top of page

எல்லை இல்லா இயற்கை

  • Writer: வெற்றிச் செழியன்
    வெற்றிச் செழியன்
  • May 15
  • 1 min read


அடுத்த வீட்டுச் சேவல் ஒன்று

கூவி எழுப்பி விட்டது.

அருகில் உள்ள வீட்டு மல்லி

மலர்ந்து மணத்தைத் தந்தது.


அண்டை இருந்த மரத்தின் குயிலும்

கூவி இசையைப் பொழிந்தது.

அடுத்த ஊரின் ஏரி நீரும்

கிணற்றின் ஊற்றாய் நிறைந்தது.


நாடு கடந்து ஆறு பிறந்து

நீரைச் சுமந்து வந்தது.

காடு பிறக்கும் தூய காற்று

கடந்து ஊரைச் சூழ்ந்தது


தொலைவில் தெரியும் மலையில் இருந்து

தென்றல் தவழ்ந்து வந்தது.

அலையும் கடலும் முகிலாய் எழுந்து

மழையை எங்கும் பொழிந்தது.


எல்லை கடந்தும் நன்மையாகும்

இயற்கை என்றும். சிறந்தது.

எல்லை மறந்தும் இணைந்து வாழும்

அன்பு உள்ளம் உயர்ந்தது

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page