பதின்பருவ வயதினரின் உளவியல் சிக்கல்கள்
- டாக்டர் ஜி ராமானுஜம்
- Jul 15
- 3 min read

பச்சிளம் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை மனித வாழ்க்கையை ஏழு பருவங்களாகப் பிரித்திருப்பார் ஷேக்ஸ்பியர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருந்தாலும் இவற்றில் மிக முக்கியமான பருவமானது பதின்பருவம். ஒரு நபரின் ஆளுமையையும் அடையாளத்தையும் அவரது வாழ்க்கையையும் முடிவு செய்வதே பதின்பருவம்தான். உடல்ரீதியகவும் மனரீதியாகவும் சமூகரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் பருவமும் அதுதான். ஆகவே அப்பருவத்தில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பே.
பதின்வயதில் ஏற்படும் சிக்கல்களை இரண்டு வகைகளாக விளக்கலாம். முதலாவது பொதுவாக நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு எல்லாக் காலகட்டத்திலும் பதின்வயதினருக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் . இரண்டாவது குறிப்பாக இந்த டிஜிட்டல், கணினியுகத்துக்கே உரிய சிக்கல்கள்.
முதலில் பொதுவான சிக்கல்களை எடுத்துக் கொள்ளுவோம். பதின்பருவத்தில் உடல்ரீதியாகப் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவராக மாறும் ஒரு இடைநிலை (transition) பருவமாகவும் இரண்டுங்கெட்டான் பருவமாகவும் பதின்பருவம் இருக்கிறது. உடல்ரீதியாக மிக அதிக வளர்ச்சி இக்காலகட்டத்தில் ஏற்படுகிறது. ஹார்மோன்களின் வேகம் அதிகமாக இருக்கும் பருவம்.
குழந்தையாக இருக்கும்போது தான் என்ற அடையாளம் தனித்தன்மையுடைய தேவைகள் எதுவுமில்லாமல் பெற்றோர்களின் நேரடிப் பாதுகாப்பு வளையத்தில் இருப்பார்கள். பெரும்பாலான தேவைகளைப் பெற்றோரே குறிப்பறிந்து தீர்த்து வைப்பார்கள். குழந்தைகள் விரும்புகின்றனவோ இல்லையோ குழந்தைகளின் விருப்பங்கள் இவையாகத்தான் இருக்கும் எனப் பெற்றோர்களே அனுமானித்து நடப்பார்கள்.
பதின்வயதில் முதன் முதலாகத் தான் என்ற ஆளுமை உருவாகத் தொடங்குகிறது. இதுதான் என் உடல், இதுதான் நான், இவைதான் என் தேவைகள் எனத் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யத் தொடங்குகின்றனர் இப்பருவத்தினர். இந்த ஆளுமையை உருவாக்குவதில் குடும்பம், நண்பர்கள், சுற்றி இருப்பவர்கள், சமூகம் என எல்லாவற்றுக்கும் பங்கு இருக்கிறது. உடல்ரீதியாகத் தன் நிறம், உயரம், பருமன், முடி போன்றவை குறித்துப் பெருமிதமோ அவமானமோ ஏற்படத் தொடங்குவது இக்காலகட்டத்தில்தான்.
நகைச்சுவையாக ஒன்றைச் சொல்வார்கள் – “மனிதன் தன் வாழ்வின் முதல் இருபது வருடங்கள் தான் பெரியவன்தான் என நிரூபிக்கப் போராடுகிறான். பின் அடுத்த அறுபது வருடங்கள் தான் இளைஞன்தான் என நிரூபிக்கப் போராடுகிறான்” என்பார்கள். எந்த யுகத்திலும் பதின்வயதினரின் தலையாய பிரச்சனையே தான் பெரியவன் என்பதை நிரூபிப்பதுதான்.
கவனச் சிதறல் என்பது மிக அதிகமாக இருப்பது இந்தப் பருவத்தில்தான். உடலிலும் உள்ளத்திலும் ஆற்றல் பொங்கி வழிவதால் கண்ணில் படும் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு அதீதமாக இருக்கும் இக்காலகட்டத்தில். புதிதாக எதையும் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்ற முனைப்பு அதிகம் இருக்கும். அதே நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது நமது மூளையின் முன்பகுதி (Frontal Lobe) தான் நல்லது கெட்டதைப் பகுத்தறிந்து இது தீமை, இதைச் செய்யக் கூடாது என விலக்குகிறது. இருபது இருபத்தி ஐந்து வயதுக்குப் பின்னர்தான் அந்தப் பகுதி வளர்ச்சியில் முழுமை அடைகிறது. ஆகவே பதின்வயதில் ஆபத்துகளை சந்திக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். “ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவதுபோல்” என அதிகமாக ரிஸ்க் எடுப்பார்கள். பைக்கில் வேகமாகச் செல்வது தொடங்கி, சிறு சிறு சட்ட மீறல்கள் தொடங்கி போதைப் பொருட்களை முயற்சி செய்து பார்ப்பது என எல்லாமே இந்தப் பருவத்தில் நடக்கும்.
