சிறார் வாசிப்பு நூல்கள்
- ஞா.கலையரசி
- 4 days ago
- 2 min read

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்காக ‘வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றது. எளிய மொழியில் வண்ணப்படங்களுடன் அமைந்த கதைப் புத்தகங்கள் இந்தத் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டு அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை அரசுப்பள்ளி மாணவர்க்கு வாசிக்க இலவசமாகக் கிடைக்கும். கடையில் விலைக்கு வாங்க முடியாது.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் இது போன்று எளியமொழியில் அமைந்த நூல்கள் தேவை. இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. கல்வியாளரும் பேராசிரியருமான ச.மாடசாமி அவர்களின் வழிகாட்டுதலில் உருவாகும் இந்நூல்கள், சிறு சிறு வாக்கியங்களுடன் மிக எளீய மொழியில் அமைந்தவை.
16 பக்க அளவில் அமைந்த இச்சிறு நூல்களில் 2 கதைகளும் 4 கருப்பு வெள்ளை படங்களும் உள்ளன. குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் லாப நோக்கின்றி மிகக் குறைந்த விலைக்கு இந்நூல்களை அச்சிட்டு வெளியிடுகின்றது.
தமிழைச் சரியாக வாசிக்கத் தெரியாத குழந்தைகளும், தட்டுத் தடுமாறி வாசிக்கும் குழந்தைகளும் வாசிக்க இந்நூல்கள் ஏற்றவை. குழந்தைகளின் பயத்தைப் போக்கி, ‘என்னால் வாசிக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படுத்தும் நூல்கள் இவை.
பள்ளிகளில் நடத்தப்பெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்க்குப் பரிசளிக்கவும், குழந்தைகளின் பிறந்த நாளின் போது பரிசளிக்கவும் இவை ஏற்றவை. நூலகங்களுக்குப் பரிசளிக்கவும் தோதான சிறுநூல்கள். இதுவரை வெளியாகியுள்ள 23 நூல்களில், 18 பெண்கள் எழுதியவை என்பது இதன் சிறப்பு.
இவற்றின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்:-
குறைவான சொற்களைப் பயன்படுத்திச் சின்ன சின்ன வாக்கியங்கள் அமைத்தல்:-
எ.கா:-1
“ஒரு பெரிய காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. எந்த நேரமும் சிங்கம் சிரித்தபடி இருக்கும்” என்ற வரிகள், இந்தச் சிறார் நூலில் இப்படி மாற்றம் பெற்றுள்ளன:-
“ஒரு காடு.
பெரிய காடு.
காட்டில் ஒரு சிங்கம்.
சிங்கத்துக்குச் சிரித்த முகம்” (‘சிரிப்பு ராஜா’ – மு.முருகேஷ்)
எ.கா:-2
“ஒரு வீட்டுப் பொந்தில் ஒரு படு குறும்புக்காரச் சுண்டெலி வசித்தது. ஒரு நாள் அது பொந்துக்குள் இருந்து, தலையை நீட்டி வெளியே எட்டி எட்டிப் பார்த்தது” என்ற வரிகளின் மறு வடிவமைப்பு கீழே:-
“ஒரு சுண்டெலி.
படு சுட்டி.
குறும்பு செய்யும் சுண்டெலி.
வீட்டில் ஒரு பொந்து.
பொந்துக்குள் சுண்டெலி.
ஒரு நாள்…
சுண்டெலி எட்டி எட்டி
எட்டி எட்டி
வெளியே பார்த்தது.” (‘சுட்டிச் சுண்டெலி’ - ஞா.கலையரசி)
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வருதல்:-
எ.கா:-
“கொக்கரக்கோ கோ!
கொக்கரக்கோ கோ!
கண் விழித்தார் கண்ணம்மா.
சலப் சலப்!
சலப் சலப்!
சலப் சலப்!
வாசல் தெளித்தார் கண்ணம்மா.” (‘கண்ணம்மாவின் சத்தங்கள்’- சாலை செல்வம்)
குழந்தைகளுக்குத் தெரிந்த அன்றாடம் புழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்துதல்:-
“அப்பா அடுப்பில் பால் காய்ச்சினார்.
