அமாவாசை
- ஜெ.பொன்னுராஜ்

- Oct 15
- 2 min read
நாட்டார் கதை

கதை சொன்னவர் : அ.க.கருப்பசாமி
ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். தினமும் கம்பஞ்சோறு, குதிரைவாலி, கேழ்வரகு கஞ்சி, பழைய சோறு என்று சாப்பிட்டு வயிற்றுப் பசியாற்றி நாட்களை நகர்த்தினார்கள். எப்பொழுதாவது அமாவாசை, புரட்டாசி, மூன்றாவது சனிக்கிழமை என்று விஷேசமான நாட்களில் மட்டும் ஆட்டுரலில் மாவாட்டி தோசை சுட்டு ஆசைக்கு சாப்பிட்டுக்கொள்வார்கள். அது அவர்களுக்கு பண்டிகை நாட்களில் பலகாரம் செய்து சாப்பிடுவது போல் கொண்டாட்டமாக இருந்தது.
“தினமும் சோறும் கஞ்சியாக சாப்பிட்டு வாரோம். அரிசி உளுந்து நனையப்போட்டு ஆட்டியெடுத்து தோசை சுட்டு சாப்பிடணும். பக்கத்து ஊரு அய்யர்கிட்ட போயி அமாவாசை என்னைக்கு வருதுன்னு கேட்டுக்கிட்டு வாங்க” என்று கணவனிடம் மனைவி சொல்கிறாள். அப்படி சொல்லும்போது சொன்னாள். “உங்களுக்கு ஞாபகமறதி ஜாஸ்தியாக இருக்கு. அவரு என்ன சொன்னாரோ அதை மறக்காம இருக்கிறதுக்கு உச்சரிச்சிக்கிட்டே வரணும். இல்லையின்னா அயத்துப் போயிருவீக” என்று கவனத்தோடு போய்வரச் சொல்லுகிறாள்.
இவர் அந்த ஊருக்கு போய் அய்யர் வீட்டுக்கு முன்பு நின்று சாமி.. சாமி.. என்று கூப்பிடுகிறார். அந்த நேரம் அவர்களுக்குள் ஏதோ குடும்ப பிரச்சனை நடந்துகொண்டிருந்தது. ஒருவருக்கொருவர் சத்தம் போட்டு பேசி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இவர் அந்நேரம் பார்த்து இடைஞ்சல் செய்வது போல் கூப்பிடவும் யாரு.. என்ன ஏது என்று அய்யர் தலையை நீட்டி வெளியே எட்டிப்பார்த்தார்.
சாமி அமாவாசை என்னைக்கு வருது என்று இவர் கேட்டார்.
அவர் அங்கே சச்சரவில் இருந்த மனோபாவத்தில் சொல்லும் போது, “இன்னைக்கோ.. நாளைக்கோ” என்று சொல்லிவிட்டார்.
மனைவி சொல்லிவிட்டபடி அய்யர் சொன்னது மறந்துபோய்விடக்கூடாது என்று “இன்னைக்கோ நாளைக்கோ… இன்னைக்கோ நாளைக்கோ” என்று ஊரைப் பார்க்க திரும்பி வரும்போது உச்சரித்துக்கொண்டே போகிறார்.
அப்படி போகும்போது வழியிலுள்ள ஒரு ஊரில் செல்வாக்கு மிக்க ஒரு பண்ணையார் உடல்நலமில்லாமல் படுத்திருந்தார். “இவர் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தால் ஆதரவாக இருக்குமே” என்று அந்த ஊர் மக்கள் ஆதங்கத்தோடு அவரை சுற்றி கூடியிருந்தார்கள். இவர் அந்த இடத்தில் போகும் போது “ இன்னைக்கோ நாளைக்கோ… இன்னைக்கோ நாளைக்கோ” என்று சொல்லிக்கொண்டே போகிறார். அங்கிருந்தவர்கள் பண்ணையார் பிழைக்கணும் என்று கடவுளை கும்பிட்டுக்கொண்டிருக்கும் போது இவர் இப்படி சொன்னது ஏறுக்கு மாறாய் இருக்கவும், “என்னடா.. ஒரு பெரியாளு… அவரு இருந்தால் ஊருக்கு நல்லதுன்னு நினைத்தால் நீ இன்னைக்கோ நாளைக்கோன்னு சொல்றயே” என்று நாலு சாத்து சாத்தினார்கள்.
“என்னய்யா… அய்யர் சொன்னது அயத்துப்போயிரும்னு இன்னைக்கோ நாளைக்கோன்னு சொல்லிக்கிட்டு போறேன். நீங்க இப்படி அடிக்கீக. என்னைய என்ன சொல்லச் சொல்றீக” என்று கேட்டார்.
இப்படிப்பட்ட புண்ணியவாளனுக்கு இப்படி வரக்கூடாது என்ற அர்த்தத்தில், “இப்படியாப்பட்ட புண்ணியவாளனுக்கு இப்படி வரலாமா”ன்னு சொல்லிக்கிட்டுப் போ என்று அனுப்பி வைத்தார்கள்.
