சோசியக்கிளி
- மணிமொழி நங்கை

- Oct 15
- 1 min read

ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்துப் பொந்துல அம்மா கிளி, தன்னோட ரெண்டு குஞ்சுகளான ரீனு, டீனு வோட ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டிருந்தது.
குஞ்சுகளுக்கு இப்போ இறக்கை முளைச்சு, பறக்குற நேரம் வந்தாச்சு. ஒருநாள் அம்மா கிளி சொன்னது,
“என் செல்லங்களா, உங்களுக்கு இப்போ இறக்கைகள் வளர்ந்தாச்சு. இனிமே நீங்களே உங்க இரையைத் தேடிக்கோங்க.
பச்சை பசேலென்று மரங்கள் நிறைய இருக்கும் தோப்புக்குப் பக்கம் போங்க. மனிதர்கள் இருக்கும் ஊர்ப் பக்கம் போகக்கூடாது, கவனமா இருங்க,”
அப்படின்னு எச்சரித்தது.
அந்தச் சொற்கள் கேட்டு இரு குஞ்சுகளும் கூட்டிலிருந்து பறந்து வெளியே வந்தது. முதல் தடவை பறக்குறதால ரொம்ப மகிழ்ச்சியா பறந்தது.
பழம் சாப்பிட்டு, மரத்திலே ஓய்வெடுத்து, மாலை நேரத்துல திரும்பி கூடுக்கு வந்தது. அப்போ ஒரு நாள் ரீனுவுக்குத் திடீர்னு ஆசை வந்துச்சு —
“ஊர்ப் பக்கம் போய் பாத்தா எப்படி இருக்கும்?”ன்னு நினைச்சது ரீனு. அது டீனுவிடம் சொன்னது.
டீனு சொன்னது,
“அம்மா சொல்லுறதை மீறக் கூடாது.அப்புறம் ஆபத்து நமக்குத்தான் ன்னு சொன்னது."
ஆனா ரீனு கேக்கல
“அட போ டீனு, எப்ப பாத்தாலும் இந்த மரங்களில்தான் சுற்றிக்கிட்டு இருக்கணுமா?
நான் கொஞ்சம் ஊருக்குப் போயிட்டு வரேன். மாலை கூட்டுக்கு வந்து சேர்றேன்,”
அப்படின்னு சொல்லிட்டு பறந்து போச்சு.
மாலை நேரம் ஆனதும் டீனு மட்டும் கூட்டுக்கு வந்தது.அம்மாவிடம் நடந்ததைச் சொல்லிச்சு.
அம்மா கவலையோட ரீனுவுக்காகக் காத்திருந்தது.
ரீனு ஊருக்குப் போனதும், குழந்தைகள் அதை பார்த்துட்டு ரசிச்சாங்க. அதைப் பார்த்து ரீனுவுக்கும் பெருமையா இருந்துச்சு.
“நம்மைப் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சியா இருக்காங்க! அப்போ அம்மா ஏன் இங்கே வரக்கூடாது சொன்னாங்க?”ன்னு யோசிச்சது.
அப்போ கூட்டத்தில ஒரு சுட்டிப் பையன் கல்லெடுத்து வீசினான். அது கிளியின் கால்ல பட்டு —
“கீ! கீ!” ன்னு பலமா கத்திட்டே கீழே விழுந்துச்சு.
அந்த வழியில வந்த ஒரு சோதிடர் அந்தக் கிளியைக் தூக்கிட்டுப் போய்ட்டார். அவர் அந்தக் கிளியோட இறக்கைகளை வெட்டிவிட்டார்.
அதுக்கு பழம், கொட்டை கொடுத்து வீட்டில வைத்திருந்தார். இதையே தேடி அலையாமல் வீட்டிலேயே எல்லாமே கிடைச்சது. ஆனா அதால சுதந்திரமா தான் இருக்க முடியல.அம்மாவையும்
டீனுவைவும் நினைச்சது.
அப்போதான் அம்மா சொன்னதோட அர்த்தம் புரிஞ்சுச்சு.
ஒருநாள் அந்த சோதிடர் மரத்தடில உட்கார்ந்து சோதிடம்னு பார்த்துக்கிட்டிருந்தார். அதே மரத்தில டீனு மேல கிளையில அமர்ந்திருந்தது.
கூண்டுல அடைச்சு வச்சிருந்த ரீனுவை பாத்ததும் மகிழ்ச்சி அடைந்தது. சோதிட அசந்த நேரம் அது ரீனுவிடம் கேட்டது,
ரீனு நீ எப்படி இங்க வந்த?மனிதர்களின் சாதகத்தை நமக்கு கணிக்கத் தெரியாதே உனக்கு எப்படித் தெரிந்தது? என்று கேட்டது.
“அதெல்லாம் கணிப்பே இல்ல டீனு நான் ஒவ்வொரு சீட்டா எடுத்து போட்டுகிட்டே இருப்பேன் .
அவர் கால் விரலை ஆட்டினா, நான் சீட்டு எடுப்பதை நிறுத்திட்டு அந்த சீட்டைக் கொடுப்பேன்,”
அப்படின்னு சொன்னது.
டீனு அதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டு,
“அடடா! இதுதானா விஷயம்? இதைத்தான் மனிதர்களும் நம்புறாங்களா?” என மனிதர்களை நினைத்து கவலைப்பட்டது.
பிறகு ரீனு எங்க இருக்கு என்பதை அம்மாவிடம் சொன்னது அம்மாவும் டீனுவும் சேர்ந்து ரீனுவை காப்பாத்தினாங்க.
அப்புறமென்ன!
கிளி தன் குஞ்சுகளோட பெரிய ஆலமரப் பொந்துல சந்தோஷமா வாழ்ந்தது.

ஆசிரியர், தேசிய சதுரங்க நடுவர்,
சதுரங்க வீராங்கனை, சதுரங்க பயிற்சியாளர்




கதையின் இறுதியில் கருத்து நச்சென்று உள்ளது.
மிகவும் அருமை. குழந்தைகள் ரசிக்கும் படியான அருமையான கருத்துள்ள கதை.
தொடர்ந்து எழுதுங்கள்
உங்கள் கதை எம் பள்ளி மாணவர்கள் வியந்து கேட்டனர்
Simple and super. Congratulations 🎊 👏 💐
நல்ல கதை..
குழந்தைகளிடம் நல் ஒழுக்கத்தை பேணவும்,மூடநம்பிக்கைகளை களைந்திடவும் இது போன்ற கதைகள் நிச்சயம் உதவும்..
கதை ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..💐