அடுப்படியில் இருந்தபடியே
“என்ன பாப்பா?” என்றார் அப்பா”. (‘நட்சத்திரக் குழந்தை’ – தேனி சுந்தர்)
(இதில் ‘சமையலறை’ என்பதற்குப் பதில், ‘அடுப்படி’ என்ற குழந்தைகளுக்குத் தெரிந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.)
முற்போக்கு கருத்துகள் கொண்ட கதைகள்:-
இதுவரை வெளியாகியுள்ள நூல்கள் அனைத்தும் குழந்தைகளின் இயல்பு, பாலினச் சமத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை, எல்லா உயிர்களையும் நேசித்தல், அறிவியல் உண்மைகள், இயற்கை, சூழலியல் கருத்துகள், மத நல்லிணக்கம், சமூகப் போராளிகள் வரலாறு, பகுத்தறிவின் பரப்புக்குள் நிற்கும் மாயாஜாலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்து வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் கதைகளே. அது மட்டுமின்றி நம் விழுமியங்களைக் கற்றுக் கொடுக்கும் கதைகளும் கூட.
சில எடுத்துகாட்டுகள்:-
ராட்டினத்தில் சுற்றும் குழந்தையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கதை – ‘வானில் பறந்த மகிழ்’ – ஆதி வள்ளியப்பன்
வேற்றுமையில் ஒற்றுமை – ‘நாம்…நாம்…’ – பிரியசகி
மத நல்லிணக்கம் – ‘சந்தனக் கூடு’ - கார்த்திகா கவின் குமார்
மூடநம்பிக்கைக்கு எதிரான முற்போக்கு கருத்துகள் – ‘தீர்ப்பு’ கதை – நூல்
‘ஆந்தையும் மரங்கொத்தியும்’ - ஈரோடு சர்மிளா
உயிர்களை நேசித்தல் – ‘நரி என் குழந்தை’ - லைலா தேவி;
‘பூனையா? புலியா?’ - புவனா சந்திரசேகரன்;
‘உதவி’ - ஜெயா சிங்காரவேலு
‘மாதியும் யானையும்’ – குருங்குளம் முத்துராஜா
இந்நான்கும் இப்பிரிவில் அடங்கும்.
தந்துகி இயக்கம் பற்றிய அறிவியல் கதை – ‘பயம்’ கதை– நூல்
‘சிவி கேட்ட வரம்’ - பூர்ணிமா கார்த்திக்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – ‘மீனின் அழுகை’ – புவனேஸ்வரி
சமூகப் போராளிகள் வரலாறு – ‘வைக்கம் வீரர் பெரியார்’
‘பண்டித ரமாபாய்’ – ஞா.கலையரசி
தமிழ்நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படிக்கின்றனர். எனவே குழந்தைகள் தமிழை வாசிப்பதிலும் புரிந்து கொள்வதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. தமிழ் தான் நம் அடையாளம்! எனவே குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துத் தமிழை வாசிக்கச் செய்வது, நம் ஒவ்வொருவரின் கடமை! தமிழ் வாழ்க!

ஞா.கலையரசி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்பணிசெய்து ஓய்வுபெற்றவர். ‘மந்திரக்குடை,’ ‘பூதம்காக்கும்புதையல்,’ ‘நீலமலைப்பயணம்’ ‘பேய்த்தோட்டம்’ உள்ளிட்டசிறார்நூல்களின்ஆசிரியர். ‘சுட்டி உலகம்’ வலைத்தளம், ‘பூஞ்சிட்டு’ சிறுவர் மின்னிதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.
நல்ல முயற்சி.
இந்நூல்களை குழந்தைகளின் பிறந்த நாள் பரிசாக வழங்கும் போது அவர்களுக்கும் மகிழ்ச்சி கொடுப்பவர்களுக்கும் ஒரு மனநிறைவு. இவை வகுப்பறை கடைசி பெஞ்சுகளுக்கு மிகவும் பிடிக்கும்
ஜெ.பொன்னுராஜ்