அங்கிருந்து இன்னொரு இடத்தில் வரும்போது திருமணம் முடித்த பொண்ணு மாப்பிள்ளை ஊர்வலமாக வருகிறார்கள். இவர் அங்கே போய் “இப்படியாப்பட்ட புண்ணியவாளனுக்கு இப்படி வரலாமா” என்று சொல்லவும் அங்கேயும் அடி விழுகிறது.
அவர்கள் அடிக்கவும் “அந்த ஊர்லேயும் அடிச்சாக. இங்கேயும் அடிக்கீக. என்னதான் சொல்லச்சொல்றீக” என்று கேட்டார்.
“என்ன சிங்காரம்.. என்ன ஒய்யாரம்”னு கல்யாண மாப்பிள்ளையை பார்த்து சொல்லீட்டு போ என்று முடுக்கிவிட்டார்கள். இவர் அந்த வாக்கியத்தை பிடித்துக்கொண்டார்.
அப்படியே போகும்போது ஒரு ஊரில் ஒரு வயதான கிழவி காபி போடும்போது குடிசைவீடு தீப்பற்றி ஊரெல்லாம் எரிந்து கொண்டிருந்தது. அங்கே போய் “என்ன சிங்காரம்… என்ன ஒய்யாரம்” என்று சொல்லிக்கொண்டு போகவும் அவர்கள் பங்குக்கு தர்மஅடி கொடுத்தார்கள்.
இவர் என்னதான் சொல்லச்சொல்றீக என்று கேட்க, தீயை அணைப்பதற்கு “தண்ணியை ஊத்தி தடியால் அடி” என்று சொல்லச்சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது “தண்ணியை ஊத்தி தடியால் அடி” என்று சொல்லிக்கொண்டு போகிறார்.
அடுத்த ஊருக்கு போகும் போது ஒரு குயவசெட்டியார் பச்சை பானையை வனைந்து அதை சுள்ளை போடுவதற்காக தனல் போட்டுக்கொண்டிருந்தார். இவர் “தண்ணியை ஊத்தி தடியால் அடி” என்று சொல்லிக்கொண்டுபோனார்.
“ஏய்.. நான் எவ்வளவு நாளாக பச்சைப்பானையை சுள்ளை போட்டுக்கிட்டு இருக்கேன். நீ தண்ணியை ஊத்தி தடியால் அடின்னு சொல்றயே” என்று சுள்ளை விறகை எடுத்து நாலு போடு போட்டார்.
“என்னய்யா செய்ய… ஊர்ஊருக்கு அடிக்கீக. என்னதான் சொல்ல” என்று கேட்கிறார்.
அவர் சுள்ளை போடுகிற நேரம் வானத்தில் ஒரு ஒற்றை மேகம் இருந்தது. இன்னும் மேகங்கள் கூடி மழை வந்துவிட்டால் சுள்ளை அடுப்பை நனைத்துவிடும் என்று அந்த ஒற்றைமேகத்தை பார்த்து “இந்த ஒன்னும் போயிரணும்… இந்த ஒன்னும் போயிரணும்”னு சொல்லு என்று அனுப்பினார்.
இவர் “இந்த ஒன்னும் போயிரணும்… இந்த ஒன்னும் போயிரணும்” என்று சொல்லிக்கொண்டே போனார்.
போகிற வழியில் ஒருவர் கண்அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஒரு கண் பார்வை சரியாகி துணைக்கு ஆட்களோடு எதிரில் வந்துகொண்டிருந்தார். இவர் இந்த ஒன்னும் போயிரணும் என்று சொல்ல அங்கேயும் அடிகள் விழுந்தது.
வீட்டுக்கு போய் சேரும் போது அய்யர் சொன்னதும் மறந்துபோய்விட்டது. திரும்பி நடந்து வந்த போது வழியெங்கும் வாங்கிய அடிகள்தான் மிச்சமாக இருந்தது. இனிமேல் எனக்கு தோசையே வேண்டாம். கம்பங்கூழே போதும் என்று இப்பொழுது சொல்லிக்கொண்டிருக்கிறார்.

1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல்.
பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2




மிகச் சிறந்த கிராமத்து வாய்மொழிக் கதை. படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. இதுபோன்று கிராமத்து சுவாரசியமான கதைகள் குழந்தைகளுக்குச் சொல்லப்பட வேண்டும். இக்கதைகளை வெகுவாக குழந்தைகள் ரசிப்பார்கள். தோசை என்பது ஒரு பலகாரம். அது முன் காலத்தில் தினந்தோறும் சாப்பிடும் உணவல்ல என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
சிறப்பு மிக சிறப்பு
கதை வாசிக்கும் போது சிரிப்பு வந்தது.அருமை . அய்யர் வாங்கிய தர்ம அடிகள் ஐயோ பாவம்.
Nalla kathai.namakke thosai saappidum assai vittu pochu
அருமை, வாழ்த்துக்கள்
Super