குழந்தைக் கவிஞரின் குழந்தைப் பருவம்.
- தேவி நாச்சியப்பன்

- Nov 15
- 4 min read

ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைப் பருவம் என்பது ரசிக்கத் தக்கது. குழந்தைப் பருவக் குறும்புகள் எண்ணி மகிழ ஏற்றவை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இராயவரம் என்பது ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் அழகப்பன், உமையாள் தம்பதியினர் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு 4 பிள்ளைகள். மூன்றாவது மகன் வள்ளியப்பன்.
வள்ளியப்பன் இரண்டு, மூன்று வயதில் அதிகம் பேசமாட்டான். யாருடனும் விளையாட மாட்டான். அந்த ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில், வீட்டின் நடுக் கூடம் திறந்த வெளியாக இருக்கும். அதனை வளவு என்பார்கள். மின்சாரம் இல்லாத காலமது. எனவே
வளவின் நடுவில் விளக்கு வைப்பதற்கு ஒரு தூண் அமைத்திருந்தார்கள். வள்ளியப்பன் அந்தத் தூணை இடது கையால் பிடித்துக் கொள்வான். வலது கையின் இரு விரல்களை வாயில் வைத்தபடி நிற்பான். எனவே அவனை அனைவரும் செல்லமாக "ரெட்டைக் கொம்பு ஊதி" என்று கேலி செய்வார்கள். அவன் அதற்கெல்லாம் கவலைப்பட மாட்டான்.
நான்கு வயதானதும் அவனது செயல்களில் மாற்றம் ஏற்பட்டது. வீட்டின் பின்புறமுள்ள கொய்யா மரத்தில் ஏறுவான். பழங்கள் பறிப்பான். அவற்றைக் கடித்துவிட்டு, அம்மா, அண்ணன்களிடம் கொடுப்பான். 'ஏதோ கடித்தது போலுள்ளதே' என்று கேட்டால், 'அணில் கடித்த பழம். ருசியா இருக்கும்.' என்பான். அதை நம்பி, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துச் சிரிப்பான்.
அவர்கள் வீட்டின் பெரும்பகுதி ஓட்டுக் கூடமாக இருப்பதால், அடிக்கடி தேளைப் பார்க்கலாம். தேளைக் கண்டு வள்ளிப்பன் பயப்படுவான். ஒருநாள் அவனுடைய அம்மா, ' பயப்படாதே. தேள் உன்னை ஒன்றும் செய்யாது. நீ குழந்தையாக என் வயிற்றில்
இருந்த போது என்னைத் தேள் கொட்டிவிட்டது. அதனால் உன்னைத் தேள் கொட்டினாலும் பாதிப்பு ஏற்படாது.' என்று சொன்னார்கள். அதிலிருந்து வள்ளிப்பனுக்குத் தேள் பயமில்லை. ஆனால் பிறரைப் பயமுறுத்தத் தொடங்கினான். சமையல் வேலைக்கு வருபவர்கள் கண்ணில் படாமல் தீப்பெட்டியை ஒளித்து வைத்துவிடுவான். அவர்கள் கேட்கையில் தேளைத் தீப்பெட்டியில் போட்டுக் கொடுப்பான். அவர்கள் தீப் பெட்டியைத் திறந்ததும் தேள் வருவதைக் கண்டு பயப்படுவதைப் பார்த்து ரசிப்பான்.
ஆரம்பப் பள்ளிக்குச் சென்றான் வள்ளியப்பன். வீட்டில் குறும்புக்காரச் சிறுவனாக இருந்தாலும், பள்ளியில் பணிவான மாணவன். ஆசிரியர்கள் பாராட்டும் மாணவனாக இருந்தான். அவனுடைய தமிழாசிரியர்கள் பாரதியார், கவிமணியின் பாடல்களைத் தினமும் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால் வள்ளியப்பனுக்கும் பாடல் எழுதும் ஆசை வந்தது.
அவனுக்குள்ளே இருந்த கவிதை ஆசை ஒரு சோதனையைத் தந்தது. வள்ளியப்பன் வீட்டிற்குச் சற்றுத் தொலைவிலுள்ள வீட்டிலிருந்து மூன்று சிறுவர்கள், சு.கதி. காந்தி பாட சாலையில் படித்தனர். ஒரு நாள் அந்தச் சிறுவர்களின் தாயார் பள்ளிக்கு வந்தார். வாசலில் நின்ற வள்ளியப்பனைப் பார்த்தார். மூன்று பிள்ளைகளுக்கும் அழகழகான பெயர்களை வைத்திருந்தாலும் அவர்களைச் செல்லமாக காளை, கூழை, ஊமை என்றுதான் அந்த அம்மா அழைப்பார் . வள்ளியப்பனிடம் 'காளை வந்துட்டானா? கூழையப் பார்த்தியா? அட ஊமையாவது வந்துட்டானா?'னு கேட்டார்கள். வள்ளியப்பன் 'பார்க்கவில்லை.' னு சொன்னான். 'சரி வந்தா, நான் தேடி வந்தேன்'னு சொல்லு என்றார்.
