகிறது என்பதை சுட்டி காட்டத்தான் மரங்களை உதாரணமாக குறிப்பிட்டேன்.
சயனோ பாக்டீரியாக்கள் தொடர்ந்து ஆக்ஸிஜனை வெளியிட்டன. முதலில் கடல் நீரில் ஆக்ஸிஜன் கலந்து கடல் உயிரினங்கள் ஆக்ஸிஜனை பயன்படுத்தின. அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் வளிமண்டலத்தில் கலந்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இந்த தொடர் செயலால் காற்றில் ஆக்ஸிஜன் நிறைந்தது. இதுவே ஆக்ஸிஜனேற்றப் பெருநிகழ்வு என்று சொல்லப்படுகிறது. சயனோ பாக்டீரியாக்கள் பொதுவாக நீலப் பச்சைப்பாசி என்று அழைக்கப்படுகின்றன.
பூமியில் இருக்கும் 70 சதவீத ஆக்ஸிஜனை இந்த பாக்டீரியாக்கள் தான் உருவாக்குகின்றன.
மீதம் 30 சதவீத்த்தைத் தான் செடிகளும் மரங்களும் உருவாக்குகின்றன.




வேளாண்மையில் பயன்படும் நீலப்பச்சைப் பாசி இவ்வளவு பெருமை வாய்ந்த்தோ?... அருமை.