பதின்வயதின் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால் கவனச் சிதறல். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகத் தேவைப் படுகிறது. புறத் தூண்டுதல்களைக் கண்டால் உடனே கவனம் சிதறும். விளையாட்டுகள் போன்ற விஷயங்களில் மனம் அதிகமாக திசை திரும்பும். குறிப்பாக கல்வி கற்க வேண்டிய மிக முக்கியமான பருவத்தில் கவனச் சிதறல் அதிகமாக இருப்பதால் எதிர்காலமே பாதிக்கப் படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
அடையாளச் சிக்கல் (Identity crisis) என்பது இந்தப் பருவத்தில்தான் வருகிறது எனப் பார்த்தோம். சிலசமயங்களில் ‘நீ இன்னும் குழந்தை இல்லை. பொறுப்பாக இரு’ என்றும் சில சமயங்களில் ‘இதெல்லாம் பெரியவர்கள் விவகாரம். உனக்குச் சம்பந்தமில்லை’ என்றும் அடக்கப் படுவதில் தொடங்குகிறது இந்த அடையாளக் குழப்பம்.
நண்பர்கள் தரும் அழுத்தம் (Peer Pressure) இந்தப் பருவத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஒரு முக்கியமான காரணி. நண்பர்களிடம் ஹீரோ போல் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டியதால் இந்த மாதிரி முடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்பது தொடங்கி ஐ போன் வேண்டும், பைக் வேண்டும் என்பது வரை தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சில விஷயங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் சிக்கல்களை உண்டாக்குகிறது.
நண்பர்கள் தரும் அழுத்தம் மாதிரியே நாயகன் வழிபாடும் (Hero Worship) இக்கால கட்டத்தில் சிக்கல்களை உருவாக்குகின்றன. பத்து வயது வரை பெற்றோர்கள் சொன்னதை அப்படியே செய்துவந்தவர்கள் அவர்கள் செய்வதைக் கட்டுப்படுத்துவதாக உணரத் தொடங்கி தன் சுதந்திரத்தைக் காப்பாற்ற அதிலிருந்து வெளியே வர நினைக்கும் போது ஒரு முன்மாதிரியாக திரைப்பட, அரசியல், விளையாட்டு பிரபலங்களைக் கண்டடைகிறார்கள். நிறைகுறைகளை அலசி ஆராயாமல் நூறு சதவிகித வழிபாடு அல்லது நூறு சதவிகித தூற்றல் என்ற கண்மூடித்தனமான நிலைப்பாடுகளை எடுக்கின்றனர்.
அடையாளச் சிக்கல்களின் ஒரு பகுதி பதின்வயதில் ஏற்படும் பாலின அடையாளம். உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிய அறியாமை, எதிர்பாலினர் மீதான ஈர்ப்பு போன்றவை இக்காலகட்டத்தில் முக்கியமானவை. சில சமயங்களில் சூழலின் தாக்கத்தினாலும் உடல்ரீதியான மாற்றங்களாலும் பாலின அடையாளம் பாலின ஈர்ப்பு போன்றவைகளில் மாறுதல்கள் ஏற்படலாம். தான் ஆணா பெண்ணா, தனக்கு யார்மீது ஈர்ப்பிருக்கிறது என்பதிலெல்லாம் குழப்பங்கள் வரக்கூடும்.
இவைகள் எல்லாம் எக்காலத்திலுமே பதின் வயதினருக்கு இருக்கும் பிரச்சனைகள். குறிப்பாக இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்தச் சிக்கல்கள் வேறு பரிமாணங்களை எட்டி இருக்கின்றன. கணினி , செல்போன் யுகத்தின் மிகப் பெரிய பிரச்சனையே எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிக எண்ணிக்கையில் கிடைப்பது. Problem of plenty என்பார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் விஷயங்களால் கவனச் சிதறல் (Digital Distraction) அதிகமாக ஏற்படுகிறது.
புதிது புதிதாக விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும் விஷயங்களால் இருபது நொடிகளுக்கு மேல் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகின்றன என்கின்றன ஆய்வுகள். இதனால் நான்கு வரிகள் கூட சேர்ந்தாற்போல் படிக்க முடியாமல் போகிறது . இது இந்த காலகட்டத்தில் எல்லோரும் எதிர்நோக்கும் மிகப்பெரிய சிக்கல் என்றாலும் பதின்வயதினருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன.
மேலும் புத்தகங்கள் வாசிப்பது குறைந்து காணொளிக் காட்சிகளாகப் பார்ப்பது அதிகரித்து வருவது நுண்ணறிவுத்திறன்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.
அது போலவே உடலுழைப்பின் தேவை வெகுவாகக் குறைவதால் போதிய உடற்பயிற்சியின்மை மனதிலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
பொதுவாகவே போட்டி மனப்பான்மையால் கல்வி என்பது ரசித்துக் கற்கும் விஷயமாக இல்லாமல் மதிப்பெண்கள் பெற உதவும் விஷயமாகவே மாறிவிட்டதால் ஏற்படும் அழுத்தம் இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். தொழில்நுட்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கின்றன. இதற்குத் தக்கவாறு நமது திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அதே போல் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) ஒரு துறையில் அதீத திறமைசாலியாக இருந்தால் மட்டுமே இனி பிழைக்க முடியும் . சராசரிகளின் காலம் முடிந்து விட்டது (The average is over ) என்கிறார்கள்.
இதுபோன்ற சிக்கல்களை உணர்ந்து கொள்ள நமக்கு விழிப்புணர்வும், பதின்வயதினரும் இயல்பாக உரையாட வெளிப்படைத்தன்மையும் தேவை. உடற்பயிற்சி, இசை போன்ற நல்ல பொழுதுபோக்குகளில் மனதினைச் செலுத்துவதும் அவசியமாகிறது
Comments