சிறிது நேரத்தில் 'ஊமை' என்று அந்த அம்மா குறிப்பிட்ட பையன் வந்தான்.வள்ளியப்பன் அவனிடம்,
" காளை, கூழை எங்கேடா?
ஊமை நீயும் சொல்லடா"
என்று பாடலாகக் கேட்டான். இந்தப் பாடல் சிறுவர்களைக் கவர்ந்தது. பள்ளியில் பலரும் இதைப் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.
மூன்று சிறுவர்களின் அம்மா, இந்தச் செய்தியைப் பிள்ளைகள் மூலம் தெரிந்துகொண்டார்.
அவர் பள்ளிக்கு வந்தார். "எங்கடா அந்த வள்ளியப்பன்?
எம்புள்ளைகளைப் பாட்டுப் பாடி கேலி செய்யறானாமே! வெளிய வாடா" னு ரொம்பக் கோபமாகக் கூப்பிட்டாங்க. பயத்தில் நடுங்கிப் போன வள்ளியப்பன், பள்ளியின் பின் வாசல் வழியாகத் தப்பித்து ஓடிவிட்டான்.எங்கே தெரியுமா?
இராயவரத்தைக் காக்கும் தெய்வம் முத்துமாரியம்மன் கோயிலுக்குள்ளே தஞ்சம் புகுந்தான்.
வள்ளியப்பன் படித்த பள்ளியின் பெயரில் மட்டும் காந்தி என்றில்லாமல் அங்கே காந்தியின் கொள்கைகளையும் கற்பித்தனர். அசைவ உணவுகள் சாப்பிடாமல் இருப்பது, கதர் அணிவது போன்றவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.
வள்ளியப்பன் "இனிமேல் அசைவ உணவு சாப்பிடமாட்டேன்." என்று சொன்னான். அவன் அம்மா, 'அசைவம் சாப்பிடாவிட்டால் பிள்ளைக்குப் போதிய சக்தி கிடைக்காதே. இளைத்துவிடுவானே' என்று கவலைப்பட்டார். அம்மா வள்ளியப்பனிடம், ''நீ அசைவ உணவு சாப்பிடு. அந்த வாசம் தெரியாமல் இருக்கக் கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை மென்று தின்ற பின் பள்ளி சென்றால், யாருக்கும் நீ அசைவம் சாப்பிட்டது தெரியாது" என்றார்.
வள்ளியப்பன், " அசைவம் சாப்பிடுவது மட்டுமல்ல, பொய் சொல்வதும் தப்புத் தான். எனக்கு அசைவம் வேண்டவே வேண்டாம்." என்று மறுத்து விட்டான்.
அப்பாவிடம் கேட்டுக் கதர் உடைகளை வாங்கி அணிந்தான்.
இராயவரத்திற்குப் பக்கத்து ஊரான கடியாபட்டியில் பூமீஸ்வரர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. 5 கி.மீ. தூரத்திலுள்ள அந்தப் பள்ளியில் உயர் நிலைக் கல்வியைக் கற்கச் சென்றான் வள்ளியப்பன்.
பிள்ளை நடந்து போய்ச் சிரமப்பட வேண்டாம் என்று வள்ளியப்பனின் அப்பா பேருந்தில் போகச் சொல்லிப் பணம் கொடுப்பார். வள்ளியப்பனும் காலையில் பேருந்தில் சென்று விடுவான். மாலை வீடு திரும்பும் போது ஊர்ப் பிள்ளைகளுடன் சேர்ந்து நடந்து வருவது வழக்கம்.
ஒருநாள் நடந்து வரும் போது சிறுவர்கள் வழியிலே ஒரு சுவரொட்டியைப் (போஸ்டர்) பார்த்தார்கள். அது ஓர் ஆங்கிலத் திரைப்படத்திற்கானது. The Lost jungle என்ற ஆங்கிலப் படத்தைத் தமிழில் "காணாத காடு" என்று குறிப்பிட்டிருந்தனர். அதை வள்ளியப்பன் சத்தமாகப் படித்தான். அவனுக்குள் இருந்த கவிஞர் வெளியே வந்தார்.
" காணாத காடு
கண்டுவிட்டால் ஓடு." என்று எட்டாம் வகுப்பு மாணவன் வள்ளியப்பன் பாடிக் கொண்டே ஓடினான்.
உடன் வந்த ஊர்ப் பிள்ளைகளும்
" காணாத காடு
கண்டுவிட்டால் ஓடு"
என்று மீண்டும் மீண்டும் பாடியபடி ஓடினர்.
வள்ளியப்பன் தொடர்ந்து பாடினான்.
"காணாத காடு
கண்டு விட்டால் ஓடு
ஒளிய இடம் தேடு.
ஏழைகள் படுவதோ அரும்பாடு
டிக்கெட் விலையோ பெரும்போடு!"
இப்படிப் பாடியபடி சிறுவர்கள் இராயவரத்தை அடைந்தனர். அன்று மட்டுமல்ல, இந்தப் பாடல் பல நாள்கள் சிறுவர்களின் வழி நடைப் பாடலானது!
வள்ளியப்பன் பத்தாம் வகுப்புப் படிக்கையில் ஒரு நிகழ்வு. வகுப்பிலே தமிழாசிரியர் கட்டுரை எழுதச் சொன்னார். மாணவர்கள் எழுதிய கட்டுரை ஏடுகளை வீட்டிலே கொண்டு போய்த் திருத்தம் செய்தார். மறுநாள் வகுப்புக்கு வந்தார்.
"நம் வகுப்பிலே ஒரு நாலடியார் இருக்கிறார்! யார் அவர்?" என்று புதிர் போட்டார் ஆசிரியர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒன்றும் புரியவில்லை.
ஆசிரியர் ஒவ்வொரு மாணவனாக அழைத்து நோட்டைக் கொடுத்தார். வள்ளியப்பனை அழைத்ததும் பயந்தபடி வந்தான். காரணம் கட்டுரையில் மேற்கோள் எழுத நினைத்தான் வள்ளியப்பன். ஒரு நாலடியார் பாடல் நினைவுக்கு வந்தது. எழுதத் தொடங்கினான். நாலாவது அடி நினைவுக்கு வரவில்லை. எனவே அவனாக ஒரு அடி எழுதிப் பாடலை நிறைவு செய்தான்.
அதனால் தயங்கியபடி ஆசிரியரிடம் சென்றான். "வாரும் நாலாவது அடியாரே!" என்று ஆசிரியர் அழைத்தார். "நேற்று எழுதும் போது இறுதி அடி மறந்து விட்டது." என்று மெல்லச் சொன்னான் வள்ளியப்பன்.
"பரவாயில்லை. நாலடியார் எழுதிய சமணத் துறவிகளுக்கு நிகராக ஒரு அடி எழுதியிருக்கிறாரய். பாராட்டுக்கள்." என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். வள்ளியப்பனுக்கு மிகுந்த மகிழ்ச்சி .
அந்தத் தமிழாசிரியர் பெயர் கோபாலகிருஷ்ணன். அவர் இப்போது நூற்றாண்டு காணும் குன்றக்குடி அடிகளாரின் அண்ணன்.
இவ்வாறு குறும்பும் கவிதைக் கரும்புமாக வளர்ந்தான் வள்ளியப்பன். அவன்தான் 'குழந்தைக் கவிஞர்' என்று உலகத்தோரால் போற்றப்படும் வள்ளியப்பா.
அவர் குழந்தைகளுக்கு நிறையப் பாடல்கள் எழுதினார். குழந்தை இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளான கதை, நாவல், நாடகம், விடுகதை, வாழ்க்கை வரலாறு, கவிதை, வாழ்வியல், பாட்டுப் பட்டிமன்றம் எனப் பல படைப்புகளைத் தந்தார்.
குழந்தை எழுத்தாளர் சங்கத்தைச் தொடங்கிப் பலரைக் குழந்தைகளுக்கு எழுதத் தூண்டினார். அச்சங்கத்தின் வழி பல சாதனைகளைப் புரிந்தார்.
எங்கள் தந்தையார், குழந்தை இலக்கிய முன்னோடி அழ.வள்ளியப்பா அவர்களின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.

இவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் இளைய மகள். 40 ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு எழுதி வருகிறார். குழந்தை இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கவிமணி குழந்தைகள் சங்கத்தை 30 ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தி வருபவர். வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்
பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, தமிழ்ச் செம்மல் விருது ஆகியவை இவரின் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.




Comments